EPT-2 by Rosei Kajan

 

2.

 

   “வருண் எங்க? இன்னும் வரவில்லையா?” என்றவாறே இரவுணவுண்ண வந்தமர்ந்தார் சந்திரன்.

‘சாப்பாடு வேண்டாம் என்று சீறிக்கொண்டு போனது போல வராமல் இருந்து விடுவாரோ!’ மனதில் சந்தேகத்தோடு அங்கு நின்ற அகல், மறந்தும் சந்திரனை பார்க்கவில்லை.

“நீங்க சாப்பிடத் தொடங்குங்கோவன், அவன் வருவான்.” தோசைகள் அடங்கிய தட்டை மேசையில் கொண்டுவந்து வைத்த செல்வி, “அகல், கறிகளையும் சம்பலையும், கொண்டு வந்து வையம்மா.” என்றபடி அடுத்த தோசையை ஊற்றினார்.

 

“மற்றும்படி முதல் ஆளாக சாப்பிட வாறவர் இன்றைக்கு என்ன? ஹ்ம்ம்…கோபத்தை சாதிக்கிறார் போல!” என்ற சந்திரன், மகன் நண்பர்களோடு தங்குவேன் என்றதை அவ்வளவாக ரசிக்கவில்லை.

கணவரின் மனத்தாங்கலை செல்வியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

பிள்ளைகளை மையமாக வைத்து அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் எந்தப் பெற்றோரும் இப்படியான பேச்சுகளை சற்றும் ரசிக்க மாட்டார்கள் தான்!

அதேநேரம், மகன் அப்படிக் கதைப்பதற்கான காரணத்தையும் அவரால் உணர முடிந்தது. இப்போதெல்லாம் அகல்யாவின் சீண்டல்கள் அவனை அதிகமாக எரிச்சல் கொள்ள வைப்பதை அவதானித்திருப்பதால், கணவனை சமாதானம் செய்ய முயன்றார் அவர்.

“என்னப்பா நீங்க? அவன் ஏதோ கோபத்தில் சொல்லீட்டான்; இப்ப என்ன அப்படிப் போகவா போகிறான்? சின்னவிஷயத்தை பெரிதுபடுத்துறீங்க! முதல், இவர்கள் சண்டை போடுவது என்ன புதிதா? நாம இடையில் கதைக்கப் போனால்தான் அது பெரிதாகும்.” என்றவர் பார்வை, அங்கு நடமாடிய அகல்யாவை நாடாதில்லை.

‘இப்படி, நாங்க கவலைப்பட்டுக் கதைப்பதைப் பார்த்துச்சரி இவள் கொஞ்சம் அடங்க மாட்டாளா!?’ என எண்ணியது அவருள்ளம்!

“நாம எப்போ இடையில் கதைத்தோம்? சின்னவயதில் முட்டிக்கொள்ளும்போதே அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை; அதற்காக, இப்படி வளர்ந்த பிறகும் நமக்கு முன்னால் அடிபட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவா முடியும்!” என்ற சந்திரனை சட்டென்று திரும்பிப்பார்த்தாள் அகல்.

“இங்க பாருங்க அங்கிள், உங்க மகன்தான் தொட்டதுக்கும் கையை நீட்டுறார்; பாவம், போனாப் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறேன்; ஒருநாளைக்கு கடைவாய் பல்லு கையில இருக்கும். கை இரண்டிலும் பத்துப் போடவேண்டிய நிலை வரும்.” உர்ரென்ற முகத்தோடு சொன்னவாறே சம்பல் கிண்ணத்தை வைத்துவிட்டு, தண்ணி ஜக்கை எடுத்துக்கொண்டு விசுக்கென்று நகர்ந்தாள்.

“அப்படியே சிவாவின் அம்மாதான்; அவரும் இப்படித்தான், சின்ன விஷயமோ பெரிதோ ஒரு கை பார்த்திட்டுத்தான் விடுவார்.” மனைவியிடம் சொன்ன சந்திரன்,

“உங்க தாத்தாவே பாட்டிக்கு சரியான பயம் அகல்!” பரிகாசக்குரலில் சொன்னதும், தண்ணீர் ஜாடியை கொண்டு வந்து வைத்தவள் முறைப்பாக ஏறிட்டாள்.

“அப்போ, நானும் பாட்டி போல ஒரு அடாவடிக்கிழவி என்று சொல்லுறீங்களா?” அவள் கேட்ட தோரணையில் சரண்டர் ஆனார் அவர்.

“தாயே! நான் தாங்க மாட்டன்; எதுவென்றாலும் என் மகனோடு வைத்துக்கொள். அவன்…” அவர் சொல்லி முடிக்க முன்னர் குறுக்கிட்டது செல்வியின் குரல்.

“இந்தப் பகிடியை என்னவென்று சொல்வது!  கொஞ்சமுதல் சின்னப்பிள்ளைகள் போல சண்டை போடுகிறார்களே என்று யாரோ கவலைப்பட்ட மாதிரி இருக்கு; அதற்கிடையில் நீங்களே சொல்லிக்கொடுக்கிறீங்களா? அந்தளவுக்கு, எல்லாத்துக்கும் என் மகன்தான் கிடைத்தானா?” அவர் குரலில் பொய்க்கோபத்தோடு கலந்து சிறு ஆதங்கமும்!

அதைக் கவனிக்காத சந்திரன், “உங்க அப்பாவிடம் மட்டும், தான் கத்துவது எடுபடாது என்று உங்க பாட்டிக்கு பெரிய வருத்தமே இருக்கு அகல்!” விட்ட இடத்திலிருந்து தொடர, இவள் இதழ்களும் முறுவலில் மலர்ந்தன.

“ம்ம்..தாத்தா, பாட்டியிடம் பேச்சு வாங்கி தலையை தொங்கப்போட்டுக் கொண்டு போறது எனக்கு நல்லாவே நினைவிருக்கு அங்கிள்.” என்றவள், “அதே டெக்னிக்கை அப்பாவிடம் காட்டுவார், அங்க செல்லாது ஹா..ஹா..” சந்திரனோடு சேர்ந்து நகைத்தாள்.

“அதுக்கென்று தான் நினைத்ததை சொல்லாமல் இருக்கிறதில்லை அங்கிள்; அந்த நாளிலேயே மகனை அடக்காததில் வந்த வினை! ஹ்ம்ம்…நாம என்ன செய்ய முடியும்?” அநியாயத்துக்கு கவலைப்பட்டாள்.

“அது என்றால் சரிதான்; வார்த்தைக்கு வார்த்தை கதை சொல்லும் போது பட்டென்று இரண்டு போட்டிருந்தால்…வாயில்தான்…இன்றைக்கு இந்த நிலையில் வந்து நிற்காது; நானும் வீட்ட வந்தால் நிம்மதியாக இருக்கலாம்.” அலுத்தவாறே வந்து சேர்ந்தான் வருண்.

மகன் சொன்ன தோரணையில் பக்கென்று நகைத்து விட்டார் சந்திரன்.

“என்ன அங்கிள், உங்களுக்கு என்னைப்பார்க்கப் பகிடியாக இருக்கா?” சந்திரனிடம் சீறியவள் பார்வை, வருணை சுட மறக்கவில்லை.

“இப்போ என்ன சொல்ல வாறீங்க? நான் இங்க இருப்பதால் உங்க நிம்மதி கெட்டுப் போகுதா?” சீறலாகக் கேட்டவளுக்கு சட்டென்று பதில் சொல்லாது, வெகு அசட்டையாக தோள்களைக் குலுக்கியவாறே கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், அவளை நோக்கிய பார்வையில் அப்பட்டமான கேலி!

“இதில் சந்தேகமான கேள்வி வேற! ஹ்ம்ம்…அதுதான் இந்த வீட்டு பூஸுக்கும் பொன்சோவுக்குமே  தெரியுமே…” என ஆரம்பித்தவனை, “தம்பி போதும்; சாப்பிட வந்தால் அந்த வேலையை பார்!” ஆரம்பித்து வைக்கிறானே என்கின்ற அலுப்பில் அதட்டினார் செல்வி.

அதோடு, சிலுப்பிக்கொண்டு எதுவோ சொல்ல முயன்ற அகல்யாவையும் கண்டிப்போடு பார்த்தார்.

“உனக்கும் தான்; இனி மாறி மாறி கதை வளர்த்தால் இரண்டு பேரும் முறையாக வாங்குவீங்க!” என்றதுக்கும் வருணுக்கே முறைப்பு பறந்தது.

“இப்போ உங்களுக்கு குளுகுளுவென்று இருக்குமே! இப்படி என்னையும் ஆன்டியையும் கொழுவி விடத்தான் இந்தாள் பிளான் போட்டார்; அது தெரியாம நீங்க அவுட் ஆன்ட்டி.” முறைத்தவளை நோக்கி,

“நீயெல்லாம் ஒரு ஆளென்று கதைக்க வாறாயே! உன்னை கொழுவி விட ரூம் போட்டு யோசிக்கிறேனாக்கும்; நினைப்புத்தான்!” என்றவாறே, வெகு அலட்சியமாக ஒரு பார்வையை வீசினான் வருண்.

அதோடு நிறுத்தாது, “ஏய்! முதல் அங்கால போடி; இங்க நின்று கத்துவதற்கு அப்படியே வெளியில இறங்கி பின்னுக்குப்போய் கத்து; பொன்சோ, தனக்கு ஜோடி கிடைத்துவிட்டது என்று சந்தோசப்படும்.” என்றவனுக்கே, தன் செல்ல நாயோடு இவளை ஜோடி சேர்த்ததில் நகைப்பு பீறிட்டது!

 

“என்றாலும் பொன்சோ பாவம்தான் இல்லையாப்பா! ஹா..ஹா..” விடாது வம்பிழுத்தவனையும், சேர்ந்து சிரித்த சந்திரனையும் கொலைவெறியோடு பார்த்தாள் அகல்.

“வேண்டாம் சொல்லீட்டன், பிறகு சம்பல் உள்ளே போகாது தலையில் கொட்டி விடுவன்.”

“சரிதான்; முடிந்தால் கொட்டிப்பார் பார்ப்போம்; கலவாய்க்குருவி!” இப்படி, மையம் கொள்ள முனைந்த அனல்காற்றின் ஆரம்பத்தில் விசுக்கென்று குறுக்கிட்டது செல்வியின் கோபக்குரல்.

“இங்க பாருங்க, இரண்டு பேரும் வாயை மூடுவது என்றால் இங்க இருந்து சாப்பிடலாம்; இல்லையோ, வெளியே போய் நின்று சண்டைபிடித்து, சமாதானம் ஆகீட்டு வாங்க!” குரல் உயர்ந்திருப்பதில் தாய்க்கு கோபம் வந்து விட்டதை உணர்ந்தாலும் அவ்வளவு இலேசில் விட மனமில்லை வருணுக்கு!

“அய்யே! மனிசனாகப் பிறந்தவன் இவளோடு சமாதானம் ஆவானா? அதற்கு நானும் கொள்ளிவாய்ப்பிசாசாக இருக்க வேண்டுமே!” என்றவன், அவள் முகம் போன போக்கில் உள்ளுக்குள் வெகுவாகவே நகைத்தான்; அவன் உதடுகளிலும் அதன் சாயல் படர்ந்தது!

“ஆன்ட்டி வேண்டாம்…இப்போ நீங்களே பார்க்கிறீங்க தானே, எத்தனை பட்டப் பெயர் சொல்லுது இந்த ஊத்தப்பம்.”

“ஏய்ய்ய்!” எழுந்து விட்டான் வருண்.

“யாரடி ஊத்தப்பம்? சின்னப்பிள்ளையில நீயும் குண்டுப்பூசனி தானே! அங்க அனலைதீவு கதியால் குருத்து, தென்னங்குரும்ப, கள்ள மாங்காய், புளியங்காய், நாகதாளிப்பழம் என்று எதை அரைக்காமல் விட்டாய்? அதையெல்லாம் நான் சொல்லியா காட்டுறன். எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறன், அப்படிச்சொல்லாதே என்று; இங்க பார்; என்னை வடிவா பார்; அப்படியா இருக்கிறன்.” அவள் கழுத்தில் பிடித்து தன் முகத்தைப் பார்க்க வைக்க, சுளீரென்று கையிலிருந்த மர அகப்பையால் அவன் முதுகில் இழுத்தார் செல்வி.

“ஆஆஆஆஆ அம்மா! உண்மையாகவே அடிக்கிறீங்க! நோகுதம்மா! ஐயோ நிற்பாட்டுங்க. அப்பா…காப்பாத்துங்க…” அலறினான் வருண்.

 

“இல்ல…இல்ல…விடாதீங்க ஆன்ட்டி; இன்னும் இன்னும் இழுங்க ஆன்ட்டி. நல்லா …நல்லா…ஆங்…அப்படித்தான்…இந்த மூஞ்சிய நான் பார்க்க வேண்டுமா? உவக்…சத்தி வருது.” தாயிடம் கெஞ்சி நிற்பவனை மீண்டும் மீண்டும் சீண்ட முயன்றாள் இவள்.

“ஏய்..” தாயின் கரத்தை மணிக்கட்டில் இறுகப் பற்றியவாறே இவள் புறம் திரும்ப,  “இனி கொஞ்சமும் பாவம் பார்க்க மாட்டன்; வாயில போடுவன்.” சீறிய செல்வியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் அகல்.

“சொல்லக்கூடாது ஆன்ட்டி. சும்மா பார்த்துப் பாராமல்  தீட்டிவிடுங்க!” அவள் குதூகலத்தை கேலியாகப் பார்த்தார் செல்வி.

“ஹலோ…வாயில போடுறது அவனுக்கு மட்டும் என்றா நினைத்தாய்!? உனக்கும் தான்…” என்றவாறே, “சுடச் சுட சாப்பிடட்டும் என்று தோசை சுட்டால் அதெல்லாம் ஆறிப்போச்சு!” எனத் திரும்பியவர், கணவர் சாப்பாட்டில் மும்முரமாக இருப்பதைப் பார்த்து முறைத்தார்.

“ஏன்பா, இங்க இவ்வளவு கலவரம் நடக்குதே; சத்தம் போடாமல் இருந்து என்ன செய்றீங்க?”

“இதென்ன கேள்வி செல்வி! கண்பார்வைக்கு பிரச்சனை ஒன்றுமில்லையே!” எப்போதும் போல, சந்தர்ப்பம் தெரியாது மனைவியை கேலி செய்தார் சந்திரன்.

“ஏன் கேட்க மாட்டீங்க! எங்களுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு; உங்களுக்கு எப்போதிருந்து செவிடானது?”

“அதெல்லாம் திவ்வியமாக உங்க கதைகளை கேட்டுக்கொண்டுதான் இருக்கு. அதைப் பார்த்தால் சுடச்சுட சாப்பிட முடியுமா? நாலு சாப்பிட்டிட்டன்; தோசையும் சம்பலும் வெகு ருசி!” பாராட்டியவாறே உண்பதைத் தொடர்ந்தார் சந்திரன்.

“அது யார் செய்தது? நானாக்கும் அங்கிள்!?” பெருமையாகச் சொன்ன வேகத்தில் வருணிடம் திரும்பினாள் அகல்.

“ஹலோ! சம்பலில் கை வைத்தால் கையை முறிப்பன்.” மீண்டும் ஆரம்பிக்க, “கையெடுத்துக் கும்பிடுறன்!” சொன்னதைச் செய்தார் செல்வி.

அந்தளவுக்கு, கடந்த இரண்டு மாதங்களும் வருணும் அகல்யாவும் வீட்டில் நின்றால் எல்லைச்சண்டை தோத்துவிடும். இடையில் அகப்படும் செல்விதான் மிகவும் நொந்து அல்லாடி விடுவார்.

“பச்! இதுக்கெல்லாம் கும்பிட வேணுமா ஆன்ட்டி! நீங்க கண்ணை அசைத்தால்  விட்டுவிடப் போறன்; உங்க மகனுக்கு ஒரு பத்து தோசையை காட்டினால்…ஆஆஆ…” எட்டி, அடுத்தடுத்து இரண்டு தடவைகள் நறுக்நறுக்கென்று கொட்டியிருந்தான் வருண்.

தலையை தேய்த்துக்கொண்டே, “நான் என்ன பொய்யா ஆன்ட்டி சொல்லுறன்? இந்தாள் சும்மா சும்மா தலையில கொட்டுது; நான் ஒன்றும் அம்மா அப்பா இல்லாதவள் இல்லை, நினைவில் வைத்திருங்க.” நெற்றி சுருங்க, விழிகளை உருட்டி கடிநாயாக அவள் சீறிய விதத்தில் நாயின் முகத்தை அவள் அழகுவதனத்தில் ஒட்டிச் சரி பார்த்த வருணால் பொங்கிய நகைப்பை அடக்கவே முடியவில்லை. வாய்விட்டுச் சிரித்தான் அவன்.

“வருண் நீ எழும்பிப்போ, பிறகு வந்து சாப்பிடு!” செல்வியின் குரலில் தீவிரம்!

“இல்ல இல்ல…வேண்டாம் ஆன்ட்டி, போனால் போகட்டும் இருந்து சாப்பிடட்டும்; இனி நான் தோசையை வைக்க மட்டும் தான் வாய் திறப்பன்.” அவரின் கோபமுணர்ந்து சொன்னவளின் இதழ்கள் “லூசு!” தெளிவாகவே முணுமுணுக்காதும் இருக்கவில்லை.

அதைக்கேட்டதும் மீண்டும் எழுந்தான் வருண்.

அவனை அசட்டையாக ஒரு பார்வை பார்த்தவாறே தனது சாப்பாட்டுப் பிளேட்டை எடுத்தவள், “ஹலோ! இன்னொருதரம் உம்மட விரல் என்னில் படவேண்டும், கையில் இருக்கிற பிளேட்டால் தலையில போடுவன் சொல்லீட்டன்.” அடிக்குரலில் எச்சரிக்கை விட்டவாறே விறுவிறுவென பரிமாறிக்கொண்டவள்,

“ஹ்ம்ம்… எதுக்கும் எப்பவும் போல ஹாலில் இருந்து சாப்பிடுறன்; இதில் இருந்து மற்றவர்களின் நிம்மதியை ஏன் கெடுப்பான்!” என்று நகர, கண்டிப்போடு பார்த்தார் சந்திரன்.

“இங்கேயே இருந்து சாப்பிடம்மா!” சொல்லவும் செய்தார்.

“பரவாயில்ல அங்கிள், நான் நியூஸ் பார்த்துக்கொண்டே சாப்பிடுறன்.”

“அதை நேரடியாக சொல்லீட்டுப் போகாமல் என்னை இழுத்து…நீ அடங்க மாட்டாய்டி…” என்று ஆரம்பித்த வருண், செல்வியின் பார்வையின் உக்கிரத்தில் உண்பதில் முனைய, இவளும் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்.

“ஹப்பா! புயல் அடித்து ஓய்ந்தது போல இருக்கு!” ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு ஆசுவாசப்படுத்தியவாறே தானும் உண்பதற்காக அமர்ந்தார் செல்வி.

விறுவிறுவென்று சாப்பிட்டுவிட்டு கை கழுவப்போனவளிடம், “என்னம்மா அதுக்குள்ள சாப்பிட்டாச்சா?! இன்னும் இரண்டு சாப்பிடன்.” என்றார் செல்வி.

“அதுதான் இப்படி ஒல்லிப்பிச்சான் போல இருக்கு! ஸ்டைல் அம்மா ஸ்டைல்!” என்ற வருண், “சம்பல் கிண்ணத்தை இங்க தாங்கம்மா” என்றதும், அவனையும் அவன் கைக்கு மாறியிருந்த சம்பல் கிண்ணத்தையும் பார்த்தவள் இதழில் கேலி முறுவல்!

அதைப் பார்த்தவன் மிதப்புப்பார்வையை விழிகளில் பரவ விட்டான்.

“என்றாலும் அம்மாவின் சம்பலை அடிக்க யாராலும் ஏலாது! ஹ்ம்ம்…ஒன்றுமில்லாத குறைக்கு இதையெல்லாம் சாப்பிட வேண்டிக்கிடக்கு! தலைவிதி!” அங்கலாய்த்தவாறே தோசையை தொட்டு வாயில் அடைத்தான்.

“விழுந்தாலும் சிலதுகளுக்கு ஒட்டாது!” முணுமுணுத்தபடி சண்டையைத் தொடராது நகர்ந்தவளை, ‘ஹப்பாடா!’ என்று பார்த்தார் செல்வி.

“நீயும் ஏன் வருண் எந்த நேரமும் அவளோடு வம்புக்கு போறாய்?” மகனை கடிந்து கொண்ட சந்திரன், “அதுசரி, கேட்க வேண்டும் என்று நினைத்து மறந்திட்டன்; அகல்யாவின் டியூஷன் விஷயமாக கதைத்துவிட்டு சொல்லுறன் என்றாயே, சுகந்தனிடம் கேட்டாயா?” என வினவினார்.

“ஏன்? ஒரு இடத்திற்கு டியூஷன் போனால் போதாதாமா? படித்துக்கிழிக்கிற வடிவுக்கு, பர்சனல் கிளாசும் வேண்டுமோ!?” சீண்டியவன், “எனக்கு ஒன்றும் நீங்க கேட்டுச் சொல்லத் தேவையில்ல; நானே பார்த்துக்கொள்வன்.” என்று நகர்ந்தவளை, “ஓஹ்! அந்தளவுக்கு வந்துவிட்டால் நமக்கு ஏன்பா வீண் சோலி? அவளே பார்த்துக்கொள்ளட்டும்.” என்று முடித்தான்.

“பச்! அவள் அப்படித்தான் சொல்வாள்; நீ சொல்லு, கேட்டாயா?” சந்திரனின் குரலில் தீவிரம்.

அதில், கேலி கிண்டலை ரசித்தது போதும் என்ற உணர்வு தாண்டவமாடியது.

“ம்ம்…கேட்டன் கேட்டன்; நம்ம வீட்டுக்கு வந்து சொல்லிக்கொடுக்க  அவனுக்கு நேரம் இல்லையாம்; வீட்டில் வைத்து சொல்லிக்கொடுக்கிறான் தானே. வேண்டுமென்றால் இவளையும் வரச்சொல்லுறான்.”

“ஓ! சுகந்தன் வீட்டுக்கா? இங்க தின்னவேலியிலிருந்து  பாண்டியந்தாழ்வு வரை போய்வர…” யோசித்தார் சந்திரன்.

யாழ்ப்பாணம் அவ்வளவாக பழகாதவள் என்பதோடு, தன் பொறுப்பில் உள்ளவளை கவனித்துக்கொள்ள வேண்டியது அவர்தானே என்கின்ற அக்கறை அவருக்கு!

“இதென்ன பெரிய தூரமா அப்பா? இவள் இங்க இருந்து கத்தினால் பலாலி வரை கேட்கும்! படிக்க, கொஞ்சத்தூரம் சைக்கிளை மிதிக்கட்டுமன்.” என்றவன்,

“எதுக்கும் சனி ஞாயிறு பின்னேர வகுப்புக்குப் போனால் நானும் நிற்பன் தானே, லேட்டாகினாலும் கூட்டிக்கொண்டு வரலாம்; தொடங்குவதுக்கு மட்டும் இந்த வெள்ளிக்கிழமை தயாராக இருக்கச்சொல்லுங்க; சேர்த்து விடுகிறேன்.” என்றபடி சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

மகன் அப்பால் சென்றதும், “என்னதான் சண்டை போட்டாலும் பொறுப்பாக செய்ய வேண்டியதை செய்வான் என் மகன்.” பெருமையாகச் சொன்னார் செல்வி.

“ஹ்ம்ம் …உண்மைதான்!”  ஆமோதித்தவாறே, தானும் எழுந்தார் சந்திரன்.

Advertisements

4 thoughts on “EPT-2 by Rosei Kajan

 1. ஆமாம் சமீரா!

  இரண்டாயிரத்தின் ஆரம்பம் வரை சைக்கிள் தான் என்றே சொல்லலாம்.

  இப்போ அந்த நிலை இல்லை . அந்தளவுக்கு இல்லை. என்றாலும் பள்ளிப் பிள்ளைகள் பாவிப்பார்கள்.

  எனக்கு நானிருந்த நாட்களை மறக்க முடியாது ,அதையே எழுதுகிறேன்.

  அங்க சைக்கிளில் ஓடித் திருந்த நான் இங்க இப்பவும் சைக்கிள் தான் . நெதர்லாந்தில் சைக்கிள் பாவனை அதிகம். எவ்வளவு வசதி இருந்தாலும் சைக்கிள்தான் .

  சண்டைக்கோழி ஹா..ஹா…பார்ப்போமே…

  நன்றிடா

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s