EPT- 13 by Rosei Kajan

13.

நாட்காட்டியின் தாள்கள் ஒருவித இலாவகத்துடன் புரண்டு கொண்டிருந்தன!

கடந்து சென்ற ஒவ்வொரு தினமும் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றங்களை உரசிச் சென்றிருந்தன!

அகல், எந்த நோக்கில் ஊரிலிருந்து யாழ் வந்திருந்தாளோ அதை செவ்வனே செய்து முடித்த திருப்தியில் பரீட்சை முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்; யாழில் அல்ல, தன் ஊரில்!

“எக்ஸாம் ரிசல்ட்ஸ் வரும் வரை அம்மா அப்பாவோடு நிற்கப் போகிறேன் ஆன்ட்டி; அக்காவும் இல்லாமல் அவர்களும் பாவம் தானே?” என்று ஊருக்குச் சென்றுவிட்டாள் அவள்.

“அப்ப நாங்களும் பாவம் தானே? கம்பஸ் முடிந்த கையோடு வருணும் கொழும்பு போய்ட்டான்; ப்ரைவேட் வேலை என்றாலும் மனதுக்குப் பிடித்த வேலை; அதைச் செய்து கொண்டே கொழும்பு கம்பஸில் மாஸ்டர்ஸ் செய்யப்போகிறேன் என்று அவன் ஒருபக்கமாகப் போக, நீயும் இப்படிப் போனால் வீடே வெறிச்சென்று கிடக்கும்மா!” அவளைத் தம்மோடு நிறுத்திக்கொள்ளும் நோக்கில் சொன்னார் செல்வி.

“உங்க மகன் வெளிநாடு போற ஆசையை விட்டிட்டு இப்படி கொழும்போடு நின்றுட்டார் என்று சந்தோசப்படுங்க ஆன்ட்டி; இல்லையோ வெள்ளைக்காரிதான் மருமகளாக வந்திருப்பாள்!” வருண் இல்லை என்கின்ற துணிவில் கேலியாகச் சொன்னவளை செல்லமாக முறைத்தார் செல்வி.

“ஏன்மா உனக்கு இவ்வளவு நல்லெண்ணம்!? அவன் மட்டும் இதைக் கேட்க வேண்டும்!” என்று கடிந்து கொண்டவருக்கு குறும்பாகக் கண்ணடித்துவிட்டு, “இப்ப பொறுத்திருந்து பாருங்க, சிங்களத்தி தான் உங்க வீட்டு மருமகள்…வெளிநாட்டுக்காரியை விட உள்நாட்டுக்காரி கொஞ்சம் பரவாயில்லைதானே?” விடாது கிண்டல் செய்தாள்.

“உனக்கு அவன் இல்லாமல் குளிர்விட்டுப் போச்சு; இரு சொல்லித்தாரேன்.” என்று மிரட்டிய செல்வியிடம், “சொல்லுங்கோ சொல்லுங்கோ, யார் வேண்டாம் என்றா? நாங்க இங்க அவருக்கு பயந்து கொண்டுதானே இருக்கிறம்!” என்று வம்பு செய்துவிட்டு, “கொஞ்சநாளில் கம்பஸ் கிடைக்க உங்களோடுதானே வந்திருக்கப்போறன்; அதுவரை, அங்கிளும் நீங்களுமாக ஜாலியாக இருங்கோ!” என்று சென்றிருந்தாள்.

“சண்டைபோட்டுக்கொண்டு என்றாலும் பிள்ளைகள் இரண்டு பேரும் இருக்கும் போது எப்படி கலகலவென்று இருந்த வீடு இது! இனி எப்போ அப்படி மாறும்?” என்ற ஏக்கத்தோடு இருந்தார்கள் செல்வி சந்திரன் தம்பதிகள்.

அகலின் பரீட்சை முடிந்த கையோடு ராகவன், அனு பதிவுத்திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.

“கல்யாணத்தை எப்படியும் யாழ்ப்பாணத்தில் தான் செய்ய வேண்டும்; அதுதான் எல்லோரும் வந்து போக வசதியாக இருக்கும்.” என்று மணமகன் வீட்டார் விரும்ப, “அப்ப, எழுத்தை கொஞ்சம் பெரிசா ஊரில் செய்யலாம்; அகலின் பரீட்சை முடிந்ததும் வரும் நல்ல நாளில் செய்வோம்!” என இருபகுதியினரும் பேசி முடிவெடுத்தபடி, சட்டப்படி அனு ராகவனின் மனைவியாகியிருந்தாள்.

“கல்யாணத்தை ஒருவருடம் கழித்தே வைத்துக்கொள்வோம்!” என்றனர் மாப்பிள்ளை வீட்டினர். அதையே ராகவனும் விரும்பினான். அவனுக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் அனுவோடு நன்றாகப் பழகி ஒருவர் ஒருவரை புரிந்துகொள்ள வேண்டும்  என்கின்ற அவா!

அதற்கு முதற்படியாக, பதிவுத்திருமணம் முடிந்த கையோடு, “அனுவும் கொழும்பு வரட்டும்; என்னோடு தங்கலாம்!” என்று தொடங்க, “இப்பவே ஏன் தம்பி? கல்யாணம் முடிய கொழும்பில் தானே இருக்கப்போகிறாள்; அதுவரை பிள்ளை எங்களோடு நிற்கட்டுமே!” உள்ளே எழுந்த மறுப்பை மறைத்து, பேத்தியை பிரிய விருப்பமில்லாத பாவனையில் சொல்லிவிட்டார் சிவாவின் அன்னை தங்கம்மா.

“அதில்ல பாட்டி, இங்க இருந்து என்ன செய்வது? அங்க வந்தால் தொடர்ந்து படிக்கலாம்; வேலை வேண்டுமென்றாலும் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன். வெளியிடங்களை பழகியதாகவும் இருக்குமே!” பொறுமையாகவே எடுத்துரைத்தான் ராகவன்.

“ராகவன் அண்ணா சொல்வதும் சரிதான்; இங்க இருந்து அந்த பள்ளிப்பிள்ளைகளுக்கு போக்கு காட்டாமல் பேசாமல் கொழும்புக்கு வெளிக்கிடும் அனு; நானும் இனி கொஞ்சநாளைக்கு அங்க தானே? யார் கண்டா, நிரந்தரமாகவே அங்க இருந்தாலும்  இருந்திருவன்.” இடையிட்டான் வருண்.

“நல்லா சொன்னாய் போ, எங்களுக்கு இருக்கிறதோ நீ ஒருத்தன் தான்; இந்த அழகில்  நீ அங்க இருந்தால்  நாங்க?” என்றார் செல்வி.

“அதுதான் உங்க செல்லம் இருக்கிறாளே பிறகென்ன!” ஓரமாக நின்றிருந்த அகலை பார்வையால் சீண்டினான் வருண்.

அதற்கு அவள் எதையோ சொல்ல முனைய, “முக்கியமாக கதைத்துக்கொண்டிருக்க நீங்க உங்கட சின்னப்பிள்ளை விளையாட்டை ஆரம்பிக்கிறீங்களா?” சிவா தான் தடை போட்டார்.

“என்னதான் இருந்தாலும்…” என்று தடுமாற்றத்தோடு இழுத்த சிவா யோசனையோடு தாயைப் பார்த்தார்.

திருமணம் செய்ய முன் மகளை மருமகனோடு அனுப்ப அவர் மனமும் ஒப்ப மறுத்தது. ‘எழுத்துக்கு முன்னர் இது பற்றி ஒருவார்த்தை சொல்லியிருந்தால் ஒரேயடியாக கல்யாணத்தையே  செய்திருக்கலாமே!’ என்ற எண்ணமே அவருள்!

“ஹ்ம்…இப்படி ஒரு எண்ணம் இருந்தால் ஒரேயடியாக கல்யாணத்தை முடித்து கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே தம்பி; எங்களுக்கும் நிம்மதியாக இருக்கும்.” மகனின் மனதை பிரதிபலித்தார் தங்கம்மா.

‘இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? திருமணம் என்ற பந்தத்தில் இணைய முன்னரான காலம் சிறிதோ பெரிதோ அது மீண்டும் ஒருதரம் வந்திடுமா என்ன?’ மனதில் முணுமுணுத்தான் ராகவன்.

அதை இயன்றளவு துளித்துளியாக ரசித்து அனுபவிக்க விரும்பினான் அவன்.

‘அவனவன் கேர்ள் ஃப்ரெண்ட் என்று எப்படியெல்லாம் திரிய நானோ என்னோடு வாழ்வில் கைகோர்க்க இருப்பவளுக்காக பொறுமையாகக் காத்திருந்து கண்டுகொண்டேன். அவளோடு சிலகாலம் எனக்கு விருப்பமான மாதிரி இருந்திட்டு பிறகு கல்யாணம், குழந்தை என்று பொதுவான வாழ்வில் ஓடுறேனே!’ மனதுள் தான் சொல்லிக்கொண்டான்.

சட்டென்று அமைதியாகிவிட்ட ராகவனின் முகத்தைத்தான் பார்த்திருந்தார் சந்திரன். பின்னர் சிவாவை ஏறிட்டவர், “இப்படிச் செய்தால் என்ன சந்திரன்? சின்னப்பிள்ளைகளின் ஆசையை கெடுத்ததாகவும் இருக்க வேணாம்; நம்ம வரை முறைகளை மீறியதாகவும் இருக்கவேணாம்.” என ஆரம்பித்தவர்,

“அனு, கொழும்பு போகட்டும் சிவா; தம்பி சொன்னது போல விருப்பமானதை படிக்கட்டும்; வெள்ளவத்தையில் நல்ல லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு, அங்க இருந்து படிக்கட்டுமே!” என்று அவர் சொன்னதை அவ்வளவாக விருப்பமே இல்லாது தான் அனு வீட்டினர் ஏற்றார்கள்.

அதேபோல, ‘நான் சொந்தவீட்டில் இருக்க என் வைஃப் ஹாஸ்டலிலா?’ மனச்சிணுக்கத்தோடுதான் சம்மதித்தான் ராகவன்.

இதைப்பற்றிக் கதைக்கையில்(பேசுகையில்) எவ்வித விருப்பத்தையும் தெரிவிக்காது தந்தை, தாய், பாட்டி முகத்தைப் பார்த்திருந்த அனுவிலும் அவனுக்கு மிகுந்த மனவருத்தம் தான்.

வெளிநாடு செல்லும் மணமகள்களை எத்தனையோ சமயங்களில் திருமணப்பதிவு கூட செய்யாது அனுப்பி விடும் காலமல்லவா இது?!

‘அத்தூரமிருக்கும் ஆண் ஒருவனில் அத்தனை நம்பிக்கை வைக்கும் காலத்தில் போய்…ச்சே! இதுவே அகல் என்றால் பட்டென்று தன் மனதில் பட்டதை சொல்லியிருப்பா; அந்தளவு துணிவு இவவுக்கு இல்லை!’ இவன் மனச்சுணக்கத்தை அதிகரித்தது இந்நினைவு!

“எழுத்து முடிஞ்ச பிறகும் என்னில் அந்தளவு நம்பிக்கை இல்லையா? தாலியில் உள்ள நம்பிக்கை காலம் முழுதும் ஒன்றாக இருக்கப் போறவன் மீது இல்லையா?” தாயிடம் வெகுவாகவே புறுபுறுத்திருந்தான்.

அவன் தாயோ வேறு சொன்னார்.

“இதென்ன தம்பி உன் கதை!? நீ என்ன வெளிநாட்டுக்காரனே!” என்ற லக்ஷ்மி, மகனின் முறைப்பை கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை.

“இங்க பாரப்பு(பார் அப்பு), எனக்கு ஒருமகள் இருந்திருந்தால் நானும் இதைத்தான் சொல்லியிருப்பன். உனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் நீயும் இப்படித்தான்யா சொல்லியிருப்பாய். சரி மனதுக்குப்பிடித்தவளோடு இருக்க விரும்பினால் அதில் யாரும் பிழை காணவில்லையே! கல்யாணத்தைச் செய்து கூட்டிப் போகாதே என்று இப்போ யார் சொன்னா?”

“என்னம்மா உங்க கதை? கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததுமே நீங்க தானே ஒருவருடத்தால் வைப்பதுதான் வசதி என்று சொன்னீங்க! ‘நம்ம வீட்டில் நடக்க இருக்கும் முதல் கல்யாணம், சித்தி, அம்மம்மா ஆட்கள் எல்லாரும் கனடாவிலிருந்து வர அதுதான் வசதி’ என்று சொல்லீட்டு, இப்ப இப்படிச் சொல்லுறீங்களே!” அலுப்போடு சொன்னான் அவன்.

“அடப்போடா! அவசரமாக இப்பவே வைக்கப் போறம் என்றால் அவர்களால் முடிந்தால் வருவார்கள், இல்லையோ பிறகு வந்து பார்க்கட்டுமன். நீ உன் மனதில் அப்படியொரு எண்ணம் இருந்திருந்தால் சொல்லியிருக்கலாமே!”

“சரி விடுங்க… இனிக் கதைத்துப் பிரயோசனம் இல்ல; ஒருவருடமும் பார்த்திருக்க பறந்து போய்விடும்; அதுக்குள்ள கொஞ்சம் வெளியிடங்களை அனு பழக வேண்டும்மா; அகல் போல இல்லை அவள், அனலைதீவை விட்டு வெளியே போனதே இல்ல போல!” என்றவன்,  “நான் இருக்கப் போறது கொழும்பில, அதுக்கேத்த மாதிரி அவள் தன்னை மாற்றிக்கொள்ள காலம் கொஞ்சம் தேவைதானே?” என்றதும், மகனை முறுவலோடு பார்த்தார் லக்ஷ்மி.

“இதெல்லாம் நீங்களாச்சு உங்க பாடாச்சு ராசா, அவளை விரும்பிக் கேட்டுக் கல்யாணம் செய்யப்போகிறாய்; எப்பவும் இந்த அன்போடு இருங்க; எங்களுக்கு அதுதான் வேணும்!” மகன் முகத்தை பாசமாய் வருடியவாறே சொன்னார்.

“என்னதான் சொல்லு, கொஞ்ச வெளியிட அனுபவம் இல்லையே ஒழிய மற்றும்படி பாந்தமா குடும்பம் நடத்துற கெட்டித்தனம் உள்ளவளாகத் தான் வளர்த்திருக்கிறார்கள்!” மருமகளை பாராட்டிய தாயோடு எதிர்வாதம் புரிய நினைக்கவில்லை அவன்.

‘அதை அவனும் அறிந்தே இருந்தான். நவீன நாகரீக அறிமுகம் மிக மிகக் குறைவாக இருந்தாலும், அறிவு, சுறுசுறுப்பு, கனிவு, பொறுமை என்று அனைத்தும் அவளிடம் இருக்கு!’ மனம் முணுமுணுக்க மகிழ்வோடு கொழும்பு செல்லும் ஏற்பாட்டில் இறங்கினான்.

பதிவுத்திருமணம் முடிந்த சிலதினங்களில் அனு, அவள் தந்தை, ராகவன், வருண் நால்வரும் கொழும்பு நோக்கி புறப்பட்டிருந்தார்கள்.

“தெஹிவள ஹில்ஸ் ஸ்ட்ரீட்டில் இருக்கு என் அபார்ட்மென்ட்; இரண்டு படுக்கை அறைகள், குளியலறை, ஓரளவு அகன்ற வசதியான வராண்டா, பால்கனி, குசினி என்று அளவான வீடு!” என்ற ராகவன், வருணை தன்னோடு தங்கிக்கொள்ளும்படி அன்போடு சொல்லி, சம்மதமும் பெற்றிருந்தான்.

மறுபுறமோ, விடுதி வாழ்வின் அறிமுகம் அனுவுக்கு முற்றிலும் புதுவகையாக இருந்தது.

வார்டன் என்று அறிமுகம் செய்த பெண்மணியின் கண்களின் இருந்த கூர்மை அங்கிருக்கும் பெண்களின் மனதைப் படித்துவிடும் தீர்க்கத்தோடு சுழன்றது.

“நீங்க இரண்டு பேர் இருக்கும் அறை விரும்பிக் கேட்டிருந்தாலும் இப்போ அது வேக்கன்டாக இல்லை; டோமட்டரி(dormitory) தான் இருக்கு; எட்டுப்பேர் இருப்பார்கள்; பெட், கப்பெர்ட் தனித்தனியாக இருக்கும்; போதியளவு குளியலறை, கழிப்பறை வசதி எல்லாம் இருக்கு; சாப்பாடு கடையில் வாங்கிக்கொள்ள வேணும்; சிக் என்றால் தனியாக வந்து தங்கிக்கொள்ள வேணும்…” விடுதி நடைமுறைகளையும் சட்டதிட்டங்களையும் படபடவென்று முன்வைத்த விடுதிக்காப்பாளர், சிக்கன முறுவலோடு அவளுக்கான தங்குமிடத்தை கூறிவிட்டு அகன்றிருந்தார்.

“கவனமாக இருந்து கொள்ளம்மா; ஒவ்வொருநாளும் ஃபோன் எடு; அப்பா அடிக்கடி வந்து பார்த்துக்கொள்ளுறன்.” தனியாக மகளை விட்டுச் செல்லும் தவிப்பை மறைத்த குரலில் விடைபெற்றிருந்த சிவா, “பார்த்துக்கொள்ளுங்க தம்பி…உங்களை நம்பித்தான்…” என்றவாறே ராகவன் கரத்தை இறுகப்பற்றிக்கொண்டவர் அதிகம் கதைக்க முடியாது தடுமாறிவிட்டார்.

“இதென்ன மாமா? அனு என்னுடைய வைஃப், நீங்க எதுக்கும் யோசிக்கத் தேவையில்லை.” ஆதரவாக அவன் சொன்ன வார்த்தைகளை நம்பாதிருக்க முடியுமா? அதுதானே உண்மையும்.

இதைப்பார்த்தவாறே அருகில் நின்ற வருண் சிவாவை அன்போடு பார்த்தான்.

“அனு என்ன சின்னப்பிள்ளையா அங்கிள்; அதோடு நானும் இங்க தானே இருக்கிறன்.” என்றவன், “உங்க மகளுக்கு ராகவன் அண்ணா மட்டுமே போதும்; எங்களை இனி கண்ணிலும் தெரியாது தான்; என்றாலும், நானும் இருக்கிறன் கவலைப்படாமல் ஊருக்கு போங்கோ!” கலகலத்திருந்தான்.

அவர்கள் மூவரும் விடைபெற்றுச் சென்றபோது புத்தம் புது தனிமையின் வாசத்தை அவள் ஒன்றும் அவ்வளவு இனிமையாக நுகரவில்லைதான்.

தவிக்கும் மனதோடு மூன்றாம் தளத்திலுள்ள தனக்கான இருப்பிடம் வந்தடைந்தவளை அவளோடு அறையை பகிர்ந்து கொள்ளவுள்ளவர்கள்  இன்முகமாகவே வரவேற்றார்கள்.

அங்கிருந்த நான்கு பேர், பாடசாலை உயர்தர வகுப்பு(பிளஸ் வன்/டூ) மாணவிகள்; மலையகத்தை சொந்த இடமாகக் கொண்டவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள்; சிநேகமாக முறுவலித்து அறிமுகம் செய்து கொண்டார்கள்.

மற்றைய மூவரும் வேலைக்குப் போய்க்கொண்டே படித்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி தனியார் தொலைகாட்சியில் வேலை செய்வதாக அறிமுகம் செய்துகொண்டவள், சற்று நேரத்தில் அக்கா அக்கா என இவளோடு சிநேகம் ஆகி விட்டாள்.

இவளுக்கும் அதுவரை மனதில் உருவெடுத்திருந்த தயக்கமும் பயமும் மெல்ல மெல்ல விலகியிருந்தது. இதுவரை மூச்சு முட்டுவது போலுணர்ந்தவள் அதிலிருந்து விடுபடுவதாகவே இப்போது உணர்ந்தாள்.

‘எல்லாம் பழகத்தானே வேணும்!’ என்ற எண்ணத்தோடு உள்ளவளுக்கு அது அவ்வளவு கடினமாகவும் இருக்கவில்லை.

ராகவனின் நாகரீக பழக்கவழக்கங்களுக்கு தோதாக தன்னைத்தான் மாற்றிக் கொள்ளவேண்டும் என்கின்ற முடிவில் உள்ளவளுக்கு இத்தனிமையும், திருமணம் வரையிலான காலப்பகுதியும் மிகவும்  பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணமே! அதனால், சமாளித்துக்கொள்ளலாம் என்ற துணிவு பெற்றிருந்தாள்.

‘இந்த ஒருவருடத்தில் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக்கொள்ள வேணும், கம்புயூட்டர் கோர்ஸ் செய்ய வேணும்…” இப்படி மனதில் எண்ணமோட  தன் பொருட்களை அங்கிருந்த சிறு அலுமாரியினுள் அடக்குவதில் முனைந்தாள் அனு.

“அக்கா! நாங்க இரவுச்சாப்பாடு வாங்கப் போறோம்; உங்களுக்கு என்ன மாதிரி?” என்று ஒருத்தி கேட்க, “நான் வரும் போதே வாங்கிக் கொண்டுவந்துவிட்டேன்; நீங்க போயிட்டு வாங்க.” முறுவலோடு பதில் சொன்னவள் கைபேசி ஒலிக்கவே அதில் ஒளிர்ந்த ராகவன் என்ற பெயரைப் பார்த்து முறுவலித்தவாறே எடுத்துக் கதைக்கத் தொடங்கினாள்.

“என்ன செய்து கொண்டு இருக்கிறீர்? இடம் பிடித்திருக்கா? ஓரளவுக்கு என்றாலும் வசதியாக இருக்கா?” மென்மையாக வந்து வருடியது அவன் கம்பீரக்குரல். இவள் பதில் சொல்ல முனைய முன் அவனே தொடர்ந்தான்.

“இவ்வளவு அருகில் நான் இருக்க நீர் எங்கோ ஹாஸ்டலில் ஏழோடு எட்டாக இருக்கப் போறீர்! எனக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை அனு. ஹ்ம்…என்ன செய்யிறது? பெரியவர்கள் சொல்வதை சிலநேரம்..பச்…” அப்பட்டமாகவே அலுத்துக்கொண்டான்.

என்னதான் பெரியவர்கள் எடுத்துச் சொல்லியிருந்தாலும் ‘என்னோடு என் மனைவி தங்கிக் கொள்வதில் என்ன வந்துவிடும்? அதுவும் சட்டப்படி கல்யாணம் முடிந்தபின்!’ எனும் வாதத்தில் தவறு காண அவன் சற்றும் தயாராக இல்லையே!

என்னதான் நமக்கே நமக்கான கட்டுப்பாடுகள் முறை தழைகளைச் சொல்லிக்கொடுத்து அப்படியான சுழலில் இவன் வளர்ந்திருந்தாலும் ‘காலமாற்றத்துக்கு ஏற்ப, முக்கியமாக நம்ம வசதிக்கேற்ப வாழ்வதில் என்னவாகிவிடும்!?’ என வாதிடுபவன் இவன். அதுவே, சட்டப்படி மணந்த பின் அவள் தன்னோடு இருந்தால் என்ன என்கின்ற வாதத்தை முன்வைக்கத் துணிந்தது.

“விறுவிறுவென்று வந்து உம்மை இங்கு கூட்டிக்கொண்டு வரவேண்டும் போல இருக்கு!” படபடவென்று தொடர்ந்தவனுக்கு பதில் சொல்லவில்லை அவள்.

அவன் தன்னில் காட்டும் அதீத உரிமை உணர்வை இந்த சிலநாட்களில் தெளிவாகவே உணர்ந்திருந்தவளுள் புளகாங்கிதம்(பெருமகிழ்ச்சி) எழாதில்லை. இப்போதும் இது அவளுக்கே அவளுக்கான கவலையல்லவா?!

ஆதலால், மென்மையான முறுவல் இதழ்களை அலங்கரிக்க அவனைச் சமாதானம் செய்விக்க முயன்றாள்.

“அதுதான் ஒவ்வொரு நாட்களும் சந்திக்கப் போறோமே ராகவ்; பிறகென்ன? இரவில் தங்குவதுதான் வேறு வேறு இடம்; அதுவும் ஒருவருடம் கண் மூடித்திறக்க முதல் பறந்து போய்விடும்!”

“அதுசரி, உமக்கு உண்மையில் என்னோடு இருக்கவேணும் என்று விருப்பம் இல்லைதானே?” முறுக்கினான் அவன்.

“யார் அப்படிச் சொன்னது? நீங்களாக அதையும் இதையும் நினைத்துக்கொள்ளாதீங்க ராகவ் ” மெலிதாக வந்து மோதிய அவள் குரலில் இவன் முகத்தில் முறுவல்! மனதிலும் தான் மெல்லிய தென்றலின் தழுவல்!

அவள் இப்படிச் சிறிதாகவேனும் தன் அன்பை அவன் பால் வெளிபடுத்திவிட்டால் போதும், அது அவனை பெரிதும் பரவசப்படுத்தி விடும்.

எப்போதாவது கிடைக்கும் எதற்குமே பெறுமதி அதிகம் அல்லவா?

அப்படித்தான் அனுவும் தன் மனதை எப்போதாவதுதான் இப்படி வார்த்தைகள் மூலம் காட்டுவாள். அதில் லயித்திருந்தான் அவன்.

அவன் மௌனத்தை சிறு சங்கடத்தோடு உணர்ந்தவள் அவன் கவலைப்படுகிறானே என எண்ணி, “விருப்பம் எல்லாம் தாராளமாகவே இருக்கு ராகவ்! ஆனாலும், எதுக்கும் ஒரு முறை இருக்கே! பிறகு என்ன செய்வதாம்? பெரியவர்கள் நம்ம நன்மைக்காகத்தானே சொல்கிறார்கள். அதுவும், சில விடயங்களை அவர்களால் அவ்வளவு இலகுவாக உதற முடியிறதில்லை.” மெல்லிய குரல் என்றாலும் அவள் பேச்சில் எப்போதுமே இருக்கும் உறுதி இப்போதும் இல்லாமல் இல்லை.

“நல்ல முறைதான்! இதே வெளிநாடு என்றால் எழுத்தும் இல்லாமல் அனுப்பி வைப்பீனம்!” இவன் முறுக்குவதை குறையேன் என்றான்.

அதற்கு பதில் சொல்ல முனையாதவள், “நாளைக்கு எத்தனைக்கு வருவீங்க?” என, அழகாகப் பேச்சை மாற்றினாள்.

“காலையில் அரைநாள் லீவு சொல்லியிருக்கிறேன் அனு; நேரத்தோடு வாறன்.” என, சிறிது நேரம் கதைத்துவிட்டு வைத்தவன், மறுநாளே கணனி கற்கையில் சேர்த்துவிட்டதோடு நிற்காது, “உமக்கு ஹாஸ்டலில் இருந்து நடந்து போகும் தூரம் தான்!” எனக்கூறி, பறங்கி பெண்மணியிடம்(Burgher)   ஆங்கிலமும் சிங்களமும் படிக்கவும் சேர்த்து விட்டிருந்தவன், “ ஒருவருஷம் டைம் தரலாம்; அதுக்குள்ள எல்லாம் படித்துவிடவேணும்; கல்யாணத்துக்கு பிறகு புத்தகத்தை தூக்கிக்கொண்டு திரிய நினைக்காதேயும்!” செல்ல மிரட்டலும் விட்டிருந்தான்.

அடுத்ததாக, “இப்படி நீள ஸ்கர்ட் பிளவுஸ் உங்க ஊருக்கு சரி அனு, இங்க கொஞ்சம் நல்லதா வாங்குவோம் வாரும்” என்று கடைகளுக்கு அழைத்துச் சென்று அவளை ஒரு வழி பண்ணிவிட்டான்.

“இங்க வர முதல் அகலும் நானும் நிறையவே வாங்கினோம் ராகவ்; இப்ப இவ்வளவு வேண்டாமே! முதல் இந்த கலர் எல்லாம் எனக்கு விருப்பமில்லை.” என்று அவள் திரும்பத் திரும்பச் சொன்னதை அவன் கருத்தில் கொள்ளவேயில்லை.

தனக்குப் பிடித்தவை, அவளுக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும் என்று எண்ணியதையெல்லாம் வாங்கியவன், புடவைக்கடையில் இருந்து கைகொள்ளா பைகளோடு வெளிவரும் போது தன்னவளுக்கு வாங்கிய பெருமிதத்தோடு வர,  தனக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கினான் என்பதையும் மீறி, ‘எனக்கு விருப்பமே இல்ல, இந்த கலர் நான் போடவே மாட்டேன் என்கிறேன் அதுக்குப் பிறகும் எடுத்துக்கொண்டு வாறாரே! தான் நினைத்ததும் அதைச் செய்ய வேண்டும், மற்றவர் விருப்பம் பற்றி அக்கறை இல்லை.” என்ற எண்ணம் இவளை மோதிச் சென்றது.

ஆனாலும், ‘சரிடி சரி, சின்ன விஷயத்துக்கு பெரிய கதை வேணாம்! உனக்காக நன்றாக இருக்கும் என்று பார்த்துப் பார்த்து வாங்கித் தந்தாலும் குற்றமா?’ மனதுள் தன்னைத்தான் குட்டி சமாதானம் ஆகிக்கொண்டாள்.

வாங்கிக் தந்ததோடு என் வேலை முடிந்தது என்றும் அவன் அமைதியாக இருக்கவில்லை.

“அன்றைக்கு வாங்கிய அதை இன்றைக்கு போடும்.” என்று ஒவ்வொன்றையும் போட்டு அழகு பார்க்க, சிலவேளைகளில், அணிய விருப்பமே இல்லாது அவன் சொன்னான் என்பதற்காக அணிந்து அசௌகரியமாக உணர்கையில், ‘தனக்குப் பிடித்தால் செய்துவிட வேண்டும்!’ மீண்டும் மனச்சுணக்கம் கண்டிருந்தாள் அவள்.

ஆனால் என்ன? வேலை முடிந்த கையோடு, விழுந்தடித்துக்கொண்டு வந்து ஹாஸ்டல் வாசலில் இவளுக்காகக் காத்திருப்பதைப் பார்க்கையில் இப்படியான சின்னச்சின்ன மனச்சிணுக்கங்கள் எல்லாமே வெம்மையில் கரையும் பனித்துளியாக மறைந்தே போய் விடும்.

அப்படியிருந்தும் சிலவேளைகளில் தன் அதிருப்தியை வாய்விட்டே சொல்லியும் இருக்கிறாள்தான். அதை அவன் அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவே இல்லை.

“ஹலோ! எனக்குப் பார்க்க அழகாக இருக்கு என்று சொல்லுறேன்; உமக்கு நம்பிக்கை இல்லையா? முதல், உமக்கு என்ன தெரியும்? அனலைதீவில் போடுவதெல்லாம் இங்க சரிவராதும்மா!” என்று கேலி செய்து விடுவான்.

சிலேவேளைகளில் வருணிடம் சொல்லி அவனோடு சேர்ந்தும் கேலி செய்வான்.

அப்படியான நேரங்களில் மனம் சுண்டினாலும் சமாளித்துக் கொள்பவளுமே ஒரு கட்டத்தில், ‘அவர் சொல்வதும் சரிதானே, நம்மை பார்க்க நல்லா இருக்கிற மாதிரி உடுத்து என்றால் அது ஒரு குற்றமா?’ என்று அவனையே நியாயப்படுத்திவிடுவாள்.

இப்படி, இருவருமே, வாழ்வில் கைகோர்த்த புது உறவுடனான கடக்கும் கணங்களை, எப்படி, தாம் விரும்பியவாறு கழிக்க நினைத்தார்களோ அதில் அப்பப்போ தடங்கல்கள் தம் மனம் விரும்பியவர் மூலமே வந்தாலும், அகமும் புறமும் சுளித்தாலும், அடுத்த நிமிடம் மறக்கச் செய்தது அவர்களுள் புத்தம் புதிதாக மலர்ந்திருந்த நேசப் பூவின் வாசம்!

தினமும் வேலை முடிந்து அரக்கப் பறக்க வீட்டுக்கு சென்றுவிட்டு அதேவேகத்தில் அவளிடம் வருபவன் எங்காவது அழைத்துச் சென்றுவிட்டு  இரவுணவையும் முடித்துக்கொண்டு ஹாஸ்டலில் இறக்கி விட்டுச் செல்வான்.   அப்படியான நேரங்களில், “களைத்துப் போய் வந்த வேகத்தில் வரவா வேணும் ராகவ்?” என்று அவனுக்காகவே இவள் பேசத் தொடங்கினாலும் முகமும் மனமும் சுருங்கிப் போவான் அவன்.

‘நான் எவ்வளவு ஆசையோடு ஓடி வர இவளுக்கு அப்படியொரு உணர்வே இராதோ?’ இப்படியும் சமயத்தில் எண்ணிவிடுவான்.

வாய்விட்டே கேட்கவும் செய்வான். பதிலுக்கு, “ஹைய்யோ நீங்க பாவம் என்று கேட்க வந்தால் இப்படியா விளங்கிக் கொள்வீங்க?” கண்டிப்போடு கேட்டுவிடுவாள் அவள்.

“பின்ன என்ன? எவ்வளவுதான்  களைப்போ அசதியோ இப்படி வெளியில் சுற்றிவிட்டு வர எல்லாம் மறந்து போகும்…அதுவும் உம்மோடு இருந்தால்..” என்று அவன் சொன்னால், ”ஹ்ம்ம் ஒருநாள் இரண்டுநாள் என்றால் பரவாயில்லை தினமுமா? எனக்கு என்றால் வேலைக்கு போயிட்டு களைப்பு போக வீட்டில் ஆறுதலாக இருக்கத்தான் பிடிக்கும்; அதுவும் ஒரு கதைப்புத்தகத்தோடு…” என்று ஆரம்பித்தால் அவனோ முறைத்து வைப்பான்.

“சரி சரி உங்களோடு கதைத்துக்கொண்டிருப்பது என்றாலும் வீட்டில் இருப்பது எவ்வளவு சந்தோசம்!  அதைவிட்டு விட்டு இப்படி ரெஸ்டாரன்ட், பார்க், பீச் என்று அலைந்து ..” என்பவளை இடைவெட்டுவான் ராகவ்.

“அதையேன் அலைச்சல் என்று எடுப்பான் அனு! மனதுக்குப் பிடித்தவர்களோடு கதைத்துக்கொண்டே இப்படிச் சுற்றுவதை முதல் ரசிக்கக் கற்றுக்கொள்ளும்..” என்று ஆரம்பிப்பவன், இப்படி நடக்க வேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று ஒரு மூச்சு சொல்லிவிட்டே ஓய்வான். அதைக் கேட்கையில் சிலவேளைகளில் கேலி மின்ன நகைத்துவிடுவாள் இவள். அதற்கும் சேர்ந்து முணுமுணுப்பான் அவன்.

நண்பர்களின் பிறந்தநாள் விழாக்கள், ஒன்று கூடல்கள் என்று அனைத்துக்கும் அவள் விரும்பாவிட்டாலும் அழைத்துச் சென்றுவிடுவான் ராகவன்.

“எத்தனை நாட்களுக்கு விருப்பம் இல்லை என்று ஒதுங்குவீர்? எப்படியும் இதையெல்லாம் பழகத்தானே வேண்டும்!” என்று அழைத்துச் சென்று, அவன் கூடவே இருந்தாலும் பலநேரங்களில் முள்ளில் இருப்பதுபோல இருந்துவிட்டு, அமைதியாக வராது, வரும் வழியில் தன்மனதில் பட்டதை சொல்லியும் விடுவாள் அனு.

“ஹப்பா! எப்போதடா முடியும் என்று இருந்திச்சு!” என்ற அவள் கூற்று அவனுக்கு என்ன உவப்பானதாகவா இருக்கும்!? எப்போதும் இப்படியான விழாக்கள், நிகழ்வுகளை மிகவும் விரும்பி ரசிப்பவன் அவன்.

“இப்படியெல்லாம் தட்டிக் கழிக்க முடியாது!” செல்லமாக ஆரம்பித்து, “ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் பழகப் பழகச் சரியாகிடும்.” என்று சொன்னாலும், “அதை ஏன் பழக வேணும் ராகவ்? எனக்கு ஏனோ கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேணுமென்றால் நமக்கு ஒத்துப்போகின்ற ஒன்று இரண்டு குடும்பங்களோடு இப்படியான நிகழ்வுகளைச் செய்யலாம். அதைவிட்டு விட்டு  இப்படிக் கூட்டமாக ..ஹ்ம்ம்.”  முகம் சுளித்து விடுவாள் அவள்.

இப்படியே ஒரு மாதம் இறக்கை கட்டிப் பறந்திருக்க, ஒரு வெள்ளி மாலை யாழ் செல்லப் புறப்பட்ட வருணோடு, “நானும் ஊருக்குப் போயிட்டு வாறேனே! எல்லோரையும் பார்க்க வேண்டும் போல இருக்கு! ஹப்பா! வீட்டை விட்டு ஒரு முழுமாதம் நான் தனியாக இருந்துவிட்டேன் என்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லையே!” என்ற ஆச்சரியத்தோடு வருண் முன்னாலே கேட்டு ராகவனை தலையாட்ட வைத்து விட்டாள்.

“என்ன தனியாக இருந்தீரா? அப்போ நான்..நாங்க?” என்று வருணையும் சேர்த்துக் கேட்டு முறைத்தான் அவன்.

“நான் சொன்னது அம்மா அப்பாவை விட்டுட்டு என்று ராகவ்..அகல் போல இல்லை நான், ஒரு நாள் கூட அவர்களை விட்டுட்டு இருந்ததில்லை.” என்பவளை, ‘இதுக்கு மேல எதைச் சொல்வது?’ என்ற வகையில் பார்த்தாலும், தான் அருகில் இருக்கும் போதே அவள் வாயில் ‘தனியாக’ என்ற சொல் வந்ததை அவன் அவ்வளவு ரசிக்கவில்லை.

‘ஒவ்வொரு நிமிடமும் இவளுக்காக யோசித்து, இவளை முன்னிறுத்தி நான் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தால் இவள் தனியாக இருந்தாளாமே!’ என்று மனதில் கடுகடுக்கவே செய்தான்.

அதோடு, “நான் மட்டும் இங்க இருந்து என்ன செய்வதாம்? நானும் வீட்ட வாறன்.” தானும் புறப்பட்டான் ராகவன். வார இறுதியை அவளோடு செலவிட அவன் திட்டமிட்டிருந்தது நடவாததில் வந்த சுளிப்பும் சேர்ந்துகொள்ள மனம் கோணியதை செய்வதறியாது பார்த்திருந்தான் அவன்.

இப்படியே நாட்கள் உருண்டு கொண்டிருக்க ஊரிலிருந்து கதைத்த சுசிலா , கேசவனின் தமக்கை நாமகளுக்கு திருமணம் கூடி வந்திருப்பதைச் சொன்னவர், “முடிந்தால் தம்பியையும் கூட்டிக்கொண்டு வாம்மா…” என்று சொல்லியிருந்தார்.

“என்னம்மா திடீரென்று அவசரம் அவசரமாக கல்யாணம் நடத்துகிறார்கள்?”

“சம்பந்தம் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்கள்; கேசவனின் பாட்டி கொஞ்சம் சுகமில்லாமல் இருக்கிறார்ம்மா; அதுதான் வேளைக்கே பேத்தியின் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்றதும் உடனே வைக்கிறார்கள்.” என்றார் சுசிலா.

“இவருக்கு நேரம் இருக்குமோ தெரியாதேம்மா! இல்லையோ நான் வருணோடு வாறேன்.” என்றுவிட்டு அலைபேசியை வைத்தவள், அடுத்தநாள் சனிக்கிழமை என்பதால் வழமைபோல ராகவ் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாள்.

Advertisements

2 thoughts on “EPT- 13 by Rosei Kajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s