EPT- 5 by Rosei Kajan

அடுத்து வந்த நாட்களில் வீட்டில் ஒருவிதமான அமைதி நிலவியது!

ஏனோ, அதை அவ்வளவு இயல்பாக அவர்கள் யாராலும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதிலும், வருண் அந்த அமைதியை அறவே வெறுத்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

தன் முகம் பார்க்க மறுத்து விலகும் அகல்யாவின் முகம் பார்ப்பதே அவன் வேலையாகிப் போனது! கொஞ்சமும் தயங்காது வலிய வலியச் சென்று கதைத்தும் பார்த்தான்.

“நீ என்னவெல்லாம் சொன்னாய்! அந்த நேரம் வந்த கோபத்தில…பச்! இப்ப என்ன மண்ணையா உன் தலையில் கொட்டினேன்? அல்லது மண்ணெண்ணையை ஊற்றினேனா?” என்றவனை, விசுக்கென்று பார்வையால் வெட்டிவிட்டு அப்பால் நகர முயன்றாள் அவள்.

“ஹைய்யோ! ஒரு பேச்சுக்கு சொல்லுறன் அகல்; நல்ல தண்ணி தானே! உன் மனதைத் தொட்டுச் சொல்லு பார்ப்போம், அடிக்கிற வெயிலுக்கு இதமாக இருக்க இல்லையா?” என்றவனை, அவளோ துளியும் கணக்கில் கொள்ளவில்லை.

“அதோடு, அம்மாவிலும் பிடித்தேன் தானே?” மீண்டும் ஒருதரம் பார்வையால் வெட்டிவிட்டு தழைந்தன அவள் விழிகள்!

“பார், அம்மா செல்லமாக முதுகில் இரண்டு தட்டோடு விட்டுட்டார்; உன்னைப் போலவா சாதிக்கிறார்? ஹ்ம்ம்…ஒன்று செய்வோமா? வேண்டுமென்றால் நீயும் இரண்டு தட்டுத் தட்டீட்டு போ! நான் திருப்பி அடிக்க மாட்டேன்.” வெகுதாராள மனதோடு சொல்லிப்பார்க்க, அவளோ காதே கேளாதவள் போல் தன் புத்தகங்களினுள் மூழ்கியிருந்தாள்.

மகன் கெஞ்சுவதையும் அகல் அசட்டையாக இருப்பதையும் பார்த்து தம்முள் சிரித்துக் கொண்டார்கள் சந்திரனும் செல்வியும்.

“இங்க பார் அகல், நீ இவன் பக்கமும் பார்க்காதே! வம்பன்மா! இப்படிக் கெஞ்சுவதை உண்மையென்று நம்பிவிடாதே! சுத்த நடிப்பு!  உன் பாட்டில் படிப்பைக் கவனி!” மகன் முறைக்க முறைக்க சொன்ன செல்விக்கு வீடு அமைதியானதில் அலாதியான மகிழ்வு!

இருவரும் சமாதானமாகி இவ்வமைதி வந்திருந்தால் இரட்டிப்பு மகிழ்வுதான்; அதற்கென்று, இப்போதைக்கு இந்த அமைதியை குலைக்க அவர் கொஞ்சமும் தயாராக இல்லை.

கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தவன் கடைசியில் தாயிடமே தஞ்சம் அடைந்தான்.

“என்னம்மா இவள் இப்படி முறைக்கிறாள்? அவள் என்ன எல்லாம் சொன்னாள்; அதுவும் என்னோடு சண்டை போடுவது ஜாலிக்கு என்றாளா இல்லையா? அதே ஜாலிக்குத்தான் நானும் அப்படிச் செய்தன்; பெரிசா முகத்தை நீட்டுறாள்.” என்றவனை விஷமமாகப் பார்த்தார் அவன் தாய்.

“அது சரி, வீட்டை விட்டு விரட்டுறன் என்றும் சொன்னாய் தானே? அதுவும் ஜாலிக்கா? நல்லா கதைவிடுறாய் தம்பி; உனக்குத்தான் அவளைக் கண்டால் பிடிக்காதே! பிறகென்ன!?” என்ற தாயை முறைத்தான் மகன்.

“இதென்னமா நீங்களே புதிது புதிதா கற்பனை பண்ணுறீங்க? அவளைப் பிடிக்காது என்று எப்போ சொன்னேன்?” பட்டென்று ஆரம்பித்தவன், தாயின் கூர்பார்வையை சந்திக்க முடியாது தடுமாறி மெல்ல நழுவி விட்டான்.

‘அம்மா சொல்வதிலும் பிழையில்லையே! எனக்கு…அவளை அவ்வளவாகப் பிடிக்காதுதான்.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்ட வேகத்தில், “ச்சே..ச்சே..பிடிக்காது என்றால்…அதை எப்படிச் சொல்வது? ஹ்ம்ம்…அவளின் இந்த அளவுக்கு மிஞ்சின துடுக்குத்தனம், யார் எவர் என்று பார்க்காமல் வாய்காட்டுற பழக்கம் அதுகளைத்தான் பிடிக்காது.” முணுமுணுத்தவனுக்கு கடந்த சிலவருடங்களாக தம்முள் நடக்கும் தர்க்கத்துக்கு முக்கிய காரணமான நிகழ்வு நினைவு வராதில்லை.

சட்டென்று உயர்ந்த அவன் வலக்கரம் கன்னத்தை தடவிக்கொண்டது.

‘ஒருநாளும் அடிவாங்கியே நினைவிராத என்னை அப்பாவிடம் அடிவாங்க வைத்தாளே! அதுவும், அவள் வீட்டாரும் எங்கள் வீட்டாரும் குழுமியிருக்கையில்! அதை மறக்க முடியுமா? கொலைக்குற்றம் புரிந்தது போல எல்லோரும் என்னைப் பார்த்தது அவளால் தானே!’

   இந்த நினைவு வரும் போதெல்லாம் அவள் மீது எல்லையற்ற கோபமே வந்து தொலைக்கும். இன்றும் அவ்வாறே கோபம் கொண்டான்.

   அதேநேரம், ‘ஐந்து வருடங்களுக்கு முதல் அவள் சிறுபிள்ளை!’ இப்போதெல்லாம் அடிக்கடி இடித்துரைக்கும் மனசாட்சியின் குரல் இது!  சட்டென்று இதையும் மறுக்க முடியவில்லை அவனால்!

‘கோவில் திருவிழாவுக்கு ஊருக்குச் சென்ற இடத்தில் ஃப்ரெண்ட்ஸாகக் கூடியிருந்த போது வயதில் பெரிய இவன் நண்பர்களில் இருவர் சிகரெட் பிடித்ததை தற்செயலாகக் கண்ட அகல், ஒரே ஓட்டமாக சந்திரனிடம் சென்று, “ஐயோ  சந்திரன் அங்கிள், வருண் சிகரெட் குடித்துக்கொண்டு நிற்கிறான்!” என்று சொல்லிவிட்டாள்.

    சிறிது நேரத்தில் வீடு வந்தவனை, விசாரித்து உண்மையை அறியும் பொறுமை இருக்கவில்லை சந்திரனுக்கு! கோபத்தில் கொதித்துப் போயிருந்தவர் கன்னம் பழுக்க விளாசிவிட்டே உண்மையை விசாரித்தறிந்தார்.

அவன் உள்ளே வந்ததும் வராததுமாக பளீரென்று விழுந்த அடியில்  அவனுக்கும் மேலாக அதிர்ந்து போனாள் அகல்.

   அதோடு, சிறுபொழுதில் அங்கு நடந்த குழப்பத்தை எல்லாம் பார்த்திருந்தவள் மனதுள் கலவரமே அடைந்துவிட்டாள்.

இப்படி அடிவிழும் என்றெல்லாம் அவள் யோசித்தும் பார்க்கவில்லையே! அவனைப் பார்க்க பாவமாக இருக்க, இவள் விழிகள் கூட நிறைந்துவிட்டது.

   மின்னலென அங்கிருந்து ஓடிவிட்டவள் அன்று முழுவதும் இவர்கள் வீட்டுப் பக்கமே போகவில்லை. கவனமாக இவனிடமிருந்து மறைந்து மறைந்து திரிந்தாள்.

  அடுத்தநாள், மனதில் வழமையான துடுக்குத்தனம் வந்தமர்ந்து கொள்ள அவனை எதிர்கொண்டவள், “உண்மையாகவே நீங்க சிகிரெட் குடிக்கவில்லையா? எனக்கு என்னவோ உங்க கையில் சிகிரெட் இருந்தது போலவே தான் இருக்கு! அடிக்குப் பயந்து பொய் சொல்லியிருந்தா ஐயனார் கண்ணை நோண்டுவார்!” ரகசியம் பேசி முழியை உருட்ட,  கொதித்துப் போனவனோ, பார்த்துப் பாராமல் அவளின் கன்னத்தில் விளாசியிருந்தான்.

உள்ளங்கை எரிய அடித்துவிட்ட போதும் அவனுள்ளத்தின் எரிச்சல் மட்டும் மறைய மறுத்தது.

   மகனை விசாரிக்காது அடித்துவிட்டோம் என்று என்னதான் தன்மையாக சமாதானப்படுத்தியிருந்தாலும், “இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து திரிந்தால் உனக்கும் சிகிரெட் பிடித்துப் பார்த்தால் என்ன என்ற ஆசைதான் வரும்.” என்று தந்தை கடிந்து கொண்டதையும், அவன் நண்பர்களின் பெற்றோர்களிடமே இதைச் சொல்லி, தன் பால்ய நட்பிலே விரிசல் விழுந்ததையும் எண்ணியவன், கன்னத்தைப் பொத்தியவாறே விம்மியவளை வெறுப்போடு தான் பார்த்தான்.

“சின்னப்பிள்ளை என்று பார்த்தால்…பிள்ளையா நீ? பிசாசுடி! அடங்காப்பிடாரி…குருட்டுக்கண்ணி, போய் நல்ல தடித்த கண்ணாடியா வாங்கிப் போடு! இனிமேல் பட்டு என் வழியில் வந்தாயோ தொலைத்துப் போடுவன் ; நினைவில் வைத்திரு!” என்று உறுமவும் செய்தான்.

அவளோ, “அதைக் குடித்து நீங்க செத்துப் போனால் என்றுதான் சொல்லிக் கொடுத்தேன்.” விம்மலோடு சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக சென்றுவிட்டாள்.

அதன் பிறகுதான், தான் செய்த காரியம் புரிய என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப் போனான் வருண்.

    ‘ஐயோ! இப்போ போய் அடித்துவிட்டேன் என்பதைச் சொன்னால் அதுக்கு வேற அப்பாவிடம் வாங்கிக் கட்டவேண்டுமே! எல்லோரும் இவளைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு கொடுக்கிற செல்லத்தில தான் இந்த ஆட்டம் போடுறாள். இப்ப என்னத்தை எல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாளோ!’ என்று இவன் பதறிக்கொண்டிருக்க, அவளோ வீட்டில் மூச்சும் விடவில்லை.

   அடுத்து வந்த இரண்டு நாட்கள் நல்ல காய்ச்சலில் கிடந்தவளை சென்று பார்த்தவனால் அப்போதும் அமைதியாக வரமுடியவில்லை.

“நீ சொன்ன பொய்க்கு ஐயனார் தந்த தண்டனைதான் இந்தக் காய்ச்சல்! இனிமேல் பட்டு என்னோடு கதைக்கவே வராதே!” என்று சீறலாக  பயமுறுத்திவிட்டே யாழ்ப்பாணம் வந்திருந்தான்.

அதையெல்லாம் அவள் மனதுள் அண்டவே விடவில்லை; அவளின் செல்ல ஐயனாராவது அவளைத் தண்டிப்பதாவது!

‘நீ சொல்லி நான் கேட்பதா?’ என எண்ணிக்கொண்டவள், அதன் பிறகு அவனைச்  சந்திக்கையில் எல்லாம் வலிய வலிய சென்று வம்புக்கிழுப்பாள்; விலகி அமைதியாகப் போக முயன்றான் என்றால் கிண்டல், கேலி என்று கோபப்படுத்திப் பார்த்து விழுந்து விழுந்து நகைப்பாள்; அது அவளுக்கு ஒரு மிகப் பிடித்தமான பொழுது போக்கானது!

இப்போதெல்லாம் அன்று நடந்ததை அவள் சார்பாகவே புரிந்துகொள்ள முயன்றாலும் அவளை சட்டென்று சிநேகமாக நோக்க முடியாது தவித்தான் இவன். அதே, அப்படியே வெறுப்பாகவும் பார்க்க முடியவில்லை.

இவன் இப்படி தடுமாறியிருக்கையில் விசுக்கென்று கடந்து சென்றாள் அகல்.

அவளையே பார்த்திருந்தவன் உதடுகளில் முறுவல் ஒன்று பட்டும் படாமலும் தோன்றிச் சென்றது!

‘எது எப்படியோ, இவளுக்கு ஏட்டிக்குப் போட்டியா சண்டைபோடுகையில் கோபம் வந்தாலும் அதில் ஒருவித சுவாரஸ்சியமும் இருந்துதே!’ சட்டென்று இப்படி நினைத்தவனால், அதை விரும்பி அனுபவித்துப் பழகியவனால், அவளின் முகம் திருப்பலையும் அமைதியையும் துளியும் சகிக்க முடியவில்லை.

அவளோ, வருண் என்பவன் அந்த வீட்டில் இல்லவே இல்லை என்ற மாதிரி நடந்து கொண்டாள். அதற்கு இவன் பெற்றோரே துணை!

மேலும் சில நாட்கள் இந்த மௌன நாடகம் நீண்டு கொண்டு செல்ல முற்றிலும் பொறுமையிழந்தான் வருண்.

“இங்க பார் அகல், இப்போ என்ன? அன்றைக்கு அப்படி தண்ணியை உன் மேல விட்டது பிழை அவ்வளவுதானே? வா..வந்து நீயும் என்னைக் குளிப்பாட்டி விடு!” என்றவனை, பார்வையால் பொசுக்கினாள் அவள்.

அவள் விழிகளில் தெறித்த உக்கிரத்தைப் பார்த்துவிட்டு அயர்வாக நின்றவன், “எதைச் சொன்னாலும் ஏறுக்குமாறாக நினைக்காதே அகல்; என்னை உனக்குத் தெரியாதா? ஒரே வீட்டில் இருந்துகொண்டு இப்படி கதைக்காமல் இருந்தால் என்னவோ போல இருக்கு!” அயர்வாகச் சொல்லி, “உனக்கு அப்படி இல்லையா அகல்?” என்றவனை தீர்க்கமாகப் பார்த்தவள்,

“அப்பாவிடம்  சொல்லியிருக்கிறேன்; அவர் அடுத்தகிழமை வந்ததும் ஹாஸ்டலுக்குப் போய்விடுவேன்; அதுக்குப் பிறகு என்னை வீட்டை விட்டு விரட்டுவது எப்படி என்று குழம்பவும் தேவையில்லை; அதுகெல்லாம் வீணாக நேரத்தைச் செலவிடவும் தேவையில்லை.” சொன்ன வேகத்தில் நகர, அயர்ந்து போய் நின்றான் அவன்.

உண்மையாகவே, அன்று அவள் தன் தாயோடு கதைத்ததைப் பார்த்தவனுக்கு முதலில் கோபம் வந்தாலும், ஜாலிக்கு என்று தாயை தேற்றியதைப் பார்த்தவனும் அந்த உணர்வில் தான் தண்ணீரை அடித்திருந்தான்.

‘சட்டென்று தோன்றிய ஒரு உத்வேகத்தில் நான் செய்த விடயம், கூறிய வார்த்தைகள் அவள் மனதில் தைத்து விட்டதோ!’ என்ற எண்ணம் ஏனோ இவன் மனதைப் பிசையச் செய்தது.

அக்கணம் வரை வீட்டில் நிறைந்திருந்த ஒருவகை உயிர்ப்பு கலைந்தது போல் உணர்ந்தவனுக்கு வெகு சோர்வாக இருந்தது! அது அவன் நடையில் பிரதிபலிக்க நகர்ந்தவனை கள்ளச் சிரிப்போடு நின்று பார்த்தவள், ‘பெரிதா ஸீன் போடுறாரே! இது இவர் சுபாவம் இல்லையே! என்னாச்சு!’ என்றெண்ணியவள்,

“ஆன்ட்டியும் அங்கிளும் மாறிமாறி நல்லா பேசி(திட்டி) இருப்பார்கள்; உடனே என்னட்ட வந்து சமாதானம் செய்யப் பார்க்கிறார்; இலேசில் விட்டுக்கொடுக்கக் கூடாது; என்ன துள்ளுத் துள்ளுவார்? நான் யாரென்று தெரிய வேணாம்!?” எவ்வளவுதான் கெஞ்சினாலும் இலேசில் கதைப்பதில்லை என்ற முடிவோடு தான் நகர்ந்தாள் அவள்.

 

அன்று ஒரு ஞாயிறு!

செல்வி சமைத்திருந்த ஆட்டிறைச்சிக்கறியையும்  பிரியாணியையும் ஒரு பிடி பிடித்த வருண், ஒருநாளும் இல்லாத திருநாளாக சற்றே கண்ணயர்ந்து விட்டான்.

அறை யன்னலால் கசிந்து வந்த இளம் தென்றல் சுகமாகன தாலாட்டாக ஆக்கிரமிக்க, மெல்ல மெல்ல ஆழ்நித்திரை அவனை ஆட்கொள்ளும் தருணம், இலேசாக திறந்த வாயோடு அவன் கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்தவாறே கடந்து சென்றாள் அகல்.

அவன் அறையை கடந்து எதிர்ப்புறமாக இருந்த தன்னறைக்குள் நுழைந்தவள் சட்டென்று நின்று நிதானித்தாள்.

மறுநொடி, அவள் வதனம் மலர்ந்து குறும்பில் மினுமினுத்தது!

அவளிதழ்களில், விஷமம் கலந்த அழகிய முறுவல் பூத்து ஒருவித பிடிவாதத்தோடு ஆக்கிரமிப்புச் செய்தது!

மீண்டும் வந்த வழியே திரும்பி, சமையலறை நோக்கி நடந்தவளின் பாதங்கள் நிலத்துக்கு நொந்து விடுமோ என்றவகையில் பட்டும் படாமலும் மோதிச் சென்றது.

அப்படியே நுனிக்காலால் நடந்து சென்றவள் சமையலறையில் இருந்து கைப்பற்றிய பொருளைப் பார்த்தால், ‘ஹா..ஹா…வாய்விட்டு சிரியேன்டி அகல்!” கூவிய உள்ளத்தின் குதூகலக்குரலுக்கு திட்டமான மறுப்பைச் சொன்னாள்.

‘காரியம் நடக்க முதல் கூச்சல் போடக் கூடாது செல்லம்!’ உள்ளத்தை அடக்கியவாறே, அதே நுனிக்கால் நடையில் திரும்பி வந்தவள், செல்வியும் சந்திரனும் வெளி வராந்தாவில் இருந்து அளவளாவிக் கொண்டிருப்பதையும் பார்த்தவாறேதான் முன்னேறினாள்.

‘மவனே அகப்பட்டாயா? வயிறு முட்ட விழுங்கிய களைப்பில் கிடக்கிறீர் போல!  இந்த அகல்யா உன்னைப் பிடித்த பேய்டா பேய்! என்னையா சீண்டிப் பார்க்க நினைத்தீர்! அவ்வளவு இலேசில் விட்டு விடுவேனா?’

அன்று அவன் செய்த செயல் அவளுள் தேக்கி வைத்திருந்த கோபத்தில் பற்களை நறும்பியவாறே அவன் அறைக்குள் நுழைந்து, படுக்கையருகில் சென்று நின்றவளின் மனதில் துளியே துளியாய் ஒரு முரண்பாடு வந்து போனது.

‘பாவம்! நல்லா நித்திரை கொள்ளுறாரே! இப்படிச் செய்தால்…வேண்டாம்; போய் விடுவோம்!’ என, கணத்தில் தோன்றிய எண்ணத்தை தயை தாட்சண்யம் பாராமல் உதறித் தள்ளினாள்.

‘இவருக்கெல்லாம் பாவம் பார்க்கவே கூடாது! இந்த வாயை வைத்துக்கொண்டு என்னை என்ன பாடு படுத்துவார்! அவரின்ர பொன்ஸோவுக்கு நான் ஜோடியா? அதையெல்லாம் மறந்து போனேன் என்றா நினைத்தீர்! வீட்டை விட்டு துரத்தி விடுவாராமே! யாரை என்னையா? இப்போ பாரும்..’ மனதுள் கறுவியவாறே மெல்ல அவன் முகத்தருகில் குனிந்து உள்ளங்கையில் பொத்தியிருந்த உப்பை மெதுவாக அவன் வாயினுள் போட, தன்னையறியாது வாயை திறந்தவன் தடுமாறிய சிறுகணத்தில் கையில் இருந்ததை அப்படியே கொட்டிய வேகத்தில் அறையிலிருந்து மின்னலென பாய்ந்து ஓடிவந்து, வராந்தாவில் இருந்த செல்வியினருகில் இடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டாள்.

“அகல் என்னாச்சு? ஏன் இப்படி ஓடி வாறாய்? என்ற செல்விக்கு அவள் மகனோடு ஏதோ சேட்டை விட்டுவிட்டாள் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து போனது.

“திரும்பவும் தொடங்கியாச்சா? அப்பனே முருகா! என்னம்மா செய்திட்டு வந்தாய்? அவன் இப்ப வந்து குத்தினால் என்னட்ட வராதே!” படபடத்தவர், அங்கு வந்து நின்ற மகனின் கோலத்தில் திடுக்கிட்டு விழிகள் இடுங்கப் பார்த்தார்.

“என்ன தம்பி? சீனியை முகத்தில் கொட்டிவிட்டாளா?” கேட்டு முடியமுதல் இவளை நோக்கி அவன் பாய, சட்டென்று நகர்ந்து சந்திரனின் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டவள், “அஸ்கு புஸ்கு! சீனியா ஆன்ட்டி? ஹா..ஹா..  உப்பு ஆன்ட்டி உப்பு; கொழுப்பு கரைய...” நகைப்போடு சொன்னவளை அன்று மகனிடம் இருந்து பாதுகாக்கும் பாரிய பொறுப்பை ஏற்றிருந்தார் சந்திரன்.

 

Advertisements

2 thoughts on “EPT- 5 by Rosei Kajan

  1. உண்மைதான் வருண் பாவம்..அதுக்காக அவ்வளவு ஈசியா விடுவதா? அகல் என்றால் சும்மாவா என்ன

    பார்ப்போமே உமா

    நன்றி நன்றி

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s