Category Archives: மதுரா !/ மலருமோ உந்தன் இதயம் !

மதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்

ஆரம்பிக்கும் போது நான் ஒரு பெண்ணை ஏமாற்றி கல்யாணம் பண்ணி கொடுமை படுத்தும் கதை என்று நினைத்துக் கொண்டே படித்தேன்..

காப்பாற்ற போனவன் கணவன் ஆவான் என்று எதிர் பார்க்கவில்லை..இனிமையான அதிர்ச்சிதான்!

இனி வரும் காலங்களில் இப்படி திருமணங்கள் நிறைய எதிர் பார்க்கலாம்.காலத்தின் மாற்றம்! கார்த்தியின் அக்கா, சித்தி என யாருமே ஒத்துக்க கொள்ளவே இல்லியே??!!

அழகா வாழை பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி எங்களின் மனதை அப்படியே கதையோடு ஒன்ற வச்சுட்டிங்க!! ஒரு உறுத்தும் விதமாவே முடிவு தெரியாதது உங்க திறமை…


நித்தி என்ன ஒரு அருமையான தங்கை!! நம் குடும்பங்களில் இருக்கும் பாசம் …ஒட்டுதலை அழகா பிரதி பலிக்கும் பாத்திரம்!!! அண்ணி அண்ணி என்று சொல்லவும் முடியாமல் அவள் படும் பாடு! ஏஞ்சல்ஸ் பிறந்து அவள் கொஞ்சுவது அழகு!!!


மதுரா கணேசனிடம் மாட்டிக் கொண்டு படும் பாடுகளும் கொடுமைகளும் அப்பப்பா…இந்த காலத்திலும் இப்படி ஆட்கள் இருக்காங்களே! இதே உலகில் கார்த்தி மாதிரி ஆண்களும் இருக்காங்களே!


இன்னும் இந்த சீதனம் நம் ஆட்களை விட்டு வைக்கலியா!!!என் நண்பர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன், இது ஒரு தீராத வியாதி!

உங்க எழுத்துக்களில் நான் அதிகம் ரசிப்பது, ஒரு நிதானம்!!…ஆரவாரமில்லாத பொறுமையான நடை…வேறென்ன சொல்ல….ரசிச்சு படிச்சேன்…

Advertisements

மதுரா – ஸ்ரீமதி கோபாலன்

  பெண்ணைப் பெற்ற அனைவருக்குமே வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை அமையவேண்டும் என்ற ஆசை இருக்கிறது இந்நாளில் ……

அப்படி பார்க்கும் மாப்பிள்ளை தவரானவனாக இருந்துவிட்டால் அந்தப் பெண்ணின் கதி …..அதை மைய்யப்படுத்தித் தான் இந்தக் கதை …..

ஏமாந்துவிட்டோம் என்று புரிந்ததும் கலங்காமல் பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்ளும் மதுரா என்ற பெண்ணை …..வயிற்றுப் பிள்ளையாடு வெளிநாட்டில் அநாதரவாக நின்றாலும் ….அவளின் துணிவை அவளின் உணர்வுகளை அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் ரோஸி ….

அவளின் நிலை அறிந்தும் அவளை நேசித்து ஏற்க காத்திருக்கும் கார்த்திக் ……அவனை ஏற்க முடியாமல் அவளின் மனதின் போராட்டம் …..என்று முழுக் கதையும் இப்படி வாழ்கையில் அடிபடும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் …..என்னதான் காயங்கள் ஆறினாலும் அதன் வடுக்கள் மறையாதே ……இது தான் யதார்த்தம் என்று சொல்லி ……கடைசியில் கதையை சுபமாக முடித்தற்கு பாராட்டுக்கள் ரோஸி …..

அழகான இலங்கைத் தமிழில் நகர்கிறது கதை …..நன்றி ரோஸி

மதுரா – வெரோனிகா

திருமணம் பந்தம் உறவுகளில் முதன்மையானது. அதுவும் இங்கு ஏமாற்றப்படுகிறது .

உறவுகள் அற்று ஊர் அறியா மொழி தெரியாத சூழ்நிலையிலும் நம்ம மதுரா பாரதி கண்ட பெண்ணாய் நிற்பது பெருமை……….

கார்த்தி கள் உலகில் அரிது என்றால் நித்தி கள் அரிதிலும் அரிது எவரும் தன்னை சகோதரருக்கு ready made familyஐaccept பண்ணமாட்டார்கள்……….

ஆனாலும் இந்த கதையை நான் சொந்த மண்ணின் நிஜங்களுடன் பார்க்கும் போது இங்கு மதுராக்கள் பல பல.

அதிலும் கவலை என்னவென்றால் தம் சொந்த இடத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் .ஆனாலும் தலை நிமிர்ந்து வாழ்க்கை வாழ்வது இல்லை .

உங்கள் எழுத்து இவர்களை அடைய வேண்டும்.

மிகவும் உயிரோட்டமான கருத்து கதைக்கு சிறப்பு.

…..உணர்வுகளை மிக இலகுவாக தட்டி எழுப்பும் நிகழ்வுகள் கதைக்கு மெருகு.. கதாபாத்திரங்களாக மாறச் செய்து திரைப்படம் பார்த்த திருப்தி கதையின் ப்ளஸ்……

கிளைமாஸ் அருமை

நித்தி தான் மிஸ்ஸிங். ….மொத்தத்தில் சுகந்தம்👍👍👍👍👌👌👌👌

மதுரா – உஷாந்தி கௌதமன்

 

இப்போது நேரம் இரண்டு மணி எட்டு நிமிடம். தேவதைகள் உலாவரும் இந்த நேரத்துக்கும் இருந்து comment எழுதுவது அடிக்கடி நடப்பதில்லை 😀 சுவர்ப்பக்கமாக உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேனாக்கும்! ஹி ஹி

ரோசி அக்கா.. ஒரு மூண்டு எபி தொடர்ந்து படித்துவிட்டு அப்படியே பிசியாய்ட்டேன். இன்றைக்கு தான் முழுக்க படித்து முடித்தேன்,
என்ன சொல்ல லவ் யூ மட்டும் தான்..

சீரியல் போல உணர்ச்சிகர டிராமாக்கள், விகார மனம் கொண்ட கதாப்பாத்திரங்கள் இந்த மாதிரி கதைகளுக்கிடையில் முழுக்க முழுக்க மெல்லிய உணர்வுகளின் நூலிழையில் வெகு சாதாரணமான சம்பவங்கள் மனிதர்களோடு பயணித்திருந்த இந்த மதுரா எனக்கு ரொம்பவும் பிடித்தது.

ஏஞ்சல்ஸ் ஏஞ்சல்ஸ் என்று குழந்தைகளை சொல்லிட்டிருந்தாங்க. ஆனா உண்மையில் ஏஞ்சல் கார்த்திகேயன் தான். மதுராவுக்கான வரம்.. அவளை கேர் பண்ண ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் லவ்வுல விழுந்து அவளுக்காக சண்டை பிடிச்சு, கடைசியில் குழந்தைகளுக்கு அப்பாவாவே மாறிப்போய் அவள் விட்டுட்டு போயும் அந்த நினைவில் உறுதியாய் இருந்தவன் ஏஞ்சல் இல்லாமல் வேறு யார்?

நித்தி, அண்ணாவை பெற்ற தங்கைகளின் ஒட்டுமொத்த வார்ப்பு! 😉 பெற்றோரின் இழப்பில் கலக்கிக்கிடந்து மதுராவோடு ஒட்டிக்கொண்டு அவளையும் மீட்டு தானும் மீண்டு அண்ணனையும் அவளையும் ஜோடி சேர்க்க பார்த்து அண்ணனை பார்த்து ஒரு சொல் வந்து விட்டதே எனப்பொங்கி கோபப்பட்டு… ஹா ஹா இவள் கலப்படமேயில்லாத தங்கை!

கல்யாணமாகாத தங்கை இப்படி இருந்தாள் எனில் கல்யாணமான அக்கா, அந்த வாழ்வை பற்றி முழுதும் அறிந்த அக்கா தம்பியின் காதலை வெறுத்தது இயல்பு..அதே போலத்தான் அந்த சுதா சித்தியும்.. எப்போவுமே நாம் உதவி செய்யப்போவோம் எல்லாம் ஒரு எல்லைக்கோடு வரை தான், அதைத்தாண்டினால் வெறுப்பு வந்துவிடும். அடுத்தது மதுராவின் அம்மா என்ன சொல்ல ரோசிக்கா லவ் யூ..அதிலும் மதுவின் அப்பா பற்றி நிமிர்வா ஒரு லைன் பேசுவாரே! அட்ரா அட்ரா கமலா ஆன்ட்டி என்று கத்திநேனாக்கும்..எல்லா காரக்டருமே நிஜவாழ்க்கைக்கு ரொம்பவே பக்கத்தில் இருந்தார்கள்.

முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம் வசனங்கள்.. கதாநாயகன் நாயகி பேசுபவற்றை விடவும் கதையில் வந்த மீதி காரக்டர்கள் பேசிய வசனங்கள் நச் நச் என்று யதார்த்தத்தை சொல்லிபோயின. சமூகத்தின் பார்வை, ஒரு விவாகரத்து எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது, இரண்டாவது திருமணம், அதனோடான பிரச்சனைகள் இப்படி பாரதூரமான விஷயங்களை போகிற போக்கில் இந்தக்கதாபாத்திரங்கள் ஒரு நச்சென்ற வசனத்தில் பேசிசென்றது நன்றாக இருந்தது. பிறகு ஒரு சம்பவம் முடிந்தபிறகு கதாசிரியர் பார்வையில் பொதுப்படையாக சொல்லிய கருத்துக்களும் நன்றாக இருந்தன.
அந்த கணேஷ்! சனியன்..இது எம் இலங்கை சமூகத்தில் இருக்கும் பிரச்சனை தானே.. அப்பாலே போ சாத்தானேன்னு நம்ம கார்த்தி தொம்சம் பண்ணியும் அவன் பிள்ளைகளை பிடித்து கொள்வானோ என்று கொஞ்சம் பயந்து விட்டேன். நல்லகாலம் செத்துப்போயட்டான்!

அட மதுராவை பற்றி சொல்லாம பேசிக்கொண்டே போறனே! அன்பா அடக்கமா அமைதியா இருந்தாலும் விஷயம் தெரிஞ்சதும் சீதனக்காசை எண்ணி வை எண்டு கேட்டியே ஐ லைக் யூ பேபிமா.. அவள் நித்தியோடு இயல்பா ஒட்டிக்கொண்டது கார்த்தியிடம் அவளுக்கு இருந்த ஒதுக்கம். அவன் நெருக்கத்தை ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிர்த்தது எல்லாமே இயல்பு தான்.. எந்த பெண்ணுமே உடனே இன்னொரு வாழ்க்கைக்கு தயாராகி இருக்க மாட்டாள் அந்த இரண்டு வருடப்பிரிவு இல்லாவிட்டால் அவளால் கார்த்தியை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள முடிந்திருக்குமோ என்னவோ! இப்படியெல்லாம் அவளுக்கு சாதகமாக யோசிச்சாலும் இந்தக்கார்த்தி லவ்வோ லவ்வென்று லவ்வி என்னுடைய அனுதாப வோட்டுக்களை வாங்கி இவ பெரிய இவ!!! த்ரிஷா இல்லன்னா திவ்யா, இவ இல்லைன்னா வேற ஆளே கிடைக்காதா? நீ வா சுருதி போலாம்னு கார்த்தியை கூட்டிட்டு போக ரெடியாயிட்டேன். வாட்டு டூ..எங்களுக்கெல்லாம் அப்படித்தான் இளகின மனசு 😀 மொத்தத்தில் செமையான பாத்திரப்படைப்பு அக்கா அந்த மதுரா. இப்படி எல்லா பெண்களும் நிமிர்வாக இருந்துவிட்டால்…

கடைசியா குட்டீஸ். கொஞ்ச நேரமே கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தாலும் கதையே உங்களை சுற்றித்தானே பேபீஸ்..லவ் யூ!!!!

இப்படி ரெண்டு பேருமே லவ்ல உருகினாலும் சேர முடிஞ்சதா? இல்லையே! அதுக்கெல்லாம் ஒரு உஷா வரோணும் எண்டு சும்மாவா சொல்றாய்ங்க!!! ஹா ஹா ஆனாலும் அக்கா பெரிய ப்ளானோட மதுவை கூட்டிட்டு கார்த்தி வீட்டுக்கு போய் அவன்ட முறைப்பை பார்த்து டர்ர்ர் ஆனதை வாசிச்சு எனக்கு ஒரே சிரிப்பு! சொதப்பல்ஸ் இந்த உஷாக்களோட கூடவே பிறந்தது, ஆனா எங்களோட நாரதர் கலகங்கள் நல்லதாவே இருக்கும் தெரியுமோ ஹி ஹி ஹி

மதுரா செம அக்கா.. உங்கள் அடுத்த நாவலுக்கும் இப்போதே துண்டு போட்டு வெயிட்டிங்!!!

மதுரா- நிதனி பிரபு

 

கார்த்திகேயனும் நித்யாவும் பெற்றவர்களை சமீபத்தில் இழந்த அன்பான சகோதரர்கள். சிற்றன்னையின் ஏவளின் பெயரில், ஒரு பெண்ணை பார்க்கச் செல்கிறார்கள். அவள் மதுரா!

இந்தக் கதையின் நாயகி. எனக்கு என்னவோ கதையின் நாயகியாக மட்டுமே அவளை பார்க்க இயலவில்லை. பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்டு, முன்பின் அறிமுகம் அற்று, ஒருநாள் இலங்கை வரும் அந்த ஆண்மகனை முழுமையாக நம்பி கழுத்தை நீட்டும் பல பெண்களின் பிரதிநிதியாகவே அவள் தெரிந்தாள்.

கடவுளின் அருளால் பலரின் வாழ்க்கை வளமாக அமைந்தாலும், இந்த மதுராவை போன்றே வெளிநாடுகளில் பாதிக்கப்படும் பெண்களும் சற்றே அதிகளவில் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை!

மதுரா, துணிந்து கட்டியவனை சட்ட ரீதியாக விலத்தினாள். அப்படி எத்தனை பெண்கள் துணிகிறார்கள் என்றால், அது கேள்விக்குறி தான். அதன் பிறகான வாழ்க்கை ஒன்று இருக்கு, அதற்கிடையில் அவன் மூலம் உருவாகிவிட்ட வாரிசுகளின் நிலை, ஏன்.. ஊரில் மகளை வெளிநாட்டில் கட்டிக் கொடுத்திருக்கிறோம், அவள் நன்றாக வாழ்கிறாள் என்று மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் உறவுகளின் நிலை என்று பலது மனதை தாக்குகையில் ‘என் தலைவிதி இதுதான்..’ என்று கசப்பை விழுங்கிக்கொண்டு வாழ்க்கையை தள்ளும் பரிதாபத்துக்கு உரியது அந்தப் பெண்களின் நிலை.

ஆனால், இந்தக் கதையின் நாயகி மதுராவோ துணிந்து செயல்படுகிறாள். ஆனாலும், மனதளவில் அவள் அடைந்த காயமோ மிகமிக ஆழமானது. ஒரு பெண், கணவன் என்று வருகிறவனிடம், தன்னை, தன் எதிர்காலத்தை, தன் சந்தோசத்தை, கனவுகளை, எதிர்பார்ப்புக்களை என்று அத்தனையையுமே அவனிடம் ஒப்படைக்கிறாளே.. அதன் காரணம் என்ன? நம்பிக்கை! அவன் என்னையும் என் விருப்பு வெறுப்புக்களை மதித்து, என்னை போற்றி பாதுகாப்பான் என்கிற மலையளவு நம்பிக்கை.

வெளிநாட்டவர்களால் விளங்கிய கொள்ள முடியாத பெரும் புதிர் அல்லவா, நம்மவர்களின் அந்த நம்பிக்கையும் அதன் மேலான நம் திருமண வாழ்வும். வெளிநாட்டவர் யாரிடமாவது சொல்லிப்பாருங்கள், இவரை நான் முன்ன பின்ன பார்த்தது இல்லை, பெற்றவர்கள் நிச்சயித்தார்கள் நான் கட்டிக்கொண்டேன் என்று. அது எப்படி சாத்தியம் என்று தலையை பிய்த்துக்கொள்வார்கள். அப்படி அற்புதமான இல்லற வாழ்வு மதுராவில் வாழ்வில் நொடித்துப் போகிறது. அவளும், நொடிந்து, உயிர்ப்பற்று, தான் சுமக்கும் குழந்தைகளின் மீது பற்றுமற்று என்று உயிர்க்கூட்டை உடலில் சுமப்பவளை மனதில் சுமக்கிறான் கார்த்திகேயன்.

எப்போதுமே ரோஸி அக்காவின் நாயகிகளை விட நாயகர்களை எனக்கு மிகவுமே பிடிக்கும். அப்படித்தான் இந்த கார்த்தியும். அவனிடம் இருக்கும் பொறுமை, அவனது பண்பான நடத்தை, பாசமான செயல்கள் என்று அத்தனையும் அழகிலும் அழகு.

இந்தக் கதையில் பல இடங்கள் நான் ரசித்து ருசித்தவை. மதுராவுக்கு செக்கப்புக்கு கூட்டிப்போன இடத்தில் இன்னொரு தம்பதியினரோடு உரையாடுகையில், தன் மனதை தானே உணர்ந்துகொள்ளும் கார்த்திகேயன்.. நான் அவளின் கணவன் அல்ல என்று சொல்லாமல் உரையாடும் அவனின் கெட்டித்தனம், மதுராவின் கருவை பற்றி விசாரிக்கையில் அவனுக்குள் உண்டாகும் பரபரப்பு.. அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் அமர்ந்திருந்த விதம்…ஹாஹா.. அத்தனை அழகு! அருகில் அவள் பார்வையால் பொசுக்குகிறாள், இவனோ எதிரில் இருப்பவர்களோடு குதூகலமாக உரையாடுகிறான். உள்ளே கிலி.. ஹாஹா.. அவனின் தவிப்பை ரசித்துச் சிரித்தேன்.

ஸ்கான் செய்கையில் குழந்தைகளை கண்டுவிட அவன் கொண்ட ஆர்வம் மிக மிக அழகு!

வயிற்று வலி வந்த அந்த நிமிடம் அவள் பட்ட வேதனை.. உடல் வலியை தாண்டி மன வலி இருக்கிறதே.. அப்பப்பா.. அருமை! ஒரு அந்நியனிடம் தன் நிலையை சொல்லமுடியாமல் மதுரா பட்ட பாடு.. கண்கள் கலங்கிவிட்டது எனக்கு.. அவ்வளவு தத்ரூபம்!

பிள்ளை பெற்றுக்கொள்ள செல்லும் அந்த நேரத்தில் மதுரவின் பயமும் துடிப்பும் அருமை என்றால், மணமாகாமல் கண்ணால் காணாத குழந்தைகள் மீதும், அவர்களை சுமப்பவள் மீதும் கார்த்திகேயன் கொண்ட நேசமும், அந்தக் கணத்தில் அவன் தவித்த தவிப்பும்.. வார்த்தைகள் இல்லை வடிக்க.

என்னதான் இன்னொரு வாழ்க்கை பற்றிய எண்ணம் மதுராவில் மனதில் இல்லாதபோதும், அவள் மனதிலும் அவன் இருக்கிறான் என்பதை அவள் அறியாத போதும் அவன் அறிந்துகொண்ட தருணம் அது.

அதன் பிறகு வந்த ஒவ்வொரு விடயமும் அழகோ அழகு.. குழந்தைகளின் பிறப்பு, அதற்கு கார்த்திகேயனின் பிரதிபலிப்பு, அதை பார்த்து நொறுங்கிப்போகும் மதுரா என்று.. ஒவ்வொருவரின் உணர்வையும் அப்படியே அள்ளித் தெளித்திருக்கிறார் ரோஸி அக்கா.

முன்னாள் கணவன் இறந்ததும் மதுராவின் நிலை.. அவன் வேண்டுமானால் பொய்த்துப் போயிருக்கலாம். ஆனால், கணவன் என்று நெஞ்சில் வரித்து அவனோடு உண்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணை அது நிச்சயம் பாதிக்கும் இல்லையா. அந்த இடத்தில் மதுராவில் பிரதிபலிப்பு.. நிஜம்!

இப்படி பல இடங்கள் நான் ரசித்தவையும் ருசித்தவையும்.

எப்படியும் மதுரா கார்த்திகேயனின் அன்பை புரிந்துகொள்வாள் என்று அவனைப்போலவே நானும் நம்பிக்கையோடு காத்திருக்க, அவள் அவனுக்கு கொடுத்த அதிர்ச்சி நானுமே எதிர்பாராதது.

கடைசியில் இருவரும் எப்படி இணைந்து கொள்கிறார்கள் என்பதை கதை படித்து தெரிந்துகொள்ளுங்கள். ரோஸி அக்காவின் கதையில் பல இடங்களில் பல வார்த்தைகள் மனதை நச் என்று தொட்டுச் செல்கிறது. அப்படி எனக்கு மிக மிக பிடித்த ஒன்று; “தன்னந் தனிமை நம்மில் மோதி அதிரவைக்கையில், அதன் சவால்களை எதிர்கொள்ள கண்ணீரே தடை என்பதை புரிந்துகொள்ளும் நம் மனம், அதை தூர ஒதுக்கி விடுவதையும், அதுவே, தாங்கிக்கொள்ள துணையுண்டு என்று கண்டால் எதற்கெடுத்தாலும் கண்ணீரின் துணையை நாடுவதையும் சிந்திக்க மறந்துவிடுகிறோம்”

எவ்வளவு உண்மை!

கதையும் மிக மிக அருமை!!

அழகான நீரோட்டம் ஒன்றை கண்ணாரக் கண்டு மனதார ரசித்த உணர்வு!!

நன்றி அக்கா, அருமையான கதை ஒன்றை எங்களுக்கு தந்ததற்கு!!