Category Archives: நூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்…

தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களின் ‘செம்மீன்’

 

செல்வம் கொஞ்சும் கடல்மாதாவின் செல்லக் குழந்தைகளான மீனவர்களின் வாழ்கையை ‘செம்மீன்’ வாயிலாக நேரில் பார்த்த உணர்வு!

 மலையாளக் கரையோரமாக உள்ள இரு மீனவக் குடியிருப்புகளை மையமாக வைத்து,  வழிவழியாக அவர்கள் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அவர்களின் அன்றாட வாழ்வு கழியும் விதம், சிறுசிறு ஆசாபாசங்கள், அதற்கான அவர்களின் போராட்டங்கள்  என மிகவும் தத்ரூபமாக நகர்ந்து, கதையல்ல நிஜமென வாசிப்பவரை எண்ண வைக்கின்றது ‘தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களின் செம்மீன்’.

  ‘சிறுவயது நட்பில் ஆரம்பித்து காதலில் கைகோர்த்த வேற்று மதங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மணவாழ்வில் இணைய முடியாது பிரிகின்றனர்.

  உன்னையே நினைத்திருப்பேன் என்று கூறும் காதலனின் நினைவுகளை உதறித் தள்ளப் பிரயத்தனப்பட்டவாறே திருமணம் செய்கிறாள் அப்பெண்.

  அவள் நினைத்ததைச் செயலாற்ற முயன்றாளா? முடிந்ததா? என்பதே கதை .

 

   சக்கி: தாரமாகவும் தாயாகவும் தன் கடமையைச் செவ்வனே செய்ய மிக மிகப் பிரயத்தனப்படுகிறாள். அதில் வெற்றி பெறுகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

  கணவனின் வளர்ச்சிக்கு தன்னையே உருக்கி துணை நிற்கிறாள். அவன் தவறு செய்கிறான் என்று உணரும் போது, பயன் உண்டோ இல்லையோ தட்டியும் கேட்கிறாள்.

   மகள்கள் வாழ்வு எவ்வித சிறு கறையுமின்றி அமைந்திட வேண்டுமென்று எண்ணுபவள் அதற்கு பங்கம் வந்திடுமோ என்கின்ற ஐயம் எழும் கணம் ஒடிந்து போகிறாள். கடைசித் தருணத்திலும் மகளின் நல்வாழ்வும் கணவனின் சந்தோஷமுமே அவள் கருத்தில் நிற்கின்றது; அதற்காகவே பாடுபடுகிறாள்.

சக்கியின் கணவன் செம்பன்குஞ்சு: வாழ்வில் உறுதுணையாக நிற்கும் துணையைப் பெற்ற பாக்கியவான். ஆனாலும், அவனில் ஆதிக்கம் செலுத்திய ஆணவமும் சுயநலமும் அவன் அழிவுக்கு வழி சொல்லியதோ என்னவோ!

   எப்படி இருந்தாலும் சித்தம் கலங்கிச் செய்வதறியாது நின்றபோதும் ஒருகாலத்தில் ஏமாற்றி வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்து மானஸ்தனாக நிற்க முயல்கிறான்.

   காலம் கடந்து செய்யும் செயலில் பயனுண்டா என்ன?

   அவன் இச்செயலை காலா காலத்தில் செய்திருப்பின் அவன் மகள் வாழ்வு அமைதியாக இருந்திருக்குமோ என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

   கறுத்தம்மா: இவள் வாழ்வில் சின்னஞ் சிறுவயதில் மொட்டு விட்ட நட்பொன்று மெல்ல மெல்ல காதலாக மலர்ந்து கைகூட முடியாது பிரிந்து போகின்றது. இதை மிக மிக இயல்பாக அற்புதமாக சித்தரிக்கின்றது கதை.

   தான் நேசித்தவன் தன்னால் மறுக்கப்பட்ட வேதனையோடு தன் குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்டான் என்கின்ற அசையாத எண்ணமும் இவள் மனதில் நிலைத்து நிற்கின்றது.

   அவனால் தன்னை மறக்க முடியாது என்பதையும் அவள் உறுதியாக நம்புகிறாள்.

  அப்படியிருந்தும் அவள் இன்னொருவன் மனைவியாகிறாள். தன் முதல் நேசத்தை வென்று கணவனுக்கு உண்மையாக இருக்கவே மனமார விரும்புகிறாள்.

  அதில் அவளால் வெற்றி காண முடிந்ததா?

  அவளின் சுற்றம் அதற்கு அனுமதித்ததா?

அவள் கணவன் அதற்குத் துணை நின்றானா?

மனதில் ஒருவனை மனமார நினைத்தேன் என்று கணவனிடம் சொல்லும் இவள் இப்பொழுது உன் மனைவி நான் எனும் வகையில் தான் வாழ்கிறாள்.

   வேற்று மதத்தானை விரும்பியதால் தான் சந்தித்தவற்றை எண்ணி, பெண் குழந்தையே எனக்கு வேண்டாம் என்று நினைப்பவள், பெண் குழந்தை பிறக்க, இவளை இன்னொரு கருதம்மாவாக வளர்க்க மாட்டேன் என்று உறுதி கொள்கிறாள். அதை அவளால் நிறைவேற்ற முடிந்ததா?

அவளை, அவள் தாய் வளர்த்த மாதிரி, நான் உன் தாய் என்று இறுதி மூச்சு வரை அவளுக்காக யோசித்து நடந்து கொண்டமாதிரி இவளால் கொஞ்சமேனும் நடக்க முடிந்ததா?

(இதை , வாசிக்காதவர்கள்வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.)

  பழனி:யாருமற்றவன்; மனைவியாக வந்தவளை ஊரே தூற்றியபோதும் ஒதுக்கியபோதும் நம்பிக்கையோடு அரவணைக்கிறான். அதே, நானும் மிகச் சாதாரண மனிதப்பிறவி என்பதை அவன் சில பல சமயங்களில் காட்டவும் செய்கிறான்.

  மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிவிட்ட மனைவியை முழுமனதோடு அவன் நம்பி ஏற்றிருந்தால்…என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

 

  ப்ரீக்குட்டி :என்னைப் பொறுத்தவரையில் ஒரு கோழை. நெஞ்சு நிறைந்த காதலை வாழவைக்கும் துணிவு இல்லை.

   தந்தையின் சொத்தைக் கட்டிக் காக்கத் தெரியாது காற்றில் விட்டு விட்டு, காதல் என்னை வஞ்சித்துவிட்டது என்று திரிந்து, அவனையும் அறியாது சின்னஞ்சிறு மொட்டொன்றின் எதிர்காலத்தை சூன்யமாக்கிவிட்டான்.

கதையின் இறுதிப் பகுதி, கருத்தம்மாவின் செயல் எந்த வகையில் பார்த்தாலும் என்னால் ஏற்க முடியவில்லை. அந்த இடத்தில் அவள் தன் தாயை ஒத்திருக்கவில்லை. தந்தையைப் போலவே அதைவிடவும் மிக்க சுயநலவாதியாக நடந்துகொண்டாள் என்றே தோன்றியது.

Advertisements

‘கதவு’ கமலா சடோபன்

   

     மணவாழ்வில் பல கசப்புக்களைச் சுவைத்து, கணவனையும் இழந்து, அண்ணனிடம் குழந்தையான மகன் மாதவனுடன் தஞ்சமடைகிறார் தங்கை .

    அவரை எந்த விதமான சுணக்கமும் இன்றியே அண்ணனும் அவர் மனைவியும் ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களின் ஒரே செல்ல மகள் மாலு.

    அத்தையின் பாசத்தை அத்தை மகனுடன் போட்டி போட்டுக் கொண்டு  பகிரும் மாலுவால், அத்தை பையனை நினைத்தும் தான் மனதில் ஒரு வகை இகழ்ச்சி!

    ஒன்றாக வளரும் அத்தை பையனின் அமைதியையும் சகிப்புத் தன்மையையும் பார்த்து விட்டு ‘மண்ணாந்தை’ என்று  கேலி செய்து படாத பாடு படுத்தும் பெண்ணுருக் கொண்ட ஆண்மகள் மாலு .

    ஆனால், கோடிகளில் புரளும் மாலுவின் தோழி உஷாவுக்கு,  மாதவனைக் கண்டதும் “கணவன் என்றால் இவன் தான்.” என்று பிடித்துப் போகின்றது .

   மாலு மாதவன் மீது சொல்லும் குறைகள் எல்லாம் உஷாவுக்கு மிகவும் பிடித்தமான நிறைகளாகத் தெரிகின்றது.

  இந்நிலையில் உஷாவின் விருப்பறிந்த மாதவனோ, “மாமாவின் முடிவுதான் என் விருப்பம்.” என்று ஒற்றைவரியில் தன் முடிவைச் சொல்லி விடவே, தன் தந்தையின் முகச்சுழிப்பையும் மீறி, அவன் மாமாவான தோழியின் தந்தையிடம் மாப்பிள்ளை கேட்க வைக்கின்றாள் உஷா.

   இதைப்பற்றி உற்ற தோழியான மாலுவிடம் ஏனோ பகிர்ந்து கொள்ளவில்லை. மாப்பிள்ளை கேட்டுப் போன உஷாவின் தந்தைக்கு மாலுவின் தந்தை அணுகிய விதம் ஏமாற்றத்தையே தருகின்றது.

   “உன் விருப்பத்துக்கு மதிப்பளித்து என் தரத்தை விட்டு இறங்கி மாப்பிள்ளை கேட்கிறேன். அது உரிய பலன் தரவில்லை என்றால் நான் சொல்பவரை நீ மணக்க வேண்டும்.” என்ற கோரிக்கையில் மாதவனை மாப்பிள்ளை கேட்ட உஷாவின் தந்தை, உஷாவுக்கு, தனக்குப் பொருத்தமான  ஒருவனை மாப்பிள்ளையாகத் தெரிவு செய்கிறார்.

   அவனோ ஏற்கனவே ஒருத்தியுடன் தொடர்புடைய பட இயக்குனர்.

   தன் ஒருதலைக் காதல் மறுப்புக்கு உஷாவின் பிரதிபலிப்பு என்ன?

   தந்தை கைகாட்டியவனை மணக்கும் உஷாவின் வாழ்வு மணத்ததா?

 

   தன் மகளுக்கு மாதவனை பிடிக்காது என்று தெரிந்தே ,அவளை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் மாலுவின் தந்தை .

   “தப்பி ஓடி விடுடா..” என்று மாலு சொல்லியும் அமைதியாகத் தன் கழுத்தில் தாலி கட்டியவனை, தன் பார்வையாலேயே கூனிக் குறுக வைக்கிறாள் மாலு.

    “கடைசியில் ஒரு கட்டத்தில் குட்டக் குட்ட குனிபவன் மடையன் ஆனால் நான் மடையன் இல்லை” என்று நிமிர்கிறான் மாதவன்.

   அப்போதும் அசட்டை காட்டும் கணவனும் மனைவியும் இணைந்தார்களா?

   இந்தக் கேள்விகளின் விடையாக கதையைச் சொல்லலாம்.

   ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மிகவும் அழகாக சுவாரஸ்யம் குன்றாமல் கதை நகர்கின்றது .

   இரு வேறு துருவங்களான மாதவன், மாலு, கூடவே உஷா மற்றும் கதாபாத்திரங்கள் அனைவரும் மிகவும் இயல்பாக நம் மனதில் அமர்ந்து கொள்ளும் வகையில் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது கதை .

 

‘கரையெல்லாம் செண்பகப்பூ’ சுஜாதா.

 

     நாட்டுப் பாடல்களில் கொண்ட காதலால் கிராமத்துக்கு வருகிறான் கல்யாணராமன். அங்கு, வெள்ளரிப் பிஞ்சு விற்பவளாக அறிமுகமாகிறாள் கருப்புச் சித்திரம் வெள்ளி.

   அவளைப் பார்த்ததில் இருந்து சலனம் கொள்ளும் கல்யாணராமன், தன் இதயத்தில் அழியாத ஓவியமாக  அந்த கருப்புச் சித்திரத்தை வரைய மிகவும் ஆவல் கொள்கிறான்.

   அவனால் அது முடிந்ததா??

   வெள்ளியோ ஒருவனுக்கு என்று நிச்சயம் செய்யப்பட்டவள்.

   அவனோ பகட்டான நாகரீக அழகில் கொண்ட மயக்கத்தில் தனக்கென்று நிச்சயிக்கப்பட்டவளை துச்சமென மதித்த போதும், அவன் அன்புக்காக ஏங்கி நிற்கிறாள் வெள்ளி என்ற பேதைப் பெண்.

  அவள் நீண்ட நாட்களாக தன் மனதில் வளர்த்த நேசம் வெற்றி பெற்று அவனை அவளுடன் சேர்த்ததா?

   இதைச் சொல்கின்றது கதை.

  அங்கங்கே அழகிய நாட்டார் பாடல்கள் கலந்து, ஆசிரியருக்கே சொந்தமான எழுத்து நடையில், விறுவிறுப்பாக காட்சிகள் ஒவ்வொன்றும் நம் கண் முன்னால் சித்திரமாக வலம் வர, மர்மங்களும் திடுக்கிடல்களும் துப்பறிதலும் காதலும் கலந்த கதை.

 

ஜேகே அவர்களின் ‘கந்த சாமியும் கலக்சியும்’.

 

மனைவி மகன்களை கனடா அனுப்பிவிட்டு யாழில் தனிமையில் வாழும் கந்தசாமி எனும் வயோதிபர்,  ஒரு சில மணித்தியாலங்களில், பூமி பஸ்பமாகப் போவது தெரியாது நடைபெறும் நிகழ்வுகள் என, சுவாரஸ்சியமாக ஆரம்பிக்கின்றதுஜேகே அவர்களின் கந்த சாமியும் கலக்சியும்’.

   பூமியின் கதை அவ்வளவுதானா என்ற ஏக்கம் மறைய முன்னரே கமகம வாசத்தோடு(என்ன சாப்பாடா என்று கேட்க நினைப்பவர்கள் கதையை வாசித்து அனுபவிக்க வேண்டுமாக்கும்.) பிரபஞ்ச வெளியில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றது கதை.

   சுமந்திரன் கந்தசாமியை அழைத்துக்கொண்டு எப்படிக் களவாக மகிந்தர்களின் ‘காற்று’க்குள் புகுந்தார்களோ, அப்படியே நானும் கைகாவலாக ஒரு துவாயை எடுத்துக்கொண்டு பயணபட்டுவிட்டு வந்தேன் .

   பயணத்தில் சந்தித்தவை சில இடங்களில் புரியாத நிகழ்வுகள்.(நம்ம கொம்புயூட்டர் ஒழுங்காக அப்டேட் பண்ணப்படாதது) ‘ஆ!’ என்று பார்க்க மட்டும் செய்தேன். ஆனாலும் மிகவும் சுவாரஸ்சியம் குறையாது இருந்தது.

கதைக்குள் செல்ல முன்னரே, ‘இதைச் சொல்லியே ஆகவேண்டும்’ என்று ஆரம்பித்து, முழுக்க முழுக்க கற்பனையே என்று கண்டிக் கதிர்காமரில் கதாசிரியர் ஆணையிட்டிருந்தாலும் பூமி அழித்தல் படலம் கண்முன்னால் விரிகையில், என மனம், நிஜங்களோடு ஒப்பிட முனைந்ததையும் அடுத்தடுத்த படலங்களிலும் அப்படியே ஒப்பிட்டுப் பார்த்ததையும் மறுக்க முடியாது.

பூமியின் அறிமுகம்; மனித உயிரினத்தை எடை போட்டது; இருவகைப் புத்திசாலிகளின் விளக்கம் என்று ஆரம்பித்து லூசுக் கூட்டத்தில் ஒருவனாக கந்தசாமியை அறிமுகப்படுத்தி, அவரோடு சேர்ந்து எங்களையும் பிரபஞ்சத்தை சுற்றி வரவைத்து…

   கந்தசாமி, பாடசாலையில் பிரதம விருந்தினர் உரைக்காக ஒத்திகை தொடங்க முகத்தில் பலமாக ஒட்டிக் கொண்ட முறுவல், அப்பப்போ பெரும் நகைப்பாகி, திடீரென்று அருகில் கரும்பொருள்வாசிகளின் நடமாட்டம் உணர்ந்து அவர்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லி…

 ‘கணனி பற்றி உனக்கு அவ்வளவு தெரியாது என்ற கவலையே உனக்கு வேண்டாம். ஏனென்றால் நீயே ஒரு கணினியாக்கும்.’ என்று என்னை நானே தட்டிக் கொள்ளவும் வைத்து…

மைதிலிக்காக மனம் நொந்து, ‘காலைச் சாப்பாடு இப்படி சாப்பிட்டால் எப்படிப் படிப்பாய்?’ என்று ஆதங்கப்பட்டு, கண்ணிமைக்கும் பொழுதில் அவளோடு சேர்ந்து மொத்தமும் காணாமல் போனதும், என்ன காரணத்துக்காக அவள் வந்தாள், எதைச் சொல்ல முயன்றால் என்று குழம்பி, கடைசியில் அவள் மீண்டும் வர ‘அடடா’ என்று இருந்தது .

   “பிள்ள கொஞ்சம் பொறுமையாக கேள்வியைக் கண்டு பிடித்திருந்தால் பூமி இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்குமோ?” என்றும் எண்ண வைத்தது.   

   நம்ம சோதியரும் குமரனும் மிக்ஸரும்… ‘ஹா..ஹா.., ‘சபாஷ்’ போட வைத்தாலும் அதுவெல்லாம் நாம் கால்பதிக்க வேண்டிய இடமாக்கும் என்ற எண்ணமும் வந்தது. வருங்கால நிஜமாகட்டும்.

   சுமந்திரன் வரவில் கற்பனை பறக்க ஆயத்தமானாலும் பறக்கவே செய்தாலும் ஏனோ நிஜத்தின் தொந்தரவு இருந்து கொண்டேதான் இருந்தது.

இதுவரை நான் வாசித்து, என் கருத்துகளோடு கதை முன்னோட்டம் சொன்ன கதைகள் அனைத்துமே கணனியில் வாசித்தவை.

  அவற்றில் சிலதுகள் புத்தகமாக வாசிக்கக்கிடைக்கவில்லையே , எப்படியும் வாங்கி இன்னொரு முறை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியும் இருக்கின்றது.

   ‘கந்தசாமியும் கலக்சியும்’ மிகுந்த ஆவலோடு காத்திருந்து, புத்தகம் கைக்கு வந்ததும் அத்தனை வேலைகளையும் ஓரம் தள்ளிவிட்டு வாசித்து முடித்த கதை.

வாசிக்க விரும்பியவர்கள் இணையத்தில் ‘படலை’ என்கின்ற ஆசிரியரின் ப்ளாக்கில் புத்தகம் வாங்கலாம்.

அதோடு, இரசித்து வாசிக்க பல சிறுகதைகளும்  அங்கே கிடைக்கும்.

 

படலை

நிதனி பிரபுவின் ‘தனிமை துயர் தீராதோ!’

      குழந்தையோடு கணவனை இழந்த பெண்ணொருத்தி தனித்து வாழமுடியாது எனக் கருதும் பட்சத்தில் தாராளமாக இன்னொரு வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்; அது அவளின் சுயவிருப்பு.

  அதே, அவளின் முதல் தாரத்தின் குழந்தையின் வாழ்வை முதன்மையாகக் கருதிப் பாதுகாக்கும் தலையாய பொறுப்பும் அவளுக்குரியதே!

  இது, மறுமணம் புரியும் ஆண்/பெண் இருவருக்குமே பொதுவானது.

  அப்படி, முதல் தாரத்தின் குழந்தையை உரிய வகையில் பாரமரிக்க முடியாதவாறு இரண்டாவது வாழ்வு அமையுமேயானால், அவள்/அவன் எப்படி நடந்துகொள வேண்டும்?

   முதல் தாரக் குழந்தை வாழ்வு என்னானாலும் பரவாயில்லை என்று தம்  வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா?

   தாம் பெற்ற குழந்தை வாழ்வுதான் தம் வாழ்வை விட முக்கியம் என்றவகையில் செயல்பட வேண்டுமா?

   இப்படி ஒரு பெண்/ஆண்  நடந்து கொள்வார்களேயானால் அவர்கள் குழந்தை நிச்சயம் மிகவும் பேறுபெற்றது அல்லவா?

  அப்படியில்லாது குழந்தை வாழ்வு எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என்று தம் வாழ்வைக் காத்துக்கொள்ளும் சுயநலத்தின் மொத்த உருவமான மனிதர்களும் உள்ளார்கள் என்றும், அப்படிப்பட்ட ஒரு பெண்ணால் தன் கதைக்கு பிள்ளையார் சுழிபோட்டு ஆரம்பித்து வைக்கிறார் காதாசிரியர்.(அதுவும் நிஜம் என்று சொல்லி இருக்கிறார்)

மேலே சொன்ன மாதிரி ஒரு சுழலில், பெற்ற தாயின் கவனிப்பு, கரிசனை, அன்பும் என்பவற்றைச் சிறிதும் சுவைக்காது, சிறியதந்தை என்று வந்த மனிதமிருகத்தின் வெறுப்பைச் சம்பாதித்து ஜெர்மனியில் வளரும் மித்து, தன் பதின்பருவத் தொடக்கத்தில் சிலவருடங்கள் அரச பாராமரிப்பில் ஒரு ஜெர்மானியக் குடும்பத்தில் வாழ்கின்றாள்.

  இளைய சகோதர சகோதரி மீது மிகுந்த வாஞ்சை கொண்ட மித்து, அவர்களுக்கும் பெற்றோர் கவனிப்பு சரிவரக் கிடைப்பதில்லை என்பதை  அச்சிறுவயதில் உணர்ந்து ஒரு தாய் போல் அவர்களை அரவணைத்துக் கொள்கிறாள். அதற்காகவே, விரும்பாத தன்வீட்டில் மீண்டும் வந்து வாழ்கிறாள்.

   கைச் செலவுக்கு சிறுவேலைகளைச் செய்து தன் படிப்பையும் கவனித்து, தங்கை தம்பியையும் பெரிய பெண்ணாகப் பார்த்துக் கொள்பவளை, வளர்ந்து நல்ல தொழிலில் இருக்கும் பொழுது  தன் விஸாவுக்காக மணந்துகொள்கிறான் அகதி அந்தஸ்தில் இருந்த கீர்த்தனன்.

  தேவைக்காக மணந்தாலும், பின் இருவரும் ஒருவர் ஒருவரை விரும்பி ஆனந்தமாக வாழ்ந்து குழந்தையும் தரித்த பின் இவர்களிடையே பிரிவு ஏற்படுகின்றது.

 காரணம்?

  அந்தப் பிரிவினால், தனிமையில் வாடும் கணவன் மனைவி மற்றும் அங்கும் இங்குமாக அலையும்  அவர்கள் குழந்தை, மூவரும் மீண்டும் ஒன்றாகினார்களா என்பதை நிதனி பிரபுவின் ‘தனிமைத் துயர் தீராதோ!’ வாசித்தறியலாம்.

ஒரு நடத்தையை என்னதான் காரண காரியங்கள் கொண்டு நியாயப்படுத்த முயன்றாலும், காலா காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வரைமுறைகள் பரவலாக இலகுவாக மீறப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், அவற்றை அவ்வளவு இலகுவில் ஏற்றுக் கொள்வது என்பது கடினம் தானோ?

‘ரோமுக்குச் சென்றால் ரோமானியனாக மாறி விடு!’ இதை எந்தக் கனவான் எந்த நோக்கில் சொன்னாரோ, இதுவே இப்போது அனேக சந்தர்ப்பங்களில் எடுத்துக் காட்டாகப் பாவிக்கப்படுகின்றது.

   என்னதான் ரோமுக்குப் போய் அங்கு வாழவேண்டிய சூழலில் அந்த நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியத்தைப் பழக்க வழக்கங்களை பின்பற்றினாலும், ஒரு ரோமானியன், வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவனை, “நீ எந்தநாடு?” என்று கேட்காமல் விடமாட்டான் என்றே நான் எண்ணுகிறேன்.

  அப்படியிருக்கும் பொழுது, நாம் ஏன் ரோமானியன் வேஷம் போடவேண்டும் என்ற வினா என்னுள் எழுவதுண்டு.

  பொருந்தாத புது வேஷம் போட்டு கஷ்டப்படுவதை விட்டுவிட்டு நமக்குப் பொருத்தமான நம் சுயத்தில் துணிவோடு நம்மை அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன என்றும் நினைப்பதுண்டு.

வெளிநாட்டு வாழ்க்கையில்,  நமது பழக்க வழக்கங்களையும் முறையாகத் தெரியாமல், வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களையும் முழுமையாகப் பின்பற்றாது நடுவில் நின்றும் திண்டாடுவதையும், அது தரும் விளைவுகளையும்  இக் கதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார் நிதனி.

இக் கதையில் எனக்கு பிடித்த பாத்திரங்கள் கீர்த்தனன் தங்கை பவி, மற்றும் மித்துவின் தம்பி சத்தியன்.

  அதீத அக்கா பாசத்தால், அக்காவுக்கு நியாயம் பெற அத்தானின் தங்கையை பகடையாகப் பாவித்தாலும், பவியின் அன்பையும் அவள் மனதையும் கேலிக்குரியதாக மாற்றினாலும், கண்ணியம் மாறாமல் நடந்து கொள்கிறான் சத்தியன்.

   பவியும், தன்னை, தன் அன்பை ஒருவன் ஏமாற்றினான் என்றதும் சுருண்டு போகாது அதை அவனுக்கு உணர்த்த முயல்வதும், அதை அவனும் உணர்ந்து கொள்வதும் வெகு ஸ்வாரஸ்சியமாகச் சொல்லப்பட்டுள்ளது.

அடுத்த அத்தியாயம் எப்போ என்று காத்திருந்து வாசிக்க வைக்கின்றது மனதை வருடும் அழகிய தமிழும் உரைநடையும்.

 

 

 

உஷாந்தி கௌதமனின் ‘உனக்கெனவே உயிர் கொண்டேன்!’

  ‘காலை எழுந்ததிலிருந்து இரவுவரை, கண்சொருகச் சொருக முழித்திருந்து வேலைசெய்து (அது வேண்டிய வேலையோ, வேண்டாத வேலையோ அதுவேறு கதை  )உடல் அசதியில் தளர, கட்டிலில் சரிந்த மறுகணம் கட்டியணைத்துக் கொள்வாள் நித்திராதேவி!

   கனவில் கூட அரக்கப் பறக்க எழுந்து, கணவரோடும் குழந்தைகளோடும் வாய்த்தர்க்கம் பண்ணிக்கொண்டே மிஷின் மாதிரி வேலைசெய்து …’

சட்டென்று தடைப்பட்டது நினைவுகள்.

“ரோசி, மாதுளை ஜுஸ் எடுத்துக் கொள்ளுங்கள்!”

என் முன்னால் பணிவுடன் நின்றவளை ஒருகணம் உற்றுநோக்கிய என்னுள் அளவு கடந்த பெருமிதம்.

சட்டென்று என்னை ஒருதரம் நானே பார்த்துக் கொள்கிறேன். கறுப்புநிற டெனிம் ஜீன்ஸ்+ மெல்லிய ஊதா நிற டீ சேர்ட் .

“நீங்களும் விரும்பினால் இப்படி உடுத்திக் கொள்ளலாம்!”

என்மனதைப் படித்துவிட்டு, சிநேகத்தோடு சொன்னாள் ஜூசை ஏந்திக் கொண்டு நின்றவாறே, என்னையே குறுகுறுபாக பார்த்திருக்கும் என் பிரதிபிம்பமான ராசி.

தழையத் தழையp பட்டுச்சேலையில் மங்களகரமாக என் முன் நின்றவள், என் மூத்தமகன் எனக்காகப் பரிசளித்தவள்.

பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் எம் முன்னோரின் பாரம்பரிய உடையான சேலையில் நின்றவளிடம் சிறுமுறுவலோடு ஜூசைப் பெற்றுக் கொண்ட நான், “சின்னவர் சாப்பிட வருவார்…” முடிக்க முன்னரே , “இன்றைக்கு என்ன சாப்பிடுவார்?” எள் என்னும் முன்னர் எண்ணையாய் நிற்கும் ராசி கேட்டாள்.

   “இன்றைக்கு வெள்ளிக்கிழமையாச்சே குத்தரிசிச் சோறு, முருங்கைக்காய் பிரட்டல் கறி, கீரையில் பால்கறி, பருப்பு, பாவற்றாய் சம்பல்… ஹ்ம்ம்… இதோடு பப்படமும் தயிரும்..”

 சொன்ன அடுத்த நிமிடம் சமையலறைக்குள் விரைந்த ராசி,  நான் சொன்ன உணவுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை அங்கிருந்த உணவு தயாரிக்கும் இயந்திரத்தில் டைப்பினாள்.

அதைப் பார்த்த என்னுள் இளநகை!

ஆரம்பத்தில் என் நினைவில் பளிச்சிட்டதைப் போல, என் முன்னோர்கள் ஒவ்வொரு வேலையையும் எவ்வாறு கஷ்டப்பட்டுச் செய்திருப்பார்கள் என்பதை நான் வாசித்த குறிப்புகளை வைத்து இலேசாக உணர முயன்றேன்; என் உதவியாளர் ராசி எனும் ரோபோ உணவு மேசையில் அடுக்கும் பதார்த்தங்களைப் பார்வையிட்டுக் கொண்டே!

இப்போ, இதை வாசித்த எல்லோருக்கும் ஒன்று புரிந்திருக்கும்; ரோசிக்கு எதுவோ நடந்திட்டுது என்பது…

ஹா..ஹா…நேற்று ஒரு கதை வாசித்தேன்; அதன் தாக்கம் தான் இது.

 முதல் வார்த்தையில் இருந்து கடைசி வார்த்தை வரை ஒரே பரபரப்பு, என்னுள்!

மிக மிக அருமையான கற்பனை!

ஆபத்தின் வாசம்; அதை இலாவகமாக மேவிச் செல்லும் வீரத்தின் நறுமண சுகந்தம்; அந்த வீரத்தையே தளரச் செய்யும் காதலும் பாசமும்; இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னிப் பிணைக்கக் கையாளப்பட்டிருக்கும் சொற்களும், உரைநடையின்  இலாவகமும்!

மொத்தத்தில் என் மனதை விட்டு நீங்காத கதையும் கதாபாத்திரங்களும் .

உஷாந்தி கௌதமனின் ‘உனக்கெனவே உயிர் கொண்டேன்!’