EPT- 3 by Rosei Kajan

 

3.

அடுத்து வந்த வெள்ளிக்கிழமை மாலை, ஏற்கனவே சொன்னபடி, அவளை, நண்பனின் வகுப்பில் சேர்த்துவிடத்  தயாரானான் வருண்.

    “இன்னும் ஐந்தே ஐந்து நிமிடம் தான் பார்ப்பேன்மா, அவள் வரவில்லையோ நான் போய்க்கொண்டே இருப்பேன்; எனக்கு வேறு வேலைவெட்டி இல்லையா? மகாராணி எப்போ தயாராகி வருவா என்று பார்த்துக்கொண்டு நிற்பதுதான் என் வேலை போல!” என்றவனை, செல்வி பார்த்த பார்வையில் கண்டிப்பு மிகுந்திருந்தது.

“கொஞ்சம் பொறு தம்பி; அவளும் பாவம்தானே! பள்ளிக்கூடம் முடிய அப்படியே டியூசன் என்று போயிட்டு இப்போதானே வந்தாள்; நின்று கொண்டே தான் சாப்பிட்டாள்; முகம் கழுவி உடுப்பு மாத்திக்கொண்டு வரட்டுமன்.”

“நல்ல பாவம் தான்; இன்றைக்கு முதல் நாள் என்றதால் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருக்கு; இல்லையோ, நீயாச்சு உன் படிப்பாச்சு என்று இருந்திருவன்.”

“அவளுக்கும் இங்க இடம் வலம் தெரியாதுதானே தம்பி; நீயும் இப்போ சும்மாதானே நிற்கிறாய்! அதில கொண்டுபோய் விட்டுட்டு உன் அரட்டைகளோடு அலட்டிவிட்டு வரப்போகிறாய். அதற்குள்ள இவ்வளவு அவதி!” மகனை, கேலி செய்தார் செல்வி.

“ஏன்மா சொல்ல மாட்டீங்க! அவள் இடம் வலம் தெரியாதவளா? வாயைத் திறந்தால் உலகத்தையே சுற்றி வந்து விடுவாள்!”

“சரிடா சரி…உனக்கு ஒன்றுமே கதைக்கத் தெரியாது பார்! நீ ஒரு வாயில்லா பூச்சி!” என்றவர், “ஆனால் ஒன்று தம்பி, அவளைச் சீண்டிவிட்டு சண்டையை ஆரம்பிக்கிறது என்னவோ நீதான்; இப்ப நீ இப்படிக் கதைப்பதைக் கேட்டால் அவளும் நாலு சொல்லுவாள்; பிறகு, நேரகாலத்துக்கு டியூஷனுக்கு போன மாதிரித்தான்!” அலுப்பாகச் சொன்னார்.

அதைக்கேட்டவனும் சும்மா இருக்கவில்லை.

“உங்களுக்கும் அப்பாவுக்கும் பெத்த மகனைவிட அவளில் தான் பிடிப்பு அதிகம்! அவள் வந்த பிறகு என்னை ஒதுக்கியாச்சு!” சீண்டும் குரலில் சொன்னவன், வேண்டுமென்றே மிகச்சோகமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

“நல்லாச் சொன்னாய் போ!” என்ற செல்விக்கு மகன் அப்படிச் சொன்னது ஏனோ ஒருமாதிரி இருந்தது.

“ஏன் தம்பி குழந்தைப்பிள்ள போல கதைக்கிறாய்!? அவள் நம்ம பொறுப்பில் இருக்கிறாள், நாம தானே பார்த்துக்கொள்ள வேணும் என்ற அக்கறையில் கதைத்தால் இப்படித்தான் சொல்வாய்; சரி விடு.”

“ஹா..ஹா..அம்மா! சீரியஸா எடுத்திட்டீங்களா? சும்மா சொல்லிப் பார்த்தன்.” தாயைக் கட்டிப்பிடித்து செல்லம் கொஞ்சியவன், “என்றாலும் நீங்க அவளுக்குத்தான் சப்போர்ட்!” மீண்டும் சொல்ல, மகனின் மூக்கைத் திருகினார் அவன் தாய்.

“நீ நாலு வயதாக இருக்கும் போதுதான் அவள் பிறந்தாள்; அப்போ ஊரில் இருந்தோம்; பக்கத்துவீடு வேறயா, நீ எந்த நேரமும் அவர்களின் வீட்டில் தான் இருப்பாய்; அதுவும் அவளோடு!” முறுவலும் கேலியுமாக சொன்ன தாயாரை பொய்க்கோபத்தோடு பார்த்தான் மகன்.

“உண்மைதான் தம்பி, அப்போ அவளின் அக்காவுக்கு மூன்று வயது; அவளைக் கூட குழந்தையை நெருங்க விடமாட்டாய்!”

“அது…அந்த நாலு வயதில…நல்லது கெட்டது தெரியாதேம்மா! அதோடு இந்த கொள்ளிவாய்ப் பிசாசுக்கு அப்போ கதைக்கத் தெரியாதே!”

“இப்படிக் கதைப்பதற்கு உனக்கு வாயில தரவேணும்.” மகனின் முதுகில் ஒன்று போட்டவர், “உனக்கும் தான் அவளோடு வம்பிழுக்காட்டி பொழுது போகாதே!”

“வம்புக்காம்மா சொல்லுறன்! முதல் நாளே வகுப்புக்குப் பிந்திப்போனால்! சுகந்தன் டைமுக்கு தொடங்குவான்; பிந்திப்போனால் அவனுக்குப் பிடிக்காது; இதெல்லாம் அன்றைக்கே சொல்லியும்…” என்றவனை இடைமறித்தது, ஆளை முந்திக்கொண்டு வந்த அகல்யாவின் குரல்!

“ஹலோ…ஹலோ என்ன புலம்பல்? முதல்நாள் என்றாலும் எங்களுக்கு போகத் தெரியும்; நீங்க ஒன்றும் வரத் தேவையில்லை.” என்றவாறே வந்தவள், “போயிட்டு வாறன் ஆன்ட்டி.” என்றுவிட்டு சைக்கிளை எடுத்தவாறே,

“நானே கேட்டுக் கேட்டுப் போவன்; முடியுமென்றால் நான் வருவன் என்று மட்டும் ஃபோனில் சொல்லீட்டு விடுங்க; இல்லையோ, அதையும் சொல்ல வேண்டாம்.” கேட்டைத் திறந்து வெளியேறியவள், முறைத்துக்கொண்டு நின்றவனைத் திரும்பிப்பார்த்து,

“நான் ஒன்றும் சும்மா படிக்கப் போகவில்லையே!  காசு கொடுத்துப் படிக்கப் போறன், அதுக்கு யாருடைய ரெகமென்டேஷனும் தேவையில்ல.”  முறுக்கிக்கொண்டே நகர்ந்தாள்.

இவளின் இப்படியான செய்கைகள் இவனுக்குப் புதிதா என்ன!? அல்லது, இவன்தான் சளைத்தவனா?

“பாருங்கம்மா… இவளின்ட திமிர! இந்த வாய்க்குத்தானே  இவளுக்கும் எனக்கும் பிரச்சனையே வாறது.” என்று முறையிட்டாலும், “போயிட்டு வாறன்மா!” என்றவாறே தன் சைக்கிளோடு நகர, “கடவுளே! தயவு செய்து சண்டை போடாமல் போயிட்டு வாங்க; கிளாஸ் முடிய கவனமாக வாம்மா அகல்.” விடைகொடுத்தார் செல்வி.

சிறிதுதூரம் வரை இருவரின் சைக்கிள்களும் அமைதியாகவே உருண்டன!

“என்னட்ட காட்டுற வாயை சுகந்தனிட்ட காட்டிப் போடாத; அவனுக்கு அதெல்லாம் பிடிக்காது.” வழமைபோல ஆரம்பித்தான் வருண்.

“இங்க பாருங்க, யாரோடு எப்படிப் பழக வேண்டும் என்றெல்லாம் நீங்க சொல்லித் தரத் தேவையில்ல.” வெடுக்கென்று சொன்னாள் அவள்.

“ஓஹோ! அப்படியா? கிளாசுக்கு கதைத்துச் சேர்த்து விட, அதுவும், நேர்சரி பேபி போல கூட்டிக்கொண்டுபோய் விட மட்டும் நான் தேவையா?” சீண்டினான் இவன்.

“இப்ப உங்களை யார் வரச் சொன்னது? எங்களுக்கும் போகத் தெரியும்.” பட்டென்று சொன்னவள், அவனைப் பார்த்து முறைக்கவும் செய்தாள்.

‘வயதில் பெரியவன் என்கின்ற ரீதியில் சரி மரியாதை தரமாட்டாளே! இவளுக்குப் போய்..’ அவனுள் சுறுசுறுவென்று கோபம் சுரந்தது.

“சரிடி..சரி ….நீ உன் வேலையைப் பார்; நான் என் வழியில் போகிறேன்.” சட்டென்று சைக்கிளை மெதுவாக்கிப் பின்வாங்கியவன், “பார்ப்போமே, எப்படித் தனியாகப் போகிறாய் என்று!” சவாலாகத்தான் சொன்னான்.

திடுமென்று அவன் இப்படிச் சொன்னதும் திகைத்துப் போனாள் அகல்.

அவள் முகத்தில் ஓடிய திகைப்பை ரசித்தவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

“என்ன மேடம் இப்படிப் பார்க்கிறீங்க? சுகந்தன் வீடு எங்க என்று தெரியும் தானே?”  எனக்கேட்டு, வீட்டு விலாசம் சொல்ல வந்தவன், “அட! நீதான் கேட்டுக் கேட்டுப் போவாயே; போயிட்டு உருப்படியா வந்து சேர்!” சட்டென்று பக்கத்து ஒழுங்கையினுள்(லேனுக்குள்) சைக்கிளைத் திருப்பி விரைந்து மறைந்து விட்டான்.

இவ்வளவு நேரமாக, கூட்டிக்கொண்டுபோய் சேர்த்து விடுகிறேன் என்று நின்றவன் இப்படிச் செய்ததும் சர்ரென்று சைக்கிளை நிறுத்தி இறங்கி விட்டாள் அகல்.

இவளுக்கு கடந்த சிலமாதங்களாகத்தான் யாழ்ப்பாண வாசம். பள்ளி, டியூசன், பக்கத்திலுள்ள கடைகள், தின்னவேலி சந்தை(மார்க்கட்) இதைத்தவிர எங்கும் போனதில்லை.

‘இப்போ, தின்னவேலியில் இருந்து பாண்டியந்தாழ்வு வரை போக வேண்டுமே!  அங்கு போய் வீட்டை எப்படிக் கண்டு பிடிப்பேனாம்?’ மனதில் எரிச்சலும் கோபமும் சுரக்க, “ச்சே! இந்தாளை நம்பி வெளிக்கிட்டது என் பிழை; பேசாமல் வீட்ட போவோம். அங்கிளிட்ட சொல்லிக்கொடுத்து நல்லா வாங்கிக்கொடுக்க இல்லையோ நான் அகல் இல்ல!” வாய் விட்டே சொல்லிக்கொண்டவளின் விழிகள் மிக மிக அருமையாகக் கலங்கிவிட்டன.

சமாளித்துக்கொண்டு சைக்கிளில் ஏறி வந்த வழியில் திருப்ப முயல, சர்ரென்று அருகில் வந்து நின்றவனின் முகம் முழுதும் கிண்டல் நகைப்பு!

“ஏய் அகல், அழுகிறாயா என்ன?” நம்பாது கேட்டவன், அவள் விழிகள் தளம்ப சற்றே சற்று தடுமாறிவிட்டான்தான் .

“ஹேய்! இதப்பார்; இவ்வளவுதான் உன் வீரமா? அப்போ, எல்லாமே வாய் வீச்சுத்தானா?!” சமாளித்தான்.

“இந்த வருண் எடுத்த காரியத்தை குறையில் விட்டதா சரித்திரமே இல்லையாக்கும்! பயப்படாத!” டீ ஷர்ட் கொலரை தூக்கிவிட்டு பாவனை செய்து இவள் உள்ளத்தை எரிய விட்டான்.

அது, கலங்கிய அவள் நயனங்களால் கோபத்தீயாகத் தெறிக்க, ரசித்து நகைத்தவன்,  “விழுந்தாலும் ஒட்டாதடி உனக்கு!” அன்று இவள் சொன்னதை திருப்பிச் சொன்னபடி, “சரி வா, நேரம் போய்ட்டுது.” சைக்கிளை மிதிக்க,

‘லூசு! லூசு! இருக்குடா இன்றைக்கு உனக்கு; ரோட்டில வைத்து அழவைத்து விட்டாய் தானே! பொறு பொறு.” கறுவிக்கொண்டே பின்னால் சென்றவள் முகம் உம்மென்று  இருந்தது.

அதைப் பார்த்தவனோ, “ஹா..ஹா…அகல், விருப்பம் இல்லாமல் கொண்டுவந்து வகுப்பில் தள்ளுகிறேன் என்று நினைப்பான் என் ஃப்ரெண்ட்; அங்க, வாயை திறக்க வேண்டாம் என்றேன் தான்; அதற்காக, இப்படி உம்மணாம் மூஞ்சியாகவும் இருக்க வேண்டாம்; எனக்கே சகிக்கிதில்ல…அப்ப அவனுக்கும் கூடப்படிக்கிற பிள்ளைகளுக்கும் எப்படி இருக்கும்!?” சீண்டிக்கொண்டே வந்தவனை ஏறிடாது, பாதையை மனதில் குறித்துக்கொண்டு அவள் வந்த விதமே, ‘உனக்கு இருக்குடா மவனே!’ என்று அவனை எச்சரிக்கை செய்வதாக இருந்தது.

அதையுணர்ந்தவன், “ஏய் அகல், உன்னைப் பார்த்தால் என் அடிவயிறு கலங்குது; ப..ய…த்துல…” அதற்கும் கேலி செய்தான்!

இப்படி, தொடர்ந்து அவன் கதைக்க கதைக்க, மௌனமே பதிலாகக் கிடைக்க, அவனுள் ஏதோ ஒருவிதமான தவிப்பு பரவியது!

மெல்லத் திரும்பி, சிலகணங்கள் அவளையே பார்த்தவன், “ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போடுவது போல வராது அகல்; கதைக்க மாட்டாய் போல; கோபமா?”

ஒருபோதுமில்லாதவாறு கெஞ்சல் கலந்து வந்த அவன் குரலின் தொனி அவனை நேராக நோக்க வைத்ததுதான். ஆனாலும், மனதிலுள்ள கோபம் தான் தனியேன் என்கின்றதே!

பார்வையால் சுட்டுவிட்டு பாதையில் படிந்தன அவள் விழிகள்.

“ஹ்ம்…சரி விடு; இந்தா வீடும் வந்திட்டுது.” என்றவன், வாயிலில் சில நண்பர்களோடு அவன் நண்பன் சுகந்தனும் நிற்கவே, “ஹாய் மச்சான்.” என்றபடி அவர்களருகில் சென்று காலை ஊன்றியவாறே நின்று கொண்டவன், இவளிடம் திரும்பி, “சைக்கிளை அதில விடும்!” சைக்கிள்கள் நிறுத்தியிருந்த இடத்தைக் காட்டினான்.

‘ஆட்களுக்கு முன்னால் பெரிதாக மரியாதை தாராறாம்!’ மனதில் புறுபுறுப்போடு சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு அவர்களை நோக்கி வந்தவளின் நடையில் மிகுந்த தயக்கம்!

பள்ளி நண்பிகளோடு சேர்ந்து டியூஷன் போவதில் சிறிதும் தயக்கம் இருந்ததில்லை இவளுக்கு! முதல் முதல் இப்படித் தனியாக, அதுவும் இவனின் நண்பர்களின் பார்வை இவளில் நிலைத்திருப்பதில் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தவள் தவிப்பாக வருணையே பார்த்தாள்.

அவனோ நண்பர்களோடு உரையாடுவதில் மும்முரமாக நின்றான்.

சுகந்தனும் இவனும் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஒரே பாடசாலையில் படித்திருந்தாலும் உயர்தரத்தில்(பிளஸ் வன்/டூ) சுகந்தன் விஞ்ஞானத்தையும் இவன் வணிகத்தையும் தெரிவு செய்திருந்தனர். ஆனாலும், நட்பில் பிரிவோ, இடைவெளியோ விழவில்லை.

இப்போது, பல்கலையில் படித்துக்கொண்டிருக்கும் சுகந்தன், வீட்டில் வைத்து பிரத்தியேக வகுப்புகளை நடத்தி வருகிறான். அவனது  கற்பித்தலுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பும் உண்டு!

தன்னையே பார்த்துக்கொண்டு அருகில் நெருங்கிவளை, சிறுமுறுவலோடு நண்பனிடம் அறிமுகம் செய்து வைத்தான் வருண்.

அக்கணம், அவனை பெரிய மனிதனாகக் கண்டாள் இவள்.

ஏட்டிக்குப் போட்டியாக தர்க்கம் பண்ணும் போதெல்லாம் தனக்குத்தோதான சண்டைக்காரனாகவே தெரிவான்  இவன். இன்றோ, அவன் தோரணை அவனில் சிறுமரியாதையை கொண்டு வரும் போலிருந்தது.

அப்போதும், நிச்சயமாக மரியாதையை உருவாக்கிவிடவில்லை இவள் உணர்வுகள்! அதை உணர்ந்தவளின் இதழில் சின்னதாக ஒரு முறுவல் எட்டிப் பார்த்து மறைந்தது.

கோபத்தில் சிடுசிடுவென்று வந்தவளில் தெரிந்த சிறுமலர்வில் வருணின் மனமும் முகமும் மலர்ந்தன!

“இன்றைக்கு மட்டும் இந்த வகுப்பில் இரும்; இனிமேல் சனியும் ஞாயிறும் ஐந்து மணிக்கு வகுப்பு.” என்ற சுகந்தன், “வலது பக்கத்தால் போனால் பின்னுக்குள்ள கொட்டிலில் பிள்ளைகள் இருக்கிறார்கள்; போய் இரும், வகுப்பு தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கு!” என்றதும் சிறுதலையசைப்பில் வருணிடம் விடைபெற்று நடந்தவளை, “அகல்!” அழைத்து நிறுத்தினான் வருண்.

கேள்வியாக நோக்கியவளிடம், “இரண்டு மணித்தியாலத்தில் வகுப்பு முடிய இங்கேயே நில்லும்; வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்.” என, வெகு அக்கறையாகச் சொன்னவனுக்கு, ‘தேவையில்ல; எனக்கு வரும் வழி தெரியும்.’ வெடுக்கென்று சொல்ல முற்பட்ட நாவை அடக்கி, சம்மதமாகத் தலையசைத்திருந்தாள் அகல்.

“எப்போதிருந்து மச்சான் இந்த வேலை பார்க்கத்தொடங்கினாய்? உண்மையாகவே அந்தப் பிள்ள யாருடா மச்சான்? சும்மா மறைக்காமல் சொல்லு!” அவர்களின் கேலிக்குரல்கள் செவிகளில் மோத,  ‘ஒரு பெடியனும் பெட்டையும் ஒன்றாகப் போய் வந்தாலே ஜோடி சேர்த்து விடுவார்களே! என்ன கொடுமையடா சாமி.! இந்தாளோடு என்னை..’ என எண்ணியவளுள் நகைப்பு கொப்பளித்தது.

‘இப்போ அந்தாள் முகம் எப்படி இருக்கும்? வேப்பங்காயை மென்று தின்னும் கட்டாயத்தில் இருக்குமோ!’ திரும்பிப்பார்க்கும் எண்ணம் இருந்தாலும் அதைச் செய்யாது, மாணவ மாணவிகள் அமர்ந்திருந்த கொட்டிலை நோக்கி நடந்தாள் அவள்.

Advertisements

2 thoughts on “EPT- 3 by Rosei Kajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s