தொடர்கதைகள் அத்தியாயம் 1

Rosei Kajan

Administrator
Staff member
#1
“பாரம்மா, இவ்வளவு நேரமாக் கதைக்கிறன்; முக்கியமாச் சொல்ல நினைச்சத மறந்திட்டன்!”

“சொல்லுங்க சித்தி; என்ன விசயம்?”

“முதலும் ஒருதரம் சொல்லியிருக்கிறன் நித்தி; என்னோட படிப்பிக்கிற டீச்சரின்ட மூத்தமகள் அங்கதான் வந்திருக்கிறாள்.”

“அப்பிடியா சித்தி! இங்கயா? எந்த இடத்தில? நீங்க அப்பிடிச் சொன்னதா நினைவில்லையே!”

“கலியாணம் நடந்து ரெண்டு வருசங்கள் இருக்கும்மா! நெதர்லாந்து என்றதும் பெடியன் எப்படியென்று விசாரித்துச் சொல்லச் சொன்னனே. அந்த நேரம் பார்த்துப் பெரியக்காவையல்...” சுதாவின் குரல் சட்டென்று தடைப்பட்டது.

நெஞ்சம் இறுக விழிகளை மூடித்திறந்தவர், மிகவும் முயன்று தன்னைச் சமப்படுத்தியவாறே, ‘ஸ்கைப்’ திரையூடாகப் பெரியதமக்கையின் மகளை நோக்கினார்.

நிர்மலமான அம்முகத்தில் வேதனை இரேகைகள் பளிச்சென்று தெரிந்தன. அவளுமே, தன்னைத்தான் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தாள்.

“நித்திம்மா...சாரிடா!”

“இல்ல...பரவாயில்லை; ப்ச்...விடுங்க சித்தி!” சமாளித்தவள், முன்வாயில் திறபடும் ஓசையில் திரும்பி, உள்ளே வந்த தமையனைக் கண்டதும், இதயத்தை முறுக்கிய வேதனையை அமுக்கி வைக்க முடியாது தடுமாறினாள்.

ஆறாத தன் வேதனையைக் காட்டி, மேலும் மேலும் தமையனின் மனதை வருத்தும் எண்ணமின்றி, “வாங்கண்ணா...சுதாச் சித்தி கதைக்கிறார்!” விலகி, “கஃபே கொண்டு வாறன்; நீங்க கதையுங்க!” உள்ளே விரைந்தாள்.

சரேலென்று விலகிச்செல்லும் செல்லத் தங்கையின் மனதை ஒரே பார்வையில் அறிந்து கொண்டான் கார்த்திகேயன்.

‘எவ்வளவுதான் முயன்றாலும், ஏதோ ஒரு வழியில கடந்தவைகளின் பிடியிலிருந்து மீள முடியாதுள்ளதே!

மாதங்கள் பல உருண்டோடினாலும், அதன் வலியும் வேதனையும், அதிகரிக்கின்றதே யொழிய குறைய மறுக்கின்றதே!’

மனதின் அரற்றல் செவிகளில் ஒலிக்க, அதை மறைத்து, தன்னுள்ளே எழுந்த வேதனை மூச்சை வெளியேற்ற விரும்பாது கலங்கி நின்ற சிறியதாயாரை நோக்கியவன், “சொல்லுங்க சித்தி, எப்படி இருக்கிறீங்க? என்னவாம் பெரிய மனுசன்? எப்ப கம்பஸ் தொடங்குது?” சுதாவின் ஒரே மகன் பற்றி விசாரித்தவாறே, கதிரையை இழுத்து அமர்ந்து கொண்டான்.

தன் மனதை மறைத்து, தமக்கை மகனுடன் உரையாடத் தொடங்கினார் சுதா.

“அண்ணா கஃபே!” தங்கை தந்த கப்பை வாங்கி, வெளியில் கொட்டிய மழைக்குளிருக்கு இதமாக உறிஞ்சிக்கொண்டே பொதுவாக அளவளாவினான் கார்த்திகேயன்.

“ஆங்! பார், திரும்பவும் மறந்திட்டன் தம்பி!”

“என்ன சித்தி?”

“அதுதான்யா, நித்தியிடமும் சொல்லி இருக்கிறன்; வேலை அது இது என்று சாட்டுச் சொல்லாத!” என்றதும், எதைப்பற்றிச் சொல்கிறாரென்று புரியாது, அமைதியாக நின்ற தங்கையைப் பார்த்தான் அவன்.

“இந்தா விலாசம் அனுப்புறன்; மறக்காமல் ஒருதரம் போய்ப் பாரடா!” தொடர்ந்தார் சுதா.

“யாரைச் சித்தி?” யோசனையாக நெற்றி சுருக்கினான் கார்த்திகேயன்.

“அதுதான் தம்பி, என்னோட வேலை செய்யிற கமலா டீச்சரின் மகள், கல்யாணம் செய்து அங்கதானே இருக்கிறாள்; கமலாவுக்கு புருசனும் மகனும் அரைகுறையாகப் போன கவலை ஒருபக்கமென்றால், ஒன்றுக்கு மூன்று பெண்பிள்ளைகள்; மூத்தவள் சந்தோசமாக இருக்கிறாள் என்று வாய் ஓயாது சொல்லிக் கொண்டிருந்தார் தம்பி; இப்ப என்னவென்றால்...அவளைப் பற்றி ஒரே புலம்பல்!”

“என்ன சித்தி சொல்லுறீங்க? ஏன்? ஏதாவது பிரச்சனையா? இங்க எந்த இடத்தில இருக்கிறார்?” என்றவன், சுதா அனுப்பிய விலாசத்தைப் பார்த்துவிட்டு, ‘ப்றேசான்ட்?’ ம்ம்ம்...போய்ப் பார்க்கலாம் சித்தி; பிரச்சனையில்லை!” என்று சொன்னாலும், அவன் குரலில் அசிரத்தையே மிகையாக ஒட்டி நின்றது.

அதைப் புரிந்து கொண்டார் சுதா.

“என்னய்யா பார்க்கலாம் என்கிறாய்! அக்காவின்ட பிள்ளைகள் கட்டாயம் விசாரித்துச் சொல்லுவீனம் என்று டீச்சருக்கு நம்பிக்கை குடுத்திட்டன்; ஒருமுறை போய் பாரய்யா!” தன்மையாகச் சொன்னவர், “ஏன், உங்கட வீட்டிலிருந்து சரியான தூரமா?” என, வினவினார்.

“ம்ம்ம்.. தூரம்தான்; ஒன்றரை ரெண்டு மணித்தியாலம் வேணும்.”

“அண்ணா! ‘அன்னபௌலோனா’வுக்கு ‘ப்ளவர் ஷோ’ பார்க்கப் போவமென்று கதைச்சமே! பக்கத்தில தானே? திரும்பி வரேக்க அவவையும் பார்த்திட்டு வரலாம்!” என, இவர்கள் கதைப்பதை அமைதியாகக் கேட்டிருந்த நித்தி குறுக்கிட்டாள்.

“ம்ம்...நல்ல யோசனைதான்!” ஆமோதித்தான் தமையன்.

“அவவுக்குப் பெயர் என்ன சித்தி? அது கூடத் தெரியாமல் போய் என்ன என்று கதைக்கத் தொடங்கிறது? ஆளைத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; பெயரைச் சரி சொல்லுங்க!” நித்திதான் விசாரித்தாள்.

“பெயர் மது..மதுரா! போய்ப் பார்த்திட்டு, எப்பிடி இருக்கிறாள் என்று சொல்லுங்கடா; எதிர்பார்த்துக்கொண்டே இருப்பன்!”

“அந்த ஃப்ளவர் ஷோ நடக்க இன்னும் ஒருமாசமிருக்குச் சித்தி; அப்பத் தான் போய்ப் பார்ப்பம்! இவ்வளவு நாட்கள் பொறுத்தவர்கள் இன்னும் சில கிழமைகள்...” தொடர்ந்தவனை, இடைமறித்தார் சுதா.

“என்ன! ஒரு மாதமா? அவ்வளவு நாட்கள் ஏன் தம்பி? சனி ஞாயிறு கூடவா வேலை செய்வாய்? அப்படியே இருந்தாலும் க்ளினிக்கில் இருக்கும் மற்றவே பார்த்துக்கொள்ள மாட்டீனமா?”

“அப்படியில்லைச் சித்தி...அவ்வளவு அவசரமா?” என்றவனிடம், முன்பென்றால் சிறு உதவிக்காக இப்படி மல்லுக்கட்டத் தேவையில்லை. இப்போது, பிடிப்பின்றி துவண்டுவிட்ட மனமோ, எதிலுமே ஈடுபட மறுக்கின்றதே!

வேலை; அதுவும், அவன் தந்தை நடத்திய பற்சிகிச்சை நிலையம்! இவனும் பல் வைத்தியனான பின், அவரோடு வேலை செய்த அழகிய தருணங்களை ஆசை தீர சுவாசிக்கக் கூடிய ஒரே இடமானதே!

இவனுக்கு இப்போதெல்லாம் வீட்டோடு சேர்ந்தால் போலுள்ள ‘கே என் தந்தாட்ஸ்’ தான் மனச்சாந்தி அளிக்கும் ஒரே இடம்! தந்தை காதலித்த தொழிலையும், அவர் ஆரம்பித்த பற்சிகிச்சை நிலையத்தையும் திறம்பட நடத்தும் பொழுது மறைந்த தந்தையே அருகில் நின்று தட்டிக் கொடுப்பது போல் உணர்வான் இவன்.

அதே, வீட்டினுள் நுழைந்தால் மூலை முடுக்கெல்லாம் அன்னையின் அழகு பிம்பம்! அவன் இதயமோ, அவர் அருகாமைக்காகப் பரிதாபமாக ஏங்கத் தொடங்கிவிடும். இழப்புக்கு பரிச்சயமற்ற அண்ணனும் தங்கையும், ஒரே நேரத்தில் அன்னை, தந்தை இருவரையுமே தொலைத்து அநாதரவாக விடப்பட்டனர்.

மூத்த சகோதரியின் இரண்டாவது பிரசவத்துக்கென ஒருமாதம் முன்பே அவுஸ்திரேலியா புறப்பட்டுப்போன தாயும் தந்தையும், ‘டி என் ஏ’ பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டு, அதுவும், இறந்து இரண்டு மாதங்களின் பின், மூடியபெட்டிகளில் வைத்துத்தரப்பட்ட கொடுமையை என்னவென்று ஜீரணிப்பது!

“இதுதான் உன் அப்பாவும் அம்மாவும்!” என, சுட்டிக் காட்டப்பட்ட பெட்டிகளை உயிர்ப்பற்று வெறிக்க மட்டுமே முடிந்தது!

வறண்டு, வெடித்துச் சிதறிப் போன கண்ணீர்ச்சுரப்பிகள், துளிக் கண்ணீரைச் சொரிய மறுத்து நிற்க இரும்பாகி நின்றனர் அண்ணனும் தங்கையும்.

வளர்ந்தவர்களே என்றாலும் மகனையும் மகளையும் தனியாக விட்டுச் செல்கின்றோமே என்கின்ற தவிப்பில் முகம் சுணங்க விடைபெற்ற அன்னை தந்தையை, கருமைநிற மரப்பெட்டியின் ஊடாகக் கண்டுகொள்ளத் துடித்தன, பிள்ளைகள் இருவரினதும் இளநெஞ்சங்கள்!

தேவைப்படும் போது கண்டிப்பிலும் அதேநிமிடம் அளவற்ற கனிவிலும் மலர்ந்து நிற்கும் தாயும், நினைவு தெரிந்ததிலிருந்து உற்ற நண்பனாக நடந்து கொண்ட அன்புத் தந்தையும் உருவம் தொலைத்து, ஊணாக, ராஜ மரியாதையோடு கொண்டுவரப்பட்டதை, எல்லையில்லாக் கசப்பும் வெறுப்பும் வேதனையுமாகப் பார்த்திருக்க மட்டுமே முடிந்தது.

வானில் பறக்கும் போதே வெடித்துச்சிதறிய விமானம், எத்தனையோ பயணிகளோடு சேர்த்து இவர்களின் அன்னை, தந்தையையும் காவு கொண்டிருந்தது!

மற்றவர்கள் உயிரை வலுக்கட்டாயமாகப் பறிப்பதையும் நியாயப்படுத்தும் இக்காலத்தில் யாரைப் பழி சொல்வது!?

யாரிடம் நியாயம் கேட்பது!?

அப்படிக் கேட்பதால் பயனேதும் உண்டா என்ன?

உள்ளம் கசந்து சபிக்க மட்டுமே முடிந்தது!

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
“ஆமா தம்பி! அவசரம் என்றே வச்சுக் கொள்ளன்!” சுதாவின் குரலில், மின்னலாக நினைவலைகளின் பிடியில் சிக்கியிருந்தவன் திடுக்கிட்டு மீண்டான்.

“தரகர் மூலம் வரன் பார்த்துக் கலியாணம் செய்திருந்தாலும், சந்தோசமாகத் தான் இருந்தாளாம் தம்பி. மாப்பிள்ளையின் பெற்றோர், ஒரு தங்கை எல்லாரும் இங்க தான் மூளாயில இருக்கீனம். நல்லா கதைச்சுப் பேசி இருந்த பிள்ளை, இப்ப எல்லாம் சரியாகக் கதைக்கிறதில்லையாம்.” சுதா கூறுவதைக் கவனித்தனர் அண்ணனும் தங்கையும்.

“அதோட, குழந்தையும் பிறக்க இருக்காம்! ஆறுமாதங்கள் என்றார் கமலா. ஆரம்பத்தில், தன்னை வந்து விட்டுப் போகச் சொன்னாளாம்; இப்ப வேணாம் என்று சொல்லுறாளாம்!

ஃபோன் பண்ணுறதும் குறைஞ்சிட்டுதாம்; இவே எடுத்தாலும் கதை குறைவாம்! ஸ்கைப் பக்கம் வாறதே இல்லையாம்! அப்ப, கவலைப்படுவாரா இல்லையா சொல்லு பார்ப்பம்?

சொந்த பந்தம் இல்லாத நாட்டில், தனிச்சுக் கட்டிக் குடுத்திருக்குத் தம்பி! அறிந்தவர் என்று இருக்கிறவே சின்ன உதவி செய்ய இல்ல என்றால் பிறகென்ன?” என, எப்படியும் மதுராவின் இன்றைய நிலைபற்றி அவர்கள் மூலம் அறிந்துவிட வேண்டுமென்ற நோக்கில் கதைத்தார் சுதா.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட தமையனும் தங்கையும், “சரி சித்தி, போஃன் நம்பர் தாங்க, கதைச்சிட்டு போய்ப் பார்க்கிறம்!” என்றார்கள்.

“கொஞ்சம் பொறு, நம்பர் என்னட்ட இல்லை; கமலாட்ட வாங்கித் தாறன்!” என்று சொல்லி, அவர் கொடுத்த எண்ணை வாங்கிக்கொண்டு ஸ்கைப்பை அணைத்தவர்கள், “இது கைபேசி எண்; வீட்டு நம்பர் இல்லையே!” தொலைபேசி எண்ணைப் பார்த்திருந்தனர்.

“வேலைக்கு எதுவும் போவாரோ! கேட்க மறந்து போனமே!” யோசனையுடன் சொன்ன நித்தி, “என்ன செய்யிறதண்ணா? இந்தச் சனி ஞாயிறு நேரம் ஒதுக்கிப் போய்ட்டு வருவமா?” அமைதியாக இருந்த தமையனிடம் கேட்க, பெரிதாக விருப்பமின்றியே தலையாட்டிய கார்த்திகேயன், “குளித்துவிட்டு வாறன்மா, இரவுக்கு பாஸ்டா செய்வம்!” எழுந்து சென்றான்.

தமையன் வரும் வரை தொலைக்காட்சியில் அமர்ந்தாள் நித்தி.

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவளின் தந்தை தாய், நெதர்லாந்து வந்து பலவருடங்களாச்சு!

பிள்ளைகள் மூவருமே இங்குதான் பிறந்தார்கள். மூத்தமகளை அருகில் மணமுடித்துக் கொடுக்கத்தான் பெற்றவர்கள் விரும்பினார்கள். ஆனால், உறவுக்குள் நல்ல சம்பந்தம் அமைய, தூரமென்றாலும் பரவாயில்லை என முடிவெடுத்துத் திருமணம் முடித்து அவள் அவுஸ்திரேலியா சென்றுவிட்டாள்.

மகனும் தந்தையோடு வேலை பார்க்கத் தொடங்க, பெண் பார்க்கும் முயற்சியில் இருந்த பெற்றோர் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் அந்தரத்தில் போவார்களென்று யார் கண்டது?

“கவனம் செல்லங்கள், அம்மா இரண்டு மாதத்தில் வந்திருவன்; அக்காவுக்குப் பிள்ளை பிறந்ததும் அப்பா வந்திருவார்!” என்றுவிட்டு, திரும்பி திரும்பிப் பார்த்தவாறு சென்ற தாயின் வதனத்தை மறக்க முடியாது தவித்துத் திண்டாடும் அண்ணனும் தங்கையும், பல சமயங்களில், மீளவே முடியாத சுழலில் சிக்கியது போன்ற உணர்வில் தவித்துப் போவார்கள்.

“அப்பா! அம்மா!” முனகினாள் நித்தி. முன்னால் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்த பெற்றோர் தன்னை நோக்கி மென்முறுவல் பூக்கும் உணர்வு ஏற்பட்டது அவளுக்கு!தந்தையின் மடியின் கதகதப்பு; அன்னையின் பரிவான தலை கோதல்; பார்த்துப் பார்த்து ஆசையாகச் சமைத்துத் தரும் உணவுவகைகள்; செல்லமான கண்டிப்பு; ஏக்கத்தில் அடங்க மறுத்தது அவளுள்ளம்!

இனி இவை இல்லவேயில்லை என்பதை நிச்சயமாக உணர்ந்த பின்னும், வேண்டும் வேண்டுமென்று அடம்பிடிக்கின்றதே பாழும் மனம்!

விழிகளில் துளிர்த்த நீரோடு அமர்ந்திருந்தவளிள் தலையில், பரிவுடன் படிந்தது தமையனின் கரம்!

“நித்தி என்னடாம்மா?” கண்டிக்கும் குரலில் கேட்டவன், “வா வா… பசிக்குது சாப்பாட்டைச் செய்வம்.” அவள் எண்ணத்தை மாற்றும் விதமாக இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

*****

திட்டமிட்டபடி, அந்த வார இறுதியில் நேரத்தோடு மதிய உணவை முடித்துக்கொண்ட அண்ணனும் தங்கையும், மதுராவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

தமையன் காரைச் செலுத்திக் கொண்டிருக்க, அருகிலிருந்தவாறே, சிறு நப்பாசையில் மீண்டும் அழைத்துப் பார்த்தாள் நித்தி.

“பச்.. போங்கண்ணா! எவ்வளவு தடவைகள் எடுத்துப் பார்த்திட்டம்? இப்பவும் ரிங்க் போகுதண்ணா; அந்த மதுரா எடுக்கிறாரே இல்லை. சித்தியோ, நம்பர் இதுதான் என்று சாதிக்கிறார். அங்க இருந்து எடுத்தால் எடுபடுதாம்! என்ன கதையோ எனக்கு விளங்க இல்லை!” சலித்துக்கொண்டாள்.

சிறியதாயார் மீண்டும் மீண்டும் கேட்கிறாரே என்று ஒருவித அசுவாரஸ்சியத்தில் புறப்பட்டிருந்த கார்த்திகேயனின் மனதில், சலனத்தின் சாயல் விழுந்திருந்தது.

‘எதுவோ சரியில்லை போலிருக்கே!’ எண்ணிக்கொண்டவன், “அதுதான் நேரிலேயே போறமே, பார்ப்பம் நித்தி.” தங்கையைச் சமாதானப்படுத்தியவாறே காரைச்சீற விட்டான்.

ஏறக்குறைய இரு மணிநேர ஓட்டத்தின் பின் குறித்த வீட்டின் முன்னால் வந்து நின்று, கடமையைச் செவ்வனே செய்த களைப்பில் மூச்சு வாங்கியது கார்!

சிலகணங்கள் வீட்டை அளந்தவன், “காரில் இரு நித்தி, நான் போய்ப் பார்த்திட்டு வாறன்.” இறங்க, “இல்லண்ணா, நானும் வாறன்; வாங்க!” அவளும் இறங்கினாள்.

வேலியில்லாத சிறு முன்தோட்டத்தைக் கடந்து உள்ளே சென்று அழைப்புமணியில் கைவைக்க நினைத்தவர்கள், குட்டையான பூச்செடிகளுக்கு அப்பாலிருந்த அடுத்த வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வந்த பெண்மணியைப் பார்த்து முறுவலித்தார்கள். அவரோ, துளியும் சிநேகமின்றி ஆராயும் பார்வையில் அளவெடுத்தார்.

‘இவரும் தமிழ் போலிருக்கே! ஏன் இப்படிப் பார்க்கிறார்?’ மனதுள் முணுமுணுத்தவாறே அழைப்பு மணியை அழுத்தினான் கார்த்திகேயன். இரு தடவைகள் அழுத்திய பின், ஒருவித அவசரத்துடன் படாரென்று திறபட்டது கதவு.

“என்ன விசயம்?” கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு அண்ணனும் தங்கையும் ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொண்டனர்.

“விலாசம் சரியண்ணா! இதுதான் வீடு.” கூறியவாறே, கைபேசியில் மீண்டும் ஒருதரம் விலாசத்தைச் சரி பார்த்தாள் நித்தி. வீட்டினுள் நின்ற வெளிநாட்டுப் பெண்மணியின் பொறுமை சென்றிருக்க வேண்டும்.

“என்ன விசயம்? யார் வேணும்?” மீண்டும் கேட்டவளின் குரலில் அலுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“மதுரா..மதுரா கணேஷன் வீடு இது தானே?” என்ற கார்த்திகேயனை, மெல்லிய அதிர்வோடு பார்த்த அப்பெண்மணி, “கொஞ்சம் நில்லுங்க!” சட்டென்று உள்ளே சென்று மறைந்தாள்.

சற்று நேரத்தில், ஒருவன், அப்பெண்மணி பின்தொடர இவர்களை நோக்கி வந்தான். அவனோடு ஒட்டிக்கொண்டே சிறு பையனொருவனும் வந்தான். பார்த்ததும், ‘நான் தமிழன்’ அவன் சொல்லாமலே தெரிந்து கொண்டனர், கார்த்திகேயனும் நித்தியும்.

‘அப்ப, சரியான விலாசத்துக்குத் தான் வந்திருக்கிறம்! மதுரா எங்கே? இந்தப் பெண்மணி யார்?’ எண்ணியவாறே அவளை நன்றாகப் பார்த்தவர்களுக்கு, அவள் கருவுற்றிருப்பதும் புரிந்தது.

“ம்ம்...சொல்லுங்க, என்ன வேணும்?” கறாராகக் கேட்டான் அவன்.

“மதுரா கணேஷ்...அவர் இங்கதான் இருக்கிறாரா? அவரின் அம்மாவை எங்களுக்குத் தெரியும்; எப்பவோ போய்ப் பார்க்கச் சொன்னார்; இன்றைக்குத்தான் நேரம் கிடைச்சுது.”

கார்த்திகேயன் சொல்ல சொல்ல அவன் முகமும் கலவரத்தோடு கன்றியதோ! சட்டென்று சமாளித்துக்கொண்டு, “அவே இங்க இல்லையே!” என்றான்.

“என்ன? இங்க இல்லையா? இந்த வீட்டு விலாசம் தானே தந்தவே!” வியப்புடன் கேட்டாள் நித்தி.

“இல்லை...அது வந்து...இங்கதான் வாடகைக்கு இருக்கீனம்; இப்ப வெளியூருக்கு போய்டீனம்; உங்கட ஃபோன் நம்பர் தாங்க, வந்தோன்ன கதைக்கச் சொல்லுறன்.” என்றவனை, உற்றுப்பார்த்த கார்த்திகேயனின் மனதில் சந்தேக மணியின் பலத்த சத்தம்!

“இல்லை பரவாயில்லை, நாங்க இன்னொருமுறைக்கு வாறம்; அவர்களை நேரில் சந்திக்க விருப்பம்.”

“அப்படியென்றால் சரிதான்!” சொன்னவன், கதவை அவசரமாகச் சாத்திக் கொண்டான்.

வெளியில் வந்து காரில் ஏறப் போன கார்த்திகேயனின் பார்வை யோசனையோடு மதுரா வீட்டில் பாய, யன்னலோரமாக, இவர்களையே பார்த்திருந்துவிட்டு விலகினான் சற்றுமுன் பேசியவன்.

காரில் ஏறியமர்ந்து செலுத்த தொடங்கிய கார்த்திகேயனால் ஏனோ நிம்மதியாக வீடு செல்ல முடியவில்லை. மனதில் ஒருவகை பரபரப்பு!

‘ஆர்வமாக விசாரிக்கும் சித்திக்கு என்ன பதில் சொல்வது? இப்படிப் பொறுப்பில்லாமலா இருப்பது? வெளியூருக்குப் போறது என்றால் சொல்லீட்டுப் போனால் என்ன? பாவம் அந்த மதுராவின் அம்மா!’ எண்ணியவனுக்கு, மதுராவின் மீதுதான் கோபம் ஏற்பட்டது.

“மினக்கெட்டு இவ்வளவு தூரம் வந்து பார்த்தம், ஆட்கள் இல்லை என்றால் நாம என்னண்ணா செய்யிறது?” சலித்துக் கொண்டாள் நித்தி.

“அந்த ஆளைப் பார்த்தால் தமிழ் போல இருக்கண்ணா! அந்த மனிசி நெர்தர்லாந்து இல்லை, ஆனால் வெளிநாட்டுக்காரி!”

“ம்ம்ம்...” கொட்டியவன் யோசனையிலிருந்து விடுபடவில்லை.

“அவர்கள் யாராகவும் இருந்திட்டுப் போகட்டும் நித்தி! ஆனால், அவர்களும்...” இழுத்தவன், “எதுவோ சரி இல்லை! இந்த மதுராவுக்கு ஏதாவது பிரச்சனையோ!” என்ற தமையனை, யோசனையோடு பார்த்தாள் நித்தி.

“அப்படி என்னண்ணா பிரச்சனை? சித்தி, அவா எக்ஸ்பெக்டிங் என்றாரே! அதில் ஏதாவது? ஒருவேளை ஆஸ்பத்திரியில் இருக்கிறாரோ! நாம இன்னும் கொஞ்சம் ... அட...பக்கத்து வீடும் தமிழ்தான்ணா; அவேட்டயே கேட்டிருக்கலாம்!” என்ற நித்தி,

“சரி திருப்புங்க, அந்த மனிசியும் ஒருமாதிரி பார்த்துக் கொண்டு நின்றாரே கவனிச்சீங்களாண்ணா? போய்க் கேட்டுட்டே போவம்! இல்லையோ, சித்தியிட்ட தப்ப முடியாது!” இவள் சொல்லிக் கொண்டிருக்கையில், மெல்லிய ஹாரன் ஒலியோடு இவர்கள் காரை முந்திச்சென்ற காரொன்று, முன்னிருந்த எமர்ஜன்சி பார்க்கிங்கில் நின்றது.

இந்நாட்டில், மிக மிக அத்தியாவசிய தேவையில்லாது ‘ஹாரனை’ யாரும் பயன்படுத்தாததில், சட்டென்று சுதாகரித்தனர் அண்ணனும் தங்கையும்.

“நமக்குத்தான் எதுவோ சொல்லீட்டு...பாருங்க காரையும் நிப்பாட்டுறார்!” என்றவாறே உற்றுப் பார்த்த நித்தி,

“அண்ணா! அந்தப் பக்கத்து வீட்டு மனிசிதான், காரை நிப்பாட்டுங்க!” பரபரப்பானாள்.
 
#3
வாசித்துடன் அக்கா சூப்பர் தொடக்கம் 😆😉
 
#4
super ka wait for next episode eagerly
 
#5
ஆரம்பமே படு சுவாரசியமாக இருக்கிறது அக்கா!! அடுத்த பதிவு எப்போது?!
 
#6
Super akka. Interesting ......
 
#7
அதிரடி ஆரம்பமாக உள்ளது மேடம்.
 

lalu

Well-known member
#8
அச்சோ...மதுராவுக்கு என்னாச்சு...சஸ்பென்சில் முடிச்சிட்டீங்களே அக்கா....அருமையான தொடக்கம்....😍
 
#9
ஆரம்பமே அசத்தலாக,த்ரில்லாக இருக்கிறது ரோசி.நன்றி
ஒவ்வொரு பதிவையும் சற்று விரைவாக தருவீர்களா? படிக்க ஆவலாக உள்ளேன்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#10
அனைவருக்கும் மிக்க நன்றி !
 
#11
மதுராவுக்கு என்ன நடந்தது
 

Rosei Kajan

Administrator
Staff member
#12
மதுராவுக்கு என்ன நடந்தது
அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரியவரும் சரோஜா . நன்றி !
 
#13
மதுராவை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு வெளிநாட்டு பெண்ணுடன் குடும்பம் நடத்துறானா?அவள்தான் கர்பிணியா???
 

Rosei Kajan

Administrator
Staff member
#14
மதுராவை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு வெளிநாட்டு பெண்ணுடன் குடும்பம் நடத்துறானா?அவள்தான் கர்பிணியா???
மாட்டேனே ..அடுத்த எபியில் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ஹா..ஹா..
நன்றி நன்றி
 
Top