EPT- 12 by Rosei Kajan

12

“அம்மா!” படலையில் நின்றவாறே உச்சஸ்தானியில் அழைத்தவள்,  “தாகமாக இருக்கும்மா, எட்டு பிளேன்டீ…அதோடு நேற்று சுட்ட பலகாரமும் ஒரு தட்டில் தாங்கோ…” என்றபடி உள்ளே வந்து, அவர்களின் வீட்டின் முன்புற வளவு(தோட்ட) மூலையில் அமரக்கூடியாவாறே வளைவாக வளர்ந்திருந்த தென்னைமரத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஏறியமர்ந்து கொண்டார்கள்.

அவளின் சத்தத்துக்கு வெளியில் வந்த வருணோ, வீட்டு வாயிலில் நின்றவாறே முறைப்பை அள்ளி வீசினான். அதோடு அமைதியாக நின்றானா?

“அகல் உன்ன(உன்னை) அங்கிள் வரட்டாம்.” என்றவன், முற்றத்தில் இறங்கி நின்று கொண்டான்.

“பொறுங்கப்பா, என்ன என்று கேட்டுட்டு பலகாரம் எடுத்துக்கொண்டு வாறன்.” குதித்துக்கொண்டு வந்தவள், இவனைத் தாண்டிப்போக முயல, “அங்கிள் வரச் சொல்ல இல்ல.” தாழ்ந்த குரலில் அவள் நடையை தேங்கச் செய்தான்.

“அப்போ?” என்றவள் முகம் கேள்வியில் சுருங்கியது.

“உனக்கு எத்தனை வயதாகுது?” இடுங்கிய விழிகளும் கண்டிப்புமாகக் கேட்டவனை, இப்போது கோபத்தோடு பார்த்தாள் அகல்.

“அது எத்தனையாக இருந்தாலும் உங்களுக்கென்ன?” வெகு அசட்டையாக வந்தது பதில்!

“பெடியள் போல ஊர்சுற்றிவிட்டு வந்து படலையில் நின்று இந்தக் கத்து கத்துறாய்!”

“அதென்ன பெடியள் போல ஊர் சுற்றுவது? ஏன், நாங்க சுற்றினால் ஊர் என்ன மயங்கி விழுந்துவிடுமோ!”

“அகல் வேண்டாம், வாய்காட்டாதே!”

“ஹலோ! நீராகத்தான் என்னை வருந்தி அழைத்து வாய் காட்டச் சொல்லுறீர்! களைத்துப் போய் வந்த எங்களுக்கு இப்போ தேவை பிளேன் டீயும் பலகாரமும். அதைவிட்டு விட்டு உம்மோடு அலட்ட எனக்கு நேரமில்ல.” வீட்டினுள் நுழைய முயன்றவள், “ஏய் எரும, கொஞ்சம் நில்லடி!” என்றவன் குரலில் இருந்த கோபத்தில் நின்றுவிட்டாள்.

“இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை?” வெகு பணிவாகக் கேட்டு அவனைக் கேலி செய்தவள், “ஒரு காட்டெருமைக்கு யாரைப் பார்த்தாலும் தன்னைப் போலத்தான் தெரியுமாம்” விடாது பதிலடியும் கொடுத்தாள்.

“ச்சே! திருந்தவே மாட்டாய் நீ! இந்த வாய் மட்டும் இல்லையோ நீ சரிடி. இந்த அழகில உனக்கு வேலைக்கு ஒரு ஆள் வேணுமோ!? இருந்த இடத்தில் இருந்து ஓடர் போட பிளேன் டீயும் பலகாரமும் வேணுமோ!? பார் சேருகிற ஆட்களை…ஒன்றாவது உருப்படியானதா? இப்படியே போச்சுதோ நீ பாஸ் பண்ண மாட்டாய்; பேசாமல் நின்று மிளகாய் தோட்டத்தில் கிளி கலை..” அவள் திருப்பிக் கதைக்க முயன்றதற்கு அனுமதியாது படபடத்துவிட்டு விருட்டென்று உள்ளே நுழைந்து மறைந்தான் அவன்.

அவன் கோபத்தில் ஒருகணம் திகைத்து நின்றுவிட்டாள் அகல்.

மறுகணம் சிலிப்பிக் கொண்டு சுதாகரித்திருந்தவள்,  “இந்தப் பெடியனுக்கு இருந்திட்டு இருந்து மேல தட்டுறது போல! நான் என் ஊரில் என் ஃப்ரெண்ட்ஸோட திரிந்தால் இவருக்கு ஏன் இந்தக் கோபம்? என் அம்மா அப்பாவே கேள்வி கேட்கவில்லையாம், இவர் எங்கிருந்து வந்தார் பெரிய கொம்பன்! இன்றைக்கு இந்தாளை…” கறுவியபடி விடுவிடுவென்று உள்ளே நுழைந்தவள், அங்கு வெளிப்படையாகத் தெரிந்த அதீத மகிழ்வில் சட்டென்று நிதானித்தாள்.

“அம்மா ப்ளேன்டீ கேட்டேனே!” ஆரம்பித்த மகளை அவரோ பார்வையால் கடிந்து கொள்ள, “பச்! உங்களுக்கு என்னில் கொஞ்சமும் பாசம் இல்லை; நாளைக்கு போனால் சில மாதங்களுக்கு பிறகுதானே வருவாள், கேட்பதைச் செய்து கொடுப்போம் என்ற நினைவே இல்லை.” என்றவள்,

“அக்கா எங்க? என் குரல் கேட்டால் தேத்தண்ணியோடு ஆஜர் ஆகும் என் செல்ல அக்கா எங்க?” என்றவாறே சமையலறை நோக்கி நடக்க,

“இங்க பார் அகல், இந்த சின்னப்பிள்ளை விளையாட்டை இனி மூட்டை கட்டி வைச்சிப்போட்டு பெரிய பெண்ணாக நடந்து கொள்!” என்றுமில்லாதவகையில்  பாட்டி இப்படிச் சொல்ல நின்று திரும்பியவள், தன் விற்புருவங்களை மேலுயர்த்தி வெகுவாக ஆச்சரியம் காட்டினாள்.

‘கொஞ்ச முதல் இவர் பெரியவரும் இதைத்தான் கொஞ்சம் மாத்திச் சொன்னார்; ஹ்ம்ம்…இப்ப பாட்டியுமா?!’ மனதுள் அங்கலாய்த்தவளின் பார்வை, இன்னமும் முறைப்போடு அமர்ந்திருக்கும் வருணை வெடுசுடுவென்று ஸ்பரிசிக்க மறக்கவில்லை.

“பின்ன என்ன? அனுவை பார், எத்தனை பொறுப்பாக எல்லாம் செய்வாள்! இனி அவள் கல்யாணம் செய்து போனால் நீதானே எல்லாம் கவனிக்க வேணும் ராசாத்தி! பெரியவளுக்கு சம்பந்தம் சரிவந்திருக்கு, அடுத்து என்ன உனக்குத்தானே!” என்றார் தங்கம்மா.

“பாட்டி! என்ன பாட்டி சொல்லுறீங்க? அக்காவுக்கு கல்யாணம் சரி வந்திட்டுதா?” திரும்பி விறுவிறுவென்று அவர்களை நோக்கி வந்தாள்.

“ஹே! ஹே! யார் அந்த பாக்கியவான்? எந்த ஊர்? என்ன வேலை? ஆள் எப்படி? என் அக்காவுக்கு பொருத்தமாக இருப்பாரா? மொட்டை கிட்டை…ஹ்ம்ம்…உயரம் எப்படி? குண்டாந்தடியா…தொப்பை போட்ட மாப்பிள்ளை என்றால் நோ….ஃபோட்டோ கீட்டோ இருக்கா? முதல், நான் பார்க்காமல் நீங்களே எப்படி முடிவெடுக்கலாம்? எங்க அக்கா?” மூச்சுவிடாது  படபடத்தவளை எல்லோரும் அயர்வோடு பார்த்திருக்க, புன்முறுவலோடு பார்த்தார் லக்ஷ்மி. அவளின் இந்த கலாட்டாக் குணத்துக்கு அவர் பெரிய விசிறி ஆச்சே!

“ஏம்மா அகல், என் மகன் உனக்கு அத்தானாக வரும் பாக்கியம் பெற்றவன்  தானே? இல்லையென்று சொல்லி விட மாட்டாயே?” அவளை வம்பு செய்யும் குரலில் கேட்கவும் செய்தார்.

ஒரு கணம் புரியாது நின்றவள் பார்வை, அங்கமர்ந்திருந்த ராகவன் சுகந்தன் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு லக்ஷ்மியிடம் பாய்ந்து வந்தது.

“என்ன ஆன்ட்டி சொல்லுறீங்க? உங்க மகன் என்றால் யா..ர்?” என்றவள் விழிகள் குறும்பில் பளபளக்க, “பொறுங்கோ பொறுங்கோ…நீங்க எதுவும் சொல்லவேணாம்…டக் டிக் போட்டுப்பார்த்து நானே சொல்லட்டா?” என்றவள் அதற்கு ஆயத்தமாக, “ஹலோ…ஹலோ  வேண்டாம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம்.” எழுந்தே விட்டான் ராகவன்.

‘டக் டிக் போட்டு சுகந்தனை கைகாட்டி விட்டால்?’ கண்ணிமைப்பொழுதில் கலங்கடித்துவிட்டாள் அவனை!

அவன் கலக்கம் எந்தளவென்பதை, “அந்தப் பாக்கியம் பெற்றவன் நான் தான் அகல்..” அவசரமாகச் சொன்னதில் அங்கிருந்தோர் எல்லோரையும் கொல்லென்று சிரிக்க வைத்து விட்டான் அவன்.

“ராகவன் அண்ணா! நீங்களா?” விழிகள் விரியப் பார்த்தவள், “ஹைய்யோ!  டபுள் ஒ.கே! எங்க அக்கா…” என்றவள், பக்கத்தறையில் அரவம் உணர்ந்து உள்ளே விரைந்த வேகத்தில் தமக்கையை கட்டிக் கொண்டாள்.

சற்றுமுன் இவள் இட்ட கூச்சலில் கோபம் கொண்டு திட்டிவிட்டு வந்திருந்த வருண், உள்ளே வந்த கொஞ்ச நேரத்தில் அவ்விடத்தையே கலகலப்பாக்கியவள் செய்கையையும் தான் ரசித்துப் பார்த்தான்.

‘இது இவளால் மட்டுமே முடிந்த காரியம், கோபத்தை விதைப்பவளே அதை கறையின்றி அழித்தும் விடுவாள்! கோபம் காட்டியவனை தன் வசப்படுத்தியும் விடுவாள்.’ இப்படி, அவள் நினைவில் இருந்தவனை மெல்லத் தட்டி, தன் பக்கம் திருப்பினான் சுகந்தன்.

“உனக்கு எந்த நேரமும் உன் ஆளில் தான் கண்! ஆனாலும், எனக்கு என்னவோ ராகவன் அண்ணாவுக்கு இவ்வளவு இலகுவில் சம்மதம் கிடைத்த மாதிரி உனக்குக் கிடைக்கும் என்று தோன்றவில்லை மச்சான்!” வருணை சீண்டவும் செய்தான்.

“உனக்கு வேறுகதையே இல்லையா? அதோடு அகலிடம் கல்லடி வாங்குவாய்; இனிமேல் இப்படி கதைத்து(பேசி) வைக்காதே!” எச்சரிக்கை செய்தாலும் வருணின் உதட்டோரம் முறுவலில் துடித்தது. நண்பனின் கேலியை வெகுவாகவே ரசித்தது அவனிதயம்!

‘அவள் இவனையா கல்லால் அடிப்பாள்? ஓட ஓட விரட்டி என்னையல்லவா அடிப்பாள்; குட்டிச் சாத்தான்!” மனம் முணுமுணுக்கவும் மறக்கவில்லை.

அதேநேரம், மாப்பிள்ளைக்கு அவள் எதிர்பார்க்கும் தகுதிகளை நினைக்க நினைக்க அவனுள் நகைப்பு பொங்கியது.

அதையேதான் சுகந்தனும் சொன்னான்.  “தமக்கைக்கு வரும் மாப்பிள்ளை எப்படி எப்படி இருக்கவேணும் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு போலிருக்கே வருண். எதுக்கும் நீ இப்படி அசட்டையாக இருக்காதேடா.  இன்னும் கொஞ்சம் உன்னைக் கவனியடா மச்சான். முதல் அலுவலாக கொஞ்சம் சாப்பாட்டைக் குறை. இல்லையோ இன்னும் சில வருஷங்களில் தொப்பை மாப்பிள்ளை…வேண்டவே வேண்டாம் என்று அகல் வேறு வழியில் போய்விடுவா…” குசுகுசுவென்று பகிடி பண்ணிய நண்பனுக்கு, பதில் சொல்ல முயன்றவனை மெல்லத் தட்டியழைத்தான் ராகவன்.

“என்னண்ணா?”

“உங்க கதைகளை(பேச்சுக்களை) பிறகு வைத்துக்கொள்ளுங்க. இப்ப, புண்ணியமாகப் போகும் அனுவோடு கொஞ்சம் தனியாகக் கதைக்க(பேச) வேணும்; ப்ளீஸ் வருண்!” பரிதாபமாகக் கெஞ்ச, வாய்விட்டே நகைத்தான் வருண்.

பிறகு, “நாங்க எல்லாம் பின்னுக்கு கடற்கரையோரமாக நடந்துவிட்டு வரப் போகிறோம்.” என்று எழுந்தவன், “அகல், அனுவும் வாங்கோவன்.” என இயல்பாக அழைக்க, சட்டென்று குறுக்கிட்டார் தங்கம்மா.

“சின்னவள் ஊர் சுற்றிவிட்டு இப்போதானே ராசா வந்தாள்; நாளைக்கு நேரத்தோடு பயணமும் போக வேணுமே! பொழுது சாயுற வேளை வேற, அவர்கள் எதுக்கு? நீங்க போயிட்டு வாங்க.” என்றதும் செய்வதறியாது ராகவனை ஏறிட்டான் வருண்.

மறுநொடி, “ஆங்! அதுவும் சரிதான் பாட்டி. நாங்க போயிட்டு வாறோம்!” என்று அவர்களை அழைத்துக்கொண்டு வெளியேறியவன், “நாளைக்கு காலையில லோஞ் ஏற முதல் அனுவோடு கதைக்க ஏற்பாடு செய்து தாரேன் அண்ணா! இப்போ வேண்டுமென்றால் ஃபோனில் கதையுங்கோவன்..” என்று சொல்லி, தன் கைபேசியில் அனுவுக்கு அழைத்துவிட்டு அவனிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்ட ராகவன், “சொல்லும் வருண்!” என்று செவியில் வந்து மோதிய குரலை சுவாசித்தவாறே, வருண் ஆட்களை பின்தொடர்ந்தான்.

அழைத்தவன் அமைதியாக இருக்கவே, “என்ன வருண்? சொல்லும்!” மீண்டும் அனுவின் குரல் வந்து மோத, “நான் வருண் இல்லை!” என்றான் ராகவன்.

இதற்கு முதல் அவனோடு தொலைபேசியில் உரையாடியதில்லை என்றாலுமே அது ராகவன் என்பதை ஊகித்துவிட்டாள் அனு.

அதனால், சட்டென்று நா புரள மறுக்க, தவிப்போடு அமைதி காத்தாள்.

அவளின் அமைதி அவனுள் ஏற்கனவே இருந்த சிணுக்கத்தை அதிகரிக்கவே முயன்றது.

“அனு நான் ராகவன்..” மீண்டும் அழுத்திச் சொல்ல, “தெரியும் சொல்லுங்க!” என்றாள் அவள்.

“எதைச் சொல்வது? எனக்கு ஒன்றை உம்மிடம் தெளிவாகக் கேட்க விருப்பம்; அதையும் இப்படி ஃபோனில் இல்லை நேரில்.” என்றான் அவன்.

அவன் குரலில் குடியிருந்த பிடிவாதத்தை அவளால் உணரவும் முடிந்தது.

‘நேரில் என்ன கேட்கப் போகிறார்? அதனால் தான் எங்களையும் கடற்கரைக்கு வரச் சொன்னார்களோ!’ என்ற சிந்தனையோடு, என்ன பதில் சொல்வது எனத் தடுமாறுகையில், “அனு, நாங்க இப்ப உங்கட வீட்டுக்கு பின்னால் உள்ள கடற்கரைக்குப் போறோம்; நீரும் வாறீரா?” என்றவன், “பயப்படாமல் வரலாம் என்னோடு சுகந்தனும் வருணும் இருக்கிறார்கள்.” என்றான் இலேசான கேலியோடு!

அவளோ, சில கண மௌனத்தின் பிறகு  மெல்லிய குரலில் தொடர்ந்தாள்.

“அது வந்து இப்ப வெளிக்கிட்டா பாட்டி…ஏசுவா(திட்டுவா) ரா..கவ். கொஞ்ச முதல் வருண் கேட்க என்ன சொன்னாவோ அதைதான் இப்ப நான் வெளிக்கிட்டாலும் சொல்லுவா!” ஆரம்பத்தில் தயங்கித் தொடங்கியவள் திடமாகவே சொல்லிவிட்டாள்.

கேட்டவனோ எதுவும் சொல்லவில்லை; மனமும் முகமும் சுருங்கிப் போனான்!

‘அப்படியென்றால், உன்னோடு கதைக்க வேணும்; நம் திருமணத்தில் உன் விருப்பத்தை உன் வாயால் அறியவேணும்; அப்போது தோன்றும் உன் முகபாவனைகளை ரசிக்க வேணும் என்று என்னுள் எழும் ஆசையும் தவிப்பும் உன்னுள் இல்லையல்லவா? முதல் முதலாக நான் விடுக்கும் அழைப்பை இத்தனை இலகுவாக மறுத்துவிட்டாயே!’ முரண்டு பண்ணி எண்ணியது அவன் மனம்.

“ராகவ்..” அவனது மௌனம் உணர்ந்து அழைத்தாள் அனு.

“கோபித்துக்கொள்ளாதீங்க ப்ளீஸ்” கெஞ்சலாக வந்து விழுந்த வார்த்தைகள் அவன் மனதுக்கு துளியேனும் ஒத்தடம் கொடுக்காதில்லை தான்.

மெல்ல முகச்சிணுக்கம் மறைய, “கோபம் எல்லாம் இல்லை.” என்றவன், “எனக்கு ஒரு உண்மை தெரியவேணும்.” என்றான் பட்டென்று!

“உண்மையா? என்னது!?” வியப்போடு கேட்டாள் அவள்.

“நாங்களாக வந்து உம்மை பெண் கேட்டிருக்கிறோம். அதுவும் உம்மை எனக்கு பிடித்திருக்கு என்று சொல்லி! உம் வீட்டில் சரியென்று சொன்னாலும்  உமக்கு இந்தக் கல்யாணத்தில் முழுச்சம்மதமா அனு? என்னைப் பிடித்திருக்கு தானே?” அவன் குரலின் தவிப்பு, அதை அறிவதில் அவனுக்குள்ள துடிப்பை வெளிக்காட்டி நின்றது.

அவளோ, சிலகணங்கள் மௌனம் காத்தாள். அந்நேரம், “ஃபோனில யாருக்கா? பாட்டி வந்திட்டுப் போகட்டாம்.” அறைக்குள் எட்டிப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சென்றாள் அகல்.

“இதோ கதைத்துவிட்டு வாறன் என்று சொல்லு.” என்றவள், “உங்களை வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருக்கு ராகவ். அப்பா, அம்மா, பாட்டி, அகல், வருண் வீட்டாக்கள் இப்படி எல்லோருக்குமே உங்க எல்லோரையும் பிடித்திருக்கு! அப்படியிருக்க, எனக்கு மட்டும்  பிடிக்காமல் போகுமா? நான் முழுமனதாகத்தான் சம்மதம் சொன்னேன்.” என்றாள் இவள்.

அவள் பதிலில், அவன் வெகுவாக எதிர்பார்த்தது நிச்சயமாக அவனுக்குக் கிடைக்கவில்லை.

ஒருவேளை நேரில் கதைத்திருந்தால், இதைச் சொல்கையில், அவனோடு கதைக்கையில், அவள் முகம் ஜொலித்த ஜொலிப்பில் அவள் மனதில் தானும் தாக்கம் ஏற்படுத்தி இருந்திருக்கிறோம் என்பதை இவன் அறிந்திருக்கலாம். அது நடவாது போனது அவன் மனதில் தேவையில்லாத சஞ்சலத்தை வித்திட்டு வைத்தது. அந்த எண்ணம் தந்த ஏமாற்றத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொள்ள முயன்றான் அவன்.

‘நான் அவளை விரும்பியது போல அவள் என்னை விரும்பவில்லை; வீட்டாருக்கு பிடித்த மாப்பிள்ளை என்று தலையாட்டி இருக்கிறாள்; அவ்வளவே!’ அவன் மனதின் முணுமுணுப்பு தொடர, அவளிடமிருந்து விடைபெற்றவன் முன்னே செல்பவர்களை நோக்கி நகர்ந்தான்.

Advertisements

3 thoughts on “EPT- 12 by Rosei Kajan

  1. அனு- ராகவன் ஜோடி அகல்- வருண் ஜோடியை தோற்கடித்துவிடுவார்கள் போலவே. சபாஷ் சரியான போட்டி. எங்களுக்கு சுவாரசியமான கதை.:) சூப்பர் ரோசிக்கா! அகல் பற்றிய பகுதிகள் படிக்கும்போதே ஒரு சுட்டித்தனம் இணைந்துள்ளது போல தோன்றுகிறது.

    Liked by 1 person

  2. மிக்க சந்தோசம் கௌரி .

    அமாம் அவள் மிகவும் சுட்டிப்பெண் .

    நன்றி நன்றி

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s