Category Archives: கட்டுரையும் பகிர்வுகளும்

“MOM” திரைவிமர்சனம்

 

htuv9r3dzchly7JZQb7R1Q7pElH.jpg

 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்திருக்கிறேன். பார்க்கச் சொன்னதற்காக ரோசி அக்காவுக்குத்தான் நன்றி. அதுவும் இரவிரவாக முழித்திருந்து, அழுதழுது பார்த்தேன். ஸ்ரீதேவி நடித்த கடைசிப்படமாம் ‘மாம்’. நடித்தார் என்பது அபாண்டமான வார்த்தை. அன்னையாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த இடத்திலும் மிகைப்படுத்தாமல் மிக அருமையாக இந்த சித்திரத்தை படைத்தவர்கள் மிகவுமே பாராட்டுக்கு உரியவர்கள். அப்பாவின் இரண்டாம் தாரத்தை அம்மாவாக ஏற்க முடியாமல் தடுமாறும் இளம் சிட்டின் மனதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. அதே நேரம்.. ஒரு வளரிளம் பருவத்து பெண்ணாய் அவள் டிஸ்கோவுக்கு போவதற்காக காட்டும் கோபத்தையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. இன்றைய பலவீட்டு அம்மா அப்பாவாய்.. அவர்களின் திணறலையும் உணர முடிகிறது. அவளின் ஆசைக்காக சம்மதித்ததால் உண்டான வினை.. உண்மையிலேயே டிஸ்கோ என்கிற இந்த உலகம் எங்கிருந்து முளைத்தது என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு வந்தால் பெற்றவர்களாய் எப்படிக் கையாள்வது? அந்த மகளுக்கு நடந்ததை பார்க்கையில் காலை முறித்தாவது நம் வீட்டுப் பிள்ளையை வீட்டுக்குள் அடைத்துவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. இந்தமாதிரியான விடயங்களுக்கு எல்லாம் பெண் பிள்ளைகளை அனுமதிக்கவே கூடாது. உண்மையை சொல்லப்போனால், அங்கே போகட்டுமா என்று கேட்கிற அளவில் கூட நம் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது! இதுதான் நிஜம்!

ஆனால், அடுத்த பக்கம், இவ்வளவு வன்மையாக நம்மை சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறதா நம் சமூகம்? எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? வெளியே வன்முறையும் வக்கிரமும் தாண்டவமாடுகிறது என்று போர்க்கொடி தூக்குகிறோமே.. அப்போ வீட்டுக்குள் நம் பெண் பிள்ளைக்கு நாம் செய்வது என்ன? என்கிற கேள்வி எழுகிறதே!

பாதுகாப்புக்கு இதையெல்லாம் செய்யத்தான் வேண்டும் என்றால் சரிசமமான சுதந்திரம்; ஆணும் பெண்ணும் சமம்; நாமும் படித்துவிட்டோம், வேலைக்கு போகிறோம்; உனக்கு உள்ள உரிமை அத்தனையும் எனக்கும் இருக்கிறது. என்று எத்தனையோ சொல்லி மார் தட்டுகிறோமே.. அத்தனையும் உண்மைதானா? அல்லது பூசி மெழுகுகிறோமா? எல்லாவற்றிலும் சரிசமமாய் நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண்ணாக.. இந்த படத்தில் வரும் அந்த மகள்.. அத்தனை ஆண்களுக்கு மத்தியில் எப்படித்தான் தன்னை காத்துக்கொள்வாள்? அல்லது காத்துக் கொண்டிருக்க வேண்டும்? விடையே இல்லையே.. கராத்தே, குங்க்பூ, ஜூடோ எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ? அவை தெரிந்தாலும் கூட நான்கைந்து ஆண்களை ஒரு பெண்ணால் வீழ்த்திவிட முடியுமா என்ன?

எனக்கு என்னவோ.. மனதளவில் பாதிக்கப்பட்டவராக மாறிக்கொண்டிருப்பது ஆண் சமூகம் என்றே படுகிறது. போகிற போக்கில் வக்கிரம் பிடித்த மிருகங்களாகவே மாறி விடுவரோ என்று அச்சமாய் இருக்கிறது. இதற்கெல்லாம் பெரும் பங்கு வகிப்பதும் சினிமாவே! ‘பெண்’ என்பதன் பொருளே அவள் உடல் மட்டும் தான் எண்பதுபோலத்தானே பெரும் பான்மையான படங்கள் வருகிறது.

அதோடு, நாம் பேசவேண்டியது இங்கே பெண் சுதந்திரம் அல்ல! ஒரு ஆண் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதை பற்றி. அவன் எப்படி ஒரு பெண்ணை கையாள வேண்டும் என்பதை பற்றி. பெண்ணை பற்றி எந்தளவு தூரத்துக்கு ஆண் விளங்கிக் கொண்டிருக்கிறான் என்பது பற்றி. எல்லாவற்றையும் விட அம்மா என்கிற பெண் தன் மகனை எப்படி வளர்க்கவேண்டும் என்பது பற்றி. எங்கோ.. அம்மாக்கள் விடும் தவறுகள் தான் இன்னோர் பெண்ணின் அழிவுக்கு காரணமாக போகிறது! ஆக, நாம் தான் தவறு செய்துகொண்டிருக்கிறோம்.

இங்கேயும் ஒரு அம்மாவின் போராட்டம்.. இளமைக்கால ஸ்ரீதேவியை கூட நான் இவ்வளவு ரசித்தேனா தெரியாது. இந்த அம்மா.. அத்தனை அழுத்தமாய் என் நெஞ்சில் பதிந்து போனார். அந்த மாணவனை பள்ளியில் கண்டதும் ஆத்திரத்துடன் அதிபரிடம் கேட்பதும், அவர் கையை விரிக்கும் இடத்தில் இயலாமையும் கோபமுமாக பார்த்துவிட்டு அவர் போகும் இடம் ‘வாவ்’ தான்! தன் வகுப்பு மாணவனை ஆத்திரத்துடன் காரினால் இடிக்க பின் தொடர்வதும், லாரியில் மோதப்பார்த்து பயந்துபோய் அவர் காரை நிறுத்திவிட்டு தவிக்கும் அந்த இடம்.. அம்மாதான்! ஆத்திரம் மலையளவு கிளம்பும், இயலாமையும் பயமும் நம்மை படாத பாடு படுத்தும். அலட்டல் இல்லாத நடிப்பு.. அதுதான் சொன்னேனே அம்மாவாக வாழ்ந்தார் என்று.. பிறகு என்ன நடிப்பு என்கிற பதம் வருவது?

அவளை எப்படி நாசம் செய்தார்கள் என்று காட்டாமல் விட்டதாகவே இயக்குனரை பாராட்ட வேண்டும். மீண்டும் மீண்டும் வக்கிரங்களை அரங்கேற்றாமல் அடுத்து என்ன என்று கொண்டுபோனது படத்தின் பலம்! எல்லா அம்மாவாலும் இது சாத்தியமா என்று தெரியாதபோதும் உண்மையிலேயே இது விடையில்லா கேள்வி தானே? பரிகாரமே இல்லாத பாவம் தானே!

பல வசனங்கள் நச் தான். “என் மகள் எனக்கு கிடைத்துவிடுவாள் என்று நம்பியிருந்தேன். ஆனா எல்லாமே முடிஞ்சு போச்சு” என்று அவர் சொல்லு மிடம் அற்புதம்! “ஒரு பெண்ணை ரேப் பண்ணினவனுக்கு ரேப் பண்ணுறதுக்கு உரிமை இருக்கு, ஆனா அத செய்தவனை ஒரு அறை அறையறதுக்கு கூட நமக்கு உரிமை இல்லை” எத்தனை கேவலமான உண்மை!

“ஒரு பெண்ணை ரேப் பண்றவன் ஆம்பிளையே இல்லடா..!” நிஜம் தானே?

“பாவத்தை செய்தது யாரோ. ஆனால், காலம் முழுக்க தணடனையை அனுபவிக்க போறது அவள்” உண்மைதானே. அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தாலும் கூட.. அவள் வாழ்வில் விமோட்சனம் கிட்டுமா? மறந்து வா.. மாறி வா.. புயலாய் புறப்பட்டு வா… என்று எத்தனையோ மேடை பேச்சுக்களை பேசலாம். அவளும் மாறி வரலாம். முழுமையாக மாறுவாளா? மாறத்தான் முடியுமா? இறக்கும் நொடி வரை துரத்தும் வேதனை இல்லையா இது? இதைச் செய்து எதைக் காணப்போகிறான் இப்படியான ஆண்? இல்லை.. அவன் ஆணே அல்ல! கொடூரன்! கேடுகெட்டவன்! இன்னும் எத்தனையோ பதங்களை பொறுத்தலாம் அந்தப் பாதகனுக்கு!

இப்படி எல்லாமே நெஞ்சை பிழிந்தது!

கடைசியாக அருவி பார்த்து அழுதேன் என்று நினைக்கிறேன். இப்போது மாம். யாராவது பார்க்கத் தவறி இருந்தால் பார்த்துவிடுங்கள்.

 

Advertisements