Category Archives: நீயில்லாது வாழ்வேதடி!(பெண்ணே….. நீயில்லாது வாழ்வேது?(ரோசி)

நீ இல்லாமல் வாழ்வேதடி!-ஸ்ரீமதியின் பார்வையில்.

முதல் திருமணத்தால் காயப்பட்ட ரகு , வீட்டாரின் வற்புறுத்தலால் மறுமணத்திற்கு சம்மதிக்கிறான் .

சிந்து __ இவள் தான் கதையின் நாயகி , நான் மிகவும் ரசித்த கதாபாத்திரம் .

தாய் தந்தையை இழந்து திருமணம் செய்துகொள்ளாமல் ஆசிரியர் பணிக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரால் வளர்க்கப்பட்டவள் .

இவர்கள் இருவரும் திருமணத்தால் இணையும் பொழுது , இயல்பாக ஏற்படும் சிறு சிறு உரசல்களையும் , எவ்வளவு அழகாக சமாளிக்கிறாள் என்பதையும் பார்க்கும் பொழுது , சபாஷ் போட வைக்கிறார் கதாசிரியர் .

எப்பொழுதுமே ஒரு வீட்டை அழகாக நடத்திச் செல்வது பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்று நினைப்பவள் நான் , ஒருவேளை அதனால் தானோ என்னவோ இந்தக் கதாபாத்திரம் என்னை அவ்வளவு கவர்ந்தது .

சின்ன கதை தான் என்றாலும் அழகான கதை .

Advertisements

நீயில்லாது வாழ்வேதடி!- ஜெயந்தி வேணுகோபால்(JV)

ஹாய் ரோசி ,
உங்க முதல் தொடர்கதை படிச்சாச்சு.

ஒரு பெண் நினைத்தால் எதையும் எவ்வளவு சுமுகமாக முடிக்க முடியும் என்பதை ரொம்ப அழகாகச் சொல்லி இருக்கீங்க .

தானும் , தன்னைச் சுற்றி இருப்பவங்களையும் சந்தோஷமாக வைத்து , எல்லாருக்கும் நலன் செய்யும் சிந்து மிகச் சிறந்த மகள் , மனைவி , மருமகள் .

கோவக்காரனான ரகுவைச் சமாளிப்பதில் என்ன அழகாகச் செயல் படுறா சிந்து .

ரமேஷின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் , முதலில் தன் கணவனையும் , பிறகு , தன் மாமனாரையும் மாற்றும் அவள் நம்பிக்கை வியக்க வைக்குது .

அவளுடைய சித்தி , தன் வளர்ப்பை நினைத்து அவ்வப்போது பெருமை கொள்ளும் விதமாகவே நடந்து கொள்றா சிந்து .
பாவம் இந்து வீட்டினர் . நீரஜாவின் செயலால் , மனசுடைந்து இருப்பவர்களை சுட்டிக்காட்டி, நீரஜா போன்றவர்களுக்கு ஒரு சாட்டையடி கொடுத்து இருக்கீங்க .

குடும்பத்தினரிடம் , எப்போது என்ன பேச வேணும் என்கிறதை , மிக அழகா எடுத்துச் சொல்லி , ஒரு அழகான , உணர்ச்சி மயமான குடும்பக் கதையைக் கொடுத்ததற்கு நன்றி ரோசி

சட்டுன்னு கதையை முடித்தார் போன்ற ஒரு உணர்வு . இந்துவின் பெற்றோர் வந்து ரமேஷின் பெற்றோருடன் கதைப்பது , அதற்குப் பின் , பரஸ்பரம் ஒத்துக் கொள்வது , ரமேஷ் –இந்து , சில காதல் சில்மிஷங்கள் , சிந்து – ரகு , மேலும் சில ரொமான்ஸ் இது போல கதையை இன்னும் கொஞ்சம் நீட்டித்து , பிறகு முடித்து இருக்கலாம்னு தோணியது .

அடுத்த கதை எழுதும் போது , இதை நினைவில் வச்சுக் கொள்ளுங்கோ ..

உங்க கொஞ்சும் இலங்கைத் தமிழ் மிகவும் அழகு .பிழையே இல்லாத தமிழ் கூடுதல் அழகு . அதுவும் இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் வரும் சந்தி எழுத்துக்களைக் கூடச் சரியாகக் கையாண்டு இருக்கீங்கள் .

நான் இன்னும் ஒரு கிழமைக்காவது, இந்த ரீதியிலே தான் கதைப்பேன் போலிருக்கு .

உங்களிடமிருந்து தொடர்ந்து கதைகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் . தவறாது தர வேண்டுகிறேன் .

நீயில்லாது வாழ்வேதடி!-அனு அஷோக்

 

 

ஒரு செயலினால் ஒருவருக்கு கிடைக்கும் சந்தோசம் மற்றவருக்கு தீமையாக முடிகிறது இதுதான் வாழ்க்கையின் நியதி …….
நமக்கு கிடைத்த பொருளின் பின் மற்றொருவரின் இழப்பு இருக்கும் இதுவே கதையின் கரு ….

ரகு-முதல் திருமணம் தந்த வலியில் இருகி போனவன் …இரண்டாவது திருமணத்தில் மனையாளின் மூலம் அந்த வலியில் இருந்து மீண்டவன் ….

சிந்து-துரு ..துரு பெண்..வாழ்வின் சூட்சமங்களை புரிந்து…வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டவள் …பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் ….

ரமேஷ்,இந்து-காதலில் சேர முடியாமல் துடிக்கும் இதயங்கள்….

ரகுவின் முதல் மனைவி அவனை விட்டு வேறு திருமணம் செய்ததால் ….சிந்து,ரகு திருமணம் …அதன் பிறகு கணவன் அன்பை பெற்று சந்தோசமாக வாழும் சிந்துவிற்கு கொழுந்தன் ரமேஷின் வாழ்க்கையை சீர் செய்ய வேண்டிய நிலை…அவன் விரும்பும் பெண்ணை சேர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் ரமேஷ்…அவன் விரும்பும் பெண் ..ரகுவை விட்டு சென்ற பெண்ணின் தங்கை …இதை கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்த சிந்து …அவர்கள் காதலை புரிந்து கொண்டு ….கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் போராடி வெற்றி பெருகிறாள்…

ரோசி கா ..முதல் கதையே அருமையா இருந்தது …ஆனால் கொஞ்சம் சின்ன கதை  .அதிலும் தெளிவாக உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள் ..உங்கள் அழகு தமிழில் கதை படிக்க அருமையா இருந்தது நல்ல கருத்து கா.

கணவன் மனைவி புரிதலை உங்கள் எழுத்தில் அழகாக படைத்தது இருந்தீர்கள் ….இன்னும் பல கதைகள் கொடுங்கள் எங்களுக்கு ..

நீயில்லாது வாழ்வேதடி! -உமா

  

ரகு : முதல் மனைவி காதலனுடன் ஓடி போனதால இறுகி கலகலப்பை தொலைத்தவன் …

சிந்து : ரகுவை இரண்டாவது மனம் செய்தவள் ..தன அதிரடி அன்பால் கணவனை மாற்றி மகிழ்ச்சியாக வாழ்பவள் …

ரகுவின் தம்பி ரமேஷ் இந்துவை காதலிக்கிறான் ..இந்து ரகுவின் ஓடிப்பான மனைவியின் தங்கை …ரகுவின் திருமணம் முடிவாகும் முன்பு இருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் …ஆனால் தன தமக்கையின் செயலால் தன காதல் கை கூடாது என்று மனம் தளர்கிறாள் இந்து ..ஆனால் ரமேஷ் தன காதல் கை கூட தன் அண்ணி சிந்துவின் உதவியை நாட ..சிந்து முயற்சி செய்து தன கணவன் மற்றும் மாமனாரின் மனதை மாற்றி திருமணம் நடக்க உதவி செய்கிறாள் ..சுபம் …

ரோசி கா ரொம்ப அழகா நேர்த்தியா எழுதி இருக்கீங்க ..இலங்கை தமிழ் வாசம் அருமை ….என்ன சின்ன கதை யா போய்விட்டது அடுத்த தடவை நீங்க நல்ல பெரிய கதையா தரனும் …என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா

 

நீயில்லாது வாழ்வேதடி!- தேனுராஜ்

 

ரகு…படித்து முடித்து தந்தையின் தொழிலில் உதவி செய்பவன்… அம்மா, அப்பா, தம்பி ரமேஷ் என்று அழகான சின்ன குடும்பம்….  அமைதியாக போய்க்கொண்டு இருந்த அவர்கள் வாழ்வில் ஒரு புயல்…. அது என்ன …??

சிந்து….. பெற்றோர் இன்றி சித்தியின் அரவணைப்பில் வளர்ந்த அவள்…, ரகுவின் மனைவியாகி அந்த சின்ன குடும்பத்தின் ராட்சஸி  ஆகிறாள்…., அன்பால்… பாசத்தால்… 

எல்லா கணவன்-மனைவிக்கும் நடுவில் வரும் ஊடல்கள்…. :s11829: ஆனா அதை சிந்து சமாளிக்கும் விதமே தனி….(என்ன ஒன்னு…, ரகு முதுகு பழுத்துடுது….).. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத சித்தியை தன்னுடனே வைத்துக்கொள்ள விரும்பி … கணவனிடம் கேட்க…,அவனும் ஓகே சொல்கிறான்…. எல்லாமே நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கும் வேளையில்….

ரகுவின் தம்பி ரமேஷ்… இந்து என்ற பெண்ணை காதலிக்கிறான்… :s3475: ஆனால் அந்த பெண்ணை பற்றி வீட்டில் பேச பயம் … so அண்ணியின் உதவியை நாடுகிறான்…. அவளும் இந்துவின் வீட்டில் பார்த்து பேச… அவர்களின் இயலாமை அவள் மனதை மாற்றி…, தன் குடும்பத்தில் அந்த காதலை சேர்த்து வைக்குமாறு பேச வைக்கிறது…

சிந்து பேசினாளா….. பேசியதன் விளைவு என்ன…
ரமேஷின் காதலுக்கு சிந்து உதவி கிடைத்ததா….
அந்த காதல் பற்றி அறிந்த ரகுவின் நிலைமை என்ன….
அந்த பெண் இந்து யார்….??
சிந்துவின் வரவிற்கு முன் ..ரகுவின் வாழ்வில் வீசிய புயல் என்ன…
ரமேஷ் & இந்து சேர்ந்தார்களா….

இதுதான் கதை….சின்ன கதைதான்… ஆனா …. போரடிக்காம …அழகான இலங்கை தமிழில் படிக்க நன்றாக உள்ளது…. இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம்…!! :44:

நீயில்லாது வாழ்வேதடி! -சுதா ரவி

 

ரகு திருமணத்தால் பாதிப்பு அடைந்து தன உணர்வுகளை இழந்து வாழ்ந்து கொண்டிருந்தவனை ,தன் துடுக்குதனத்தாலும் ,அவன் மேல் உள்ள ஆசையை வெளிபடுத்தும் விதத்தாலும் ரகுவை கூட்டுக்குள் இருந்து வெளிக்கொண்டு வருகிறாள் சிந்து.

கணவன் மனைவிக்குள் வரும் பிணக்குகளை படிக்கும்போது நம் குடும்பங்களுக்குள் வரும் நிகழ்வை ஏற்படுத்திகிறது ஆசிரியரின் எதார்த்தமான எழுத்து.

ரகுவை மட்டுமல்லாது அவன் குடும்பத்தையும் அவர்களின் மன வேதனையிலிருந்து மாற்றி கொண்டு வரும் சிந்து நம் மனதில் உயர்ந்து கொண்டே போகிறாள்.

ரகுவின் தம்பி ரமேஷின் காதலை அதுவும் ரகுவின் முதல் மனைவியின் தங்கையுடன் என்பதை அறிந்து அதற்காக ரகுவிடமும் போராடும் விதமும் ஒரு குடும்பத்தில் நடக்கும் உணர்வு போராட்டங்களை அழகான இலங்கை தமிழில் வர்ண பூச்சுக்கள் இல்லாது கொடுத்திருப்பது மிகவும் அருமை.

ரோசி உங்கள் முதல் கதை அற்புதம்,அருமை……மீண்டும் உங்களிடம் இருந்து இது போன்ற படைப்புகளை எதிர் பார்க்கிறோம் .

நீயில்லாது வாழ்வேதடி! – ஹமீதா

 

ஆச்சர்யம்….ஆனால்…உண்மை….!!! 

ஒரு குட்டிக் கதையில்…குட்டி குட்டியாக எத்தனை ஆழமான கருத்துக்கள்….வாழ்வியல் பாடங்கள்….

சிந்து…ரகு….கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு சிறு பூசல்கள்…ஊடல்கள்….ஒருவர் பார்வையை கொண்டு மற்றவரை உணரும் புரிதல் அருமை. இருவருக்கிடையே நடக்கும் ஊடல் வெகு இயல்பு….அன்றாடம் நம் வீடுகளில் நடப்பதை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். உதட்டில் உறைந்த புன்னகை கதை முடியும் வரை மறையவில்லை.

சிந்து நிஜமாவே ராட்சசி தான்…என்னா மொத்து மொத்தறா…கணவனிடம் மனைவிக்கு இருக்கும் உரிமை உணர்வு….சண்டை போடு போடுன்னு போட்டுட்டு….அந்த சுவடே இல்லாமல் இழைந்து கொள்வது….காதல் கொண்ட கணவன் மனைவி அனைவரும் உணர்ந்த தாம்பத்திய ரகசியம்.

பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும்…அழிக்கவும் முடியும். குடும்பத்தின் கௌரவத்தை குலைத்த நீரஜா…அதனால் பாதிக்கப் படும் இரு குடும்பங்கள்….அக்குடும்பங்களின் மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் சிந்து… 

கணவன் மணமாகி விவாக ரத்தானவன் என்பது தெரிந்தும்…அவன் மீது அளப்பரிய காதல் கொண்டு…அவனின் முசுட்டு தனத்தை மாற்றி..அவனை இயல்பாக அவள் பின்னே வர வைப்பது….

குடும்பத்தின் ஆணிவேராக இருந்து…கணவனின் தம்பிக்கும்…நீரஜாவின் தங்கை இந்துவுக்குமான திருமணத்துக்கு போராடி சம்மதம் பெறுவது….

வளர்த்த சித்தியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து…எல்லோரையும் அனுசரித்து அழகான வாழ்கை வாழ்வதன் மூலம் அவருக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிப்பது…. 

விட்டால் சிந்து கதாபாத்திரம் பற்றி நாளெல்லாம் பேசுவேன்….

ரகு….பெண்ணின் தவறு ஆணை எந்த அளவுக்கு வேதனை படுத்தும்…அவனின் கொந்தளிப்பு…வெறுப்பு…அதை சிந்து எதிர் கொள்ளும் விதம்…வெகு அழகாக கையாளப் பட்டிருக்கிறது.

அனைத்து பாத்திரங்களும் அருமை ரோசி….ஒரு அழகான குடும்பத்தில் கொஞ்ச நேரம் செலவு செய்தது போன்ற உணர்வு… 

அழகு இலங்கை தமிழ் உள்ளத்தை கொள்ளை கொண்டது… 

கன்னி முயற்சி….இமாலய வெற்றி…!!!

நீயில்லாது வாழ்வேதடி!- நிதனி பிரபு

தலைப்புக்கும் கதைக்குமான அந்த தொடர்பு மிக மிக அழகு ரோசி அக்கா….

காயப்பட்ட ரகுவின் உள்ளம் சிந்துவின் துருதுருப்பால் இயல்புக்கு திரும்புவது மிக இயல்பாக காட்டி இருக்கீங்க…எனக்கு அது மிகவும் பிடித்தது…

அவர்களுக்குள் வரும் அந்த பிணக்கை அவர்கள் தீர்த்துக்கொள்ளும் விதமாகட்டும்….அவளை நினைக்கும் ரகுவின் அந்த நினைவுகள்…என்னதான் கோபம் இருந்தாலும் கணவன் சாப்பிட்டானா என்று நினைக்கும் சிந்து என்று…அருமையான குடும்பத்தின் சாயலை அதில் பார்த்தேன்…

ரமேஷ் இந்துவின் காதலும் அழகு….நம் வாழ்க்கை என்று சுயநலமாக யோசிக்கும் இன்றைய காலத்தில் இப்படி ஒரு ஜோடி….ரொம்ப நன்றாக இருந்தது….

சிந்துவின் சித்தி லக்ஷ்மி….எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்..அதுவும் சாப்பிடும்போது அவா சிந்துவிடம்,,,நீ சொன்னதை கேட்ட பிறகு சாப்பிட்டதெல்லாம் சத்தியாக வெளியில் வரப்போகுது என்று சொல்வது…ஹாஹா….விழுந்து விழுந்து சிரித்தேன்க்கா….

இந்துவின் அக்கா…பெற்றவர்களின், சகோதரர்களின் நிலையை யோசிக்காத இன்றைய சமுதாயத்தின் இளம் வயதினரின் ஒரு பிரதிபலிப்பு….

இப்படி எல்லா பாத்திரமுமே…மிக மிக நேர்த்தியாக அமைந்து இருக்கு ரோசி அக்கா….

அதோட ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு புதிராகவே ஆரம்பித்து பிறகு கதைக்குள் நம்மை அழைத்து செல்வது என்னை ரசிக்க வைத்த விடயம்…

இது எல்லா வற்றையும் தாண்டி..நம் நாட்டின் பேச்சு வழக்கு…ஆக…ஆகா…என்ன சொல்ல….நான் ரசித்து ருசித்து…படித்தேன் ரோசி அக்கா….மிக்க மிக்க நன்றி….சொல்ல வார்த்தைகள் இல்லை….

எனக்கு படிக்கும் போது மிகவும் பரவசமாக கூட இருந்தது….அந்த “நீர்” என்று சொல்லி கதைப்பது….

கணவன் மனைவியே ஆனாலும் ஒரு நட்புடன் இருக்கும் கேலிகள்….அதை ரகு சிந்து தம்பதியிடம் பார்த்தபோது….நம்மூர் குடும்பங்களை கண் முன்னாடி கொண்டு வந்துட்டிங்க….

நாயகன் நாயகிகளை…அளவுக்கு மீறி வர்ணிக்காதது..மிக மிக அழகு உங்க கதையில்…

எழுத்து பிழை இல்லாமல் மிக நேர்த்தியான அழகான கதை ரோசி அக்கா….

மிக்க மிக்க நன்றி உங்களுடைய கதையை நமக்காக தந்ததுக்கு!!!

உங்கள் எழுத்துப்பணி என்றும் தொடர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்!!!

நீயில்லாது வாழ்வேதடி! -சித்திரா. ஜி

 நீயில்லாது வாழ்வேதடி! 

ஒரு அழகிய நந்தவனத்தில் பூக்கின்ற பூக்களெல்லாம் மாலையாக மாற வேண்டுமானால் ஒரு உறுதியான நூல் வேண்டும் ……..பல நிகழ்வுகளால் சிதறி இருக்கும் ஒரு குடும்பத்தை நிலை குலையாமல் காக்கும் ஒரு பெண் வந்துவிட்டால் அவள்தான் அக்குடும்பத்தின் அச்சாணி…..அப்படியானவள் இக்கதையின் நாயகி சிந்து……..(பெயரில் தான் நதி பாய்ந்தால்….சுனாமி……ஏம்ம்பா இப்படியாஆஆஆஆஆஆஆஆ அடிப்பார்கள்)

ரகு..பெயருக்கேற்ற ரகுராமன்….நடந்தது..இரண்டு திருமணம்…ஆனால் அவனறிந்தது ஒற்றை ஆள்……..மனைவி தன்முதல் திருமணத்தை பற்றி பேசும் பொழுதெல்லாம் ரகுவின் மனநிலை………அவன் வெளியிடும் வார்த்தைகள்………அருமை rosei …

கணவன் மனைவியின் சண்டையின் வலிமையையும்…….வீரியத்தையும் ……..(.rosei அனுபவத்தின் வெளிப்பாடா…….) ரகுவிற்கும்…சிந்துவிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள்…..அடிதடிகள் ….இளமை…இனிமை..

அண்ணனின் முதல் திருமணம் நடந்த வீட்டின் பெண்ணை அவர்களின் திருமண நிகழ்விற்கு முன்பே கல்லூரி காலத்தில் காதலிக்கும் தம்பி ….அவர்கள் வீட்டு அச்சாணியை கொண்டு தன் திருமணத்தை முன் நடத்தி செல்வது அருமை……

காதலிப்பவர்கள் உறுதியாக இருந்தாலும்…இல்லாமல் இருந்தாலும் என்னென்ன நிகழும் என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டார்…..ஆசிரியர்….

குடும்ப இதழில் வரத் தகுதியான கதை .

 

 

 

நீயில்லாது வாழ்வேதடி!  -Priya Sarangapani

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.
-குறள் 47-
என்னதான் ஆண் பெண் சரி சமம் என்று சொன்னாலும் நிம்மதியான குடும்ப வாழ்க்கையில் ஆண் மனைவியை மட்டும் சந்தோஷப்படுத்தினாலே அவள் மூலம் அவனை சார்ந்தவர்கள் மகிழ்வர்…ஆனால் பெண்ணுக்கு கணவன் முதல் கொண்டு சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தரையும் தனி தனியாக அவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மகிழ்வித்து வாழ வேண்டிய நிலை…

ரகு & சிந்து

பெற்றவர்களை இழந்து சித்தியின் அரவணைப்பில் வாழும் சிந்துவிற்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி தன் காதலுடன் சென்றதால் விவகாரத்து பெற்று அதை தன் வாழ்வில் அவமானமாக கருதும் ரகுவிற்கும் மணம் முடிக்கின்றனர் பெரியவர்கள்….

தன் கூட்டுக்குள் சுருண்டு இருக்கும் ரகுவை வெளிக்கொண்டு வரும் சிந்துவிற்கு பலனாக அவனின் முழு காதலும் கிடைக்கிறது….

கொஞ்சம் சண்டை… கொஞ்சம் கொஞ்சல்லோட வாழ்க்கை செல்கிறது …

ரகுவின் தம்பியான ரமேஷ் இந்துவை நான்கு வருடங்களாக காதலிக்கிறான்… திருமணம் செய்ய வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் காதல் கை கூட அண்ணி சிந்துவின் உதவியை நாடுகிறான்…இந்து வேறு யாரும் அல்ல ….ரகுவை வேண்டாம் என்று சொல்லி காதலனுடன் ஒடிப்போன முதல்மனைவியின் தங்கை தான்…..

எப்படி எப்படியோ போராடி ரமேஷ் திருமணத்தை நடத்தி வைக்கிறாள் சிந்து…அதுவும் குழந்தை உருவான நேரம் தான் கடந்த கால கசப்பில் இருந்து இருகுடும்பத்தையும் வெளிகொண்டுவந்தது என்ற மகிழ்வோட…..

comment:

இவங்களுக்கு லவ் பார்ட்டும் நல்லா எழுதவரும் போல….கொஞ்சமே என்றாலும் நன்றாக இருக்கிறது…. சின்ன கதை என்பதலால் இதற்கு மேல் எதிர்பார்க்க கூடாது என்று விட்டு விட்டு அடுத்த கதை கொஞ்சம் பெரியதாக கொடுக்க சொல்லி கேட்போம்….

இலங்கை தமிழோட எழுதப்பட்ட குட்டி கதை இது…..

blog ஸ்டோரி….எழுதியவர் வேறு யாரும் இல்லை ..இங்கே நமக்கு review போடும் ரோசி கா தான் கதாசிரியர்…