Category Archives: வாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் …

பிரேமா அவர்களின் என்னை ஆளும் உறவே

பிரேமாவின் என்னை ஆளும் உறவே – யாழ் சத்யாவின் பார்வையில்

 

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. ஆம். பிரேமாக்காவின் கதை படிக்கவேண்டும் என்ற என் ஆசை தான்.

 

ஜெய் என்றழைக்கப்படும் ஜெயந்த்தின் திருமணமும் அதைச் சுற்றிய வாழ்க்கை முறையையும் அழகாக சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்.

 

பத்திரிகையில் வந்த ஒரு செய்தித் துணுக்கை வைத்து இவ்வளவு அழகான கதை படைக்க முடியுமா? உண்மையில் படித்து முடிக்கும் போது வியந்து விட்டேன்.

திடீர் திருமணம் ஒன்றால் இணையும் தம்பதியினர். தாலியேறிய நிமிடத்தில் இருந்து அவனைக் கணவனாக வரித்து அவன் மேல் அன்பு செலுத்தும் நாயகி ப்ரீத்தி. முருகன் திருவிளையாடலை வியந்தது இங்கே தான். அட

இந்தக் காலத்தில் போய் இப்படியொரு பொண்ணா? மஞ்சள் கயிறு மாஜிக் இதுதான் போலும் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே படித்தால் அடுத்தடுத்து அழகான திருப்பங்கள்.

 

ப்ரீத்தியும் அவள் தமக்கை சுபத்ராவும் இயல்பான குடும்ப உறுப்பினர்கள். இது எல்லாக் குடும்பங்களிலும் நடக்கும் ஒன்றே. யோசிக்காது வார்த்தைகளை விட்டுவிடுவதும் பின்னர் மன்னிப்பு கேட்பதும். பெற்றோர்களும் பணிந்து போகக்கூடிய பிள்ளையை பணிய வைப்பதும். ஆனால் இன்னொரு குடும்ப தலைவியாகி விடும் பின்னர் அது வேறொரு குடும்பம் எனும் போது பணிவது இலகுவானதல்ல.

 

ப்ரீத்தியின் கணவன் மீதான அன்பு பார்க்க பார்க்க மனசுக்குள் ஒரு சுகம். அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நீ என் உயிர்.. நான் தான்உன் உறவு என்று நிரூபிப்பது அழகு. அவள் கோபத்தில் கூட அவள் அன்பைக் காட்டும் விதம் எங்களுக்கு சிரிப்பு வர வைக்கிறது.

 

ஜெயந்த். என்ன சொல்ல. அவன் தோற்றத்தில் அழகோ என்னவோ… அவன் நல்ல குணத்தில் அவனை சாரி அவரை மிஞ்ச ஆள் கிடையாது. தனிக்கட்டையாக வாழும் அவர் தன்னையும் வீட்டையும் பார்த்து கொள்ளக்கூடிய மனைவியை எதிர்பார்க்கிறார்.

 

குடும்பத்தில் நடந்த சில அசம்பாவிதங்களால் காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே கெட்ட வார்த்தையாக நினைக்கும் இவர் தனது மனநிலையை மாற்றிக் கொண்டாரா? காதலை உணர்ந்தாரா? என்பதைத் தான் ஒரு சுகமான தென்றலாய் அழகான காட்சி அமைப்புகளோடு சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்.

 

இவர் மனைவி மீது கொண்ட பாசம் ஆகட்டும், அவளை ஒருவர் அவமதிக்கும் போது சும்மா தானும் சேர்ந்து கோபப்படாமல் அந்த பிரச்சினையைத் தீர்க்கும் விதமாகட்டும், மனைவியின் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றாலும் உரிய வரையறைகளோடு நிறுத்தி வைப்பதாகட்டும், முதியவர்களோடு நேரம் செலவிடும் அந்த பொறுமையும் உயரிய குணமுமாகட்டும் எல்லாமே ஆஹா போட்டு வியக்க வைக்கின்றன.

 

இவர் இந்த காலக் ஹீரோவா இல்லை போன தலைமுறையா என்று யோசித்தேன். ஏனெனில் இப்போதெல்லாம் தான் நல்ல மனிதர்களைக் காண்பதே அரிதாகி விட்டதே.

 

கதையில் ஹீரோ, ஹீரோயின் எல்லோரையும் விட என்னைக் கவர்ந்தவர் எனக்கு மிகவும் பிடித்தவர் பரசுராம். என்ன மனிதரய்யா இவர்? மகள் மீது பாசம் இருக்கும் என்பதற்காக இவ்வளவு வேலை பார்ப்பாராய்யா இந்த மனுசன்?

 

இவர் போல் எல்லோரும் இருந்து விட்டால் ஆணவக் கொலைகள் எதற்காக?  கௌரவக் கொலைகள் தான் ஏன்? தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று கருதும் இவரைப் போன்றோர் தான் போற்றிக் கொண்டாடப் பட வேண்டியவர்கள்.

 

பிள்ளை ஒன்றைக் கேட்டு விட்டது என்றால் அதை சும்மா உடனே வாங்கி கொடுத்து விடுவதில் இல்லை உண்மை பெற்றோர் அன்பு. அது தன் மகவுக்கு நல்லதா கெட்டதா என்று தீர விசாரித்து ஆராய்ந்து அதன் பிறகு வழங்கும் போது தான் ஒரு அறிவான அன்பான பெற்றோரின் பாசம் வெற்றியடைகிறது என்பதை புரிய வைத்திருக்கிறார் பரசுராம்.

 

வேணி கணவர் பரசுராமுக்கு ஏற்ற அன்பான மனைவி. பாசமான தாய். சூழ்நிலையை புரிந்து தன் குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் நல்ல ஒரு இல்லத்தரசியாக விளங்குகிறார்.

 

மனோகர் உண்மை நண்பன். தனது நண்பனின் வாழ்க்கைக்கு நன்மை செய்வதற்காக நண்பனது கோபத்தையே சம்பாதிக்க துணிந்தவன்.

 

சுபத்ரா – மோகன் அந்த லூசுகளைப் பற்றி சொல்ல ஒண்ணும் இல்லை. பணப் பேய்கள். நிமல்குட்டிக்காக அதுகளை மன்னிச்சு விட்டு விடுகிறேன்.

 

மொத்தத்தில் மெல்லிய நகைச்சுவை உணர்வு கலந்தோட மனசுக்கு திருப்தியான ஒரு குடும்ப கதை. உங்கள் அனைத்து கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்பி விட்டது இந்தக் கதை.

 

மேலும் பல படைப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரேமாக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

Advertisements

சொர்ணா சந்தானகுமார் அவர்களின் என்னை அடியோடு சாய்த்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளே – சத்யாவின் பார்வையில்

 

இல்ல கேட்கிறன்… எல்லாரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கிங்க…?? இப்பிடி ஆளாளுக்கு த்ரில்லர், சஸ்பென்ஸ் கதைகளா எழுதி நம்ம ஃபிபி, சுகர் எல்லாத்தையும் ஏத்துற பிளானா? நாம வேற எப்பிடி விமர்சனம் எழுதுறதாம்..?

 

பாதி கதை வரை சஸ்பென்ஸ்லயே எங்களை இருக்கிற, இல்லாத மூளை எல்லாம் உருட்டி யோசிக்க வைச்சு மீதிப் பாதியை காதல், ஊடல், கூடல் என்று கலவையாக கலந்து கட்டி அடித்திருக்கிறா நம்ம சொர்ணாக்கா…

 

கதையை வாசிப்பம்னு தொடங்கினா… முதலாவது அத்தியாயத்தில ஹீரோ யாருன்னே மண்டைய பிய்ச்சுக்க வைச்சிட்டாங்கப்பா… கார் வைச்சிருக்கிற கம்பெனி முதலாளி ஹீரோவா, வாட்ச்மேன் ஹீரோவா? அப்போ யார் வில்லன்?

 

ஜேர்னலிஸ்ட் அத்தோட சொந்தமாக பத்திரிகை வைச்சிருக்கிற ஹீரோயின்… பார்த்ததும் செக்கியூரிட்டி கார்டை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கிறாங்க..

 

இப்பிடி ஒரு பணக்கார பொண்ணு அழகான பொண்ணு வலிய போய்க் கேட்க எந்த மடையவனாவது மாட்டேன் என்று சொல்வானா?

 

தாய் தந்தையற்ற ஹீரோயின் மாமாவோட அன்பிலும் மாமியோட கொடுமையிலும் வளரும் பரிதாபம். காதல் என்னும் பெயரில் தான் காதலிப்பவன் மீது கண் மூடித் தனமாக வைக்கும் அன்பு. அவன் பிழையானவனாக இருந்தும் அவனை விட்டு விலக யோசிக்காமல் அவனை திருத்த நினைக்கும் பெருந்தன்மை.

என்ன பொண்ணுடா இவ என்று வியக்க வைக்கிறாள்.

 

ஹீரோ எல்லாம் சேர்ந்த ஒரு கலவை. அவரைப் பற்றி வாய் திறந்தால் சொர்ணாக்கா எனக்கு அடிச்சுப் போடுவா.

அனைத்து கதாபாத்திரங்களும் அவ்வளவோ ரசிக்க வைக்கிறாங்க. வாசிக்கும் போது சிரிப்புக்கு பஞ்சமில்லை.

 

“எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தை தான்

அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே”

இதை அருமையாக விளக்கியிருக்கிறார்கள் சொர்ணாக்கா.

 

விவசாயிகள் பிரச்சினைகள், தீர்வுகள், குழந்தைகள் பாலியல் பலாத்கார பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தது என்று காட்டி இன்றைய பிரச்சினைகள் பற்றி வைத்த கருத்துக்கள் பிரமாதம் அக்கா.

 

அக்கோய்… நாம எல்லாம் சின்னப் பொண்ணு. அவ்வளவோ அறிவு பத்தாது.. இவ்வளவோ போட்டுக் குழப்பக் கூடாது அக்கா. .

 

நான் முதல் தரம் சொர்ணாக்கா கதை வாசித்தாலும் வாசித்தேன்.. உங்க விசிறி ஆகிட்டேன்கா… இப்பிடி எல்லாருமே நல்லா எழுதிட்டு இருந்திங்க என்றால் நாம பாலப்பாடி… வாசிக்க நேரமே கிடைக்க மாட்டேங்குது…

 

அந்த பல்லைப் பத்தி ஒரு கருத்தைசொன்னீங்க பாருங்க.

உனக்கு பொறந்ததை தவிர வேற என்ன பாவம் பண்ணிச்சு அதுன்னு… சிரிச்சு முடியல அக்கா. ..

 

இடையில நம்ம ஊரெல்லாம் இழுத்து விட்டு வேற அசத்திட்டிங்க போங்க…யாழ்ப்பாணம், கொழும்புன்னு…கொழும்பு வெள்ளம் இல்ல வெள்ளவத்தை க்கா… அது…

 

பக்கத்திலே ஆயிலும் சீப்பும் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க தயாராகுங்கள் என் அன்பு நெஞ்சங்களே… மண்டையை பிச்சிக்க தோணுற போது உடன ஆயில் பூசி வாரிக் கொண்டால் சிக்குப் பிடிப்பதை தவிர்க்கலாம் என்று தான்பா…

 

“என்னை அடியோடு சாய்த்தவளே” உங்களையும் சாய்க்கும் என்பதில் ஐயமில்லை. உங்கள் நேரம் சுவாரஸ்யமாய் கழிய வாழ்த்துக்கள்.

 

என்றும்அன்புடன்

யாழ் சத்யா.

தீபிகா அவர்களின் கை சேர்ந்த கனவு சிறுகதை

தீபிகா அவர்களின் கை சேர்ந்த கனவு சிறுகதை – யாழ் சத்யாவின் பார்வையில்

 

காதம்பரி! என்னைப் பொறுத்தவரை இவள் தான் இந்தக் கதையின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. கிராமத்தில் கட்டுப்பெட்டியாக, பாட்டியின் அடக்குமுறைக்குள் வளர்க்கப்படுபவள் இவள். தனது சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நாலு சுவருக்குள் நிறைவேற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறாள் அவளின் வளர்க்கப்படும் சூழ்நிலையால்.  

 

காதம்பரியின் கல்லூரித் தோழிகளால் இவள் கட்டுப்பெட்டித்தனம் பரிகசிக்கப்படும் போது அவளினுள்ளே புதிதாய் முளைக்கும் ஒரு ஆசையானது பெரு விருட்சமாய் உருவெடுக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக அவள் படும் பாட்டையும் போடும் திட்டங்களையும் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் தீபிகா.

 

கிராமத்திலுள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் கொஞ்சம் சுயநலமாகவே வாழ்ந்து பழகிவிட்ட காதம்பரி, தனது ஆசை கை சேர்ந்த பின்பு, தனது மாமன் மகனின் இதமான அறிவுரையால் திருந்தி எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த குடிமகளாக உருவெடுக்கிறாள்.

 

பாட்டி பேர்த்தியின் சம்பாசனைகள், காதம்பரியின் திட்டங்கள் என்று நகைச்சுவையோடு கதையைக் கொண்டு சென்று இறுதியில் இளஞ் சமுதாயத்துக்கு ஒரு தேவையான அறிவுரையோடு முடித்திருப்பது அருமை.

காதம்பரியின் கை சேர்ந்த ஆசை என்ன? அவள் அதை அடைய போடும் திட்டங்கள் என்ன? கதையின் மூலம் தெரிவிக்கும் செய்தி என்ன? என்பவற்றை அறிந்து கொள்ள கதையைப் படியுங்கள் மக்கா.

 

அலட்டலற்ற, வேகமான எழுத்து நடை கதையைச் சோர்வின்றி கொண்டு செல்கிறது. இதேபோல மேலும் பல கதைகள் மூலம் எம் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை வழங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

 

கதைக்கான லிங்க்

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81.229/

சுதா ரவி அவர்களின் மின்மினிப் பறவைகள்

சுதா ரவி அவர்களின் மின்மினிப் பறவைகள் – யாழ் சத்யாவின் பார்வையில்

 

நேரப் பிரச்சினை காரணமாக கதைகள் வாசிக்க இப்போது கொஞ்சம் பின்னடிப்பதுண்டு. இருந்தாலும் வாசிப்பின் மீதான காதல் யாரை விட்டது? குறுநாவல் (137 பக்கங்கள்) என்று அறிந்ததும் அவசரமாய் வாசிக்க ஆரம்பித்தேன்.

 

கதாநாயகி வெண்ணிலாவின் மகிழ்ச்சியற்ற இல்லற வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் கதையை பார்த்து, “அடடா! இது வழக்கமான ஹீரோயிச கதை தான் போல” என்ற ஒரு சலிப்புடனே தான் அடுத்த பக்கங்களுக்குத் தாவினேன். ஆனால் ஹீரோ விக்ரமின் அறிமுகத்தோடு என் மனனிலை முற்றாக மாறி மிகுந்த ஆவலோடு வாசிக்கத் தொடங்கி விட்டேன்.

 

காரணம். ஆறடி உயரம் கொண்ட கம்பீரமான திமிரான நாயகர்களையே பார்த்துப் பழக்கமான மனதுக்கு, இவற்றிலிருந்து மாறுபட்ட ஒருத்தனைக் கண்டதும் ஒரு வித்தியாசமான உணர்வு.

 

அன்பு என்ற ஒரு உணர்வை மறந்து பணத்தையே பெரிதாக மதிக்கும் மனித மிருகங்களின் நடவடிக்கைகளால்,  புறக்கணிக்கபட்டு, நொருக்கப்படும் இதயங்கள் எவ்வாறு இவற்றிலிருந்து மீண்டு தம் வாழ்க்கையை வென்றெடுத்தார்கள் என்பது தான் கதை.

 

உதாசீனப்படுத்தும் போது ஏற்படும் வலிகள், கோபங்கள், உடலில் ஒரு குறை ஏற்படும் போது அதை எதிர்கொள்ள வேண்டிய முறை, கணவன், மனைவிக்கிடையிலான புரிதல் என்று பல விடயங்களை கதையினூடே அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வெண்ணிலாவின் பக்குவமும் விக்ரமின் மனத்திடமும் இன்று பலருக்கும் தேவையானது.

 

‘முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை, அன்பும் பொறுமையும் என்றும் வெல்லும்’ என இந்த அழகான கதையின் மூலம் ஒரு வாழ்க்கைப் பாடத்தை விளக்கிய எழுத்தாளர் சுதா ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

மதுமதி பரத் அவர்களின் காதலே நீ கானலா

மதுமதி பரத் அவர்களின் காதலே நீ கானலா – யாழ் சத்யாவின் பார்வையில்

 

தனது காதல் கானலாகி விடுமோ என்று ஏங்கித் தவிக்கும் ஒரு காதலன், கானலாகிடாமல் எப்படிக் காதலாக்கினான் என்பது தான் கதை. அதைச் சொன்ன விதமோ அழகோ அழகு.

 

காதல் ரசம் சொட்டச் சொட்ட அந்த காதலனது ஏக்கங்கள், தாபங்கள், அதை அவன் அவளுக்கு உணர்த்தும் விதம், தனது ஒவ்வொரு செயலிலும் தனது காதலைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகள் என்று கதையை முற்று முழுதாக தாங்கி நிற்கிறான் விக்கிரமாதித்தன்.

 

அவனுக்கு தூணாய் அவனையே கலங்கடிப்பவளாய் நாயகி பொழிலரசி தனது காதலால் ஆகட்டும், தனது கணவனை கெஞ்ச விடுவதிலாகட்டும், கொஞ்ச விடுவதிலாகட்டும், அவனைப் பழிவாங்கத் துடிப்பதிலாகட்டும் தான் ஜாடிக்கேற்ற மூடியே என்று நிரூபித்து விடுகிறாள்.

 

கல்யாணம் முதல் காதலாய் திருமணத்தில் ஆரம்பிக்கும் கதை இவர்கள் காதலில் முடிவடைகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றோ, பலவோ கேள்விகளை எம்முள் எழுப்ப இறுதிவரை அடுத்தது என்ன என்ற ஆர்வத்தோடு வாசிக்குமாறு விறுவிறுப்பாக கதையை நகர்த்தியது அருமை.

 

நாயகி எதனால் தன் நினைவுகளை இழந்து பைத்தியம் போலானாள்? நாயகியின் தந்தை யாரைக் கொன்றார்? அவரின் இறப்புக்கு காரணம் யார்? நாயகி முதலிரவன்று எதற்கு நாயகனை கத்தியால் குத்துகிறாள்? நாயகனின் தம்பி நாயகியை வீட்டை விட்டுத் துரத்த முயலுவது ஏனோ? நாயகியை கொல்ல வெடிகுண்டு வைப்பது யார்? நாயகிக்கும் கார்த்திக்குக்கும் என்ன தொடர்பு? இப்படி ஏகப்பட்ட கேள்விகளோடு, உரிய நேரத்தில் உரிய விதமாய் மேலும் மேலும் ஆர்வத்தை தூண்டியபடி அதற்கான பதிலை தந்திருப்பது சிறப்பு.

 

ஜோசியம், ஜாதகம் என்ற மூட நம்பிக்கைகள் எப்படியான பாதகங்களுக்கு வழி வகுக்கின்றன? திரைப்படங்களின் தாக்கங்களினால் அறியா வயதிலிருக்கும் பிள்ளைகள் எப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் செய்ய தூண்டப்படுகிறார்கள்? என்ற விடயங்களைக் கதையின் சம்பவங்களில் காணும் போது மனது பதைக்கிறது. இறுதி அத்தியாயங்களை ஒரு திடுக்கிடலுடனே நெஞ்சம் படபடக்கத்தான் வாசித்தேன்.

 

ஆகப் பெரிய கதை எல்லாம் இல்லை. அண்ணளவாக ஒரு இருநூற்றைம்பது பக்கங்கள் அப்படித்தான் வரும். அதனால் ரொம்ப பெரிய கதையோ என்று வாசிக்க தயங்கிக் கொண்டிருப்பவர்கள் தாராளமாக வாசிக்க ஆரம்பிக்கலாம். எழுத்து நடை மிக இலகுவான சொற்களோடு வாசிக்க, வாசிக்க இதம் தருவதாய் அமைந்திருக்கிறது.

 

நாம் அன்றாடம் ஆங்காங்கே கேள்விப்படும் சம்பவங்கள் தான். ஆனால் அதை வாசகர்களை கதையோடு ஆர்வமாய் ஒன்ற வைக்கும்படியாய் சிறப்புறத் தந்திருப்பதற்கு பாராட்டுக்கள் மதுமதி அக்கா.

 

மேலும் பல படைப்புகளால் எங்களை மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

இஷிதாவின் என்னில் உன்னை சுவாசிக்கிறேன்

இஷிதாவின் என்னில் உன்னை சுவாசிக்கிறேன் – யாழ் சத்யாவின் பார்வையில் 

 

அம்மா தாயே இஷிப்பொண்ணே… ஏன் இந்த கொலைவெறி எங்களில்?  அரைத்த மாவை அரைக்க வேண்டாம் என்று கேட்பதற்காக இப்படியா எங்கள் தலையை பிய்ச்சுக்க வைப்பீங்க….? சொர்ணாக்கா, சுதாக்கா கதை படிச்சு பிய்ச்ச முடி இப்போது தான் கொஞ்சம் வளர்ந்து இருந்துச்சு…. இந்த கதையோடு அதுவும் போய்ச்சு…

 

நாயகன் மித்ரேஷ். பள்ளி செல்லும் சிறு குழந்தை மேகாவின் அப்பா. தாயில்லாத மகளைத் தனது சிறிய தாயின் உதவியோடு தாய்க்குத் தாயாக, தந்தைக்கு தந்தையாக வளர்க்கிறான். தெறி பட அப்பா, மகள் காட்சிகள் போல் இவர்களும் தங்கள் பாணியில் மனதை கொள்ளை அடிக்கிறார்கள்.

 

நந்தினி, ப்ரியா, சௌந்தர்யா, சுஜி, ரம்யா, ரியா, அம்மு என்று ஏகப்பட்ட பெண் கதாபாத்திரங்கள். கால்வாசி கதை வரைக்கும் யார் ஹீரோயின் என்று புரியாமல் மண்டை காய்ந்தது. பாதி கதையில் ஹீரோயின் யார் என்று புரிந்தாலும் ஹீரோ குழந்தையின் அம்மா யார் என்று முடியை பிய்ச்சிக்க வைத்து ஏதோ கதை முடிவிலாவது எங்களை ஆசுவாசப்படுத்தியதற்கு நன்றிகள்.

 

மிகவும் அழகான எழுத்து நடை. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை என்ன நடந்திருக்கும்? யாராக இருக்கும்? என்று ஒரு ஆர்வத்தோடேயே கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

 

வழக்கம்போல ஒரு காதல் கதை என்று நினைத்தேன்.  காதலுக்குள்ளும் பல வாழ்க்கை அனுபவங்களை பதித்து அழகாக தந்திருப்பது அருமை. திவ்யா, ராஜேஸ், ப்ரியா உறவின் உண்மை அறிந்து மனசு நெகிழ்ந்து போனது.

 

கலகலப்புக்கு பஞ்சம் வைக்காமல் நந்தினியும் சுஜியும். இவர்கள் இருவரும் தங்கள் தங்கள் தாய்மாரோடு பேசுவது ரசித்து சிரிக்க வைத்தது.

 

கதையில் பல கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருந்தாலும் அனைவற்றையும் குழப்பமற தெளிவாக புரிய வைத்திருப்பதும் இந்த கதையின் சிறப்புக்கு ஒரு காரணம். பாத்திரங்களின் அறிமுகத்தில் எங்களை ஒரு மாதிரி ஊகிக்க வைத்து அதை திசைதிருப்பி இருப்பார்.

 

உங்கள் மற்றைய கதைகளும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது இந்த நாவல். உங்கள் பணி மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.

 

என்னில் உன்னை சுவாசிக்கிறேன் என் சுவாசத்திலும் ஓர் அங்கமாய்…

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

வான்மதி ஹரியின் உனது காதலில் விழுந்தேன் நான்

உனது காதலில் விழுந்தேன் நான் – யாழ் சத்யாவின் பார்வையில் 

 

“யோவ் மதிம்மா… நீங்க எல்லாம் எதுக்கு எழுத வரணும்…? கிடைக்கிற கொஞ்ச நேரத்திலயும் வாசிப்போம்னு உட்கார்ந்தால் இந்த கொடுமை எல்லாம் அனுபவிக்கணுமா…?”

 

நான் உள்பெட்டியில் இவ்வாறு திட்ட ஒரு ஜீவன் அதை வேற உண்மை என்று நம்பி வடித்த கண்ணீர் ஆறாகப் பெருகி என் வீடு வரை வந்து விட்டது. ஏன்னா நாம பெர்பெக்ட் ஆக்டர் பாருங்க… பயபுள்ள நம்பிடுச்சு… 😄😄😂😂

 

உண்மையில் கதையைப் பற்றிச் சொல்லணும் என்றால் புதிதாக எதுவும் இல்லை. ஆனால் அதை எழுதியிருக்கும் விதத்தில் கதாபாத்திரங்களை விட மதிம்மா தான் கண் முன்னாடி வந்து நிக்கிறார்.

 

மதிம்மா மாதிரியே ரொம்ப சுட்டியான வாயாடி ஹீரோயின் மதுமதி… கொஞ்சம் ஆணாதிக்கம் நிறைந்த ஹீரோ கௌதம் வர்மா… பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமண பந்தத்தில் இணையும் இவர்கள் தங்கள் கோபங்கள், பிரச்சினைகள் தீர்ந்து எப்படி ஒற்றுமையானார்கள், எப்படி ஒரு நல்ல வாழ்க்கையைப் புரிந்துணர்வோடு அமைத்துக் கொண்டார்கள் என்பது தான் கதை.

 

கிராமத்துப் பெண்ணொன்று வசதியான பட்டணத்து இளைஞனை மணக்கும் போது தன் புது வாழ்வில் அவள் மனதளவில் எந்தளவு பாதிக்கப்படுகிறாள் என்பதை தெளிவாக காட்டியிருக்கும் விதம் அருமை.

 

மதுமதியின் நண்பியான கயலும் கௌதமின் நண்பனான அசோக்கும் மனதை நிறைக்கிறார்கள்.

 

என்னை மிகவும் கவர்ந்தவர் லேடி டான் அகிலாண்டேஸ்வரி தான். வயதாகிய பிறகும் அவரின் அனுபவத்தை ஒவ்வொரு மனிதர்களின் குணவியல்புகளைக் கொண்டு பிரச்சினைகளை சுமூகமாக அவர் கையாள்வது ஆஹா போட வைக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி ஒரு பாட்டி இருந்தால் அந்த குடும்பம் சிறந்து விளங்குவது நிச்சயம்.

 

காலேஜில் இந்த ரெண்டு பொண்ணுங்களும் அரோகரா போட்ட பொழுது நானே திகைத்து போனேன்… அவர்கள் கூறிய காரணம் கேட்டு சிரித்து வயிறு வலித்தது. உண்மையைச் சொல்லுங்க மதிம்மா… இதெல்லாம் சொந்த அனுபவம் தானே…

 

இது போல கதை முழுவதும் ஒவ்வொரு பாத்திரத்திலும் நகைச்சுவைகளாலும் தரமான கவுண்டர்களாலும் உதடுகளில் புன்னகையோடே வாசித்து முடிக்க வைக்கிறார் நம்ம மதிம்மா..

 

கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சி, தங்கள் வாழ்க்கையை காதலோடு வாழ அவர்கள் படும்பாடு இன்றைய காலத்தில் அவசியமான ஒன்று.

 

எனக்கு வாசித்து கொண்டு போகும் போது ரொம்ப பிடித்த விடயம் நம்ம மதிம்மா லைக்கும் கொமென்ற்ஸ்க்கும் கெஞ்சிட்டு இருந்தது… அடாவடியாக அவர் கமெண்ட்ஸ் பண்ணச் சொல்லி வாசகர்களை ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி கேட்டிருந்த ரொம்ப சிரிக்க வைச்சுது. ஆனால் இன்றைக்கு எழுதும் ஒவ்வொருவரின் ஆதங்கமும் இது. நிறைய பேர் வாசித்தாலும் லைக், கமெண்ட் போட மாட்டன் என்கிறாங்க.. என்ன செய்வது? 😢

 

கதையை எவ்வளவு ரசித்து, சிரித்து வாசித்தனோ… அதை விட அதிகமாய் என்னை அழ வைத்தது கதையின் நடுவே மதிம்மா கிட்னி பெயிலியர் ஆகி இறந்த தம்பியைப் பற்றி சொல்லியிருந்தது.

 

சகோதரர்களிடையே ஒருவர் மீது பெற்றோர் பாசம் அதிகளவு காட்டும் போது மற்றவருக்கு இயல்பாய் வரும் துவேசத்தில் கொடுக்கும் சாபங்கள்… என் தம்பிக்கும் உங்களை மாதிரி எத்தனையோ சாபம் நானும் கொடுத்திருக்கிறேன்.

 

உங்க தம்பி உங்களை விட்டுப் போனது அவரோட விதி முடிஞ்சுது என்று அர்த்தம். இதுவும் கடந்து போகும் என்று நாம தான் நம்ம வாழ்க்கையைப் பார்த்திட்டுப் போகணும்… உங்க ஆசைப்படி உங்க தம்பி உங்களுக்கு மகனாகப் பிறக்க நானும் கடவுளை வேண்டிக்கிறன்.

 

அப்புறம் முக்கியமான விசயம் மதிம்மா… உங்களை செல்பி குயின்னு ரொம்ப கலாய்ப்பன். அதுக்கு மனசார மன்னிப்பு கேட்டுக்கிறன். உங்க போட்டோஸ்க்கு பின்னால எல்லாருக்கும் சிரிச்சுக்கிட்டே கலாய்ச்சு கமெண்ட் போடும் உங்க பின்னால இப்படி ஒரு சோகம் இருக்கும் என்று கனவிலும் நினைக்கல மதிம்மா.. தம்பியோட ஒரு போட்டோ கூட எடுக்காமல் விட்டோமே என்ற அந்த வேதனை தான் இப்ப உங்களை ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படம் எடுத்து பொக்கிஷமாக சேர்த்து வைக்கப் பண்ணுதுன்னு நினைக்கும் போது உங்களை கேலி பண்ணின என்னை எப்படி திட்டுறன்னே எனக்கு தெரியல. ரியலி வெரி ஸாரி மதிம்மா…

 

இந்த சோகங்களையெல்லாம் மறைத்து, மறந்து எங்களை மேன்மேலும் பல கதைகள் மூலம் சிரிக்க வைக்க இந்த சத்துமாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மதிம்மா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

லதா பைஜ்ஜூவின் உயிர் சுமந்த உறவே

லதா பைஜ்ஜூவின் உயிர் சுமந்த உறவே – யாழ் சத்யாவின் பார்வையில்

கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை லதாக்கா ஈழப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பீர்கள் என்று.  மனது கனத்து விட்டது. நிறைய விபரங்கள் சேர்த்திருக்கிறீர்கள். நிச்சயமாக அகதி ஒருவரை சந்தித்து பேசியிருக்கிறீர்கள் என்பது உறுதி.

 

சில திரைப்படங்களில் இலங்கை தமிழ் என்று பேசப்படும் தமிழைக் கேட்டு நாங்கள் விழுந்து விழுந்து நகைத்திருக்கிறோம். அந்தளவிற்கு புதியதொரு வடிவம் கொடுத்து பேசியிருப்பார்கள்.

 

ஆனால் நீங்கள் எழுத்திலே நான் ஆச்சரியப்படும் அளவுக்கு அழகாகக் எங்கள் பேச்சு வழக்கைக் கொண்டு வந்துள்ளீர்கள். அதற்கு என் முதற் கண் நன்றிகள் அக்கா.

 

30.10.1995 ஈழ மக்களால் மறக்க முடியாத ஓர் இடப்பெயர்வு. கிளாலியால் கடல் மார்க்கம் மூலம் வன்னிப் பகுதியை மக்கள் தஞ்சம் அடைந்த நிகழ்வை அப்படியே கண் முன்னே படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள் அக்கா.

 

பின்னர் வன்னி நிலப் பரப்பிற்குள்ளும் அவர்கள் இடம்பெயர்ந்து அகதியாக இந்தியாவுக்கு வரும் காட்சிகள் இறுதி யுத்தத்தை மீளவும் ஒரு தடவை நினைத்துப் பார்த்து மனசு வலிக்க வைத்தது.

 

நல்லூரில் இருந்து இடம் பெயர்பவர்கள் ராமேஸ்வரத்தைச் சென்றடையும் வரை ஊர்களின் பெயர்களை பிழை விடாது நீங்கள் குறிப்பிட்டுள்ளதிலேயே இந்தக் கதைக்காக நீங்கள் எந்தளவு தூரம் உழைத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.

 

ஒரு ஈழத் தமிழச்சியாய் நீங்கள் எம் பிரச்சினையைக் கருவாய்க் கொண்டதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா. மிக்க நன்றி.

 

இனி கதைக்கு வருவோம். இலங்கையிலும் இந்தியாவிலும் இரு பிரிவுகளாக செல்லும் கதை ஓரிடத்தில் வந்து குவிகிறது. இரு நாட்டவருக்கும் இடையேயான தொடர்பு என்ன என்பதில்.

 

இளமாறன் – மித்ராளினி காதலோடு ஐந்து வருடங்களாக தாம்பத்யம் நடாத்துபவர்கள் இடையே ஏற்படும் மிகப்பெரும் பிரச்சினை. இதனால் மன நிம்மதியை இழந்து தவிப்பவர்களுக்கு ஊமைப் பெண்ணான தீபாவினால் கிடைக்கும் தீர்வு. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு என்ன? தீபா வழங்கிய தீர்வு என்ன? என்பதற்கான விடைகள்

கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

 

பிரதீபன் – வாஸந்தி. இலங்கையில் இடம்பெயர்ந்து குடியேறும் இடத்தில் சந்தித்து மலரும் காதல். காதல் சொல்ல முன்னரே பிரிபவர்கள் இணைவார்களா? சொல்லப்படாத காதலுக்காக காத்திருக்கிறார்களா இவர்கள்? என்பவற்றை அறிந்துகொள்ளவும் கதையைப் படியுங்கள்.

 

மனித உணர்வுகளை அழகாக விளக்கியிருக்கிறீர்கள் அக்கா. மித்ரா தனது இழப்பிற்காக துடிப்பதாக இருக்கட்டும், மனைவியின் வேதனையை உணர்ந்து இளா தவிப்பதாக இருக்கட்டும் ஒரு கணவன் மனைவியின் புரிந்துணர்வை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

 

பிரதீபனோ அதற்கும் மேலே. நிறை மாதக் கர்ப்பிணியாக மனைவியை கண்டும் அவள் சூழ்நிலையை புரிந்து கொள்வதில் ஆண்மகனுக்கு இலக்கணமாய் விளங்குகிறான். வாஸந்தி சொல்லவே தேவையில்லை. எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாத துன்பங்கள் அனைத்தையும் அனுபவித்தும் வாழ்க்கையோடு துணிந்து போராடும் அவள் புதுமைப் பெண்ணாய் மிளிர்கிறாள்.

 

உணர்ச்சிப் போராட்டங்களோடு தெளிவான உரையாடல்களோடு மனதைக் கனக்க வைத்துக் கொண்டு நகரும் கதை படித்து முடியும் வரை கீழே வைக்க முடியவில்லை.  முடிவு எல்லோருக்கும் நிறைவு தரக்கூடியதாக அமைந்திருந்தாலும் கதைக்கருவின் தாக்கம் படித்து முடித்த பின்னரும் இதயத்தில் ஒரு வலியை தந்து கொண்டு தானிருக்கிறது. நானும் அதே மண்ணின் பல துன்பங்களை அனுபவித்தவள் என்பதாலோ தெரியவில்லை இந்த வலி.  

 

எனக்கு ஒரேயொரு குறை அக்கா. கதையில் ஒரு மானபங்க காட்சி ஒன்று இடம்பெறுகிறது. முகாமில் தங்கியிருப்பவளைக் கற்பழித்தது இராணுவமா? அல்லது அங்கே தங்கியிருந்தவர்களா? என்று சரியாக தெரியாத மாதிரி முடித்திருந்தீர்கள். முகாமில் இருந்த எம் மக்கள் இப்படியான இழி வேலைகளில் ஈடுபட்டதாக நான் அறியவில்லை.

 

இன்று எம் மண்ணிலும் சில காமுகர்களால் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

ஆனால் வவுனியாவிலோ, ஓமந்தை முகாம்களிலோ எம்மவர்களால் நடைபெற்றதாக நான் அறியவில்லை.  அப்படி ஏதும் நடந்து அந்த செய்திகள் என் கண்ணில் படவில்லையோ தெரியாது அக்கா. இது என் கருத்து மட்டுமே.

 

உங்களின் மீதிக் கதைகள் நான் வாசிக்கவில்லை என்றாலும் இந்தக் கதை உங்களுக்கு ஒரு சிறந்த பெயரைத் தரப் போவது உறுதி. ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் வரும் கவிதைகள் அப்படியே மனசை அள்ளிச் சென்றன அக்கா. அவ்வளவோ அழகான வார்த்தை அமைப்புகள்.

 

இப்படியான ஆழ்ந்த கருக்கள் கொண்ட அழகான கதைகள் மேலும் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

 

அன்னாஸ்வீட்டியின் நனைகிறது நதியின் கரை

அன்னாஸ்வீட்டியின் நனைகிறது நதியின் கரை – யாழ் சத்யாவின் பார்வையில்

———————————————-

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஸ்வீட்டி அக்காவின் கதைகளில் ஸ்வீட்டான காதலோடு சேர்த்து அனைத்து விடயங்களையும் அடக்கி இருப்பார். சீரக மிட்டாய் போல ஒரு கவலையான சுவை. படித்ததும் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு. இவர் சிறப்பே இவர் கதையின் வேகம். ஒவ்வொரு விடயத்தையும் சலிக்க வைக்காத விதத்தில் ஒவ்வொரு பக்கத்தையும் ஆவலாக அடுத்து என்ன என்ன என்று படித்து முடிக்கும் வரை தட்டிக் கொண்டே போக வைக்கும் வேகம். தெளிவான காட்சி அமைப்புகள் அப்படியே கதையோடு எம்மைக் கட்டிப் போட வைக்கும் திறம்.

 

அரண் – சுகவிதா

அரண் கிரிக்கெட் ப்ளேயர். சுகவிதா – டென்னிஸ் ப்ளேயர்.

 

ப்ரபாத் – சங்கல்யா

அரணின் நண்பன் & சுகவிதாவின் உடன்பிறவா சகோதரன் ப்ரபாத் ஜோனத் – கிரிக்கெட் ப்ளேயர் – சங்கல்யா – ஜேர்னலிஸ்ட்

 

இங்கேயும் காதல் தான் எல்லோரையும் ஆட்டி வைக்கிறது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக.

 

ஒரே பாடசாலையில் படிக்கும்போது அரணுக்கும் சுகவிக்கும் இடையில் சிறுபிள்ளை தனமாக ஆரம்பிக்கும் மோதல்கள் சுகவியின் தந்தை அனவரதனால் நீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது.  அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து வளரும் சுகவிதா அரணின் மேல் ஏற்படும் வெறுப்பின் காரணமாகவே டென்னிஸ்ஸில் சாதிக்க துடிக்கிறாள்.

 

அதேநேரம் அரணின் தந்தை திரிகேயனின் நல்ல விதமான அறிவுரைகள் அரணிற்கு சுகவி மீதான புரிதலை உண்டு பண்ணுகிறது.

 

ஒரே ஊர்க்காரனான ஒருத்தன் நல்ல நிலையில் இருக்கும் போது அதை நல்ல விதமாக பார்த்து சந்தோசப் படாமல் அதைப் பார்த்து பொறாமை படுவது தனக்குள்ளேயே தாழ்வுணர்ச்சி கொள்வது அதன் மீதான வெளிப்பாடுகள் பிள்ளை வளர்ப்பின் மீது கூட ஆட்சி செலுத்தி அவர்களையும் ஒரு தவறான வாழ்க்கை நெறிக்கு தள்ளுகிறது. பரம்பரை பரம்பரையான பகைமைகளுக்கு இப்படியான மனித உணர்வுகள் காரணமாகி வாழ்க்கையை.நாசமாக்குவது வேதனைக்குரிய விடயமே. அனவரதன் சிறந்த உதாரணம்.

 

அதேநேரம் அவர் மனைவி புஷ்பம் கணவரை நன்கு அறிந்து மகளுக்கும் கணவருக்கும் அதை உணர வைக்க முயன்றும் அவர்கள் இவர் பேச்சுக்கு செவிமடுக்காத காரணத்தினால் தன் முயற்சியில் தோற்றுப் போகிறார். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இவர். தந்தைக்கு பிடிக்காதவனை மகள் மணக்கப் போகிறாள். ஆனால் அந்த மாப்பிள்ளையை தனக்குப் பிடிக்கும் எனும் போதும் தனது கணவர் தனிமையாக உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக மகள் கல்யாணத்திற்கு போகாமல் விடுகிறார். அவரின் அந்த அதீத புரிந்துணர்வே ஒரு தாம்பாத்தியத்தை வெற்றியடைய வைக்கிறது.

 

திரிகேயன். பணம் அதிகம் இருந்தாலும் தலைக்கனம் கொள்ளாது வாழ்க்கையை.அதன் போக்கில் எதிர் கொள்கிறார். பிறக்கும் போதே தாயை இழந்த மகனை.தாய்க்கு தாயாகவும் இருந்து தோளுக்கு மிஞ்சியவனை உற்ற தோழனாகவும் உரிய விதத்தில் தேவையான அறிவுரைகளோடு அவர் வளர்க்கும் விதம் அடடா இவரல்லவோ அப்பா என வியக்க வைக்கும் ஒரு நபர்.

 

அன்பரசி – பிரபாத்தின் தாய். ஒற்றை ஆளாக பிள்ளை வளர்க்கும் சராசரி பாசக்கார அம்மா. கதைக்கு தேவையான விடயங்களை உரிய நேரத்தில் செய்ய வைக்கும் பாத்திரம். அதைச் செவ்வனே செய்வதில் சிறப்பு.

 

சங்கல்யா – அழகான பெயர். தந்தையின் துரோகத்தால் ஆண் வர்க்கத்தை வெறுப்பவள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காதலில் விழுந்து அதற்காக போராடுவதில் மனதில் நிறைகிறாள்.

 

பிரபாத் – காதலின் நாயகன். தனது பாஷன், உத்யோகத்திற்கேற்ப காதலியை என் செல்ல சிக்ஸர் என்று கொஞ்சியே எங்கள் மனசையெல்லாம் வசீகரித்து சென்று விடுகிறான். இவன் மாதிரி ஒரு உற்ற நண்பன், உண்மைச் சகோதரன், பாசமிகு மகன் எங்களுக்கு எல்லாம் கிடைக்க மாட்டானா என்று ஏங்க வைத்து விடுமளவு சிறந்த ஆண் மகன். இவனுக்கு நிறைய ரசிகைகள் இருந்திருப்பது உறுதி.

 

அரண் – காதலுக்காக போராடும் ஒரு காவலன். அவளுக்காக தனது பதவி,புகழ், பெயர் எதையும் இழக்க தயாராகும் அளவு அன்பு. பல தடைகள் தாண்டி அதில் வெற்றியும் காண்கிறான். அந்த தடைகளும் அதை அவன் சிறப்பாக இயல்பாக கையாண்டு வெற்றி பெறுவதும் தான் கதையின் ஓட்டம்.

 

சுகவிதா – தந்தையின் உருவேற்றலில் வளர்க்கப்படுபவள் ஒரு விபத்தில் அம்னீசியாவில் பீடிக்கப்பட்டு நிகழ்வுக்கும் கடந்த காலத்துக்கும் இடையே போராடி புத்திசாதுர்யமாக யோசித்து முடிவெடுத்து நடப்பை தீர ஆராய்ந்து வாழ்க்கையை வெற்றி கொள்கிறாள்.

 

சுகவிதா – ஜீவாக்கிடையேயான காதல் அற்புதம். ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் மீது நாம் கவரப்பட்டு அவரது சொந்த உருவம் மறைந்து நாம் அந்த எழுத்துக்களாகவே அவர்களை பார்க்க ஆரம்பித்து அவர்கள் மீது அன்பு வைக்கிறோம். பித்துக் கொள்கிறோம். எங்கள் துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேட விளைகிறோம். அவர்களின் எழுத்துக்களில் கிடைக்கும் ஆறுதல் எம் வாழ்க்கை பிரச்சினைக்கும் ஒரு ஆறுதல் தரும் என்ற எண்ணத்தோடு அவர்களிடம் எங்கள் பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். எனக்குமே இந்த அனுபவம் இருப்பதால் சுகவியின் மனநிலையை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

 

ஜீவா ஆணாக இருந்த பட்சத்தில் அவனும் அவளைக் காதலித்த பட்சத்தில் சுகவி அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் இயல்பாக.

 

சுகவி – ஜீவா காதல் நிறைவேறியாதா? அரண் என்ன ஆனான்? என்பதெல்லாம் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்க மக்கா.

 

நனைகிறது நதியின் கரை காட்டாற்றாய் மேடு, பள்ளம் எல்லாம் கடந்து வந்து எங்கள் மனக் கரைகளையும் தன் வெண்ணுரை அலைகளால் நனைத்துச் செல்வது உறுதி.

 

மேலும் பல சிறந்த வித்தியாசமான படைப்புகள் வழங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. தொடரட்டும் உங்கள் பணி.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

அன்னா ஸ்வீட்டி அவர்களின் அதில் நாயகன் பேர் எழுது

அதில் நாயகன் பேர் எழுது – யாழ் சத்யாவின் பார்வையில்

 

முகப்புத்தகத்தில் அடிக்கடி தட்டுப்பட்டது இந்த பெயர்… “எப்படியான கதைகள் வாசகர்களின் அதிக வரவேற்பை பெறும்?” என்று நீலாமணி அக்கா கேட்டதற்கு “தலைப்பு வித்தியாசமாக இருந்தாலும்” என்று சிந்து ஜெகன் கூறியிருந்தார். என்னைப் பொறுத்தவரை இந்த கதையில் அது முற்றிலும் உண்மை. இந்த கதையின் பெயர் தான் என்னை வாசிக்க தூண்டியது.

 

இரு வேறு கால கட்டத்தில் நடக்கும் கதைக்களம். இன்றைய காலத்தில் விவன் – ப்ரியா ஜோடி. பாண்டிய மன்னன் மானகவசன் – ருயம்மா தேவி ஜோடி.

 

அரச காலம் ஒருவரின் கனவில் தோன்றுவதாக அமைந்து கனவிற்கும் நிஜத்திற்கும் என்ன தொடர்பு என்று எங்களைச் சுத்த விடுகிறது.

 

சில நேரங்களில் கனவில் தோன்றுவது நிஜத்தில் முதலிலும், சிலநேரங்களில் கனவில் முதலிலும் தோன்றி எதனால் இந்த கனவுகள் என்று எங்களை ஒரு புரிதலுக்கு வர விடவில்லை.

 

பராக்கிரம பாண்டியன் பற்றிய நிறைய தகவல்கள். நாயகி கற்பனையாக இருந்தாலும் கூட ருயம்மாவோடு பின்னிப் பிணைந்து சென்ற கதையில் பாண்டியனது ஆட்சி முறையை அவர் சில வேண்டாத முறைமைகளை மாற்றியமைக்க முயன்றது, சாதி ஒழிப்பிற்காக அந்த நேரமே போராடியது என்று பல சரித்திர தகவல்களை அள்ளித் தெளித்து இருக்கிறார்

 

ஜல்லிக்கட்டுக்காக போராடிய எங்களுக்கு ஏறு தழுவலின் சரித்திரத்தை மிக அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.  ஒரு மண்ணிற்கு ஆவினத்தின் அவசியம் வியக்க வைத்தது.

 

இன்றைய கால கட்ட நிகழ்வுகளில் அழகாக ஆங்கில வார்த்தை பிரயோகம் கலந்த எழுத்து நடை. ப்ரியா இன்னும் மனசிற்குள். சிறு வயதிலிருந்து மனதால் கஸ்டப்படும் அவள் live in present என்று கடந்தகால கசப்புகளை மறக்கடித்து தன்னை நிகழ்காலத்தோடு பொருத்தி வாழப் போராடும் போது வாசிக்கும் எங்கள் கண்களில் ப்ரியாவின் வேதனையை வர வைக்கிறார்.

 

விவனை கொல்ல நடக்கும் முயற்சி, பில்லி, சூனியமா? அமானுஸ்யமா? பூர்வ ஜென்ம தொடர்பா? மனிதர்களின் சதியா? என்று பலதும் எண்ண வைத்து இறுதியில் எதிர்பாராத விடையோடு அனைத்து புதிர்களையும் இலகுவாக அவிழ்த்துள்ளார்.

 

நானெல்லாம் அதிகம் கனவு காணும் ஜென்மம் இல்லை. அதிகாலையில் வாசித்து விட்டு தூங்கினால் பாண்டியனும் ருயம்மாவும் தான் ஒருவரை ஒருவர் காட்டிக் கொள்ளாமல் காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் ப்ரியாவை தாங்கோ தாங்கென்று தாங்கும் விவன் வந்து போகிறான்.

 

சில இடங்களில் நெஞ்சைப் பிசையும் எழுத்து. அற்புதம் அன்னாஸ்வீட்டி அக்கா. இந்த ஒரே கதையின் மூலம் என்னை உங்கள் அனைத்து கதைகளையும் தேடி வாசிக்க வைத்து விட்டீர்கள்.

 

உங்கள் தளம் மிக நன்றாக உள்ளது அக்கா. தேடுதலின்றி வாசிக்க இலகுவாக உள்ளது. நீங்கள் மேன்மேலும் இப்படி வித்தியாசமான பல கதைகள் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் அக்கா.

 

“அதில் நாயகன் பேர் எழுது” எங்கள் மனங்களிலும் ஒரு காவியத்தை எழுதிச் செல்வது உறுதி.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா