Category Archives: யாழ் சத்யா

சித்ரா.வெ அவர்களின் காதலை உணர்ந்தது உன்னிடமே

சித்ரா.வெ அவர்களின் காதலை உணர்ந்தது உன்னிடமே – யாழ் சத்யாவின் பார்வையில்

 

பிருத்விராஜ் – சம்யுக்தா இந்த அழகான காவிய நாயகர்கள் தான் இங்கே கதையைக் கொண்டு செல்வது.

 

சுஜாதாவும் வளர்மதியும் ஆருயிர்த் தோழிகளாய் அவர்கள் கணவர்மாரது ஒத்துழைப்போடு நட்பு தொடர, தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்திலும் உறவை பலப்பலப்படுத்த வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பில் ஆணும் பெண்ணுமாய் பிள்ளை பிறந்ததும் பிருத்விக்கு என்றே பிறந்தவளாக நினைத்து சம்யுக்தா என்று பெயர் சூட்டுகின்றனர்.

 

பெற்றோரின் ஆசைப்படி இருவரும் இணைந்தனரா? என்பதை மற்றும் பல பாத்திரங்களின் உதவியோடு  அழகாக சொல்லியிருக்கிறார்.

 

வளர்மதி, சுஜாதாவை பார்க்கும் போது பெண்கள் இருவர் இப்படி ஒற்றுமையாக நண்பர்களாக இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறார்கள். இது இப்படியென்றால் சம்யுக்தா சங்கவியின் நட்பு, சகோதர பாசமோ அதை விஞ்சுகிறது.

 

சிறுவயதில் கூடி விளையாடி பிரியும் போது அந்த பிரிவின் வேதனை வயது ஏற ஏற அந்த ஏக்கம் அன்பாய், காதலாய் மாறி ஒருதலைக்காதல் காதலுடன் ஒருவர்.

 

மற்றவரோ இது எதைப்பற்றியும் சிந்திக்காமல் உணர்ச்சிகள் ஏதுமின்றி சூழ்நிலை கைதியாய் காதல் எனும் பெயரின் பிடியில்.

 

சூழ்ச்சிக்கு பலியாகி, ஆழ்மன உணர்ச்சிகளின்.விளைவால் தப்பு செய்து, கோபத்தின் விளைவில் செய்யாத சதியை தான் செய்ததாக ஒத்துக் கொண்டு அதன் விளைவாக இருவருக்கும் பிடிக்காத திருமணம்.  

 

அதன்பின்னர் வழக்கம்போல பல பிரச்சினைகள், சந்தேகங்கள், சண்டைகள். பிறகென்ன பிரிவு தானே. பின்னர் எவ்வாறு சேர்ந்தனர் என்பது மீதிக் கதை.

 

நாளைக்கொரு காதல் தேடும் இந்தக் காலத்தில் ஒருத்தியை காதலிக்கிறேன் கல்யாணம் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு இன்னொரு பெண்ணோடு உறவு கொண்டு விட்டதை எண்ணி குற்ற உணர்வில் துடிக்கும் நாயகன் தனித்து தெரிகிறான்.

 

தேவா – சங்கவி, வரூன் – பிரணிதா ஜோடிகளும் தங்களின் இயல்பான குணங்களால் மனதை கவர்கிறார்கள்.

 

சப்னா போன்ற பெண்களின் இழிசெயல்கள் எங்கள் கலாசாரத்தின் சிறந்த தன்மையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் தேவையை தீர்த்துக்கொள்ள நினைப்பது வலு கேவலம். இவர்கள் மாதிரி பெண்களால் தான்.மீதிப் பெண்களுக்கும் அவமானம்.

 

பிரிவு என்பதும் சில நேரங்களில் அவசியமாகி விடுகிறது. அருகிலிருக்கும் போது தெரியாத அருமை விலகியதும் புரிகிறது. கோபங்கள் நீங்கி நிதானமாக யோசித்து முடிவெடுக்க ஏதுவாக அமைகிறது.

 

அழகுத் தமிழில் எளிமையான உரையாடல்களில் ஒரு அழகான காதல் கதை. மேலும் பல சிறந்த படைப்புகளை தர மனமார்ந்த வாழ்த்துக்கள் சித்ராக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

 

பி.கு: சம்யுக்தா பிருத்வி காவியம் பற்றி தெரிந்தவர்கள் யாராவது மிகச் சுருக்கமாக கூறவும். எனக்கு மறந்து விட்டது மக்கா.

Advertisements

மல்லிகா மணிவண்ணன் அவர்களின் கனவே கைசேரவா

மல்லிகா மணிவண்ணன் அவர்களின் கனவே கைசேரவா – யாழ் சத்யாவின் பார்வையில்

 

 

இந்தக் கதையை நான் படிப்பதற்கு முற்று முழு காரணம் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படி என்ன தான் இந்த விக்ரமில் இருக்கு நானும் பார்க்கிறேன் என்ற ஒரு ஆர்வத்தோடு கதையை படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பமே பாரில் குடிக்கும் காட்சியில்… என்னடா இது ஹீரோவே இப்படி தண்ணி அடிக்கிறானே என்று அதிசயமாக தொடர்ந்து படிக்க அடுத்த அதிர்ச்சியாய் ஹீரோவின் பதவி.

 

முதலில் கலெக்டரோ என்று சிந்திக்க கிடைத்த பதிலில் நிச்சயமாக ஆச்சரியம். அதுவும் அந்த ஹீரோயினை முதல் முதல் பார்க்கும் போது எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்கிறாயே என்று திட்டும் போது நிச்சயமாக என்னுள் கோபமே. என்னதான் தெரிந்த பொண்ணு என்றாலும் மற்றவருக்கு கேட்காமல் என்றாலும் அதெப்படி நடுரோட்டில் வைத்து ஒரு பொண்ணை அப்படி வையலாம் என்று.

 

எல்லோரும் விக்ரம் விக்ரம் என்று உயிரை விட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கு இந்த கதையிலே ரொம்ப பிடித்த நபர் கந்தசாமி. எங்கும் எதிலும் எனக்கு உயர்வாய் தெரிந்தது அவர் என்றால் மிகையல்ல. எனக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைக்கவில்லையே என்று என்னை ஏங்க வைத்த தருணங்கள். அண்ணே…. அடுத்த ஜென்மத்திலாச்சும் உங்க தங்கச்சிப் பாப்பாவா பிறக்கோணுமுங்க…

 

கிராமிய மணம் தவழ மரியாதையாகப் பேசுவதிலாகட்டும், தங்கையின் வாழ்க்கை சீர்படும் வரை திருமணம் முடிக்கமாட்டேன் என்ற உறுதியோடு இருப்பதிலாகட்டும், தங்கைக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் பொங்கி எழுவதிலாகட்டும், தங்கையின் வாழ்க்கை கருதி விக்ரமோடு தனது ஈகோவை விட்டு அணைந்து போவதிலுமாகட்டும், தங்கையின் முகத்திலேயே அவள் மனசைப் புரிந்து கொள்வதிலாகட்டும், முன் முடி கொட்டிய பிறகு திருமணம் முடிவாகியும் தங்கையை அவமானப் படுத்திய வீட்டில் பெண் தேவையில்லை என்று எழுந்து செல்வதிலாகட்டும் கந்தசாமி உங்களை அடிக்க ஆளில்லை.

 

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கனகச்சிதமாக மிகவும் யதார்த்தமான இயல்புகளோடு படைக்கப் பட்டிருப்பதே இந்த கதையின் வெற்றியின் ரகசியம் என்னைப் பொறுத்தவரை. மிகப்பெரும் பதவியில் இருப்பவன் என்பதற்காக ஹீரோவை அப்படி ஒரு நியாயமான தெய்வமாகக் காட்டாமல் அவனும் பல உணர்வுகள், பழக்கங்கள் உள்ள சாதாரண மனிதன் தான் என்று காட்டியிருப்பது அருமையோ அருமை.

 

அன்னக்கிளி.  தனது குடும்பத்தில் உயிரையே வைத்திருக்கும் அவள் தனது கணவனுக்கு தானே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று ஏங்கித் தவிப்பதில் பல சாதாரண பெண்களின் ஏக்கங்களைப் பிட்டுப்பிட்டு வைக்கிறாள். கத்திச் சண்டை போட்டோ, தகாத வார்த்தைகளால் திட்டியோ தான் கணவனோடு சண்டை போட வேண்டிய அவசியமில்லை என்று தன் அமைதியான சுபாவத்தாலேயே விக்ரமைப் படுத்தும் பாடுகளில் சபாஷ் போட வைக்கிறாள்.

 

கடைசியில் ஒரு அத்தியாயம் தான் என்றாலும் ஈழப் பிரச்சினையையும் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்கள் மனதிலையையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அற்புதமான கவிதைகளுக்காக என் இதயம் கனத்த வாழ்த்துக்களை உங்கள் நண்பிக்கு என் சார்பாக தெரிவித்து விடுங்கள் அக்கா.

 

சலிப்பே தட்டாது அவ்வளவோ ரசனையாகச் செல்லும் கதைக்கு இத்தனை விசிறிகள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

 

சாதாரண மனிதர்களின் உணர்வுகளை எந்த விதமான மிகைப்படுத்தல்களுமில்லாமல் அழகாக படைத்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மல்லிகா அக்கா.

 

அந்த கவிதையின் படி சேராத கனவாகவே ஆகி விட்டது அந்த தமிழச்சியின் கனவு.

 

ஆனால் அவளின் உணர்வுகளோ எல்லோர் கைகளையும் சேர்ந்து விட்டது இந்த கதையின் மூலமாக. மிக்க நன்றி அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ்சத்யா.

ஆர்த்தி ரவி அவர்களின் விலகிடுவேனா  இதயமே

ஆர்த்தி ரவி அவர்களின் விலகிடுவேனா  இதயமே – யாழ் சத்யாவின் பார்வையில்

 

எப்போதும் இறுதியாகப் படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிரும் போது ஒரு பிரச்சினை. எல்லோரும் நான் சொல்ல நினைப்பதை முதலிலேயே சொல்லி இருப்பார்கள். எதை நான் இப்போது புதிதாகச் சொல்ல முடியும் என்று திணற வேண்டியதாக இருக்கும். இப்போதும் அதே தான் 😦

 

நான் எப்போதும் ஆர்த்தி ரவி அக்காவின் கதைகளை விரும்பிப்  படிப்பதற்கு இரண்டு காரணங்கள்.

 

  1. நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளும் அவரின் விடா முயற்சி. ‘எப்படியும் என்னால் குறித்த தவணைக்குள் எழுதி முடித்து விட முடியும்’ என்ற தன்னம்பிக்கையும் அதனை நிறைவேற்றப் போராடும் அவரின் கடின உழைப்பும் என்றுமே எனக்கு அவர் மீது ஒரு பிரேமையை ஏற்படுத்தும். ‘எப்படி ஒரு பெண்ணால் இத்தனை உத்வேகத்துடன் சோர்வடையாமல், தான் நினைத்த இலக்கை நோக்கி நேர்மறை எண்ணங்களுடன் பயணிக்க முடிகிறது?’ என்று எப்போதும் பிரமித்துப் பார்ப்பேன். அவரது இத்தகைய கடின உழைப்புக்கு நான் செய்யக் கூடிய ஒரே மரியாதை அந்த படைப்பை வாசித்து என் கருத்துக்களைத் தெரிவிப்பதே.

 

2.விஸா இல்லாமல், டிக்கெட் செலவு, பிரயாணச் செலவு இல்லாமல் அமெரிக்க நகரங்களையும், இந்திய நகரங்கள், கிராமங்களையும் இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாமே என்ற பேரார்வம் தான். அவரது வர்ணனைகள் நான் எப்போதும் அதிகம் ரசித்து வாசிப்பவை. அந்த இடங்களை எம் மனக் கண்ணில் ஒரு திரைப்படக் காட்சி போல விரிய வைத்து விடுவார். ஓஸி வெளிநாட்டுப் பயணம் என்ன கசக்கவா போகிறது?

 

கதையின் அவசியம் காரணமாக ஆங்கிலச் சொற் பிரயோகங்கள் சில அதிகமாகவே இருந்தாலும் கூட, அதுவே அவரது எழுத்துக்கு ஒரு பிரத்யேகத்துவத்தைக் கொடுத்து விடுகிறது. அந்த உரையாடல்கள் தவிர்த்த மற்றைய இடங்களில் அழகு தமிழைக் காணலாம்.

 

சரி. கதைக்கு வருவோம். இந்தியாவின் தேனியில் ஆரம்பிக்கும் கதை, நாயகன் தனது மனம் கவர்ந்தவளைத் தேடி  அமெரிக்காவுக்கு செல்வதாகச் செல்கிறது. காதல் – ஊடல் – கூடல் என்ற வழக்கமான ஒரு கருவைத் தனது பாணியில் காதல் ரசம் சொட்ட சொட்ட தந்திருக்கிறார்.

 

நாயகி என்ன தான் அமெரிக்கவாசியாக இருந்தாலும்  இந்திய கலாச்சார ரத்தம் உடம்பில் ஓடுவதால் போல, மேற்கத்தைய சாதாரண வழக்கங்களைக் கூட ஏற்க முடியாமல் இவ்வாறு தவிக்கிறாள்.

 

நாயகனின் காதலிலும் குறை சொல்வதற்கில்லை. தவறு செய்யாத மனிதர் யார்? பிரச்சினைகள் எதிர்கொள்ளாத உயிர் தான் எது? ஆனால் எப்போதுமே “புரிதலுடன் கூடிய அன்பே” வாழ்க்கை ஜெயிக்க வழி வகுக்கிறது. ஒரு பிரச்சினை வரும் போது, பிரிந்திருந்து பிரியம் காட்ட வேண்டியதில்லை. இணைந்திருந்து அந்தப் பிரச்சினையை பேசித் தீர்க்கலாம். ஆனால் சில நேரங்களில் பிரிதலே அன்பின் வேகத்தையும் புரிய வைத்து விடுகிறது. எல்லாமே அவரவர் கையில் தான். எப்படி முடிவெடுக்கிறோமோ அப்படியே நம் வாழ்க்கை.

 

காதல், நட்பு, சகோதர பாசம், உறவுகளின் பகை என்று அனைத்தையும் உள்ளடக்கி அழகாய் ஒரு காதல் கதையை தந்துள்ளார் எழுத்தாளர்.

 

அமேசன் கடை, டிப்ரசன் சிட்டி இவையெல்லாம் நான் புதிதாக அறிந்து கொண்ட விடயங்கள். அவகோடா பழம் பற்றி வாசித்ததும், முதல் வேலையாக கடைக்குப் போய் வாங்கி வந்து சீனி போட்டு மசித்து சாப்பிட்டேன். முன்பு யுத்தம் நடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் அவகோடா எனும் பட்டர் புறூட் கிடைப்பதில்லை. யாராவது கொழும்பு போய் வாங்கி வந்தால் தான் உண்டு. தவறாமல் சொல்லி விட்டு வாங்கி உண்பேன். பின்னர் யுத்தகாலம் முடிந்த பின்னர் கண்டி, நுவரேலியா போன போது ஆசை தீர நிறைய வாங்கி உண்டேன். கதையில் அவகொடா என்றதும் இந்தப் பழைய ஞாபகங்களும் அணி வகுத்தன.

 

“விலகிடுவேனா இதயமே” இதயங்களை லேஸாக்கும் ஒரு அழகான காதல் கதை. அனைவரும் தவறாமல் படியுங்கள். உதயம் பருப்பு வாங்காமலும் அமெரிக்கா போக முடியும் மக்கா 😜

 

தொடர்ந்து உங்கள் எழுத்துக்களால் எங்களை மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

 

தமிழ் மதுரா அவர்களின் ஓகே என் கள்வனின் மடியில்

தமிழ் மதுரா அவர்களின் ஓகே என் கள்வனின் மடியில் – யாழ் சத்யாவின் பார்வையில்
மறுபடியும் ஒரு அழகான மெல்லிசையின் சுகத்தோடு மயிலிறகாய் மனதை வருடிச் செல்லுமாறு ஒரு காதல் கதையைத் தந்ததற்கு வாழ்த்துக்கள் தமிழ் மதுரா அக்கா.
வம்சி கிருஷ்ணா!

சிறு வயதில் பெற்றோரை இழந்தவன்,  வறுமையில் வாடி, தனது பலவீனத்தையே பலமாக்கி தொழில் சாம்ராஜ்யத்தில் கால் பதித்து வெற்றி கண்டவன்.
காதம்பரி!

அண்ணனால் ஏமாற்றப்பட்டு தொழிலே தன் வாழ்க்கையாக்கி, தன் பிரத்யேக சுக துக்கங்களை மறந்து வாழ்பவள்.
தொழில் நிமித்தம் சந்திக்கும் இவர்கள்,

தங்கள் முயற்சியில், கடின உழைப்பில், குடும்ப சூழ்நிலையில் சமாந்தரமாய் ஒத்த எண்ணமுடையவர்கள், காதலெனும் நேர் கோட்டில் இணைந்தார்களா?
ரூபி நெட்வேர்க்கும் கேட் அட்வடைஸ்மென்ட் கம்பெனியும் அந்தந்த அலுவலகங்களின் வேலை நடப்புகளைக் கண் முன்னே கொண்டு வந்தன. உணவுப் பிரியையான எனக்கு ஒவ்வொரு உணவுகளையும் வர்ணித்திருந்த விதம் ஒரு முறை அவை எல்லாவற்றையும் ருசி பார்த்து விட வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தி விட்டது. ராகி முத்தே செய்முறையைத் தரச் சொல்லி  கூகிளாண்டவரிடம் காதம்பரியுடன் சேர்ந்து நானும் வேண்டுதல் வைத்துள்ளேன்.
எனக்குரியவர் இவர் தான் என்று உணர்ந்து விட்டால், அதை வென்றெடுக்க போராடுபவர் ஒரு ரகம். அது புரிந்தாலும் தனது குறிக்கோள்களால் அந்த அன்பை ஏற்க முடியாமல் குழம்பித் தவிப்பவர்கள் ஒரு ரகம். வம்சியும் காதம்பரியும் எந்த ரகம் என்று அறிந்து கொள்ள கதையைப் படியுங்கள்.
வம்சியும் கேட்டும் சுகமான தென்றலின் வருடலாய் சில மணித் துளிகள் உங்களின் கவலைகளை மறக்க வைக்கப் போவது உறுதி.
கதையைப் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 1’

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

ஸ்ரீகலா அவர்களின் கனவில் நனவாய் நீ

ஸ்ரீகலாவின் கனவில் நனவாய் நீ – யாழ் சத்யாவின் பார்வையில்

 

உண்மையான காதலை பிரிவும் பிரிக்க முடியாது. காத்திருப்பும் வலுப்படுத்தும். மாறுபட்ட கொள்கைகளாலும் அழிக்க முடியாது. காதலை காலந்தோறும் வாழச் செய்வது புரிந்துணர்வும் எதிர்பார்பற்ற அன்பும் என்பதை சமூக விழிப்புணர்வு கருத்துக்களோடு அழகாக ஒரு நாவலாக்கி இருக்கிறார் ஸ்ரீக்கா.

 

பிரகதீஸ்வரி – சித்தார்த்

 

இவர்கள் தான் இந்த கதையின் அச்சாணிகள். இவர்கள் குடும்ப உறவினர்கள் வைத்து பின்னப்பட்ட கதையில் இவர்களுடைய காதல், கல்யாணம், பிரிவு என்ன என்ன தாக்கங்கள் செலுத்துகிறது? இவர்களது மட்டுமல்லாது இவர்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகிறது? கொள்ளைகள் மாறுபட்ட இருவர் வாழ்வில் இணைந்து வெற்றி பெறுவது சாத்தியமா? பணத்தாசை மனிதர்கள் மனதை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது? என்று பல கேள்விகளுக்கான விடையை காதல் ரசம் சொட்ட இன்று நாட்டுக்கு தேவையான விவசாயம், மண்ணகழ்வு, குடிநீர் பற்றாக்குறை, மருத்துவ வியாபாரம், ஜல்லிக்கட்டு போன்ற பல சமூகப் பிரச்சினைகளோடு சேர்த்து அழகுற தந்திருக்கிறார்.

 

ஹரிபிரசாத் – சந்தியா

ஒருவரை எதிர்மறை சொற்களால் காயப்படுத்தாமல் அவர்களை நேர்மறை எண்ணங்களால் ஊக்குவிக்கும் போது அவர்கள் தங்களிடமுள்ள குறைகளை உணர்ந்து தங்கள் தவறுகளை திருத்தி ஒரு அன்பான வாழ்க்கையைத் தர முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம்.

 

சரவணன் – ஸ்வேதா

ஒருவன் செய்த தப்பை உணர்ந்து அதை திருத்தியமைக்கப் போராடும் போது நிச்சயமாக அவன் வெற்றியடைவான் என்பதை இந்த ஜோடி வெளிப்படுத்துகிறது.

 

அர்ஜுன் – சங்கமித்ரா

ஒருதலைக்காதல் தோல்வியோடு வாழ்க்கை அஸ்தமித்துப் போய் விட முடியாது. அதன் பிறகும் புரிதலான அரவணைப்போடு வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.

 

ஜெயசிம்மன் – நீலேஷ்

இன்று நடைபெறும் பல்வேறு சமூக சீரழிவுகளுக்கு காரணகர்த்தாக்கள்.

 

விமலாராணி – தெய்வநாயகி

பல சீர்கேடுகள் இவர்கள் போன்ற நச்சுப்பாம்புகளின் ஊக்கத்தால் தான் அரங்கேறுகின்றன. தப்பு செய்பவர்களை விட இவர்கள் தான் மிகக் கொடூரமானவர்கள். கேவலம் பணத்துக்காக பெண்ணிற்குரிய தாய்மையுணர்வே அற்று செயற்படும் அற்ப பிறவிகள்.

 

நரசிம்மன்

இன்றைய காலத்திற்கு தேவையான ஒரு நீதிமான். பெண்ணைக் கடவுளாகக் கொண்டாட வேண்டாம். அவளைப் பலவந்தப்படுத்தும் போது அவளின் வலியை சக மனிதனாக உணர்ந்து கொண்டாலே இந்த வன்புணர்வு சம்பவங்கள் நடைபெறாதே என்பதை தெளிவாகப் புரிய வைக்கும் ஒரு வீரபுருஷன்.

 

மார்த்தாண்டம் – பிரபாவதி

பந்த பாசத்திற்கு கட்டுப்பட்டு வாழும் செல்வந்த குடும்பத்திற்கே உரிய குணங்களோடு திகழும் ஒரு தம்பதி.

 

சித்தார்த்

பரம்பரை பணக்காரன். இளம் வயதிலேயே தொழில் சாம்ராஜ்யத்தில் பிரகாசிக்கும் ஒரு இளம் தொழிலதிபன். தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என நினைத்ததை சாதிக்கும் நெஞ்சுரம் படைத்தவன். ஒரு தப்பென்று தெரிந்தால் தலையையும் எடுக்க தயங்காத வீரன். கொஞ்சம் கோபக்காரன். அடிதடி செயல் வீரன். தான் செய்வது தப்பென்று புரிந்தால் தயங்காது திருத்திக் கொள்பவன். தான் விரும்புபவளுக்காக மலையையும் புரட்டிப் போடக் கூடியவன். காதலுக்கு தாசன். தன் பாதியவள் வேதனைப் பட்டிடக் கூடாது என்று உண்மைகளைத் தனக்குள் புதைத்து மறுகும் அன்பான கணவன். என்னதான் பெரிய தொழிலதிபனாக இருந்தாலும் தனக்கு வீட்டில் நேர்ந்த தனிமை, தான் பெற்ற செல்வங்களுக்கு ஏற்பட்டிடக் கூடாது என்று கவனமாக நடந்து கொள்ளும் பாசக்கார தந்தை. பெண்களிற்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் ஆண்மகன். என்ன சில விடயங்களை சொல்லிப் புரிய வைக்க முயலாது அடுத்தவர் தானாகவே புரிந்து தன்னிடம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவன். இந்தக் குணம் மட்டும் இல்லையேல் இந்தக் கதையும் இல்லை.  

 

பிரகதீஸ்வரி

எல்லோரும் சித்து மாமு என்று உருகிய போது என்னை அடடா போட்டு வியக்க வைத்த பெண். சிறுவயதிலேயே தந்தையைப் பார்த்து உடலுக்குள்ளும் மனசுக்குள்ளும் ஊறிப்போன உதவும் குணம். அந்தப் பதின்ம வயதிலேயே வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து ஒற்றை ஆளாக பம்பரமாக சுழன்று அந்தப் பெரிய வீட்டைத் தாங்கும் திறன். பெரியவர் என்ற மரியாதைக்காக தனக்கு ஏற்படும் அவமரியாதைகளை சகித்துக் கொள்வது. கட்டிய புருஷன் தப்பு செய்கிறான் இயற்கையை அழிக்கிறான் என்றாலும் கூட தன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாது அவனைத் துணிந்து எதிர்த்து நிற்பது. கணவன் முதல் சந்திப்பில் அடித்ததைக் கூட ‘ஒரு  பெண்ணை நோக்கிக் கை நீட்டுவது தப்பில்லையா?’ என்று கோபப்படாமல் ‘நான் சிரித்ததனால் தானே அடித்தீர்கள். கேலியாய் சிரித்துக் கோபமூட்டியது என் தப்பு’ என்று காதல் மன்னவனின் செயலுக்கு தானே பழியேற்றுக் கொள்வது. இயற்கையை பாதுகாக்க ஒற்றை ஆளாக போராடுவது. ‘நான் மட்டும் திருந்தி இயற்கையை சுரண்டாமல் விட்டால் சரியா? நான் செய்யவில்லை என்றால் இன்னொருவன் செய்யப் போகிறான்’ என்ற கணவனின் கூற்றுக்குப் பதிலாக உயர் பதவிக்கு படித்து முன்னேறி தன் கொள்கைகளைச் சாதித்து தன் மண்ணிற்கு ஏற்படும் தீங்குகளைக் குறைப்பது. மற்றவர் வலி வேதனையை தன்னதாக நினைத்து துடிப்பது. அதைச் சீர் செய்யப் போராடுவது. தன் கையைப் பிடித்து இழுத்தவனுக்கு செருப்படி கொடுப்பதில் வீரப் பெண்ணாய் மிளிர்வது.

 

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். பெண்களாலும் சாதிக்க முடியும். தன் கணவன், பிள்ளைகள் குடும்பம் தாண்டி இந்த சமூகத்திற்கு அவளாலும் நன்மைகள் புரிய முடியும். அடுப்படியோடு சேர்த்து இந்த தேசத்தையும் சுத்தப்படுத்த முடியும் என்பதற்கு தெள்ளத்தெளிவான உதாரணம்.

 

எங்கள் எல்லோராலும் பிரகதீஸ்வரிகளாக முடியாது தான். ஆனால் குடும்பம் எனும் சிறு கூட்டுக்குள் ஒடுங்கிடாது கொஞ்சமேனும் சமூக அக்கறை உள்ளவர்களாக மாற வேண்டும். எல்லோரும் நான் மட்டுமே மாறினால் சரியா என்று சிந்திக்காமல் முதலில் நான் மாறுவேன் அதன்பிறகு அடுத்தவன் என்று யோசிக்க ஆரம்பித்தால் இந்த சமூக சேர்கேடுகளை நிச்சயமாக என்றோ ஒருநாள் நிறுத்தி விடலாம்.

 

நான் போய் போராடினால் தான் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று ஒவ்வொருத்தனும் அன்று எண்ணியிருந்தால் அன்றைக்கு அத்தனை லட்சம் பேர் திரண்டிருப்பார்களா? வென்றிருப்பார்களா? இந்த பிரகதீஸ்வரி மதுஒழிப்புக்காக ஒற்றையாளாக பல தடவை சிறை சென்று போராடும் நந்தினியை ஞாபகப் படுத்துகிறாள்.

 

நாம் ஒவ்வொருவரும் பிரகதீஸ்வரிகளாக உருவெடுக்கும் போது ஒவ்வொரு சித்தார்த்தின் அன்பும் அரவணைப்பும் ஊக்குவிப்பும் உற்ற துணையும் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வெற்றி நிச்சயம்.

 

வெறும் காதலும் பிரிவுமே என்று சாதாரண ஒரு கதையாக இல்லாமல் இவ்வளவு சமூக அக்கறையுடனான நாவலைப் படைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஸ்ரீக்கா. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா

நிஷா லக்ஷ்மியின் கண் பாராயோ! வந்து சேராயோ!

நிஷா லக்ஷ்மியின் கண் பாராயோ! வந்து சேராயோ! – யாழ் சத்யாவின் பார்வையில்

 

முகநூலில் முகமறியாது கிடைத்த இனிய நட்புகளில் ஒருவர். இருவருக்கும் பிடித்த எழுத்தாளர் என்டமூரி அவர்களினால் இடையிடையே உள்பெட்டியில் பேசிக் கொண்டதுண்டு. நீண்ட நாட்களாக இவர் ஒரு எழுத்தாளர் என்றே தெரியாமல் இருந்த பரிதாபத்திற்குரிய வாசகி நான்.

 

அப்புறமாக இவரின் சில பதிவுகள் மூலம் அறிந்து நீண்ட நாட்களாக இவரது கதை ஒன்று படிக்க வேண்டும் என்று ஆவல் குடிகொள்ள இன்றுதான் நேரம்காலம் அமைந்தது.

 

அந்திரன் – பவானி ஜோடியின் காதல் சங்கீதம்.

இன்றைய பல பெற்றோர்கள் செய்யும் கொடுமை அந்திரனுக்கும் நடந்தது.  ஆம். அவன் ஓவிய, சிற்ப தாகத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காது அவனுக்கு பிடிக்காத துறையில் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் ஏதோ கடமைக்கு படித்து சட்டத்தரணி ஆகிறான். கலை என்பது இயற்கையாக ஆத்மார்த்தமாக வர வேண்டும். உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும். போட்டி என்ற பெயரில் கொடுக்கும் தலைப்புகளுக்காகவோ அல்லது பணத்திற்காக அதை செய்ய முடியாது. அவ்வாறு செய்யும் பொழுது அதில் பூரணத்துவம் இருக்காது என்று நம்பும் கொள்கை உடையவன். இருந்தாலும் பெற்றோர் மீதும் அண்ணன் பிரசன்னா மீதும் மிகுந்த பாசம் உடையவன்.

 

என்ன கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் எனும் முதுமொழிக்கு சொந்தக்காரனாய் அந்த ஊரின் குட்டி ரௌடி. ஆனால் காதல் என்று வரும் போது வாய் பேச முடியாதவள் என்று தெரிந்தும் அவளின்பால் உருகும் போது அவனது அனைத்து அடாவடிகளையும் எம்மை மன்னிக்க வைத்து விடுகிறது. தகுதிக்கு மீறியவளைக் காதலிக்கும் போது எல்லா ஆண்களுக்கும் வரும் பொதுவான தடுமாற்றங்கள் இவனையும் தடுமாற வைப்பதில் வியப்பில்லை. ஆனால் அவற்றை தன் உண்மைக் காதலால் இலகுவாய் கடந்து விடுகிறான்.

பவானிக்கு நடந்த கொடுமை உண்மைச் சம்பவம் என்று அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். பெற்றோரின் தவறான நடவடிக்கைகள் எப்படியெல்லாம் பிள்ளைகளை பாதிக்கிறது? அவள் இவ்வளவு படித்து இத்தனை கோடி சம்பாதித்தும் கடைசியில் தந்தையின் நடத்தைகெட்ட தனத்தால் பேச்சை இழக்கும் படி ஆகி விட்டதே.

 

அந்திரன் குடும்பமே ஒரு காமெடி சரவெடி. ஆரம்பத்தில் அவர்களை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு நினைத்து விட்டு பின்னர் அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அடித்த கூத்தைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அழகிப் பாட்டி வேறு தன் பங்குக்கு தன் பாத்திரத்தில் புகுந்து விளையாடியுள்ளார்.

 

அனைத்து பாத்திரங்களும் தேவையற்ற அலட்டல்களின்றி தம் கடமைகளை செவ்வனே ஆற்றின.

 

அழகான வார்த்தை அமைப்புகளில் வேகமான நடையோடு அருமையான ஒரு குறுநாவல். எனக்கு ஒரேயொரு குறை ரோஜா.  கதை வேகமாக முடிந்துவிட்ட உணர்வு தோன்றியது. இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கலாம் போல இருந்தது.

 

இன்னொரு கதையில் அந்திரன் கடந்த காலம் பற்றி வந்ததாகக் கூறியிருந்தீர்கள். இருந்தாலும் தனியாக இந்தக் கதை படிக்கும் போது அடடா முடிந்ததே என்ற ஏமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

மிகவும் அழகான தலைப்புக்கு ஏற்ற அருமையான கதை. மேலும் பல படைப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 09

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

இதோ ஒன்பதாவது அத்தியாயம்.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மக்கா .

என்றும் அன்புடன்

யாழ் சத்யா

பிரேமா அவர்களின் என்னை ஆளும் உறவே

பிரேமாவின் என்னை ஆளும் உறவே – யாழ் சத்யாவின் பார்வையில்

 

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. ஆம். பிரேமாக்காவின் கதை படிக்கவேண்டும் என்ற என் ஆசை தான்.

 

ஜெய் என்றழைக்கப்படும் ஜெயந்த்தின் திருமணமும் அதைச் சுற்றிய வாழ்க்கை முறையையும் அழகாக சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்.

 

பத்திரிகையில் வந்த ஒரு செய்தித் துணுக்கை வைத்து இவ்வளவு அழகான கதை படைக்க முடியுமா? உண்மையில் படித்து முடிக்கும் போது வியந்து விட்டேன்.

திடீர் திருமணம் ஒன்றால் இணையும் தம்பதியினர். தாலியேறிய நிமிடத்தில் இருந்து அவனைக் கணவனாக வரித்து அவன் மேல் அன்பு செலுத்தும் நாயகி ப்ரீத்தி. முருகன் திருவிளையாடலை வியந்தது இங்கே தான். அட

இந்தக் காலத்தில் போய் இப்படியொரு பொண்ணா? மஞ்சள் கயிறு மாஜிக் இதுதான் போலும் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே படித்தால் அடுத்தடுத்து அழகான திருப்பங்கள்.

 

ப்ரீத்தியும் அவள் தமக்கை சுபத்ராவும் இயல்பான குடும்ப உறுப்பினர்கள். இது எல்லாக் குடும்பங்களிலும் நடக்கும் ஒன்றே. யோசிக்காது வார்த்தைகளை விட்டுவிடுவதும் பின்னர் மன்னிப்பு கேட்பதும். பெற்றோர்களும் பணிந்து போகக்கூடிய பிள்ளையை பணிய வைப்பதும். ஆனால் இன்னொரு குடும்ப தலைவியாகி விடும் பின்னர் அது வேறொரு குடும்பம் எனும் போது பணிவது இலகுவானதல்ல.

 

ப்ரீத்தியின் கணவன் மீதான அன்பு பார்க்க பார்க்க மனசுக்குள் ஒரு சுகம். அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நீ என் உயிர்.. நான் தான்உன் உறவு என்று நிரூபிப்பது அழகு. அவள் கோபத்தில் கூட அவள் அன்பைக் காட்டும் விதம் எங்களுக்கு சிரிப்பு வர வைக்கிறது.

 

ஜெயந்த். என்ன சொல்ல. அவன் தோற்றத்தில் அழகோ என்னவோ… அவன் நல்ல குணத்தில் அவனை சாரி அவரை மிஞ்ச ஆள் கிடையாது. தனிக்கட்டையாக வாழும் அவர் தன்னையும் வீட்டையும் பார்த்து கொள்ளக்கூடிய மனைவியை எதிர்பார்க்கிறார்.

 

குடும்பத்தில் நடந்த சில அசம்பாவிதங்களால் காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே கெட்ட வார்த்தையாக நினைக்கும் இவர் தனது மனநிலையை மாற்றிக் கொண்டாரா? காதலை உணர்ந்தாரா? என்பதைத் தான் ஒரு சுகமான தென்றலாய் அழகான காட்சி அமைப்புகளோடு சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்.

 

இவர் மனைவி மீது கொண்ட பாசம் ஆகட்டும், அவளை ஒருவர் அவமதிக்கும் போது சும்மா தானும் சேர்ந்து கோபப்படாமல் அந்த பிரச்சினையைத் தீர்க்கும் விதமாகட்டும், மனைவியின் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றாலும் உரிய வரையறைகளோடு நிறுத்தி வைப்பதாகட்டும், முதியவர்களோடு நேரம் செலவிடும் அந்த பொறுமையும் உயரிய குணமுமாகட்டும் எல்லாமே ஆஹா போட்டு வியக்க வைக்கின்றன.

 

இவர் இந்த காலக் ஹீரோவா இல்லை போன தலைமுறையா என்று யோசித்தேன். ஏனெனில் இப்போதெல்லாம் தான் நல்ல மனிதர்களைக் காண்பதே அரிதாகி விட்டதே.

 

கதையில் ஹீரோ, ஹீரோயின் எல்லோரையும் விட என்னைக் கவர்ந்தவர் எனக்கு மிகவும் பிடித்தவர் பரசுராம். என்ன மனிதரய்யா இவர்? மகள் மீது பாசம் இருக்கும் என்பதற்காக இவ்வளவு வேலை பார்ப்பாராய்யா இந்த மனுசன்?

 

இவர் போல் எல்லோரும் இருந்து விட்டால் ஆணவக் கொலைகள் எதற்காக?  கௌரவக் கொலைகள் தான் ஏன்? தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று கருதும் இவரைப் போன்றோர் தான் போற்றிக் கொண்டாடப் பட வேண்டியவர்கள்.

 

பிள்ளை ஒன்றைக் கேட்டு விட்டது என்றால் அதை சும்மா உடனே வாங்கி கொடுத்து விடுவதில் இல்லை உண்மை பெற்றோர் அன்பு. அது தன் மகவுக்கு நல்லதா கெட்டதா என்று தீர விசாரித்து ஆராய்ந்து அதன் பிறகு வழங்கும் போது தான் ஒரு அறிவான அன்பான பெற்றோரின் பாசம் வெற்றியடைகிறது என்பதை புரிய வைத்திருக்கிறார் பரசுராம்.

 

வேணி கணவர் பரசுராமுக்கு ஏற்ற அன்பான மனைவி. பாசமான தாய். சூழ்நிலையை புரிந்து தன் குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் நல்ல ஒரு இல்லத்தரசியாக விளங்குகிறார்.

 

மனோகர் உண்மை நண்பன். தனது நண்பனின் வாழ்க்கைக்கு நன்மை செய்வதற்காக நண்பனது கோபத்தையே சம்பாதிக்க துணிந்தவன்.

 

சுபத்ரா – மோகன் அந்த லூசுகளைப் பற்றி சொல்ல ஒண்ணும் இல்லை. பணப் பேய்கள். நிமல்குட்டிக்காக அதுகளை மன்னிச்சு விட்டு விடுகிறேன்.

 

மொத்தத்தில் மெல்லிய நகைச்சுவை உணர்வு கலந்தோட மனசுக்கு திருப்தியான ஒரு குடும்ப கதை. உங்கள் அனைத்து கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்பி விட்டது இந்தக் கதை.

 

மேலும் பல படைப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரேமாக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 08

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

எட்டாவது அத்தியாயம் இதோ .

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

சொர்ணா சந்தானகுமார் அவர்களின் என்னை அடியோடு சாய்த்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளே – சத்யாவின் பார்வையில்

 

இல்ல கேட்கிறன்… எல்லாரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கிங்க…?? இப்பிடி ஆளாளுக்கு த்ரில்லர், சஸ்பென்ஸ் கதைகளா எழுதி நம்ம ஃபிபி, சுகர் எல்லாத்தையும் ஏத்துற பிளானா? நாம வேற எப்பிடி விமர்சனம் எழுதுறதாம்..?

 

பாதி கதை வரை சஸ்பென்ஸ்லயே எங்களை இருக்கிற, இல்லாத மூளை எல்லாம் உருட்டி யோசிக்க வைச்சு மீதிப் பாதியை காதல், ஊடல், கூடல் என்று கலவையாக கலந்து கட்டி அடித்திருக்கிறா நம்ம சொர்ணாக்கா…

 

கதையை வாசிப்பம்னு தொடங்கினா… முதலாவது அத்தியாயத்தில ஹீரோ யாருன்னே மண்டைய பிய்ச்சுக்க வைச்சிட்டாங்கப்பா… கார் வைச்சிருக்கிற கம்பெனி முதலாளி ஹீரோவா, வாட்ச்மேன் ஹீரோவா? அப்போ யார் வில்லன்?

 

ஜேர்னலிஸ்ட் அத்தோட சொந்தமாக பத்திரிகை வைச்சிருக்கிற ஹீரோயின்… பார்த்ததும் செக்கியூரிட்டி கார்டை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கிறாங்க..

 

இப்பிடி ஒரு பணக்கார பொண்ணு அழகான பொண்ணு வலிய போய்க் கேட்க எந்த மடையவனாவது மாட்டேன் என்று சொல்வானா?

 

தாய் தந்தையற்ற ஹீரோயின் மாமாவோட அன்பிலும் மாமியோட கொடுமையிலும் வளரும் பரிதாபம். காதல் என்னும் பெயரில் தான் காதலிப்பவன் மீது கண் மூடித் தனமாக வைக்கும் அன்பு. அவன் பிழையானவனாக இருந்தும் அவனை விட்டு விலக யோசிக்காமல் அவனை திருத்த நினைக்கும் பெருந்தன்மை.

என்ன பொண்ணுடா இவ என்று வியக்க வைக்கிறாள்.

 

ஹீரோ எல்லாம் சேர்ந்த ஒரு கலவை. அவரைப் பற்றி வாய் திறந்தால் சொர்ணாக்கா எனக்கு அடிச்சுப் போடுவா.

அனைத்து கதாபாத்திரங்களும் அவ்வளவோ ரசிக்க வைக்கிறாங்க. வாசிக்கும் போது சிரிப்புக்கு பஞ்சமில்லை.

 

“எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தை தான்

அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே”

இதை அருமையாக விளக்கியிருக்கிறார்கள் சொர்ணாக்கா.

 

விவசாயிகள் பிரச்சினைகள், தீர்வுகள், குழந்தைகள் பாலியல் பலாத்கார பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தது என்று காட்டி இன்றைய பிரச்சினைகள் பற்றி வைத்த கருத்துக்கள் பிரமாதம் அக்கா.

 

அக்கோய்… நாம எல்லாம் சின்னப் பொண்ணு. அவ்வளவோ அறிவு பத்தாது.. இவ்வளவோ போட்டுக் குழப்பக் கூடாது அக்கா. .

 

நான் முதல் தரம் சொர்ணாக்கா கதை வாசித்தாலும் வாசித்தேன்.. உங்க விசிறி ஆகிட்டேன்கா… இப்பிடி எல்லாருமே நல்லா எழுதிட்டு இருந்திங்க என்றால் நாம பாலப்பாடி… வாசிக்க நேரமே கிடைக்க மாட்டேங்குது…

 

அந்த பல்லைப் பத்தி ஒரு கருத்தைசொன்னீங்க பாருங்க.

உனக்கு பொறந்ததை தவிர வேற என்ன பாவம் பண்ணிச்சு அதுன்னு… சிரிச்சு முடியல அக்கா. ..

 

இடையில நம்ம ஊரெல்லாம் இழுத்து விட்டு வேற அசத்திட்டிங்க போங்க…யாழ்ப்பாணம், கொழும்புன்னு…கொழும்பு வெள்ளம் இல்ல வெள்ளவத்தை க்கா… அது…

 

பக்கத்திலே ஆயிலும் சீப்பும் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க தயாராகுங்கள் என் அன்பு நெஞ்சங்களே… மண்டையை பிச்சிக்க தோணுற போது உடன ஆயில் பூசி வாரிக் கொண்டால் சிக்குப் பிடிப்பதை தவிர்க்கலாம் என்று தான்பா…

 

“என்னை அடியோடு சாய்த்தவளே” உங்களையும் சாய்க்கும் என்பதில் ஐயமில்லை. உங்கள் நேரம் சுவாரஸ்யமாய் கழிய வாழ்த்துக்கள்.

 

என்றும்அன்புடன்

யாழ் சத்யா.