Category Archives: சில்லிடும் இனிமைத் தூறலாய்!

சில்லிடும் இனிமை தூறலாய்! தேனு ராஜ்

ழகான… பாசமான சகோதரிகள்…. அமைதியான  அக்கா துளசி & அடாவடி குறும்புக்காரி பானு … ஆனாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத பாசப் பறவைகள்…! 

மென்பொறியாளராக  வேலை பார்க்கும் கருப்பு தங்கம் நந்தன் … இரு அண்ணன்கள் வெளிநாட்டில் இருக்க… இவன் இங்கே பெற்றோருடன் இருப்பவன்…

பானுவின் ஆசிரியரின் மகன் டாக்டர் சஞ்சீவ் … காலேஜில் படிக்கும்போதே பெண்களின்  ஆசை நாயகன்… இவனின் கடைக்கண் பார்வை தங்கள் மேல் விழாதா என பெண்கள் ஏங்கும் அளவுக்கு வசீகரமானவன்…!

ஒரு பள்ளி விழாவில் துளசியை பார்க்கும் நந்தன் பார்த்தவுடன் “கண்ணும் கண்ணும் நோக்கியா”  ரேஞ்சுக்கு காதலில் விழ…. அதை மோப்பம் பிடிக்கும் அவனின் அண்ணியும், அம்மாவும் துளசி வீட்டில் பேச.. முதலில் சட்டப்பூர்வமாக இணைந்தனர்  … ஆறுமாதம் கழித்து சாஸ்திரப்படி இணைய திருமணத்துக்கு நாள் குறித்தனர். ஆரம்பத்தில் அவனை பிடிக்காத பானு…., பின்னாளில் அவனின் நல்ல குணத்துக்காக ஓகே சொல்ல… நந்தனும் துளசியும் காதல் வானில் பறக்கின்றனர்.

பானு தன் தோழியை பார்க்க வரும் வழியில் சஞ்சீவுடன் மோத… அவளின் துறுதுறுப்பு, சேட்டைகள் எல்லாம் பார்த்து இவனும் அவளை காதலிக்க…. அதை அவளிடம் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்த… அவளோ சரியான பதில் தராமல் இழுத்தடிக்க….  அவனும் மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறான். 

நந்தனுக்கும் துளசிக்கும் கல்யாணமும் ஆக…. இருவரும் ஈருடல் ஓருயிராக இருக்கின்றனர்…. அந்த அன்பின் பரிசாக  அவளுக்குள் ஒரு உயிர் வளர்ந்து … அவர்களின் மூவுடல் ஓருயிராக இருக்க…. பிரசவ நாள் நெருங்கும் வேளையில், துளசிக்கு பிரச்சனை….!! அதில் இருந்துஅவள் மீள முடியாமலேயே குழந்தையை பெற்றுவிட்டு அவள் போய்விட… நந்தனின் உயிரும் உயிர்ப்பே இல்லாமல் ஆனது…!!

துளசியின் கடைசி ஆசைப்படி குழந்தையை பானுவிடம் ஒப்படைக்க… குழந்தைக்காக திருமணம் வேண்டாம் என்ற பானுவை சம்மதிக்க வைத்து.., சஞ்சீவ்-பானு திருமணத்தை நடத்தி, திருமண பரிசாக தன் குழந்தை துர்காவை கொடுக்கிறான்.

அவர்களும் அவளை தங்கள் மூத்த பிள்ளையாக நினைத்து நன்றாக வளர்க்க…. அவர்களின்  பிள்ளைகளுக்கும் இவள் செல்ல அக்காவாக ஆக…. குழந்தைக்காக துளசியின் வீட்டிலேயே வந்து இருக்கும் நந்தன்…, அவளின் ஒவ்வொரு நிமிட வளர்ச்சியையும் கண்குளிர  கண்டு நிம்மதியாக… சந்தோஷத்துடன் வாழ்கிறான்.

துளசியின் கடைசி ஆசை என்ன…?? அதற்காக நந்தன் எடுக்கும் முடிவு என்ன…??

அவனின் குழந்தை துர்காவுக்கு உண்மை தெரிந்ததா….?? அதன்பின் அவளின் முடிவு என்ன…??

சீலன் — எழுத்தாளர்….. கதைகள் எழுதி இணையத்தளத்தில் வெளியிடுவதில் ஆர்வம் மிக்கவர்…. இவரின் பார்வையில் தான் கதை வருகிறது…

யார் இந்த சீலன்….??


இவருக்கும், இந்த கதைக்கும்…. நந்தனுக்கும் என்ன சம்பந்தம்…..??

நல்ல கதை….!! இப்படியும் ஒரு ஆணா/கணவனா என்று வியக்க வைக்கிறது… சில இடங்களில் நெகிழவும் வைக்கிறது….!! இன்னும் சில காலங்களுக்கு, கதையின் ஹீரோ நந்தனை மறக்க முடியாதுன்னு நினைக்கிறன்… நந்தனை காண/படிக்க விரும்புவர்கள் கட்டாயம் மிஸ் பண்ணாமல் படிக்க வேண்டிய கதை…!! 

Advertisements

சில்லிடும் இனிமை தூறலாய்!- ஸ்வப்ணா

 

நந்தன் , துளசி , பானு , சஞ்சீவ் இவர்கள் நாலு பேர் வாழ்வே இந்த கதை ஆனால் இதில் ரோசி கதைக்குள் கதை என்னும் படி சீலன் என ஒரு ஆசிரியர் ஒரு கதை எழுதுவது போலவும் அதில் இந்த நால்வர் வருவது போலவும் இந்த கதைக்கும் சீலனுக்கும் என்ன சம்மந்தம் என்பது போலவும் சொல்லி இருக்காங்க. ஒரே கதை பாதி வழியில் ஒரு சுபமான முடிவு பெறுவது போல வந்து அதன் பின் அப்படி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று மேற்கொண்டு வந்து மனதில் நிற்கிறது.

நந்தன் துளசியை ஒரு பள்ளி விழாவில் பார்த்து அவளை விரும்ப அதை அறிந்து, தெரிந்த குடும்பத்து பெண் தான் துளசி என பெற்றோர் திருமண நிச்சயமும் செய்ய இப்படி ஒரு கருப்பு மாப்பிள்ளையா என துல்லுகிறாள் துளசியின் தங்கை பானு. ஆனாலும் நந்தன் துளசி காதல் வளர்த்து மணம் செய்ய அத்தானின் அன்பு புரிகிறாள் பானு. துளசி பானுவின் அம்மா தோழி மகன் சஞ்சீவ், பானு மீது ஆர்வம் கொள்ள பானு படிப்பும் அவனின் மேற்படிப்பும் இருக்க இருவரும் மனதில் காதல் வளர்க்கின்றனர். இதற்கிடையில் துளசி கர்ப்பம் தரிக்க அதில் ஒரு குழப்பம் வந்து அது துளசி மிகவும் க்ரிடிகல் நிலை செல்ல என் மகளும் கணவரும் உன் பொறுப்பு என பானுவிடம் சொல்லி போக அதன் பின் வரும் உணர்வு பூர்வமான நிகழ்வுகள் தான் கதை.

ஒரு சோகமான விஷயத்தை தாண்டி தன் காதலுக்காக நந்தன் இழந்தது என்ன எல்லாம் என்றும் அவன் துளசி ஆசையும் நிறைவு செய்து பானு – சஞ்சீவ் காதலும் வெற்றி பெற செய்தது எப்படி என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி ஒரு ஹாப்பி எண்டிங் கதை. நிறைவான ஒரு முடிவு எனும் போதும் இறுதியில் மெல்லிய ஒரு கணம் இருக்கிறது .மனம் கணம் கொள்ள அதோடு முடிக்கிறோம் நாம் . கதையில் பல பேர் வந்தாலும் அனைவர் தாண்டி நந்தன் மனதில் நிற்கிறான். ஆரம்பம் முதல் நாம் நந்தனை அறிவது எப்படியோ அதற்கு ஏற்ப கடைசி வரையில் அவன் இருந்து அனைவர் விட தனித்து நின்று முதலிடம் பிடிக்கிறான். துளசி , பானு , சஞ்சீவ் என அனைவரும் நல்லவர்களே. பானு சிறு பிள்ளையாய் சிணுங்குவது முதல் , அதிர்ச்சியிலும் பிள்ளையை அம்மாவாய் பார்த்து பொறுப்புக்கும் காதலுக்கும் நடுவில் குழம்பி தவித்து என இருக்கிறாள். சஞ்சீவ் அவன் தன் காதலுக்காக அவளை அப்படியே ஏற்கிறான். 

அழகான நடையில் உணர்வுகள் மற்றும் காதலும் ,அதை சார்ந்த நடப்புகளும் வந்த ஒரு கதை. படிச்சு பாருங்க .

சில்லிடும் இனிமை தூறலாய்! -அனு அஷோக்

 

மரணத்தை வென்றவர்கள் என்று இந்த உலகத்தில் யாருமே கிடையாது… ஆனால் மரித்தாலும் மற்றவரின் எண்ணத்தில் என்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் புண்ணிய ஆத்மாக்களின் நினைவை எவராலும் அழிக்க முடியாது. மரித்துப் போனவர்கள் பாவப் பட்டவர்களா? இல்லை அவர்கள் நினைவை மட்டுமே சுமந்து வாழ்கையை கடத்துபவர்கள் பாவப்பட்டவர்களா? என்றால் விடை சொல்வது கடினம் தான். 

நந்தன் – அண்ணன் மகனின் பள்ளி விழாவிற்கு செல்பவன் முதல் பார்வையிலே துளசியின் மேல் அபரிதமான நேசம் கொள்கிறான். துளுசியின் குடும்பம் அவன் குடும்பத்திற்கு உறவுக்காரர்கள் என்று தெரிந்ததும் அவள் மேல் கொண்ட நேசம் நங்கூரம் பாய்ந்தது போல அவன் இதயத்தில் ஆழமாகவும், அழுத்தமாகவும் இறங்குகிறது. புதிதாக தோன்றிய சலனத்தில் நந்தனுக்கு உலகமே வண்ணமயமாக காட்சி அளிக்க துளசியின் நினைவில் சுகமாக நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறான். அவன் மனதை தெரிந்து கொண்ட குடும்பத்தார் துளசியை அவனுக்கு வரனாக பார்த்து அவன் மனதை குளிர வைக்கிறார்கள்.

துளசி- பொறுமை, சாந்தம் போன்ற நற்குணங்கள் கொண்ட மென்மையான பெண். நந்தனை போல முதல் பார்வையிலே அவன் மேல் நேசம் கொள்ளவில்லை என்றாலும்… தனது ஆசை தங்கையின் சம்மதத்தை பெற்ற பிறகே அவனுடன் நடக்க இருக்கும் திருமணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள்.

பானு, சஞ்சீவ் – தன்னுடைய வாய்த்துடுக்கால் அனைவரையும் அலற வைக்கும் பானுவிற்கும் அவளுடைய அம்மாவின் தோழியும் அவளுடைய ஆசிரியருமான பாக்கியம் மிஸ்ஸின் மகன் சஞ்சீவிற்கும் முதல் சந்திப்பில் மோதல் ஆரம்பித்து மெல்ல காதலாக மலர்கிறது. பானு கதாபாத்திரம் அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

நந்தன் துளசி நேசமும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்க துளசி கிடைக்காமல் போய்விடுவாளோ என்று நந்தனின் மனதில் அவ்வப்போது எழும் சிறு பயத்தால். விரைவாகவே பதிவு திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. முதலில் தன் அக்காவிற்கு நந்தன் பொருத்தமில்லை என்று நினைக்கும் பானு தனது அக்கா அத்தான் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பிரியத்தை பார்த்து மனம் தெளிகிறாள்.

நல்லதோர் நாளில் நந்தன் துளசி திருமணமும் நிறைவாக நடந்து முடிகிறது. தனது அக்கா குடுபத்துடன் இவர்கள் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளும் சஞ்சீவ் பள்ளி இறுதி ஆண்டு முடித்திருந்த பானுவிடம் இலைமறை காயாக தன் மனதை தெரிவித்து விட்டு லண்டன் செல்கிறான். இதுவரை கதை சாதரணமாக நகர்ந்கின்றது…

இனிமையாக சென்று கொண்டிருந்த நந்தன் துளசி திருமண வாழ்கையின் அடுத்த கட்டமாக… குழந்தை செல்வத்தின் வரவை ஆசையுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் இரண்டு உள்ளங்களின் வாழ்கையில் மெல்லிய ஊத காற்று அடிக்க ஆரம்பித்து சூறாவளியாக மாறி சுழன்று சுழற்றிப் போட்டு விடுகிறது. முன்னெச்சரிக்கை இன்றி தாக்கிய உடல் நல குறைபாடால் மருத்துவ மனையில் சேர்ப்பிக்கப்பட்டு குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறாள் துளசி. துளசி இழப்பின் துயரம் ரோசிக்காவின் எழுத்தில் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்க வில்லை என்றால் தான் ஆச்சரியம்.

இறக்கும் தருவாயில் பானுவிடம் குழந்தையை கொடுத்து நந்தனையும் குழந்தையையும் அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலுடன் உயிர்நீத்த தன் அக்காவிற்காக இனி வாழ்கையில் அக்காவின் குழந்தை மட்டுமே தனுக்கு எல்லாமும் என்ற முடிவை எடுத்த பானு, நந்தனின் சம்மதத்துடன் குழந்தை எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

பானுவிடம் குழந்தையை கொடுத்து அனுப்பிய நந்தன்.. பானுவிற்கு சஞ்சீவ்வுடன் திருமணம் செய்து வைத்து.. அவர்களுக்கு திருமண பரிசாக தன் குழந்தையை கொடுத்து விடுகிறான்.

அதன் பிறகு அவன் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சில விஷயங்கள் மனதை வண்டாக குடைந்தாலும் இறுதி அத்தியாயம் மனதிற்கு வெகு திருப்தியாக அமைந்தது. துளசி இறப்பிற்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்துமே உணர்ச்சி குவியலாக நகர்ந்கின்றது. 

 

வெகுவாக கவர்ந்தது நந்தன் கதாபாத்திரம்… மனைவியின் மேல் கொண்ட அப்பழுக்கில்லாத நேசத்திலும் அழுத்தமான அன்பிலும் நம் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் எழுத்தாளர் சீலனாக. ( நந்தசீலன் )

மிக மிக அருமையான கதை… கதை சொன்ன விதம் பிரமாதம்… உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை பிரயோகங்களில் நல்ல முதிர்ச்சி. கதையாசிரியரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது அவருடைய ஆறாவது படைப்பான இக்கதை… இப்படிப்பட்ட அருமையான படைப்புகளை கொடுத்து எழுத்துலகில் அங்கீகாரம் பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ரோசிக்கா உங்களுடைய மூன்றாவது கதைக்கு விமர்சனம் போட்டேன்… அதன் பிறகு இரண்டு கதைகளுக்கு விமர்சனம் கொடுக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இந்த கதை படித்து முடித்ததும் விமர்சனம் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனதை பாதித்த கதை. 

 

சில்லிடும் இனிமை தூறலாய்! – சுதா ரவி

 

காதலில் காத்திருப்புகள் இனிமை……….ஒருவன் தன் மனைவியின் மேல் வைத்திருக்கும் அளவுக்கடந்த காதல் அவள் இறந்த பின்பும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளையும் அவள் நியாபங்களுடன் வாழ்வதென்பது காவியக் காதல்……………குற்றால சாரலாய் சில்லிடும் இனிமை தூறலாய் நம் மனதை அத்தகைய காதலால் நனைய வைத்திருக்கிறார் ரோசி………

நந்தா தன் அண்ணன் மகனுடன் பள்ளி விழாவிற்கு சென்றவன் அங்கு துளசியை கண்டு முதல் பார்வையிலேயே அவளிடம் மயங்கி காதல் கொள்கிறான். பின்னர் துளசி வீட்டினர் தங்களுக்கு உறவு என்று அறிந்து அவன் காதல் கொண்ட நெஞ்சம் அவளுடன் இணைய தவிக்கிறது….

துளசி வனிதா சுகுமார் தம்பதியின் மூத்த மகள். அமைதியான குணம் கொண்டவள். பானு துளசியின் தங்கை . பட பட பட்டாசு. துளசிக்கு தங்கை பானுவின் மேல் அளவுக்கடந்த பாசம். அதே அளவு பானுவிற்கும் துளசியின் மேல்.

முதலில் நந்தனை தன் அக்காவிற்கு பொருத்தமில்லை என்று மறுக்கிறாள் பானு. துளசிக்கு நந்தனை மணப்பதில் விருப்பம் என்று அறிந்து அரை மனதுடன் ஒத்துக் கொள்கிறாள். ஆனால் பின்னர் நந்தனின் குணம் அறிந்து துளசிக்கு சரியான துணையே என்று மனம் மகிழ்கிறாள்….

பானுவுக்கும் சஞ்சீவ்விற்கும் முதல் சந்திப்பே மோதலுடன் நடக்கிறது. சஞ்சீவ் வனிதாவுடன் வேலை பார்க்கும் பாக்கியத்தின் மகன். முதலில் அவளின் வாயாடித்தனத்தை கண்டு அதிசயித்தாலும் மெல்ல மெல்ல அவளின் துடுக்குத்தனத்தை ரசிக்க ஆரம்பித்து மோதல் காதலில் முடிகிறது…
இதன் நடுவே துளசி நந்தன் திருமணம் நடந்து வாழ்வு இனிமையாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் துளசி கருவுற்றிருக்க அவளை இரு குடும்பத்தினரும் தாங்குகின்றனர்.

துளசி பிரசவத்தில் பெண் மகவை பெற்றெடுத்து பானு கையில் கொடுத்து விட்டு இனி நீ தான் அவளுக்கு எல்லாம் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறாள்…

பானுவோ அக்கா இறந்ததில் அதிர்ச்சி அடைந்து அக்காவின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு குழந்தையை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறாள். சஞ்சீவின் காதலையும் மறுக்கிறாள். அதனால் கோபமடைந்த சஞ்சீவின் அக்கா ரமா நந்தனை திருமணம் செய்து கொள்ள போகிறாயா என்று கேட்டு விடுகிறார் . அந்த கேள்வியில் அதிர்ந்து நிதர்சனத்தை உணர்ந்து நந்தனிடம் குழந்தையை கேட்டு வாங்கிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

நந்தன் தன் மனைவியின் விருப்பபடி தன் குழந்தைக்கு பெற்றோரின் முழுமையான அன்பு கிடைக்க வேண்டும் என்று எண்ணி பானுவை சஞ்சீவிற்கு மனம் முடித்து அவர்களுக்கு திருமண பரிசாக தன் மகளையே கொடுத்து விடுகிறான்……..

நந்தாவின் மகள் அவன் செய்ததை எவ்வாறு எடுத்துக் கொள்கிறாள்??????

ரோசி உங்கள் எழுத்து ஒவ்வொரு கதைக்கு மேன் மேலும் மெருகேறிக் கொண்டே செல்லுகிறது. நந்தா துளசியின் காதலை அழகா சொல்லி இருக்கீங்க அதிலும் துளசி இறந்ததை படிக்கும் போது மனம் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் தவித்தது……..அதே போல் பானுவும் சஞ்சீவும் பிரிய போகிறார்களோ என்ற ஐயம் வந்த போதும் உங்களை மனதில் அர்ச்சிக்க தொடங்கினேன்………அதுவே எழுத்தின் வெற்றி……….

நந்தனின் பாத்திரப்படைப்பு அருமை………தன்னவளின் மேல் கொண்ட அன்பினால் தன் வாழ்நாள் முழுவதும் அவளின் நினைவுகளுடனே கடந்து செல்வது உண்மையான கதாநாயகனாக எங்கள் மனதில் தங்கி விட்டான்……..