தீராது காதல் தீர்வானது!

ஆர்த்தி ரவி அவர்களின் தீராது காதல் தீர்வானது – யாழ் சத்யாவின் பார்வையில் 

பரீட்சைக்கு முதல் நாளிரவு விழுந்து விழுந்து படிக்கும் மாணவி நான். அதேபோல லிங்க் எடுத்து விடப் போகிறார்கள் என்ற கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக படித்து முடித்த கதை. அப்படியாவது படித்தே தீரணும் என்று ஆவலைத் தூண்டியது இந்தக் கதையின் பெயர். கதை முடிந்து வந்ததும் வந்த பின்னூட்டங்கள்.

 

நான் சொல்ல நினைப்பதை எல்லோரும் முதலிலே வகை வகையாக சொல்லி விட்டார்கள். கதையமைப்பாகட்டும், வர்ணனைகள் பற்றியாகட்டும், கதாபாத்திரங்களின் சிறப்பியல்புகளாகட்டும் அனைத்தும் அலசி முடிக்கப்பட்டாயிற்று. எனக்கு புதிதாக சொல்ல எதுவுமே இல்லை. இருந்தாலும் எனக்கு தோன்றிய சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 

கதை படிக்கும் போது அமெரிக்காவிற்குச் சென்று வந்த உணர்வு. மேலைத்தேய காலநிலை, உணவுகள், பழக்கவழக்கங்கள், நகரங்கள் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். வருங்காலத்திலும் பல கதைகள் மேலைநாடுகளில் நடப்பதாக எழுதினால் மேலும் பல விடயங்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று கதைகள் மூலம் தான் எனக்கு தெரியும்.

 

ஒவ்வொரு கதாபாத்திரமும் கனகச்சிதம். இன்று மேலைநாடுகளில் மட்டுமல்லாது எங்கள் ஊர்களிலும் மலிந்து விட்ட விவாகரத்துக்கள். மறுதிருமணங்கள். இங்கே நாயகியினதும் பெற்றோரதும் நிலை நிறைய யோசிக்க வைக்கிறது.

 

பெற்றவர் விவாகரத்து செய்வது எவ்வளவு தூரம் பிள்ளைகளை பாதிக்கிறது மனதளவில். அதேநேரம் எதிர்காலத்தில் நீண்டிருக்கும் அந்த பெற்றவர் வாழ்க்கை என்னாகிறது? விவாகரத்து நல்லதா? இல்லையா? மறுதிருமணம் நல்லதா? இல்லையா?

 

பெற்றவரின் பிரிவு மகளின் காதல் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகிறது? நட்புக்களின் அவசியம் என்ன? ஒரு தலைக் காதலின் முடிவு தான் என்ன? காதல் என்றால் ஒருத்தியின் பின்னர் திரிந்து அவளை சம்மதிக்க வைத்தால் மட்டும் போதுமா?

 

நிறைய கேள்விகள் இங்கே. அனைத்துக்குமே ஆணித்தரமான தெளிவான பதில் கொடுத்த போதுதான் உங்களின் விசாலமான சிந்தனை பற்றி தெரிகிறது அக்கா.

 

கதையை படித்து முடித்ததும் எனக்கு இறுதியாக தோன்றிய ஒரே முடிவு இதுதான். என்ன பிரச்சினை என்றாலும் மனசுக்குள் அடக்கி ஒடுக்காமல் உடனுக்குடன் தெளிவாக பேசித் தீர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். புரிதல் வரும் வரை பேச வேண்டும்.

 

ஆரியன்,  சைதன்யன், அஸ்வின், கௌதம், பெட்ரோ போன்றவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள். மனிதம் மரணிக்கவில்லை.

 

ஆனால் இந்த ஆரியன், சைதன்யாக்களை நாங்கள் சரியாக இனம் கண்டு கொள்ளாததில் தோற்றுப் போகிறோம்.

 

அதேபோல் டானியாக்கள், ஆதிராக்கள், தேஜஸ்வினிக்களின் உண்மை பிரச்சினைகளை, புரிந்து கொள்ளத் தவறுவதில் மற்றொரு பக்கம் தோற்றுப் போகிறோம்.

 

ரோகன் போன்றோரின் வெளிக் கெத்துக்களைப் பார்த்து அவர்களின் பூஞ்சை உள்ளங்களை அறிந்து கொள்ளத் தவறி விடுவதில் அவர்கள் முடிவுகள் வேதனைக்குரியவையாக மாற நாங்களும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு காரணமாகி விடுகிறோம்.

 

யாருமே இங்கு கடவுள்கள் இல்லை. எல்லோருமே சரி, பிழை, தவறுகள் கொண்ட உணர்ச்சிகளால் செதுக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் தான். அந்த உணர்வுகள் உரியவர்களினால், உரிய நேரத்தில், உரிய முறையில் புரிந்து கொள்ளப்படுமிடத்து வாழ்க்கை சிறக்கிறது. வாழ்பவர்கள் ஜெயிக்கிறார்கள்.

 

தீராது காதல் தீர்வானது அழகுத் தமிழில் ஒரு தீர்வுகாண் கதை.

 

மேலும் பல படைப்புகளை தந்து எங்களை மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆர்த்தி அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s