Category Archives: அறிவிப்புகள்

செந்தூரம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது!

 

ஹாய் ஹாய் ஹாய்,

எல்லோரும் நலம் தானே? நாமும் நலமே! அதனோடு மிகுந்த சந்தோஷமும் கூட!

பொழுதுபோக்கிற்காக மட்டுமே ஆரம்பித்த எம் எழுத்து இன்று ஒரு இலக்கினை நோக்கி நடைபோடத் துவங்கியிருப்பது நமது செந்தூரம் மின்னிதழ் வாயிலாகவே! பெரிதாக எதையும் திட்டமிடவும் இல்லை. யோசிக்கவும் இல்லை. ஒருநாள் மின்னிதழ் போடுவோமா என்று கதைத்துக்கொண்டோம். அது கூட ஒரே ஒரு தடவைதான். ‘அப்ப… சித்திரை வருஷப்பிறப்புக்கு முதல் இதழ் வெளியிடுவோமா?’ என்று நிதா கேட்க, சந்தோசமாகவே சரி சொன்னேன். அதற்கான வேலைகளில் அப்போதே ஈடுபடத் துவங்கினாலும், நாமும் இல்லத்தரசியர் தானே. நினைத்தது போலவே செயலாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால் என்ன? எப்போது செய்தோம் என்பதை விட செய்து முடித்தோம் என்பதில் தானே வெற்றியே இருக்கிறது!

இதோ இன்று செய்து முடித்துவிட்டோம்!

ஆமாம்! எங்களின்…இங்கு எங்களின் என்று சொல்வதை விட நமது என்பதே பொருந்தும். நமது முதல் செல்லக்குழந்தை ‘செந்தூரம் மின்னிதழ்’ இனை இன்று வெளியிட்டுவிட்டோம்! இன்று நம் குழந்தை உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறாள். எல்லோரும் கைகளில் ஏந்தி அவளை வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!

எப்போதும் சின்னச் சின்ன கேலிகளும் சீண்டலுமாக எம்மை ஆதரிக்கும் எம் குடும்பத்தவர்களுக்கு எங்களின் அன்பான நன்றிகள்! இதனை முற்றுப்பெற எங்களுக்கு துணையிருந்த ஆண்டவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! இந்த முயற்சி வெற்றியை தரும் என்று எங்களுக்கு நம்பிக்கை தந்த அத்தனை வாசக நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றிகள்! அது மட்டுமல்லாது, ஆர்வத்தோடு ஆக்கங்களை அனுப்பி வைத்த, எழுத்தாளர்கள், தமிழ் நிவேதா, தமிழ் மதுரா, ஜெகநாதன் வெங்கட் அவர்கள், ஹேமா, அகத்தியா, துஜிமௌலி, யாழ் சத்யா, பவித்ரா நாராயணன், நிலா, நர்மதா சுப்ரமணியம், கோபிகை, மற்றும் ராகவி …உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!
தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் மட்டுமல்ல விரும்பியவர்கள் அனுப்பி வைக்கலாம். அடுத்தடுத்த இதழ்களில் நிச்சயம் வெளியாகும். அதேநேரம் உங்களின் ஆக்கங்களுக்கு ஏற்ற வகையில் பணப்பரிசும் வழங்கப்படும்.

மாதம் தோறும் வெளிவரக்காத்திருக்கும் நம் இதழ் இன்னுமின்னும் பல புதுமைகளை சுமந்து வரப்போகிறது. ஆதரவு தந்து பயன்பெறுவீராக!

மின்னிதழை வாசிக்க விரும்புவோர் அமசோன் கின்டிலில் தரவிறக்கம் செய்தோ, கிண்டில் லெண்டிங் லைபிரரியிலோ வாசிக்கலாம்.

இம்முயற்சியில் ஆர்வத்தோடு தொடர உங்கள் ஆதரவும் வாழ்த்தும் என்றென்றும் வேண்டும் மக்களே!

அன்புடன் ரோசி கஜன், நிதனி பிரபு

 

கீழேயுள்ள லிங்கில் கிளிக் பண்ணவும் 

செந்தூரம் மின்னிதழ் 1

Advertisements

‘உன் வாசமே என் சுவாசமாய்!’ புத்தக வடிவில் …

31143959_928753840640037_5192493685656256512_o

ஹாய் ஹாய் மக்களே!

 ‘உன் வாசமே என் சுவாசமாய்!’ புத்தகமாக உங்கள் கரங்களில் தவழவுள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து அனைத்து முன்னணிக் கடைகளிலும் புத்தகம் கிடைக்கும்.

இணையத்தில் மெரீனா புக்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

கார்த்தி, உஷா… செல்லக்குட்டிகளுக்கு நன்றி என்றெல்லாம் சொல்லிவிட்டு தப்பவே முடியாது. பிரதிபலன் பாராத மிகமிக அழகான அறிமுகங்களை இந்த எழுத்து எனக்குத் தந்துள்ளது.

ஒவ்வொருமுறையும் இணையத்தில் கதைகளைப் பதிவிடுகையில் ஆழ்ந்து வாசித்து மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் இணைய வாசகர்கள்,மற்றும், என் கதைகளின் முதல் வாசகி மட்டுமில்லாது, ஒவ்வொரு கதையும் நேர்த்தியாக உங்கள் முன் வருவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் அன்புத் தங்கை தர்சி கோகுலன்,  மற்றும், கதையை மிகவும் அழகுற நேர்த்தியாக அச்சிட்டு வெளியிடும் ‘சிறகுகள்’ பதிப்பகம்…உங்களனைவருக்கும் என் நெஞ்சார்ந்த அன்பும் நன்றிகளும்.

   இக்கதையை மிகவும் விஷேசம் ஆக்கியுள்ளது நான் மிகவும் விரும்பி வாசிக்கும் எழுத்துக்களின் உரிமையாளரிடமிருந்து கிடைத்த கருத்துப்பகிர்வு. இக்கதை வாசிப்பிற்குத்  தன் பொன்னான நேரத்தை ஒதுக்கிய எழுத்தாளர் ஜேகே அவர்களிற்கு அன்பும் நன்றியும்.

இதுவரை வாசிக்காதவர்கள் புத்தகத்தில் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கோ!

நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!

105539

 

 

எமதன்பு வாசகர்களிற்கும் மற்றும் உங்கள் உற்றார் உறவினர்களிற்கும்,

எங்கள்,  மனமார்ந்த   நத்தார்   வாழ்த்துக்கள் உரித்தாகுக !

மற்றும்,

பிறக்கவிருக்கும் புத்தாண்டில், உங்கள் கனவுகள்  மெய்ப்படவும், உள்ளங்களிலும் இல்லங்களிலும் அமைதியும் அன்பும் பெருகவும்  அன்போடு வாழ்த்துகிறோம்!

பிரியங்களுடன்,

துஜி சஜீ,

கிருநிசா, 

ரோசி.

 

எதிர்வரும் 25 லிருந்து …

25129874_1797145283629162_164323341_o

அன்பு வாசகர்களே!

‘என் பூக்களின் தீவே!’ கதை, எதிர்வரும் 25 லிருந்து அனைத்து முன்னணிக் கடைகளிலும் கிடைக்கும் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன் .

இக்கதை, இணையத்தில் வராது  நேரடியாகவே நூல் வடிவம் பெற்றுள்ளது.

ஆதலால், வாசகர்களிடமிருந்து கதை பற்றி கருத்துக்களை அறியும் ஆவலில் காத்திருக்கிறேன். வாசித்துவிட்டு ஓடி வாங்கோ பார்ப்போம்!

அது மட்டுமின்றி, கைகலப்பாக எழுதவேணும் என்ற ஒரே நோக்கில் எழுதினேன். அனு , ராகவ் பாத்திரங்கள் சிந்திக்கவைக்கும் வகையில்  அமைந்திருந்தாலும்  அகல், வருண் இருவருமே,  வாசகர்களைத் தம் வசப்படுத்திவிடுவார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அதோடு, என் சொந்த ஊர் , அனலைதீவு பற்றிக் கதையில் எழுதும் வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்வு! ஊர் போய் வந்த உணர்வு!

அழகாக அச்சிட்டு  வெளியிட்டுள்ள சிறகுகள் பதிப்பகத்தாருக்கு மிக்க நன்றி!

.

என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுகமும் முன்னோட்டமும்)

25129874_1797145283629162_164323341_o

 

 

அன்பு வாசகர்களே!

விரைவில்  வெளிவரவிருக்கும் ‘என் பூக்களின் தீவே!’ எனும் நாவல், இணையத்தில் வெளிவராது நேரடியாக நூல் வடிவம் பெறுகின்றது.  

அதனால், கதை பற்றிய சிறு அறிமுகமும் , முன்னோட்டமும் பார்க்கலாமா?

 

காதல்… என்பது எப்போதுமே அழகுதான் இல்லையா? அதே காதல், அதிரடியாக முட்டி மோதிக்கொள்ளும் நட்புக்குள் மென்னடை போட்டு நுழைந்தால்?  

    அதுவே இங்கும் நிகழ்கின்றது.

    வருண் , அகல் …காணும் நேரமெல்லாம் முட்டிக்கொள்ளும் எதிரெதிர் துருவங்களான இவர்களுள்  நுழைந்த காதல், அவர்களை எப்படி எப்படியெல்லாம் ஆட்டிவைக்கின்றது என்பதையும்,

   ராகவ், அனு… கண்டதும் ஆழ்மனதில் அழுந்த வித்திட்டாலும், அதீத உரிமையுணர்வும், கோபமும், கலந்து பேசாத பொறுமையின்மையும் குறுக்கிட்டால் அந்த அழகிய காதல் வித்தும் ஆட்டம் காணலாம் என்பதுக்கு எடுத்துக்காட்டாக இவர்களுமாக  நகர்கின்றது கதை.

  ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பும் கலகலப்புமாக நகரும் இக்கதை  உங்கள் மனங்களில் இடம்பிடிக்குமென்று நம்புகிறேன். கதையை வாசித்து முடிக்கையில் உங்கள் வதனம் முறுவலால் நிறைந்திருக்கும் .

 இன்னொரு ரகசியம் … ஆமாம் மக்களே ரகசியமேதான் .

இந்தக் கதையில் வரும் சில சுவாரசியமான காட்சிகளின் சொந்தக்காரர் இங்கே தான் உலவித் திரிகின்றார். 

ஹே…ஹே…யார் என்று கேட்டால் சொல்லவே மாட்டேனாம்.  பிறகு copyright issues ஆகிவிடும்!

உங்களால் அனுமானிக்க முடிகின்றதா என்று, கதையை வாசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் . 

 

கதையிலிருந்து …

“சரிதான் போடா மண்டைக்கொழுப்பா!’ என்றவாறே, விசுக்கென்று திரும்பி நடந்தவளின் இதழ்களிடையே நெரிந்தது, பொங்கியெழுந்த  நகைப்பு!

  “ஏய்ய்ய்! வேண்டாம்டி ஒல்லிக்கோம்பை; கையில் மட்டும் அகப்பட்டாயோ சட்னிதான்!” படித்துக்கொண்டிருந்த வருண், அடங்காத கோபத்தோடு கதிரையை(இருக்கை) தள்ளிகொண்டு விசுக்கென்று எழுந்தான்.

   “அதே..அதேயேதான் நானும் கேட்டேன்; குத்து மதிப்பா இருபது தோசைகளை…அப்படியே குழைத்து விழுங்க சட்னி தேவைதானே? அதுக்குத்தான் தேங்காய் துருவித்தாங்க என்றேன்!” என்றவள், கோபத்தில் முகம் சிவக்கத் தன்னை நோக்கிப் பாய்ந்தவனிடமிருந்து தப்பிக்கும் எண்ணத்தில், ஒரே பாய்ச்சலாக மாடிப்படிகளில் தாவியிறங்கி, வலப்புறமாகத் திரும்பி, எதிரே வந்துகொண்டிருந்த சந்திரனில் மோதி, “ஏன்மா இப்படி கண்மண் தெரியாமல் ஓடி வாறாய்?” என்ற அவரின் கண்டிப்பைக் காதில் வாங்காது, “ஆன்ட்டி!” என்ற கூவலோடு சமையலறை நோக்கி ஓடினாள்.

 

****

“இப்போ என்ன சொல்ல வாறீங்க? நான் இங்க இருப்பதால் உங்க நிம்மதி கெட்டுப் போகுதா?” சீறலாகக் கேட்டவளுக்குச் சட்டென்று பதில் சொல்லாது, வெகு அசட்டையாக தோள்களைக் குலுக்கியவாறே கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், அவளை நோக்கிய பார்வையில் அப்பட்டமான கேலி!

   “இதில் சந்தேகமான கேள்வி வேற! ஹ்ம்ம்…அதுதான் இந்த வீட்டு பூஸுக்கும் பொன்சோவுக்குமே  தெரியுமே…” என ஆரம்பித்தவனை, “தம்பி போதும்; சாப்பிட வந்தால் அந்த வேலையை பார்!” ஆரம்பித்து வைக்கிறானே என்கின்ற அலுப்பில் அதட்டினார் செல்வி.

  அதோடு, சிலுப்பிக்கொண்டு எதுவோ சொல்ல முயன்ற அகல்யாவையும் கண்டிப்போடு பார்த்தார்.

  “உனக்கும் தான்; இனி மாறி மாறி கதை வளர்த்தால் இரண்டு பேரும் முறையாக வாங்குவீங்க!” என்றதுக்கும் வருணுக்கே முறைப்பு பறந்தது.

   “இப்போ உங்களுக்கு குளுகுளுவென்று இருக்குமே! இப்படி என்னையும் ஆன்டியையும் கொழுவி விடத்தான் இந்தாள் பிளான் போட்டார்; அது தெரியாம நீங்க அவுட் ஆன்ட்டி.” முறைத்தவளை நோக்கி,

   “நீயெல்லாம் ஒரு ஆளென்று கதைக்க வாறாயே! உன்னை கொழுவி விட ரூம் போட்டு யோசிக்கிறேனாக்கும்; நினைப்புத்தான்!” என்றவாறே, வெகு அலட்சியமாக ஒரு பார்வையை வீசினான் வருண்.

   அதோடு நிறுத்தாது, “ஏய்! முதல் அங்கால போடி; இங்க நின்று கத்துவதற்கு அப்படியே வெளியில இறங்கி பின்னுக்குப்போய் கத்து; பொன்சோ, தனக்கு ஜோடி கிடைத்துவிட்டது என்று சந்தோசப்படும்.” என்றவனுக்கே, தன் செல்ல நாயோடு இவளை ஜோடி சேர்த்ததில் நகைப்பு பீறிட்டது!

  “என்றாலும் பொன்சோ பாவம்தான் இல்லையாப்பா! ஹா..ஹா..” விடாது வம்பிழுத்தவனையும், சேர்ந்து சிரித்த சந்திரனையும் கொலைவெறியோடு பார்த்தாள் அகல்.

  “வேண்டாம் சொல்லீட்டன், பிறகு சம்பல் உள்ளே போகாது தலையில் கொட்டி விடுவன்.”

   “சரிதான்; முடிந்தால் கொட்டிப்பார் பார்ப்போம்; கலவாய்க்குருவி!” இப்படி, மையம் கொள்ள முனைந்த அனல்காற்றின் ஆரம்பத்தில் விசுக்கென்று குறுக்கிட்டது செல்வியின் கோபக்குரல்.

    “இங்க பாருங்க, இரண்டு பேரும் வாயை மூடுவது என்றால் இங்க இருந்து சாப்பிடலாம்; இல்லையோ, வெளியே போய் நின்று சண்டைபிடித்து, சமாதானம் ஆகீட்டு வாங்க!” குரல் உயர்ந்திருப்பதில் தாய்க்கு கோபம் வந்து விட்டதை உணர்ந்தாலும் அவ்வளவு இலேசில் விட மனமில்லை வருணுக்கு!

   “அய்யே! மனிசனாகப் பிறந்தவன் இவளோடு சமாதானம் ஆவானா? அதற்கு நானும் கொள்ளிவாய்ப்பிசாசாக இருக்க வேண்டுமே!” என்றவன், அவள் முகம் போன போக்கில் உள்ளுக்குள் வெகுவாகவே நகைத்தான்; அவன் உதடுகளிலும் அதன் சாயல் படர்ந்தது!

   “ஆன்ட்டி வேண்டாம்…இப்போ நீங்களே பார்க்கிறீங்க தானே, எத்தனை பட்டப் பெயர் சொல்லுது இந்த ஊத்தப்பம்.”

   “ஏய்ய்ய்!” எழுந்து விட்டான் வருண்.

   “யாரடி ஊத்தப்பம்? சின்னப்பிள்ளையில நீயும் குண்டுப்பூசனி தானே! அங்க அனலைதீவு கதியால் குருத்து, தென்னங்குரும்ப, கள்ள மாங்காய், புளியங்காய், நாகதாளிப்பழம் என்று எதை அரைக்காமல் விட்டாய்? அதையெல்லாம் நான் சொல்லியா காட்டுறன். எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறன், அப்படிச்சொல்லாதே என்று; இங்க பார்; என்னை வடிவா பார்; அப்படியா இருக்கிறன்.” அவள் கழுத்தில் பிடித்து தன் முகத்தைப் பார்க்க வைக்க, கையிலிருந்த மர அகப்பையால்சுளீரென்று  அவன் முதுகில் இழுத்தார் செல்வி.

    “ஆஆஆஆஆ அம்மா! உண்மையாகவே அடிக்கிறீங்க! நோகுதம்மா! ஐயோ நிற்பாட்டுங்க. அப்பா…காப்பாத்துங்க…” அலறினான் வருண்.

 

இனி , புத்தகத்தில் வாசித்துப் பாருங்கள் மக்களே!

எப்போதும் போல உங்கள் கருத்துக்களை அறிய மிக மிக ஆவலாகக் காத்திருக்கிறேன்.

online இல் வாங்க விரும்புவோர் MarinaBooks.com இல் இப்போதே முன்பதிவினைச் செய்யலாம் .

 

என் பூக்களின் தீவே

 

அன்புடன்,

ரோசி கஜன்.

 

 

 

நெஞ்சினில் நேச ராகமாய் ! புத்தக வடிவில் !

21731610_817354428446646_702693809425669618_o

அன்பு வாசகர்களே !

‘நெஞ்சினில் நேச ராகமாய்’ இம்மாத இறுதியில் உங்கள் கைகளில் புத்தகமாகத் தவழ இருக்கின்றது.

அழகான அட்டைப் படத்தோடு நேர்த்தியாக அச்சிட்டு வெளியிடும் சிறகுகள் பதிப்பகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் !

வழமை போலவே உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் மக்களே!

வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

புத்தகக் கண்காட்சி ! BMICH – கொழும்பு .

21751281_1996591457221951_153913310983211119_n

 

எதிர்வரும்  செப் 15 முதல் செப் 24 வரை, கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்களை பூபாலசிங்கம் புத்தகசாலையில் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் .

 
Stall number- Hall A 21, 22, 30, 31, 32

காதல் செய்த மாயமோ!(காவ்யா) புத்தக வடிவில்!

18553232_1383988181659961_1803938744_o

 

அன்பு வாசகர்களே!

மிக மிக மகிழ்ச்சியான செய்தி ஒன்றுடன் வந்துள்ளேன்.

‘காவ்யா’ யாருமே மறந்திருக்க மாட்டீர்களே..

இணைய வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், பல அழகிய ரிவ்யுகளையும் தந்து எனக்கு மிக்க நிறைவைத் தந்த கதை.

சந்தோஷ், காவ்யா , சாந்தாம்மா, கலகல அபி மற்றும் வண்ணமயமான கல்லூரிக்காலம்  என நகரும் கதை,  இதோ,  நூல் வடிவில் உங்களை நாடி வரவுள்ளது, 

காதல் செய்த மாயமோ!  எனும் தலைப்பில்!

இதுவரை வெளிவந்த நாவல்களைப் போலவே, இக்கதையும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். 

இந்நேரத்தில்எனது நாவல்களை இதுவரை வெளியிட்ட அருண் பதிப்பகத்துக்கு,  மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

காதல் செய்த மாயமோ! …கதைக்கு ஏற்ப மிகப் பொருத்தமான அழகிய அட்டைப் படம்.. காவ்யாவே நிற்பது  போன்றுள்ளது எனக்கு ..வாசித்தவர்களும் அதை உணரலாம்.

 குறுகிய காலத்தில், மிகவும் அழகுற அச்சிட்டு வெளியிடவுள்ள ‘சிறகுகள்’ பதிப்பகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஜுன் முதல் வாரத்தில் இருந்து புத்தகம் கிடைக்கும், வாங்கி வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.