Category Archives: எழுத்தாளர்கள்

லதா பைஜ்ஜூவின் உயிர் சுமந்த உறவே

லதா பைஜ்ஜூவின் உயிர் சுமந்த உறவே – யாழ் சத்யாவின் பார்வையில்

கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை லதாக்கா ஈழப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பீர்கள் என்று.  மனது கனத்து விட்டது. நிறைய விபரங்கள் சேர்த்திருக்கிறீர்கள். நிச்சயமாக அகதி ஒருவரை சந்தித்து பேசியிருக்கிறீர்கள் என்பது உறுதி.

 

சில திரைப்படங்களில் இலங்கை தமிழ் என்று பேசப்படும் தமிழைக் கேட்டு நாங்கள் விழுந்து விழுந்து நகைத்திருக்கிறோம். அந்தளவிற்கு புதியதொரு வடிவம் கொடுத்து பேசியிருப்பார்கள்.

 

ஆனால் நீங்கள் எழுத்திலே நான் ஆச்சரியப்படும் அளவுக்கு அழகாகக் எங்கள் பேச்சு வழக்கைக் கொண்டு வந்துள்ளீர்கள். அதற்கு என் முதற் கண் நன்றிகள் அக்கா.

 

30.10.1995 ஈழ மக்களால் மறக்க முடியாத ஓர் இடப்பெயர்வு. கிளாலியால் கடல் மார்க்கம் மூலம் வன்னிப் பகுதியை மக்கள் தஞ்சம் அடைந்த நிகழ்வை அப்படியே கண் முன்னே படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள் அக்கா.

 

பின்னர் வன்னி நிலப் பரப்பிற்குள்ளும் அவர்கள் இடம்பெயர்ந்து அகதியாக இந்தியாவுக்கு வரும் காட்சிகள் இறுதி யுத்தத்தை மீளவும் ஒரு தடவை நினைத்துப் பார்த்து மனசு வலிக்க வைத்தது.

 

நல்லூரில் இருந்து இடம் பெயர்பவர்கள் ராமேஸ்வரத்தைச் சென்றடையும் வரை ஊர்களின் பெயர்களை பிழை விடாது நீங்கள் குறிப்பிட்டுள்ளதிலேயே இந்தக் கதைக்காக நீங்கள் எந்தளவு தூரம் உழைத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.

 

ஒரு ஈழத் தமிழச்சியாய் நீங்கள் எம் பிரச்சினையைக் கருவாய்க் கொண்டதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா. மிக்க நன்றி.

 

இனி கதைக்கு வருவோம். இலங்கையிலும் இந்தியாவிலும் இரு பிரிவுகளாக செல்லும் கதை ஓரிடத்தில் வந்து குவிகிறது. இரு நாட்டவருக்கும் இடையேயான தொடர்பு என்ன என்பதில்.

 

இளமாறன் – மித்ராளினி காதலோடு ஐந்து வருடங்களாக தாம்பத்யம் நடாத்துபவர்கள் இடையே ஏற்படும் மிகப்பெரும் பிரச்சினை. இதனால் மன நிம்மதியை இழந்து தவிப்பவர்களுக்கு ஊமைப் பெண்ணான தீபாவினால் கிடைக்கும் தீர்வு. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு என்ன? தீபா வழங்கிய தீர்வு என்ன? என்பதற்கான விடைகள்

கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

 

பிரதீபன் – வாஸந்தி. இலங்கையில் இடம்பெயர்ந்து குடியேறும் இடத்தில் சந்தித்து மலரும் காதல். காதல் சொல்ல முன்னரே பிரிபவர்கள் இணைவார்களா? சொல்லப்படாத காதலுக்காக காத்திருக்கிறார்களா இவர்கள்? என்பவற்றை அறிந்துகொள்ளவும் கதையைப் படியுங்கள்.

 

மனித உணர்வுகளை அழகாக விளக்கியிருக்கிறீர்கள் அக்கா. மித்ரா தனது இழப்பிற்காக துடிப்பதாக இருக்கட்டும், மனைவியின் வேதனையை உணர்ந்து இளா தவிப்பதாக இருக்கட்டும் ஒரு கணவன் மனைவியின் புரிந்துணர்வை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

 

பிரதீபனோ அதற்கும் மேலே. நிறை மாதக் கர்ப்பிணியாக மனைவியை கண்டும் அவள் சூழ்நிலையை புரிந்து கொள்வதில் ஆண்மகனுக்கு இலக்கணமாய் விளங்குகிறான். வாஸந்தி சொல்லவே தேவையில்லை. எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாத துன்பங்கள் அனைத்தையும் அனுபவித்தும் வாழ்க்கையோடு துணிந்து போராடும் அவள் புதுமைப் பெண்ணாய் மிளிர்கிறாள்.

 

உணர்ச்சிப் போராட்டங்களோடு தெளிவான உரையாடல்களோடு மனதைக் கனக்க வைத்துக் கொண்டு நகரும் கதை படித்து முடியும் வரை கீழே வைக்க முடியவில்லை.  முடிவு எல்லோருக்கும் நிறைவு தரக்கூடியதாக அமைந்திருந்தாலும் கதைக்கருவின் தாக்கம் படித்து முடித்த பின்னரும் இதயத்தில் ஒரு வலியை தந்து கொண்டு தானிருக்கிறது. நானும் அதே மண்ணின் பல துன்பங்களை அனுபவித்தவள் என்பதாலோ தெரியவில்லை இந்த வலி.  

 

எனக்கு ஒரேயொரு குறை அக்கா. கதையில் ஒரு மானபங்க காட்சி ஒன்று இடம்பெறுகிறது. முகாமில் தங்கியிருப்பவளைக் கற்பழித்தது இராணுவமா? அல்லது அங்கே தங்கியிருந்தவர்களா? என்று சரியாக தெரியாத மாதிரி முடித்திருந்தீர்கள். முகாமில் இருந்த எம் மக்கள் இப்படியான இழி வேலைகளில் ஈடுபட்டதாக நான் அறியவில்லை.

 

இன்று எம் மண்ணிலும் சில காமுகர்களால் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

ஆனால் வவுனியாவிலோ, ஓமந்தை முகாம்களிலோ எம்மவர்களால் நடைபெற்றதாக நான் அறியவில்லை.  அப்படி ஏதும் நடந்து அந்த செய்திகள் என் கண்ணில் படவில்லையோ தெரியாது அக்கா. இது என் கருத்து மட்டுமே.

 

உங்களின் மீதிக் கதைகள் நான் வாசிக்கவில்லை என்றாலும் இந்தக் கதை உங்களுக்கு ஒரு சிறந்த பெயரைத் தரப் போவது உறுதி. ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் வரும் கவிதைகள் அப்படியே மனசை அள்ளிச் சென்றன அக்கா. அவ்வளவோ அழகான வார்த்தை அமைப்புகள்.

 

இப்படியான ஆழ்ந்த கருக்கள் கொண்ட அழகான கதைகள் மேலும் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

 

Advertisements

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 04

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நாலாவது அத்தியாயம் இதோ.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மக்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

NNES-12

நீண்ட நாட்களுக்குப் பிறகான அத்தியாயம். இதுவரை என்னை விசாரித்தவர்கள், தினமும் பார்த்துப் பார்த்து ஏமாந்து திட்டியவர்கள் எல்லோருக்கும் நன்றி. சோம்பி மட்டும் நான் இருக்கவில்லை. இதைத்தாண்டி வேறு என்ன சொல்ல? உங்களைப் போலவே நானும் ஒரு குடும்ப ‘இஸ்திரி’ அல்லவோ. மன்னித்து பொருத்தருள்வீராக.

 

 

 

அன்னாஸ்வீட்டியின் நனைகிறது நதியின் கரை

அன்னாஸ்வீட்டியின் நனைகிறது நதியின் கரை – யாழ் சத்யாவின் பார்வையில்

———————————————-

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஸ்வீட்டி அக்காவின் கதைகளில் ஸ்வீட்டான காதலோடு சேர்த்து அனைத்து விடயங்களையும் அடக்கி இருப்பார். சீரக மிட்டாய் போல ஒரு கவலையான சுவை. படித்ததும் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு. இவர் சிறப்பே இவர் கதையின் வேகம். ஒவ்வொரு விடயத்தையும் சலிக்க வைக்காத விதத்தில் ஒவ்வொரு பக்கத்தையும் ஆவலாக அடுத்து என்ன என்ன என்று படித்து முடிக்கும் வரை தட்டிக் கொண்டே போக வைக்கும் வேகம். தெளிவான காட்சி அமைப்புகள் அப்படியே கதையோடு எம்மைக் கட்டிப் போட வைக்கும் திறம்.

 

அரண் – சுகவிதா

அரண் கிரிக்கெட் ப்ளேயர். சுகவிதா – டென்னிஸ் ப்ளேயர்.

 

ப்ரபாத் – சங்கல்யா

அரணின் நண்பன் & சுகவிதாவின் உடன்பிறவா சகோதரன் ப்ரபாத் ஜோனத் – கிரிக்கெட் ப்ளேயர் – சங்கல்யா – ஜேர்னலிஸ்ட்

 

இங்கேயும் காதல் தான் எல்லோரையும் ஆட்டி வைக்கிறது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக.

 

ஒரே பாடசாலையில் படிக்கும்போது அரணுக்கும் சுகவிக்கும் இடையில் சிறுபிள்ளை தனமாக ஆரம்பிக்கும் மோதல்கள் சுகவியின் தந்தை அனவரதனால் நீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது.  அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து வளரும் சுகவிதா அரணின் மேல் ஏற்படும் வெறுப்பின் காரணமாகவே டென்னிஸ்ஸில் சாதிக்க துடிக்கிறாள்.

 

அதேநேரம் அரணின் தந்தை திரிகேயனின் நல்ல விதமான அறிவுரைகள் அரணிற்கு சுகவி மீதான புரிதலை உண்டு பண்ணுகிறது.

 

ஒரே ஊர்க்காரனான ஒருத்தன் நல்ல நிலையில் இருக்கும் போது அதை நல்ல விதமாக பார்த்து சந்தோசப் படாமல் அதைப் பார்த்து பொறாமை படுவது தனக்குள்ளேயே தாழ்வுணர்ச்சி கொள்வது அதன் மீதான வெளிப்பாடுகள் பிள்ளை வளர்ப்பின் மீது கூட ஆட்சி செலுத்தி அவர்களையும் ஒரு தவறான வாழ்க்கை நெறிக்கு தள்ளுகிறது. பரம்பரை பரம்பரையான பகைமைகளுக்கு இப்படியான மனித உணர்வுகள் காரணமாகி வாழ்க்கையை.நாசமாக்குவது வேதனைக்குரிய விடயமே. அனவரதன் சிறந்த உதாரணம்.

 

அதேநேரம் அவர் மனைவி புஷ்பம் கணவரை நன்கு அறிந்து மகளுக்கும் கணவருக்கும் அதை உணர வைக்க முயன்றும் அவர்கள் இவர் பேச்சுக்கு செவிமடுக்காத காரணத்தினால் தன் முயற்சியில் தோற்றுப் போகிறார். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இவர். தந்தைக்கு பிடிக்காதவனை மகள் மணக்கப் போகிறாள். ஆனால் அந்த மாப்பிள்ளையை தனக்குப் பிடிக்கும் எனும் போதும் தனது கணவர் தனிமையாக உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக மகள் கல்யாணத்திற்கு போகாமல் விடுகிறார். அவரின் அந்த அதீத புரிந்துணர்வே ஒரு தாம்பாத்தியத்தை வெற்றியடைய வைக்கிறது.

 

திரிகேயன். பணம் அதிகம் இருந்தாலும் தலைக்கனம் கொள்ளாது வாழ்க்கையை.அதன் போக்கில் எதிர் கொள்கிறார். பிறக்கும் போதே தாயை இழந்த மகனை.தாய்க்கு தாயாகவும் இருந்து தோளுக்கு மிஞ்சியவனை உற்ற தோழனாகவும் உரிய விதத்தில் தேவையான அறிவுரைகளோடு அவர் வளர்க்கும் விதம் அடடா இவரல்லவோ அப்பா என வியக்க வைக்கும் ஒரு நபர்.

 

அன்பரசி – பிரபாத்தின் தாய். ஒற்றை ஆளாக பிள்ளை வளர்க்கும் சராசரி பாசக்கார அம்மா. கதைக்கு தேவையான விடயங்களை உரிய நேரத்தில் செய்ய வைக்கும் பாத்திரம். அதைச் செவ்வனே செய்வதில் சிறப்பு.

 

சங்கல்யா – அழகான பெயர். தந்தையின் துரோகத்தால் ஆண் வர்க்கத்தை வெறுப்பவள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காதலில் விழுந்து அதற்காக போராடுவதில் மனதில் நிறைகிறாள்.

 

பிரபாத் – காதலின் நாயகன். தனது பாஷன், உத்யோகத்திற்கேற்ப காதலியை என் செல்ல சிக்ஸர் என்று கொஞ்சியே எங்கள் மனசையெல்லாம் வசீகரித்து சென்று விடுகிறான். இவன் மாதிரி ஒரு உற்ற நண்பன், உண்மைச் சகோதரன், பாசமிகு மகன் எங்களுக்கு எல்லாம் கிடைக்க மாட்டானா என்று ஏங்க வைத்து விடுமளவு சிறந்த ஆண் மகன். இவனுக்கு நிறைய ரசிகைகள் இருந்திருப்பது உறுதி.

 

அரண் – காதலுக்காக போராடும் ஒரு காவலன். அவளுக்காக தனது பதவி,புகழ், பெயர் எதையும் இழக்க தயாராகும் அளவு அன்பு. பல தடைகள் தாண்டி அதில் வெற்றியும் காண்கிறான். அந்த தடைகளும் அதை அவன் சிறப்பாக இயல்பாக கையாண்டு வெற்றி பெறுவதும் தான் கதையின் ஓட்டம்.

 

சுகவிதா – தந்தையின் உருவேற்றலில் வளர்க்கப்படுபவள் ஒரு விபத்தில் அம்னீசியாவில் பீடிக்கப்பட்டு நிகழ்வுக்கும் கடந்த காலத்துக்கும் இடையே போராடி புத்திசாதுர்யமாக யோசித்து முடிவெடுத்து நடப்பை தீர ஆராய்ந்து வாழ்க்கையை வெற்றி கொள்கிறாள்.

 

சுகவிதா – ஜீவாக்கிடையேயான காதல் அற்புதம். ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் மீது நாம் கவரப்பட்டு அவரது சொந்த உருவம் மறைந்து நாம் அந்த எழுத்துக்களாகவே அவர்களை பார்க்க ஆரம்பித்து அவர்கள் மீது அன்பு வைக்கிறோம். பித்துக் கொள்கிறோம். எங்கள் துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேட விளைகிறோம். அவர்களின் எழுத்துக்களில் கிடைக்கும் ஆறுதல் எம் வாழ்க்கை பிரச்சினைக்கும் ஒரு ஆறுதல் தரும் என்ற எண்ணத்தோடு அவர்களிடம் எங்கள் பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். எனக்குமே இந்த அனுபவம் இருப்பதால் சுகவியின் மனநிலையை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

 

ஜீவா ஆணாக இருந்த பட்சத்தில் அவனும் அவளைக் காதலித்த பட்சத்தில் சுகவி அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் இயல்பாக.

 

சுகவி – ஜீவா காதல் நிறைவேறியாதா? அரண் என்ன ஆனான்? என்பதெல்லாம் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்க மக்கா.

 

நனைகிறது நதியின் கரை காட்டாற்றாய் மேடு, பள்ளம் எல்லாம் கடந்து வந்து எங்கள் மனக் கரைகளையும் தன் வெண்ணுரை அலைகளால் நனைத்துச் செல்வது உறுதி.

 

மேலும் பல சிறந்த வித்தியாசமான படைப்புகள் வழங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. தொடரட்டும் உங்கள் பணி.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

அன்னா ஸ்வீட்டி அவர்களின் அதில் நாயகன் பேர் எழுது

அதில் நாயகன் பேர் எழுது – யாழ் சத்யாவின் பார்வையில்

 

முகப்புத்தகத்தில் அடிக்கடி தட்டுப்பட்டது இந்த பெயர்… “எப்படியான கதைகள் வாசகர்களின் அதிக வரவேற்பை பெறும்?” என்று நீலாமணி அக்கா கேட்டதற்கு “தலைப்பு வித்தியாசமாக இருந்தாலும்” என்று சிந்து ஜெகன் கூறியிருந்தார். என்னைப் பொறுத்தவரை இந்த கதையில் அது முற்றிலும் உண்மை. இந்த கதையின் பெயர் தான் என்னை வாசிக்க தூண்டியது.

 

இரு வேறு கால கட்டத்தில் நடக்கும் கதைக்களம். இன்றைய காலத்தில் விவன் – ப்ரியா ஜோடி. பாண்டிய மன்னன் மானகவசன் – ருயம்மா தேவி ஜோடி.

 

அரச காலம் ஒருவரின் கனவில் தோன்றுவதாக அமைந்து கனவிற்கும் நிஜத்திற்கும் என்ன தொடர்பு என்று எங்களைச் சுத்த விடுகிறது.

 

சில நேரங்களில் கனவில் தோன்றுவது நிஜத்தில் முதலிலும், சிலநேரங்களில் கனவில் முதலிலும் தோன்றி எதனால் இந்த கனவுகள் என்று எங்களை ஒரு புரிதலுக்கு வர விடவில்லை.

 

பராக்கிரம பாண்டியன் பற்றிய நிறைய தகவல்கள். நாயகி கற்பனையாக இருந்தாலும் கூட ருயம்மாவோடு பின்னிப் பிணைந்து சென்ற கதையில் பாண்டியனது ஆட்சி முறையை அவர் சில வேண்டாத முறைமைகளை மாற்றியமைக்க முயன்றது, சாதி ஒழிப்பிற்காக அந்த நேரமே போராடியது என்று பல சரித்திர தகவல்களை அள்ளித் தெளித்து இருக்கிறார்

 

ஜல்லிக்கட்டுக்காக போராடிய எங்களுக்கு ஏறு தழுவலின் சரித்திரத்தை மிக அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.  ஒரு மண்ணிற்கு ஆவினத்தின் அவசியம் வியக்க வைத்தது.

 

இன்றைய கால கட்ட நிகழ்வுகளில் அழகாக ஆங்கில வார்த்தை பிரயோகம் கலந்த எழுத்து நடை. ப்ரியா இன்னும் மனசிற்குள். சிறு வயதிலிருந்து மனதால் கஸ்டப்படும் அவள் live in present என்று கடந்தகால கசப்புகளை மறக்கடித்து தன்னை நிகழ்காலத்தோடு பொருத்தி வாழப் போராடும் போது வாசிக்கும் எங்கள் கண்களில் ப்ரியாவின் வேதனையை வர வைக்கிறார்.

 

விவனை கொல்ல நடக்கும் முயற்சி, பில்லி, சூனியமா? அமானுஸ்யமா? பூர்வ ஜென்ம தொடர்பா? மனிதர்களின் சதியா? என்று பலதும் எண்ண வைத்து இறுதியில் எதிர்பாராத விடையோடு அனைத்து புதிர்களையும் இலகுவாக அவிழ்த்துள்ளார்.

 

நானெல்லாம் அதிகம் கனவு காணும் ஜென்மம் இல்லை. அதிகாலையில் வாசித்து விட்டு தூங்கினால் பாண்டியனும் ருயம்மாவும் தான் ஒருவரை ஒருவர் காட்டிக் கொள்ளாமல் காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் ப்ரியாவை தாங்கோ தாங்கென்று தாங்கும் விவன் வந்து போகிறான்.

 

சில இடங்களில் நெஞ்சைப் பிசையும் எழுத்து. அற்புதம் அன்னாஸ்வீட்டி அக்கா. இந்த ஒரே கதையின் மூலம் என்னை உங்கள் அனைத்து கதைகளையும் தேடி வாசிக்க வைத்து விட்டீர்கள்.

 

உங்கள் தளம் மிக நன்றாக உள்ளது அக்கா. தேடுதலின்றி வாசிக்க இலகுவாக உள்ளது. நீங்கள் மேன்மேலும் இப்படி வித்தியாசமான பல கதைகள் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் அக்கா.

 

“அதில் நாயகன் பேர் எழுது” எங்கள் மனங்களிலும் ஒரு காவியத்தை எழுதிச் செல்வது உறுதி.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…! – 03

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

மூன்றாம் அத்தியாயம் இதோ! கதையின் போக்கு எத்தனை பேருக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ தெரியவில்லை.  வெறும் கற்பனையே அனைத்தும். குறைகள் இருப்பின் பொறுத்தருளுங்கள் மக்கா! 

ஹீரோவை நிறைய பேருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவன் எப்படி ஹீரோவாக இருக்கலாம் என்று திட்டுவது கேட்கிறது. சரி… சரி… திட்டிக்கொண்டே படிச்சிட்டு முடிந்தால் எப்படி இருக்கு என்று சொல்லிட்டு போங்க மக்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

கிரு நிஷாவின் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! by துஜிமௌலி

எமது தமிழில் அழகாகக் கதையை ஆரம்பித்து, நாயகன் நாயகியின் காதலை எடுத்து சொல்வதே கதையின் கருப்பொருள்.

தனது தாய் நாட்டில் இருந்து வேலை விடயமாக லண்டன் வரும் நாயகி, விமானநிலையத்திலேயே வைத்து தனது உடமைகளை தொலைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்ப, அக்குழப்பத்தைத் தீர்க்க அறிமுகமாகிறான் நாயகன்.

நாயகி தமிழ், அதுவும் தன் நாட்டுக்காரி என்று தெரிந்து உதவி செய்து, அவளைத் தன் வீட்டிலேயே தங்கும்படி அழைத்து செல்கிறான்.

உறவுகள் என்று யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் வேற வழி இல்லை என்று நாயகன் ரித்விக்குடன் அவன் வீடு செல்லும் ஆனந்தி, அங்கு உள்ள சூழலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவள், அங்கு ரித்விக் வீட்டில் வேலை செயும் மார்க் எனும் வெள்ளைக்காரனுடன் சகோதரத்துவ பாசத்தை உணர்ந்து, அவனுடன் ஒரு சகோதரி மாதிரியே பாசம் காட்டுகிறாள்.

ஒரு கட்டத்தில் ரித்விக்கின் மேல் காதல் கொண்டு, பின் , அவனின் பிழையான அதாவது அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதை அறிந்து வேதனையுற்ற நேரம், தனது மொத்தக் குடும்பமும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது கேள்விப்பட்டு மொத்தமாக துவழ்கிறாள் ஆனந்தி.

அவன் வீட்டில் இருப்பதையே அவமானமாக கருதியவள், தனது மாமன் மகளைத் தொடர்புகொண்டு ரித்விக் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவள் வெளியேறிய நேரம் ஆனந்தி மீதான காதலை உணரும் ரித்விக், பின், எவ்வாறு நாயகியுடன் சேர்கிறான் என்பதைக் கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.

அழகான கதை, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! – கிருநிசா (முழுகதை )

அன்பு வாசகர்களே !

கிருநிசா தனது கதைக்கான முழு லிங்க் தந்துள்ளார். 

முதல் கதை , வாசிப்பவர்கள் அமைதியாகப் போகாமல் உங்கள் கருத்துகளை அவரோடு பகிர்ந்து கொண்டால், மேலும்  அவரது எழுத்தை நேர்த்தியாக்க அது உதவும்.

 

வாசித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறன் மக்களே. லிங்க் டிலிட் செய்துவிட்டேன்
 

சரயுவின் இதயம் தேடும் என்னவளே

சரயுவின் இதயம் தேடும் என்னவளே – யாழ் சத்யாவின் பார்வையில் 

காதல் காதல் காதல். இந்த காதல் எப்படி எல்லாம் எல்லா மனிதர்களையும் இந்த பாடுபடுத்துகிறதோ தெரியவில்லை. பதவி, அந்தஸ்து எதையும் கருத்தில் கொள்ளாமல் எல்லோரையும் பாடாய்ப்படுத்துகிறது.

 

அப்படி தான் இங்கே ஒருவன் இந்த காதல் எனும் வலையில் சிக்கி படும்பாட்டை அழகாக சொல்லி இருக்கிறார் சரயு.

 

சின்னத்திரையில் பிரபலமான நடிகன். ஆனால் வீட்டுக்குள்ளோ பாசத்திற்கு ஏங்கும் சிறுபிள்ளை. அவனது குடும்பத்தினர் ஒழுங்கமைக்கும் திருமணம் தடைப்பட்டு விட மீளவும் ஒரு பெண் பார்க்க அதிலும் தடங்கல்.

 

நாயகி புவனா. ஒரு குழந்தையோடு இருக்கும் குடும்ப பாங்கான பெண். குழந்தையோடு இருப்பவளை எவன் ஏற்றுக்கொண்டு குழந்தையையும் தன் குழந்தையாகப் பார்த்துக் கொள்ளுவான்?  இந்தக் காலத்தில்இதெல்லாம் சாத்தியமா என்ற பயத்திலேயே கல்யாணம் பற்றி சிந்திக்க மறக்கும் புவனா.

 

எப்படி அகிலனும் புவனாவும் சந்தித்துக் கொண்டார்கள்? குழந்தை பூர்வி என்ன ஆனாள்?  பூர்வியை அகிலன் ஏற்றுக் கொண்டானா? புவனாவை அகிலன் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனரா? இவர்கள் காதலுக்கு வந்த தடைதான் என்ன? எப்படி மறுபடியும் இணைந்தார்கள்? தனிக்குடித்தனம் என்பது குடும்பத்தை பிரிக்கும் வேலை இல்லையா? அனைத்து கேள்விகளுக்குமான விடைகள் கதையின் உள்ளே…

 

அனைத்து கதாபாத்திரங்களும் கனகச்சிதம். தங்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமான சிந்தனை, சொல், செயல் கொண்டவர்கள் என்பதை தெளிவாக புரிய வைத்துள்ளார்.

 

மிகவும் மென்னையான எழுத்தோட்டத்தில் செல்கிறது கதை. எந்தப் பரபரப்புமின்றி எங்களை டென்ஷனின் உச்சத்திற்கெல்லாம் கொண்டு போகாமல் ஒரு தென்றலாய் வருடிச் செல்கிறது. அனுபவமிக்க அழகான எழுத்து நடை. இது சரயுவின் எத்தனையாவது கதை என்று எனக்குத் தெரியாது. ஆனால் இவரது மீதிக் கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு சிறந்த ஒன்று.

 

மேலும் பல கதைகள் இதேபோல் தரமான எழுத்துடன் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சரயு.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.