Category Archives: என் பூக்களின் தீவே!

‘என் பூக்களின் தீவே!’ ஹரிதாரணி சோமசுந்தரம் அவர்களின் பார்வையில்…

 

 

என் பூக்களின் தீவே – ரோசி கஜன்.

அகல்யா மண்டைக் கொழுப்பா என்று ஆரம்பித்த இடத்தில் இருந்து படபட பட்டாசாய் பொரிந்து தள்ளி உற்சாகப் படுத்துகிறாள்.

அறிவும் சுட்டித்தனமும் கொண்ட அழகுப்பெண்.

வருண் வார்த்தையால் எல்லாம் அவனை வர்ணிக்க முடியாது. உண்மையிலேயே பொறுமையின் மறுஉருவம்.. அகலை கொன்னு புதைக்காம பார்த்திருந்தானே.. 
ஒரு வேளை அவனுள் புதைந்திருந்த அந்த அன்புதான் காரணமோ என்னவோ..

அனு – ராகவ் ஆக்கப் பொறுத்தார்கள் ஆறப் பொறுக்கலை கதையாக ராகவ் சூழ்நிலையை புரியாமல் தனக்கு மட்டுமே உரிமை என நினைப்பதும் அதற்கு அமைதியாக அலசி ஆராயமல் வார்த்தைகளால் அனுவை கூறுபோடுவதும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடம்.
அகல்யா அங்கேயும் சிறந்த எடுத்துக்காட்டு.

சந்திரன் பாசத்தால் பக்குவத்தை இழந்து பேசும்போதும் வருண் தீர்மானமாக சொன்ன நேரம் வாயடைத்து நிற்கிறார். அவரது கோபம் நியாயமானது ஆனால் கோபத்தால் எதையும் சாதிக்க முடியாதே..

அமைதியும் அன்பும் விவேகமும் உதவும் அளவில் கோபமும் அதனால் ஏற்பட்ட வேகமும் உதவாது என்பதை அழகாய் காட்டியுள்ளீர்கள். சுகந்தன் அருமையான பாத்திரம். அவனது பெற்றோர் அதைவிட அழகு பிள்ளையை நீங்கள் சரியாய் வளர்க்கலை என்று அவர்களும் சந்திரனைப் போல எகிறியிருந்தால் அந்த குடும்பமே சிதைந்து இருவரின் வாழ்க்கை அதில் சிதிலமாகியிருக்கும்.

அகல்யா மீதான செல்வி-சந்திரனின் பாசம் வருணை மட்டுமல்ல என்னையும் பொறாமை கொள்ள வைத்தது. ஆனால் வருண் பொய்யாக பொறாமை காட்டினான். நான் மெய்யாகவே பொறாமைப் பட்டேன். இப்படியொரு மாமியார் கிடைக்கணுமே என்று..

சிவா நண்பனை குறை கூறும் நிலை வந்தும் அமைதி காப்பது.

ராகவன் தயக்கமின்றி தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவது,

அகல்யா வருணை அலையவிடுவதாய் நினைத்து அவனது விளையாட்டில் காயப்படுவது,

தேங்காய் துருவல் சண்டை முதல் நண்டுக்கறி சண்டை வரை அருமையோ அருமை..

இயல்பான இலங்கைத்தமிழில் இருந்த கதையை படித்துத் தான் நிறைய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.

ஐயனார் கோவில், நாமகள், அனலைத்தீவு, கொழும்பு என எல்லாம் கதையின் முக்கியப் புள்ளிகள்..

மிக சுட்டித்தனமான பெண்ணொருத்தி காதலொருவனோடு சுட்டித்தனம் மாறாமல் குடும்பம் நடத்துவது அருமை.

பெண்களின் திருமணத்திற்கடுத்த வாழ்வில் புகுந்த வீட்டாரின் உறுதுணையும் அன்பும் எவ்வளவு முக்கியம் என்றும், பெண் என்பவள் இடத்திற்கு இடம் மாறும் பொருளல்ல, அவளது உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அழகாக வடித்துள்ளீர்கள்.

மொத்தத்தில் என் பூக்களின் தீவே என்னை அதற்குள் அழைத்துக் கொண்டது….

Advertisements

‘என் பூக்களின் தீவே!’ தீபி அவர்களின் பார்வையில் …

“என் பூக்களின் தீவே ” என்னையும் அறியாமல் என் இதழ்களில் புன்னகை பூத்திடச் செய்த புது டாம் அண்ட் ஜெர்ரி.
அனலைத்தீவின் அட்டகாச வர்ணனையில் அகத்தின் ஆர்வத்தீயை அணைத்திட இயலவில்லை .
அகல், இவள் ஒரு சூறாவளி. எங்கே, எப்பொழுது, எப்படி மையம் கொள்ளுவாள் என்பது அவளுக்கே தெரியாது. விளையாட்டுத்தனம் கொண்டிருந்தாலும் விபரீதமான நிலையிலும் விளைவில்லா முடிவுகளை வினாடியில் எடுக்கும் வித்தைக்காரி .வருணிடம் கொள்ளும் உரிமை, கோபமும் விதண்டாவாதமும் விழியில் நீர் வர சிரித்திட செய்கிறது .
வருண், வடிவான அச்சாப்பிள்ளையை  கல்யாணம் கட்டி கொள்வதை விட்டு இந்த வானரப்படை தலைவியிடம் சிக்கி சின்னா பின்னமாவது விதி செய்த சதியோ!
ராகவே பேசாமல் வெளிவருமிடத்தும், தோழியின் தொலைந்த வாழ்வை செப்பனிட தந்தை கூறிய மாற்று வழியை திடமாக மறுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துமிடத்தும் சபாஷ் .

அனு, ராகவ் அடுத்தவர்களை காயப்படுத்துவதில் காட்டிய அவசரத்தை தங்கள் காதலை நிலை நிறுத்தி கொள்வதில் காட்ட தவறியது இன்றைய நிலையை இமைகளின் முன்னே நிலை நிறுத்துகிறது .
என் பூக்களின் தீவே
எந்நிலையிலும்
எத்திசை சென்றாலும்
மாறாத
மண்ணின் நேசம்!