தொடுவானம் – யத்தனபூடி சுலோச்சனராணி

ஹேமா, தனது அண்ணன் சேஷாத்ரியின் மகன் மதுவுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்கும் ரமேஷின் மீது காதல் கொள்கிறாள். அவனும் தன்னை காதலிப்பதை அறிந்து கொள்கிறாள். ரமேஷ், கல்யாணமானதும் கணவனை இழந்துவிட்ட அவனது தாயின் முறை தவறிய வாழ்வின் மூலம் பிறந்தவன் என்பதால் ஊராரின் உதாசீனத்துக்கு உள்ளாகின்றான். அவனது பிறப்பைப் பற்றி அறிந்திருந்த போதும் சேஷாத்ரி , ரமேஷுக்கு வேலை வாங்கிக்கொடுத்து தமது குடும்பத்தில் ஒருவனாக பார்த்துக்கொள்கிறார்.

ஹேமாவைத் திருமணம் செய்ய மகன் சுதாகர் விருப்பப்பட்டதால் அவர்கள் ஊரின் செல்வந்தரான நாகபூஷணம் ஹேமாவைப் பெண் கேட்டு வரும் போது சேஷாத்ரி ஹேமாவின் அபிப்ராயத்தைக் கேட்காமல் சம்மதம் சொல்லி நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்கிறார். இது தெரியாமல் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று மட்டும் அறிந்து அவசரமாக ரமேஷை வற்புறுத்தி ஹேமா பதிவுத் திருமணம் செய்கிறாள். அன்றைய தினமே ஹேமாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் சேஷாத்ரி அவமானத்துக்காளாகின்றான். ஹேமாவை ரமேஷுடன் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு சேஷாத்ரி குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.

நாகபூஷனத்தின் கடையிலே வேலை பார்த்து வந்த ரமேஷ் இதனால் வேலையை விட்டு நிறுத்தப்படுகிறான். ஆரம்பத்தில் பல நாட்கள் அவனுக்கு வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் போது ஹேமாவின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தியவர்கள் பின்னர் ஹேமாவின் நண்பியின் உதவியுடன் ரமேஷுக்கு வேலை கிடைத்து வாழ்க்கைத்தரம் உயர்ந்து செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்கின்றனர்.

சிறு வயதில் தனது பிறப்பின் காரணமாகவும் பணமின்மையாலும் உதாசீனப்படுத்தியவர்களை தன்னை தேடிவர வைத்து மதிக்கச் செய்வதுக்கு தேவையானது பணம் மட்டுமே என்று தீர்மானித்து ரமேஷ் பணத்தின் பின் ஓடுகிறான். இதனால் ஹேமா – ரமேஷ் இடையே பிரச்சனை சிறிதாக ஆரம்பித்து அவர்களுக்கு மகள் பிறந்த பின்னும் குறையாமல் அதிகரித்து பிரிவு என்ற நிலையில் முடிகிறது. இறுதியில் தமக்கு உயிரான ஒரு உறவை இழந்து தங்களுக்கிடையிலான அன்பை உணர்ந்து சேர்ந்துகொள்கின்றனர்.

எத்தனை பேர் இந்த கதையை வாசிப்பீர்களோ என்று யோசித்து வழக்கத்துக்கு மாறாக கிட்டத்தட்ட முக்கால்வாசி கதையை சொல்லிவிட்டேன். ஆனால் கதையில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் கதையை வாசியுங்கள். காதலிப்பவர்கள் தாம் வீட்டுக்கு தெரியாமல் தமக்கு பிடித்தவரை திருமணம் செய்வது தமது குடும்பத்தினரை எந்தளவுக்கு பாதிக்கும் என்று யோசிப்பதில்லை. இதில் ஹேமாவின் திருமணத்தால் அவளது அண்ணன் குடும்பத்தினர் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அண்ணன் மகன் மதுவின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதையும் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

Advertisements