சங்கமம் – யத்தனபூடி சுலோச்சன ராணி

சிறிய வயதிலேயே தந்தையை இழந்து, நோய்வாய்ப்பட்ட தாயுடனும் தம்பியுடனும் தனது தாய் மாமாவின் வீட்டில் அத்தையின் விருப்பமின்றி வாழ்ந்து வரும் ரோஜா, துணிச்சலானவள். புத்திசாலியாக இருந்த போதும் வசதியின்மையால் தொடர்ந்து படிக்க முடியாமல் சூழ்நிலையின் காரணமாக அவள் தம்பி தவறான வழியில் போகத் தொடங்குகிறான்.

ரோஜாவுடன் நண்பனாக அறிமுகமாகி அவளை ஒரு தலையாக காதலிக்கும் ஆனந்த், பணக்காரன். ஆனந்தின் சொத்துக்களுக்கு பாதுகாவலனான இருக்கும் அவன் அப்பாவின் முதல் மனைவியின் மகனான பிடிவாதக்காரனான விஜய், ரோஜா – ஆனந்தின் உறவை அறிந்து ஆனந்தை விட்டு விலகி விடும்படி ரோஜாவிடம் சொல்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் விஜய்யினால் அவமானப்படுத்தப்படும் ரோஜா ஆனந்தைக் காதலிக்காத போதும் அவனை திருமணம் செய்வதற்கு சம்மதம் சொல்கிறாள். ரோஜா – ஆனந்தின் திருமணம் நடந்ததா? அல்லது விஜய்யினால் நிறுத்தப்பட்டதா?

வறுமையின் காரணமாக ஆனந்தின் உதவியுடன் அவனின் தந்தையின் நண்பரும் அவன் வீட்டிற்கு அருகில் வசிப்பவருமான வேணுகோபாலனின் வீட்டிற்கு வேலைக்கு செல்கிறாள் ரோஜா. ரோஜாவின் வரவு, தனது மூத்த மகளின் நடவடிக்கைகளினால் மன நிம்மதியின்றி தவிக்கும் வேணுகோபாலனிற்கு நிம்மதியளித்ததா அல்லது மன வேதனையை அதிகரித்ததா?

தவறான பாதையில் செல்லும் ரோஜாவின் தம்பியின் எதிர்காலம் என்னவாகிறது? அவன் திருந்துகிறானா?
கரடுமுரடான பாதையில் கொடூரமான விலங்குளை எதிர்கொண்டு பயணிக்கும் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தை எப்படி சென்றடைகிறாள் என்பதை பலவிதமான உணர்ச்சிகள் நிறைந்த சம்பவங்களின் மூலம் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

Advertisements