EPT- 4 by Rosei Kajan

  “யவு செய்து உன் வாயை என் ஃப்ரெண்டிடம் காட்டி விடாதே! படிக்கப் போனால் அதைமட்டும் செய்துவிட்டு வா!” என்று திரும்பத் திரும்பச் சொல்லியே சுகந்தனிடம் டியூஷனுக்கு சேர்த்து விட்டிருந்தான் வருண்.

ஆனால், வகுப்புக்குச் செல்லத் தொடங்கி சில கிழமைகளில் சுகந்தனின் உதவியாளராக மாறியிருந்தாள் அகல்யா!

முத்து முத்தான கையெழுத்து அவளோடது. அதைப் பார்த்த சுகந்தன் அப்பப்போ தனக்குத் தேவையான எழுத்து வேலைகளுக்கு இவள் உதவியை நாடினான். அதுவே, அவன் தாய், தந்தை என்று வீட்டிலும் எல்லோருக்கும் இவளோடு பழக்கம் ஏற்படக் காரணமாக இருந்தது.

கலகலப்புக்கு உறைவிடமானவளை அவர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

“கிளாஸ் முடிந்ததும் வந்து  டீ குடிச்சிட்டுப் போம்மா!”

“வடை சுட்டிருக்கிறேன்; வந்து சாப்பிட்டிட்டுப் போம்மா அகல்.”

“மழை நிற்கவிட்டுப் போகலாம்; உள்ள வாம்மா.” இப்படி, சுகந்தனின் தாயும் இவளும் நெருக்கமாக நட்பு பாராட்டிக்கொண்டனர்.

அதை, சுகந்தனின் பேச்சுக்களில் இருந்தும், அப்பப்போ நண்பனிடம் செல்கையில் நேரிலும் கண்ட வருண் ஏனோ முகம் சுளிக்கவே செய்தான்.

“அம்மா, டியூஷன் என்று போயிட்டு வயிற்றை நிரப்புவதில் கவனம் செலுத்திவிட்டு வாயாடிக்கொண்டிருந்துவிட்டு வாறாள். இவள் இந்த முறை பாஸ் பண்ணின மாதிரித்தான். முதல், போனால் போன வேலையைப் பார்க்க வேண்டும்; அதைவிட்டு விட்டு என்னவோ அந்த வீட்டில் காலாகாலமாகப் பழகியவள் போல மற்றப்பிள்ளைகளுக்கு பந்தா காட்டிக்கொண்டு திரிகிறாள்.” இப்படி,  தாயிடம் சொல்லி இவளை சிடுசிடுக்க வைத்தான்.

அவ்வளவும் போதாதா அகல்யாவுக்கு!

வகுப்பு முடிந்து வீடு வந்ததும், “லக்ஷ்மி ஆன்ட்டி இன்றைக்கு ஒன்று செய்திருந்தா ஆன்ட்டி, இப்படிச் சொன்னார் ஆன்ட்டி, அப்படிச் சொன்னார் ஆன்ட்டி.” என்று சொல்லிச் சொல்லியே இவனுக்கு எரிச்சல் மூட்டினாள்.

“சுகந்தன் அண்ணா உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் ஃப்ரெண்ட் தான்; இல்லையா ஓமா(ஆமாவா) என்று அவரிடமே கேட்டுப் பார்ப்போமா?” அவனோடு நேரடியாகவே மல்லுக்கு நின்றாள்.

“ஓ அப்படியா?! அங்க உன் அப்பா பாவம் வேகாத வெயிலில் நின்று படாத பாடு பட்டுச் செய்த புகையிலையையும் மிளகாயையும் வித்த காசை உனக்கு அனுப்பிப் படிப்பிக்க, இங்க நீ ஃப்ரெண்ட் பிடிக்கத்தானே வந்தாய்? வந்த வேலையைச் செய். எனக்கு என்ன வந்தது!?” சினந்தான் இவன்.

அடிக்கடி நண்பன் வாயிலும் அவன் வீட்டார் வாயிலும் இவள் பெயர் உச்சரிக்கப்படுவதை இவன் உள்ளம் ஏனோ விரும்பேன் என்றதே அனைத்துக்கும் தலையாய காரணம்!

ஏன்? எதுக்கு? என்ற ஆராய்ச்சியின்றி அவளோடு வார்த்தைகளால் முட்டிக் கொண்டான் அவன்.

“பாருங்க ஆன்ட்டி இவர் கதைக்கிற கதையை..” வருணின் இப்படியான குற்றச்சாட்டுகள் திருப்பி வாயடிக்க வைத்தாலும் அவள் மனதையும் தைக்கவே செய்தது. அதுவே, அவன் தாயிடம் முறையிட வைத்து தன் ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டது.

“சும்மா சும்மா இப்படிக் கதைப்பதை நிறுத்து வருண். போகவர நாலு பேரோடு பழகுவதில் அப்படி என்ன தப்புக் கண்டாய்? முதல், அவர்கள் உன் ஃப்ரெண்ட் வீடு தானே? பிறகென்ன?” இவர்களின் பேச்சை கேட்டுவிட்டு மகனை கடிந்து கொண்டார் சந்திரன்.

“அதுதானே வருண், இதையெல்லாம் பெரிய கதை என்று சொல்லி இரண்டுபேரும் வாக்குவாதப்படுறீங்களே!” காரணமற்ற மகனின் கோபத்தில் செல்விக்கும் கோபம் தான் வந்தது.

“அது வேறு ஒன்றுமில்லையப்பா, இவர்களுக்கு சண்டை போட காரணம் வேண்டாமா? அதுதான் அதை இதை என்று தேடிப்பிடித்து தர்க்கம் பண்ணுகிறார்கள்.” கணவரிடம் சலித்துக்கொண்டார் செல்வி.

தான் சொல்வதை காதில் வாங்காத தாய் தந்தையரை முறைத்தான் மகன்.

அதோடு, “சரிப்பா சரி, இனிமேல் பட்டு இவள் விடயத்தில் வாயைத் திறந்தேனோ ஏன் என்று கேளுங்க!” அவள் மீது கோபப் பார்வையோடு சொன்னான்.

இந்த அவனது ஒதுக்கத்தையும் அவளால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. ஆனாலும், “அது! அந்தப் பயம் இருந்தால் சரிதான்!” என்றவாறே, மிதப்பாக அவனைப் பார்த்தாள்.

“அதற்காக உங்க விடயங்களில் நான் தலையிடமாட்டேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.” வம்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவள் தயாராக இல்லை என்று உணர்த்தவும் செய்தாள்.

“பாருங்க! நான் சொன்னேனே, இவர்களைத் திருத்தவே முடியாது.” எழுந்தே விட்டார் செல்வி.

“தோட்டத்துக்கு தண்ணி விடப்போறேன்பா, இதிலிருந்து செவிப்பறையை கிழிக்காது என்னோடு வாங்க.” இருவரையும் முறைத்துவிட்டு பெரியவர்கள் வெளியேறினார்கள்.

அவர்கள் தலை மறைந்ததும் இவளை ஓரெட்டில் நெருங்கியவன்,  “தலையிட்டுத்தான் பாரேன்; அப்போ தெரியும் நான் யாரென்று!” உறுமினான்.

“அய்யோ ஆன்ட்டி…உங்கட மகன் அடிக்க வாரார்.” வீரிட்டு அவனை சட்டென்று பின்வாங்க வைத்துவிட்டு, “ஏன்? இப்போ மட்டும் நீங்க யாரென்று தெரியாமல் தானே நாங்க இருக்கிறம்! வெவ்வே..!” அவளின் அலறலில் திடுக்கிட்டு செய்வதறியாது பார்த்தவனை கேலியாகப் பார்த்து, “போடா போடா புண்ணாக்கு, போடாதே தப்புக்கணக்கு…” அபிநயித்துவிட்டு ஒரே பாய்ச்சலில் தோட்டத்தில் இறங்கியிருந்தாள் அகல்.

     ‘பிடாரி…அடங்காப்பிடாரி! என்ன கத்துக்கத்துறாள்; அவளை நான் ஏதோ செய்த மாதிரி…’ என்ற எண்ணத்தோடு, அவள் மீதிருந்த கோபத்தையும் மீறி அவனுதடுகள் சிறு முறுவலில் நெளிந்தன!

தான் நெருங்கியதும் கண்ணிமைப்பொழுதில் அவள் விழிகளில் பரவிய தவிப்பும் கலக்கமும் அவனுக்கு மிகவும் புதிதாகத் தெரிந்தது. மீண்டும் அக்கணத்தை எண்ணிப் பார்த்தவனுள் வித்தியாசமான, இதுவரை உணராத மிகப் புதிய உணர்வொன்று மின்னலென ஓடி, வந்த சுவடே தெரியாது மறைந்து போனது.

‘விசரி! எனக்குப் போய் பயப்படுகிறாளா?’ முறுவலோடு எண்ணியவன், மறுநிமிடம், சுறுசுறுவென்று பரவிய எரிச்சலில் முகம் சுளித்தான்.

“இவள் கத்தின கத்தலுக்கு ‘என்னடா செய்தாய்?’ என்று வருவார்கள் அம்மாவும் அப்பாவும். எல்லாம் அவர்கள் கொடுக்கும் இடம். ஒருநாளைக்கு நல்லா வாங்கப் போறாள்.” முணுமுணுத்தவன், பின்னால் சென்று இழுத்துவைத்து நாலு குட்டுக் கொடுக்கப் பரபரத்த மனதை அடக்கிவிட்டு, “நீ சரி வரமாட்டாய்…பொறு சிவா அங்கிள் கால் பண்ணும் போது வத்தி வைக்கிறன்.” அவளுக்குக் கேட்கும் வகையில் உறுமிவிட்டே அகன்றிருந்தான்.

“சொல்லும் சொல்லும்; அப்பாவுக்கு தன் மகளை தெரியாதா என்ன?” பதிலுக்கு சொல்லிவிட்டு செல்வியிடம் சென்றவள், அவர் கையிலிருந்த தண்ணீர் குழாயை வாங்கி நீர் விடத் தொடங்கியவாறே, “போட்டுக்கொடுக்கிற எட்டப்பன் வேலை செய்யப் போறாராம் உங்க மகன்; அப்படி என்ன ஆன்ட்டி பிழையாகச் செய்தேன்?” என்றவளுக்கு, வருண் மீது எரிச்சலே மிஞ்சியது.

“இங்க பாரும்மா, உங்கட சண்டைக்குள்ள நாங்க வாறதில்ல என்ற முடிவெடுத்து சிலநாட்களாச்சு!” பட்டென்று சொல்லிவிட்டார் செல்வி.

இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரில் பதிந்த தன் பார்வையில் வெளிப்படுத்தினாள் அகல்.

“அதில நின்றிருந்தால்…சண்டையைத் தொடர்ந்து இரண்டுபேரும் என்னட்ட முதுகு புளிக்க நல்லா வாங்கி இருப்பீங்க! அது வேணாம் என்றுதான் இவரையும் கூட்டிக்கொண்டு இங்கால வந்தன்.” தொடர்ந்து படபடத்தார் செல்வி.

செல்வியில் நிலைத்திருந்த பார்வையை சந்திரனை நோக்கித் திருப்பியவள், பயந்துவிட்டதைப் போல பாவனை செய்து அவர் முகத்தில் முறுவலைக் கொண்டுவந்தாள்.

அடுத்து, “உங்க வைஃப் ஹீட் போல!” வாயசைவால் வினவி, “எதுவும் செய்ய முடியாது அங்கிள், நம்ம பாடு கஷ்டம் தான்!” அடிக்குரலில் முணுமுணுத்தபடி தோளைக் குலுக்கி, அவரை வாய்விட்டு நகைக்க வைத்துவிட்டு சாதுவாக மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

பெரிதாக நகைக்கும் கணவனை முறைத்தார் செல்வி!

“இப்ப என்ன சொல்லீட்டன் என்று இப்படி சிரிக்கிறீங்க?” இளையவர்களில் உள்ள கோபத்தில் கணவனிடம் சீறினார்.

“இல்லப்பா…அகல் சொன்னது சரிதான்; அப்படியே பைப் தண்ணியை உன் ஆன்ட்டியின் உச்சந் தலையில் பிடிம்மா!” என்றபடி எழுந்த சந்திரன், “இனியும் இதில் நின்று இழுபடாமல் நான் உள்ள போறன்; கொஞ்ச ஸ்கூல் வேலைகள் இருக்கு!” மெல்ல நகர்ந்து விட்டார்.

“இந்த வீட்டில் எல்லாருமே நட்டுக் கழன்ற கேஸ் தானே!” முணுமுணுத்த செல்வியை அணுகி, “கோபமா ஆன்ட்டி? நானும் வருணோட சண்டை போடக் கூடாது என்றுதான் நினைக்கிறன்; ஆனால், அது முடியாமல் இருக்கே!” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் சொன்ன விதமே செல்வியின் முகத்தில் முறுவலை பெரிதாகப் பூசியது.

“உன்னை விடப் பெரியவனை பெயர் சொல்லாதே என்று சின்ன வயதில் எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவில்லை. அதற்காக  உன் பாட்டியிடம் அடியும் வாங்கியிருக்கிறாய். அடிவாங்கி அழுதுகொண்டே அவன் பெயரை கத்திக் கத்திச் சொல்வாய்; வாயாடி!” அவள் கன்னத்தை நிமிண்டியவர், தன்னையுமறியாது பெருமூச்செறிந்தார் .

“பாருங்க, சின்னவயதில் இருந்து உங்க மகன்தான் எனக்கு வில்லன் ..” என்றவள், “என்னாச்சு ஆன்ட்டி? இவ்வளவு பெரிய பெருமூச்சு விடும் காரணம் தான் என்னவோ!?” நாடக பாணியில் கேட்டவளை செல்லமாக முறைத்தவர், காரணம் என்று எதைச் சொல்வார்?

‘இவர்களின் சிறுபிராயத்திலிருந்தே என் மனதோரம் சிறுபுள்ளியாய் தோன்றிய ஆசை, சிறுகச்சிறுக வளர்ந்து கொண்டே போனாலும் அது நடக்க சாத்தியமே இல்லை என்று கண்முன்னால் தெரிகையில் பெருமூச்சை மட்டும் தான் விடமுடியும்!’ மனதில் முணுமுணுத்தவர், “என்ன விஷயம் என்று நான் சொன்னால் மட்டும் முதல் அலுவலாக கேட்டு விட்டுத்தான் மறுவேலை செய்வாய் என்ன?” என்றார் சலிப்போடு!

“அப்போ…உங்க அருமந்த புத்திரனோடு சண்டை போடுவது பற்றித்தானே?” ஒற்றைப்புருவத்தை ஏற்றியிறக்கி கண்ணடித்தாள் அகல்.

அவரின் பொய்க் கோபத்தை வெகுவாக ரசித்தவாறே, “ஹைய்யோ ஆன்ட்டி, இது எல்லாம் ஒரு ஜாலிக்கு! இதையெல்லாம் பெரிது பண்ணாதீங்க; இப்ப சண்டைபோடாமல் உங்க வயது வந்த பிறகா போடுவது?” என்றவள்,

“சரி சரி…முகத்தை தூக்கி வைத்திராதீங்க; உங்களுக்காக சண்டைபோடாமல் இருக்க முயன்று பார்க்கிறேன்.” என்று சொன்ன வேகத்தில்,  “நாளைக்கு நான் சமைக்கிறன் ஆன்ட்டி, அந்தாளுக்கு உப்புச் சப்பில்லாம சமைத்துப் போட்டு பழி வாங்க வேண்டும் போல இருக்கு!” என்றுவிட்டு நாக்கைக் கடிக்க, மிகுந்த களைப்போடு பார்த்தார் செல்வி.

“அட! சும்மா ஒரு பேச்சுக்கு அப்படிச் சொன்னேன் ஆன்ட்டி, அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு…” என, இவர்கள் இருவரும் மும்முரமாக கதைத்துக்கொண்டே நீர் விட்டுக் கொண்டிருக்க, பின்னால் வந்து நின்ற வருண் அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் நின்றான்.

“எனக்கா உப்புச் சப்பில்லாமல் சமைத்துப் போடப் போகிறாய்?” சட்டென்று பாய்ந்து அவள் கையில் இருந்த பைப்பை பறித்து, நடப்பதை அவளும் செல்வியும் உணரும் முன்பே, அவள் முகத்தில் நீரைப் பாய்ச்சி அடித்தான்.

“டேய் டேய் இதென்னடா செய்யிறாய்? ஐயோ இவர்கள் இரண்டு பேரோடும் நான் படுற பாட்டுக்கு ஐம்பது குழந்தைகளை வளர்த்துவிடலாமே!” கத்திய தாயை முறைத்தவன்,

“பெத்த பிள்ளைக்கு சாப்பாட்டில் சதி செய்ய நினைக்கிறாள்; கன்னத்தில் இரண்டு இழுக்காம கேட்டுக்கொண்டு நிற்கிறீங்களே! உங்களை என்ன செய்யலாம்!?” என்றவாறே பைப்பை அவரை நோக்கித் திருப்பியிருந்தான்.

“தம்பி…வேண்டாம்டா! என்னங்க? இங்க வந்து பாருங்க! இவனை என்ன செய்யலாம்? தடியன்!” எதையும் பொருட்படுத்தாமல் அவரையும் நீரால் அபிஷேகம் செய்தவன், அவன் செய்கையில் அதிர்ந்து நின்றவளிடம் திரும்பி அவள் நின்ற கோலம் பார்த்து “ஹா..ஹா…ஹைய்யோ..ஹா..ஹா..” பெரிதாக நகைத்தான்.

அத்துடன் அகன்றுவிட மனமில்லாமல் தண்ணீர் பைப்பின் வாயில் விரலால் இலேசாக அழுத்தி அவள் முகத்தில் நீரைச் சீறவிட்டவன்,  “இனி இருக்குடி செல்லம் உனக்கு; இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடப்போகிறாய் பார்த்துக்கொண்டே இரு!” என்று சொல்லிவிட்டு,

“டேய்! உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்?” என்றவாறே  ‘தொம்! தொம்!’ என்று தாய் முதுகில் போட்ட குத்துக்களை நெளிந்தவாறே வாங்கி, “முதுகு கடித்ததும்மா…தாங்க்ஸ். எதுக்கு என்று பார்க்கிறீங்களா? அதுதான், சொறிந்து விட்டதுக்கு!” கண்ணடித்து நகைத்தவாறே ஒரே பாய்ச்சலாக மோட்டார் சைக்கிளை அணுகி ஸ்டார்ட் செய்தவன்,    “அப்பா…அப்பா” குரலை உயர்த்தி அழைத்து, “இரண்டுபேரையும் அழகாக ஃபோட்டோ எடுத்து வைய்யுங்க; பிறகு வந்து ‘எஃப் பி’ யில போட்டு விடுறன்.” கத்திக்கொண்டே வெளியேறினான்.

     வெளியில் கேட்ட சத்தத்தில் என்னவோ ஏதோ என்று விரைந்து வந்த சந்திரன், மனைவியும் அகல்யாவும் நின்ற நிலை பார்த்து மீண்டும் வாய்விட்டு நகைத்தார்.

“உங்க மகன் செய்த குரங்குக் கூத்தைப்பார்த்தால் உங்களுக்கு சிரிப்பா வருது? வரட்டும் இன்றைக்கு அவனுக்கு! நானே உப்புச் சப்பில்லாம அரையும் குறையுமா அவித்துப் போடுறன். வாய்க்கு ருசியா சமைத்துப் போட்டு கொழுப்புக் கூடிப்போய்ட்டுது! அதுதான் இந்த ஆட்டம் போடுறான்.” புறுபுறுத்தபடி வீட்டினுள் சென்றார் செல்வி.

அகல்யாவோ ஒத்தவார்த்தை பேசவில்லையென்றாலும், “பொறுடா உனக்கு இருக்கு! என்னையா வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்!” மனதில் கறுவிக்கொண்டுதான் குளியலறை நோக்கிச் சென்றாள்.

Advertisements

4 thoughts on “EPT- 4 by Rosei Kajan

 1. அகல் வாறாள்…குட்டிபிசாசு என்ன செய்யும் என்று காட்டப் போறாளாம் ..எனக்கு என்ன

  ஹா..ஹா..

  நன்றிடா

  Liked by 1 person

 2. Rendu perum eppavum aettikku potti. Varun konjam nidhaanamaaga avan feelings yosithaal Agalyava avanukku pidikkumnu puriyum. But adhu dhaan panna maatengaraane. Agalya avanukku next enna aapu vaika pogiraal?

  Liked by 1 person

 3. Agalya avanukku next enna aapu vaika pogiraal?>>>ஹா..ஹா..கதை முழுவதும் ஒரே ஆப்பு தான்..ஹா..ஹா…பார்ப்போம் உமா.

  நன்றி நன்றி

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s