பாலங்கள் – சிவசங்கரி

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் மூன்று கதைகளை பற்றியது.

1907-1931
சிவகாமுவின் ஏழாவது வயதில் பதினொன்று வயது சுப்புனியுடன் திருமணம் நடக்கிறது. பெரியவளாகும் வரை பெற்றோருடன் வசிக்கிறாள். பதின்மூன்று வயதில் பெரியவளானதும் கணவனுடன் வாழ முறைப்படி புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அடுத்த வருடமே முதல் குழந்தையை பிரசவிக்கிறாள்.

அந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட சம்பிரதாயங்களை சிவகாமுவின் பால்ய விவாகம், பெரியவளாகும் சடங்கு, பிரசவம் ஆகியவை மூலம் ஆசிரியரால் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காலத்தில் ஒரு பெண் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யும் வேலைகளை வாசிக்கும் போது பிரம்மிப்பு ஏற்படுகிறது.

1940-1964
மைதிலி, சுந்தரம்-ராஜத்தின் மூத்த பெண். அவளின் நடனம் பயிலும் ஆசை உட்பட பல ஆசைகள் சுந்தரத்தின் கட்டுக்கோப்பான தாயினால் தடைப்பட்ட போதிலும் ஒருவாறு பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் வக்கீல் வெங்கட் ராமனுடன் திருமணம் நடக்கிறது. வெங்கட் அவளுடன் அன்பாக இருக்கிறான். நாகரிகமாக வாழ விரும்பும் வெங்கட் சில சம்பிரதாயங்களை தவிர்ப்பதால் பெரியவர்களின் மனகசப்புக்கு ஆளாகிறான். இவர்களின் முதல் குழந்தை குறைப்பிரசவத்தில் இறந்த போதும் அடுத்து ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை பிறக்கிறது. வெங்கட்டின் தந்தை இறந்த போது சம்பிரதாயங்களால் பாதிக்கப்படாமல் தாயை காப்பாற்றி பழைய மாதிரியே வாழ வைக்கிறான்.

பழைய சம்பிரதாயாங்களில் இருந்து மாறி புதுமையை ஏற்றுக்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்களை பற்றி இந்த காலகட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

1965-1985
சாருவுடன் அவளது தந்தை மகாதேவன் நண்பனை போன்று பழகுகிறார். மகாதேவனின் நண்பர் கோபாலின் மகன் சுரேஷுடன் அவளுக்கு திருமணமான பத்து நாளில் சாருவுக்கு அவனின் சுயரூபம் வெளிப்படுகிறது. அவனுடன் அனுசரித்து வாழும் போது அவளின் கர்ப்ப காலத்தில் அவனின் இச்சைக்கு இணங்க மறுத்த காரணத்தினால் விலைமாதுவை வீட்டிற்கே அழைத்து வரும்போது சாரு பொங்கி எழுந்து விவாகரத்து பெறுகிறாள். அவளின் பெண் அபர்ணாவின் வாழ்க்கை 1985ல் எப்படி இருந்தது? அபர்ணாவின் பெண்ணின் வாழ்க்கை 1998ல் எப்படி இருந்தது? என்பதே மீதி கதை.


இது சோகமான கதை இல்லை. தலைமுறை இடைவெளியினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி சொல்லும் கதை. வித்தியாசமான கதை வாசிக்க விரும்புவர்கள் இந்த கதை வாசிக்கலாம்.

Advertisements