EPT-1 by Rosei Kajan

ஹாய் ஹாய்…

சொன்னபடி வந்திட்டேன் . 

‘என் பூக்களின் தீவே!’ இணையத்தில் வெளிவராது நேரடியாகவே புத்தகமாக வெளிவந்த கதை.

புத்தகத்தில் வாசிக்காதவர்களுக்காக தருகிறேன் என்று சொல்வதை விட, உங்க கருத்துப்பகிர்வை அறியும் ஆவலில் உள்ளேன் என்பதே உண்மை.

அதனால… வாசிச்சிட்டு ஒழுங்கா உங்க மனதில் படுவதை சொல்லிப் போட்டுப் போங்கோ.

திங்கள் , வியாழன் கிழமைகளில் அத்தியாயங்கள் பதியப்படும் .

 

 

முதல் அத்தியாயம் 

 

1.

“சரிதான் போடா மண்டைக்கொழுப்பா!’ என்றவாறே, விசுக்கென்று திரும்பி நடந்தவளின் இதழ்களிடையே நெரிந்தது, பொங்கியெழுந்த  நகைப்பு!

“ஏய்ய்ய்! வேண்டாம்டி ஒல்லிக்கோம்பை; கையில் மட்டும் அகப்பட்டாயோ சட்னிதான்!” படித்துக்கொண்டிருந்த வருண், அடங்காத கோபத்தோடு கதிரையை(இருக்கை) தள்ளிகொண்டு விசுக்கென்று எழுந்தான்.

“அதே..அதேயேதான் நானும் கேட்டேன்; குத்து மதிப்பா இருபது தோசைகளை…அப்படியே குழைத்து விழுங்க சட்னி தேவைதானே? அதுக்குத்தான் தேங்காய் துருவித்தாங்க என்றேன்!” என்றவள், கோபத்தில் முகம் சிவக்க தன்னை நோக்கிப் பாய்ந்தவனிடமிருந்து தப்பிக்கும் எண்ணத்தில், ஒரே பாய்ச்சலாக மாடிப்படிகளில் தாவியிறங்கி, வலப்புறமாகத் திரும்பி, எதிரே வந்துகொண்டிருந்த சந்திரனில் மோதி, “ஏன்மா இப்படி கண்மண் தெரியாமல் ஓடி வாறாய்?” என்ற அவரின் கண்டிப்பை காதில் வாங்காது, “ஆன்ட்டி!” என்ற கூவலோடு சமையலறை நோக்கி ஓடினாள்.

சமையலறையின் பின்புறமிருந்து உள்ளே வந்துகொண்டிருந்த செல்வியால்தான் என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடியுமே!

கையிலிருந்த மோர்மிளகாய் வற்றல் இருந்த சுளகை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, மூச்சு வாங்க தன்முன் நிற்பவளைப் பார்த்தவருள் எக்கச்சக்க நகைப்பு!

அவர் தன்னை பார்த்து நகைப்பதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாது, “ஆன்ட்டி..” என அவசரம் அவசரமாக ஆரம்பித்தவளை, ஒரே கையசைவில் அடக்கிவிட்டார் அவர்.

““ஹே..ஹே…பொறு பொறு, நீ எதையும் சொல்ல வேண்டாம்; தன்பாட்டில் படித்துக்கொண்டிருந்தவனை போய் வம்பிழுத்துவிட்டு வந்தாய் போல!” என்றவாறே, அவள் கரத்தில் இருந்த தேங்காயை பார்த்தவர், “இன்னும் துருவ இல்லையா? நீ தா, நானே துருவுகிறேன்.” என்று கரத்தை நீட்ட, “ஹைய்யோ ஆன்ட்டி, நானே துருவித்தாறன்.” என்றவாறே நகர்ந்தவள், அங்கு வந்த வருணை கண்டதும் சரேலென்று செல்வியின் பின்னால் பதுங்கினாள்.

“திரும்பவும் சொல்கிறேன்மா, இந்த குட்டிச்சாத்தானை வேறெங்காவது  போயிருந்து படிக்கச் சொல்லுங்க.” குரலை உயர்த்தியபடி நெருங்கினான் வருண்.

“என் வீட்டில் வந்திருந்து கொண்டு எனக்கே விளையாட்டுக் காட்டுறாள். ஒருநாளைக்கு அடித்து பல்லைக்கழட்டிப் போடுவன். ஏதோ, இவள் உழைத்துப் போட்டதில் நான் சாப்பிடுவதுபோல கணக்குப் பார்க்கிறாள்மா. பத்தோ இருபதோ எவ்வளவு தோசை சாப்பிட்டாலும் இவளுக்கென்ன என்று கேட்கிறன்? போடா வாடா என்று மரியாதையில்லாமல் கதைத்துக்கொண்டு…இவளை…” தொடர்ந்து, மூச்சுவிட மறந்து கொதிப்போடு படபடத்தான்.

அவன் இவ்வளவு கோபப்படுவதைப் பார்த்த பின்னும் அவ்வளவு இலேசில் அமைதியடையவில்லை அகல்யா.

“பத்து இருபதை பார்த்துப் பாராமல் உள்ளே தள்ளுவதை சாப்பிடுவது என்று சொல்லமாட்டார்கள்; முழுங்குவது!” செல்வியின் முதுகின் பின்னால் நின்றபடி பட்டென்று சொன்னவள், வாயைச் சுளித்து முழியை உருட்டி பழிப்புக்காட்டி வம்புக்கிழுக்க, தன்னையே மறந்தான் வருண்.

மறுகணம், “டேய் தம்பி, அவள் பகிடிக்கு சொல்வதற்கெல்லாம் எடுபடுவாயா? விடுடா விடு, பாவம் பிள்ள; முதல், உங்களுக்கு எத்தனை வயதாகுது? பத்து வயதில் அடிபட்ட மாதிரியே இப்பவும்…முருகா!” தாய் இடையில் மறிக்க மறிக்க, இப்படியும் அப்படியும் போக்குக் காட்டியவளின் தலையில் ‘நங்’ என்று கொட்டிவிட்டான் அவன்.

அடுத்தகணம், “ஸ்ஸ்ஸ்….ஆஆஆஆ…என்ர அம்மா!” உச்சந்தலையில் கையை வைத்தவாறே சம்மணமிட்டு நிலத்தில் அமர்ந்து விட்டாள் அகல்.

தனக்கு முன்பாகவே மகன் இப்படிக் கொட்டியதும் கண்மண்தெரியாத கோபம் வந்தது செல்விக்கு!

“டேய் தம்பி, கதைத்துக்கொண்டிருக்கும் போது கை வைக்கிறாயே! அதுவும், பெண்பிள்ளைக்கு அடிக்கிற பழக்கத்தை எப்போதிருந்து, யாரிடமிருந்து பழகினாய்? இல்ல கேட்கிறன்!” குரலை உயர்த்தியவாறே தாய் கண்டிக்க, முகம் சுருங்கிப் போனான் அவன்.

தாயின் கண்டிப்பில் முகம் சுளித்தாலும் தன்விரல்களில் ஏற்பட்ட எரிச்சலில் இருந்தே நன்றாகவே கொட்டிவிட்டதை உணர்ந்தவனுக்கு, மனதுக்கு ஒருமாதிரி இருந்தது.

“இவளுக்கும் எனக்கும் சரிவராது(ஆகாது) என்று ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் வந்து வந்து வம்பிழுப்பது இவள் தான்; கடைசியில், ஏச்சும் பேச்சும்( திட்டு) எனக்கு!’ முணுமுணுத்தபடி அவளை முறைத்தான்.

அப்போதும் விறைப்பாகவே பார்த்து நின்றார் அவன் தாய் செல்வி.

“ஸா..ரிம்மா…ஸாரி, நான்…நானாகவா இவளோடு பிரச்சனைக்கு போறன்; என் பாட்டில் இருந்து படித்துக்கொண்டிருக்க தேங்காய் துருவித்தா என்று வந்தாள்…” மகன் இப்படிச்சொன்னதும் செல்வியின் பார்வை நிலத்திலிருந்த அகல்யாவை நாடியது.

இன்னமும் உச்சியைத் தேய்த்துக்கொண்டு விழிகளைச் சுருக்கி அழும் பாவனையில் இருந்தவளோ பாவமாக அவரைப்பார்த்தாள்.

“ஆக, ஒரு தேங்காய் துருவத்தான் இத்தனை பிரச்சனையா?” அகல்யாவிடம் வினவினார்.

அவளோ, “ஸ்ஸ்ஸ்…” இன்னும் அதிகமாக உச்சியை தேய்த்தவள், முகத்தை வேறு, வலியில் சுருக்குவது போல கோணி வைத்துக்கொண்டாள்.

“நடிக்கிறாள்மா; நடிக்கிறாள்!” அவளை எரிச்சல் மறையாது பார்த்துவிட்டு தாயிடம் திரும்பினான் வருண்.

“முதல், வாடா போடா என்று சொல்லுறதை நிற்பாட்டு என்று எத்தனை நாட்களாக…ச்சே! வருடங்களாகச் சொன்னாலும் கேட்க மாட்டாளாமே! இன்னொரு தரம் இப்படிக் கதைத்தாளோ…” பற்களை நறநறத்தான்.

“அப்படி என்னதான் செய்வாராம் என்று சொல்லி முடிக்கச் சொல்லுங்கோ ஆன்ட்டி; இப்படி, கொட்டும் அடியும் வாங்கத்தானே நான் அங்க இருந்து வந்தன்.” வராத கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டாள் அவள்.

“ஏய்!” என்று ஆரம்பித்தவனை தொடர விடாது குறுக்கிட்டவள், “அய்யோ ஆன்ட்டி… இந்த போடாவும் வாடாவும் ஒரு ஃப்ளோவில வந்திட்டுது; இல்லாட்டி  இந்தப் பெரிய மனிசனை யாரும் அப்படிச் சொல்வார்களா?” நீட்டி முழங்கியவளின் நக்கல் புரியாதா அவர்களுக்கு!

“பிள்ள சொல்லுறதும் சரிதானே ராசா…பேச்சுவாக்கில போடா என்றால் அதுக்குப் போய் கோபிப்பதா? சின்னப்பிள்ளையில் இருந்து அப்படித்தானே சொல்லுறாள்; புதுசா சொல்லியிருந்தால் கோபிக்கிறதில் நியாயம் இருக்கும்.” நகைப்பை மறைத்த குரலில் சொன்னார் செல்வி.

“நல்ல பேச்சுவாக்கில் சொன்னதுதான்!” என்றபடி அவளை முறைத்தவன், “இன்னொருமுறை சொல்லிப்பாரன் என்ன நடக்கும் என்று தெரியும்!” மீண்டும் மிரட்டினான்.

“நீங்களே வீட்டு வேலைகளைச் சொல்வதில்லையேம்மா; அப்படியிருக்க, நேற்று வந்த இந்தம்மா எனக்கு வேலை பழக்க நிற்கிறாள்!” என்றவனை, பார்வையால் வெட்டியவள், “நான் இங்க வந்து நேற்றோடு இரண்டு மாதங்களாச்சு ஆன்ட்டி!” சொன்ன வேகத்தில் விழிகளைத் தழைத்துக்கொண்டாள்.

அவன் கொட்டிய கொட்டில் உச்சந்தலை கிறுகிறுக்காது இல்லை. ஆனாலும், அவன் வெளிப்படுத்தும் கோபம் ‘இன்னமும் வம்பிழேன்!’ என்பது போலவே இவளைத் தூண்டியது!

அவனுள்ளோ, கோபத்தீ திகுதிகுவென்று எரிந்தது.

“வேண்டாம்மா, இவளை என் வழிக்கே வரவேண்டாம் என்று சொல்லி வைய்யுங்க; பிறகு நல்லா இருக்காது சொல்லீட்டன்.”

“இது நல்ல கதையாக இருக்கே! ஒரே வீட்டில் இருந்தால் இவர் வாற வழியில் வராமல் வேறு எப்படி ஆன்ட்டி வாறது?” என்றவள் உதடுகளில் அவளையும் மீறி முறுவல் பளிச்சிட்டது.

அதைக் கண்டவனோ கொதிநிலையடைந்தான்.

“ஏய் வார்த்தைக்கு வார்த்தை கதைக்காதேடி!” மீண்டும் அவளை நோக்கிப் பாய்ந்தவனை, “வருண்!” தாயின் கண்டிப்பான அழைப்பு அவரை நோக்கச் செய்தது.

“என்னை மட்டும் தான் அதட்டுவீங்களா? மகாராணியார் வாயை மூடமாட்டாளாமா? எல்லாம் நீங்க கொடுக்கும் இடம் தான்மா; எதுக்கெடுத்தாலும் என்னை மட்டும் கண்டிக்கப்பாருங்க, இவள் என்ன சொன்னாள் தெரியுமா?” தாயோடும் சிடுசிடுத்தான்.

“அதைத்தானே சொல்ல வந்தாய்; சொல்லி முடி, நான் தோசை சுட வேணும்.” அசட்டையாக ஆரம்பித்து, தோசைக்கல்லை கழுவி அடுப்பில் வைத்தவர், “பிள்ளையில் கை வைக்கிறது இதுதான் கடைசியாக இருக்கட்டும்!”  கண்டிப்போடு சொன்னார்.

“பிள்ளையும் நொள்ளையும்! உங்கட இந்த அசட்டைதான் அவளை இத்தனை தூரம் சேட்டை விட வைக்குது. பொம்பளப்பிள்ளை என்றால் ஒரு அடக்க ஒடுக்கம் வேண்டாம்? எப்பப்பாரு பல்லைக் காட்டிக்கொண்டு, வம்பு பண்ணிக்கொண்டு…இது என்ன அனலைதீவு என்று நினைத்து விட்டாள் போல! கொஞ்சமும் டீசன்ட் டிசிபிளின் தெரியாத ஜென்மம்!” கடகடவென்று கடிந்து கொண்டான்.

“பாருங்கோ பாருங்கோ ஆன்ட்டி, என்னவெல்லாம் சொல்லுறார் என்று!” அழுகைக் குரலில் முறையிட்டாள் அகல்.

“சரிதான் தம்பி, ஒரு சின்னப்பிரச்சனைக்கு இப்படியெல்லாமா கதைப்பது!” என்றவாறே வந்து சேர்ந்தார் சந்திரன்.

“அதுதானே! நீயும் அதே அனலைதீவுதான் என்பதையும் மறந்திடாத!” தன் பங்குக்கு சொன்னார் செல்வி.

“அப்பவும் மகள் ஹாஸ்டலில் இருந்து படிக்கட்டும் என்று சொன்னான் சிவா; உயிர் நண்பன் நான், இப்படி பள்ளிக்கூடத்தின் அருகிலேயே இருக்க, பிள்ளையை ஹாஸ்டலில் விடுவதா என்று இங்க தங்க வைத்தது நான் தானே!” என்ற சந்திரன்,

“சின்ன வயதிலிருந்து அவளைப்பற்றி உனக்குத் தெரியாதா? கொஞ்சம் துடுக்குத்தனம்; அதுவும் வேறு யாரோடுமா? உன்னோடுதானே அப்படிக்கதைக்கிறாள். நம்ம வீட்டுப்பிள்ளைதானே வருண், அதைப் பெரிதுபடுத்தி அவள் மனதை கஷ்டப்படுத்துவதா சொல்லு பார்ப்போம்! உன்னைவிட நாலு வயது சின்னவள் வேற!” நீட்டி முழங்கினார்.

“அப்பா! என்னப்பா நீங்களும் அம்மாவை போலவே என்னில்தான் பிழை சொல்லுறீங்க?” சீறலாக ஆரம்பித்தவன், ‘எப்படி!’ ஒற்றைப்புருவம் உயர்த்தி அப்பட்டமாகக் கேலி செய்தவளை பார்வையால் சுட்டான்.

“நல்ல சின்னப்பிள்ளைதான்; அதுதான் எனக்குப் பிடிக்குதில்லை என்று சொல்லுறேனே! அதை விளங்கிக்கொள்ள முடியாதா?” சட்டென்று அவள் முகம் சுருங்கியதை உணர்ந்தும் சொன்னான். அந்தளவுக்கு அவளின் இம்சையில் நொந்திருந்தவன், எதையோ சொல்ல வந்த தாயை முந்திக்கொண்டு சிடுசிடுப்பைத் தொடர்ந்தான்.

“அப்படியே ஒன்றும் விளங்காத சின்னப்பிள்ளை என்றால் O/L(பத்தாம் வகுப்பு) வரை படித்தது போதும் என்று வீட்டோட இருந்து ஏதாவது செய்திருக்கவேணும். யாழ்ப்பாணத்தில், அதுவும் ஹிண்டு லேடிஸ் கொலேஜில சயின்ஸ் செய்யப்போறன் என்று புளுகிக்கொண்டு வந்திருக்கக்கூடாது.”

“பாருங்க பாருங்க அங்கிள், எப்பப்பாரு இதையே சொல்லிச்சொல்லிக் காட்டுறார். தான் கொமர்ஸ் செய்ய நான் சயின்ஸ் செய்கிறேன் என்று அவ்வளவு எரிச்சல்!” அவள் சொல்லி முடிக்க முன், “ஏய்!” மீண்டும் அவளை நோக்கிப் பாய்ந்தவனை தடுத்து நிறுத்திய செல்வி, “அகல் போதும்; இப்படியே கதை வளர்த்தால் உனக்கும் தான் போடுவன்!” என்றவர்,  மகன் முதுகில் தொம்மென்று ஒன்று போட்டார்.

“போடா போக்கிரி! அவள் தான் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாள் என்றால், நீ கோபப்பட்டுக் காட்டக் காட்ட இன்னும் கூடச் சீண்டுவாள்; இது கூட விளங்காது இரண்டு வருடங்களாக கம்பசில எப்படிடா குப்பை கொட்டினாய்!” தன் பங்குக்குக் கேலி செய்தார் அவன் தாய்.

“அதென்றால் சரிதான் ஆன்ட்டி, அங்க போய் குப்பைதான் கொட்டு…றார்கள்…என்னோட படிக்கிற பிள்ளையின் அண்ணாமாரைச் சொன்னேன்.” அவனையே சாடிக்கொண்டு வந்து கதையை மாற்றிவிட்டு கண்ணடித்தவளை, அவன் கொலைவெறியில் பார்த்து வைக்க, சந்திரனும் செல்வியும் முறுவலோடு பார்த்தனர்.

பெண்குழந்தை இல்லையே என்கின்ற குறையை மட்டுமின்றி, வீட்டின் கலகலப்பையும் தக்க வைத்திருக்கும் அகல்யாவில் சிறுவயதிலிருந்தே இவர்களுக்கு தனிப்பட்ட அன்புண்டு!

அது என்னவோ, அன்றிலிருந்து, இன்று, இதோ இக்கணம் வரை, இவர்களின் ஒரே மகனுக்கும் அவளுக்கும் தான் எட்டாப்பொருத்தமாக உள்ளது!

இவள் இந்தக் கோடியில் நின்றால், அவன் நிச்சயம் அந்தக் கோடிதான்; அப்போதும் இடையில் சண்டை மட்டும் அனல் பறக்கும்!

“நீங்க எப்பவும் இப்படித்தான்; இந்த அரை லூசோடு சேர்ந்து கொண்டு எனக்கே கதை சொல்லுறீங்க.” தாயில் வள்ளென்று விழுந்தவன்,   “முழு லூஸுக்கு மற்றவர்களை பார்த்தால் அரை லூஸுபோலத்தான் தெரியும்.” விடாது வாயடித்தவளின் முதுகைப் பிளக்க வழியில்லையே என்ற கோபம், தடையாக நிற்கும் தாயில் பாய, “எனக்கு இரவுச்சாப்பாடு வேண்டாம்; இவள்  செய்யும் சம்பலோ சட்னியோ வேண்டவே வேண்டாம்.” விருட்டென்று திரும்பியவன்,

“இப்படியே வம்பு பண்ணிக்கொண்டு இருந்தாளோ நான் போய் ஃப்ரண்ட்ஸோட ரூமில இருக்க வேண்டி வரும்; நீங்க இவளோடு இருந்து செல்லம் கொஞ்சிக்கொண்டிருங்க.” சொல்லிச் செல்பவனின் குரலில் இருந்த தீவிரம், சந்திரனின் பார்வையை மகன் பின்னால் செல்ல வைத்தது.

“சரிதான் போடா, தோசை மணத்துக்கு ஒன்று சுட்டு முடிய முதல் வந்து நிற்கப் போறாய்; அதுக்குள்ள வீராப்பு!” என்றவாறே திரும்பினாலும்,

“என்ன நடந்தது அகல்? இவ்வளவு கோபமாக கதைச்சிட்டுப் போறான்; அப்படி என்னதான் சொன்னாய்? அவனுக்குப் பிடிக்க இல்ல என்றால் ஏன்மா அதையும் இதையும் சொல்லி கொழுவல் படுறீங்க? எப்பதான் இந்த எலியும் பூனையும் மாதிரி சிலுப்பிக்கொள்வதை நிறுத்தப் போறீங்களோ!” நிஜமான கவலையோடு சொன்னவரையும், அதையே பார்வையில் பிரதிபலிக்கும் சந்திரனையும் இலேசான சங்கடத்தோடு பார்த்தாள் அகல்யா.

“அது வந்து ஆன்ட்டி, நான் என்ன வேண்டுமென்றே போய் உங்க மகனோடு வம்பு செய்கிறேனா? அவருக்கு சின்னவயதிலிருந்து என்னைக் கண்டால் பிடிக்காது. எல்லாம் ஒருவித எரிச்சல் தான். தன்னைவிட நான் கெட்டிக்காரி என்பதால்..” இப்போதைக்கு நிறுத்தமாட்டேன் என்கின்றவகையில் தொடர்ந்தாள்.

‘இவள் விடமாட்டாள்; திரும்பவும் அவனை வம்புக்கு அழைக்கிறாளே!’ என எண்ணிக்கொண்டே மகன் சென்ற திக்கில் பார்த்தார் செல்வி.

“அட! படிப்பு முடிய வெளிநாடு போகப் போறேன், கொழும்பு போகப் போறேன் என்று சொல்லுவாரே, சின்னச்சின்ன வேலைகள் தெரிந்திருந்தால் அவருக்குத்தானே நல்லது என்றுதான்…” இப்போது மெல்ல இழுத்தவள், “தேங்காய் துருவித்தாங்கோவன் என்று கேட்டன்.” இவள் சொல்லி முடிக்க முன் தடதடவென்று மாடியால் இறங்கி வந்தான் வருண்.

“பார், எவ்வளவு அழகாகப் பொய் சொல்கிறாள் என்று! நீங்களும் அதை அப்படியே நம்பி விடுவீங்களே! இவள் சரியான எமகாதகிம்மா!” என்ற மகனை கண்டிப்போடு பார்த்தார் சந்திரன்.

“சின்ன விஷயங்களுக்கு இதென்ன வருண் பெரிய வார்த்தைகள்; அவள் பகிடியாக எதையாவது சொன்னால் இலகுவா எடுத்திட்டுப்  போகவேணும்; அதைவிட்டு விட்டு…” தந்தையின் விழிகளில் பளிச்சிட்ட கண்டிப்பில் அகல்யா மீதான இவன் கோபமே அதிகரித்தது.

“அது என்ன ஃப்ரண்ட்ஸ் ரூமில் இருந்து படிக்கிற கதை? ஹ்ம்…இனி இப்படியெல்லாம் நான் கேட்கக் கூடாது!” அழுத்தமாகச் சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறிவிட்டார் சந்திரன்.

முகம் கன்றிப்போய் நின்றான் வருண்.

‘எல்லாம் உன்னால் தாண்டி ஒல்லிக்கோம்பை; தனியாக அகப்படுவாய் தானே? அப்போ இருக்குடி உனக்கு மங்களம்!’ மனதில் கறுவியவனின் விழிகள் அதை அகல்யாவுக்கு உணர்த்தியது.

“இங்க பாருங்கம்மா, நான் என்பாட்டில் படித்துக்கொண்டிருந்தன்; தேங்காயை கொண்டு வந்து துருவித் தா என்றாள்.” என்றவன் பேச்சில் சட்டென்று இடையிட்டாள் அகல்யா.

“அய்யோ ஆன்ட்டி! துருவித்தாங்கோ என்று மரியாதையாகத்தான் கேட்டன்.”

“ஸ்ஸ்…அகல் ,பேசாம இரு!” என்ற செல்வி, “சரி பிறகு?” என்றார் மகனிடம்.

“நீங்க பேசாமல் இரு என்றதும் கேட்டுவிட்டுத்தான் மறுபேச்சு பேசுவாள்!” அகல்யாவை முறைத்தவன், “துருவித் தரமுடியாது என்றேனா…” என்று நடந்ததைச் சொல்ல முனைய, மீண்டும் இடைவெட்டினாள் அகல்யா.

“தனியாகப் போய் இருக்கும் போது சமையல் தெரிந்திருந்தால் சமாளிக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் கேட்கப் போனேன்; அதுக்குப் போய்..” இதுதான் நடந்தது என்கின்ற மாதிரி அறுத்துறுத்துச் சொன்னபடி வெட்டும் பார்வையால் அவனிடம் மோதியவள் பாவமாக செல்வியை பார்த்தாள்.

“அடிப்பாவி! அப்படியே பிளேட்டை மாத்துறாள்மா! வீட்டில துருவளை மொட்டையாப்போச்சு; உன் பல்லால் இரண்டு இழுவை இழுத்துவிடேன் என்று வம்பு பண்ணினாள் அம்மா.” மகன் கோபமாகச் சொல்ல, அவன் பாவனையிலும், பிடிபட்டுவிட்ட திண்டாட்டத்தில் நின்ற அகல்யாவையும் மாறி மாறிப் பார்த்த செல்விக்கோ நகைப்பு பொங்கியது!

அதைச் சிறிதும் வெளியில் காட்டாது முகத்தை இறுக்கமாக வைத்தவாறே அகல்யாவை நோக்கியவர், “என்ன இது அகல்? என் மகனைப் பார்த்து அப்படிச் சொன்னாயா? முதல், என் மகன் பல்லு என்ன அப்படியா இருக்கு? எப்பவோ இலேசா மிதப்பா இருந்ததை இன்னும் சொல்லிக் காட்டுவதை நானும் விரும்ப மாட்டேன். ” கண்டிப்போடு சொன்னார்.

“இல்ல…இல்ல ஆன்ட்டி, நம்பாதீங்க சொல்லீட்டன்; இவர் பச்சப் பொய் சொல்லுறார். இவருக்கு நான் இங்க இருந்து படிக்கிறதில கொஞ்சமும் விருப்பம் இல்ல; அதோடு நீங்களும் அங்கிளும் என்னில அன்பாக இருப்பதில் பொறாமை. அதையும் இதையும் சொல்லி நம்மை கொழுவி விடப்(சண்டை போடுதல்) பார்க்கிறார்.” கண்ணைக் கசக்கியவளை, ஆத்திரம் மாறாது பார்த்தான் வருண்.

“அம்மா…இதுக்குப் பிறகும் இவள் சொல்லுறதை எல்லாம் நம்பவா போறீங்க? இவளில் எனக்குப் பொறாமையா?” என்றவன் குரல், அவனையும் அறியாது இறங்கியிருந்தது.

“அதுசரி, அவள் எதைச் சொன்னாலும் அப்படி இப்படி யோசியாது நம்பிவிடுவதுதானே உங்கள் வழக்கமே!” ஒருமாதிரிக் குரலில் சொல்லிவிட்டு விருட்டென்று நகர்ந்த மகனையே பார்த்திருந்த செல்வி, “வருண் கொஞ்சம் நில்லு!” என்றபடி மகன் பின்னால் சென்றார்.

“ச்சே! நானும் இந்தாளோடு தேவையில்லாமல் கதைக்கக் கூடாது(பேசக் கூடாது) என்றுதான் நினைக்கிறன்; சமாதானமாகப் போகலாம் என்று கதைக்கப் போய் கடைசியில் சண்டைதான்!” சத்தமாகவே சொன்னபடி சரக்சரக்கென்று தேங்காயை துருவத் தொடங்கியவள்,

“ஹ்ம்ம்…வ…ரு…ண் உம்மை அவ்வளவு இலேசில விட்டுவிட மாட்டேன்; அகல்யா என்றால் சும்மாவா? சரிதான் தாயே நீ எதையாவது செய்துவிட்டுப் போ என்று எப்போ அமைதியாவீரோ அன்றைக்குத்தான் உமக்கு விடுதலை; அந்த நாளை வரவைக்கவில்லையோ நான் அகல்யா இல்லை; போனால் போகட்டும் என்று  சட்டப்படி பெயரை மாற்றி விடுகிறேன்.” வீராவேசமாகச் சொன்னவள், பின்னால் வந்து நின்ற செல்வியை கண்டு கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

“அப்படியென்றால் என் மகன் சொல்வது சரிதான்; நீ வேண்டுமென்றேதான் அவனோடு வம்பிழுக்கிறாய் இல்லையா?”

“என்ன ஆன்ட்டி நீங்களும் வம்பிழுக்கிறேன் என்று சொல்லுறீங்க!” அழுகைக்குரலில் கேட்க, “என்னிடமே உன் நடிப்பைக் காட்டுகிறாயா?” வலிக்காது அவள் காதைத் திருகினார் செல்வி.

அனலைதீவில் அருகருகில் வசித்து வந்த சந்திரனும் இவள் அப்பா சிவாவும் பால்ய நண்பர்கள். அவர்களின் திருமணத்துக்கு பின்னரும் அந்நட்பு மிக நெருக்கமாக கைகோர்த்துள்ளது.

ஆசிரியரான சந்திரன் பணியிடமாற்றம் வந்து யாழ் வந்த பின்னரும், சந்திரனின் பெற்றோர் தம் சொந்த ஊரில் வசிப்பதால், அநேகமாக, விடுமுறைகளுக்கு ஊருக்குப் போய்விடுவார்கள். அதனாலேயே இருகுடும்பங்களின் நட்பிலும் உறவிலும் எவ்வித பங்கமும் ஏற்படவில்லை.

சந்திரன் அவர் பெற்றோருக்கு எப்படி ஒற்றைப்பிள்ளையோ அப்படியே அவருக்கும் செல்விக்கும்  ஒரே மகன் வருண்.

சிவா, சுசிலா தம்பதிகளுக்கு இரண்டு பெண்பிள்ளைகள்; பெரியவள் அனுஷா, உயர்தரம் வரை (பன்னிரெண்டாம் வகுப்பு)  படித்துவிட்டு ஊரிலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் ஆசிரியையாகவும் கணனி கற்பிக்கும் ஆசிரியையாகவும் இருக்கிறாள்.

சின்னவள் அகல்யா, சிறுவயதிலிருந்து படு சுட்டி; விளையாட்டோ படிப்போ அவள் தான் முதலிடம். சாதாரண தரத்தில்(பத்தாம் வகுப்பில்) அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றவளின் விருப்பப்படியே யாழ்ப்பாணத்தில் படிக்க வந்திருக்கிறாள்.

அது என்னவோ, சிறு பிராயத்திலிருந்து வருணை கண்டால் ஒருவழி பண்ணி எடுத்து விடுவாள் இவள். அவளை விட நான்கு வயது பெரியவன் என்பதால், ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாது அனைத்துக்கும் விட்டுக் கொடுத்து விடுவான் வருண். அவளது அதீத குறும்புகள் எரிச்சலைத் தந்தாலும் சீண்டவோ, கோபிக்கவோ விடுவதில்லை.

அந்தப் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?

ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் அப்பொறுமையை அறவே இழந்தான் இவன்; அன்று ஆரம்பித்தது, இருவருக்குமிடையேயான  போர்!

பார்வையால், வார்த்தைகளால், சமயத்தில் கை கால்களால் கூட காரசாரமாகப் பேசிக்கொள்வார்கள்!

அதை, ஆரம்பத்தில் அவ்வளவு பெரிதாக கணக்கெடுக்காத இருபகுதிப் பெரியவர்களும், பின்னர், இவர்களிடையேயான கோபதாபங்கள் அதிகரிப்பதைப் பார்த்து, எவ்வளவோ எடுத்துச்சொல்லி சமாதானம் செய்து வைத்தும் பயனேதும் இருக்கவில்லை.

‘இவர்கள்  இருவரும்  என்றாவது சிநேகமாகப் பேசிப் பழகுவார்களா?’ இருபகுதியினரினதும் மனங்களில் ஏக்கமாகவே படிந்துள்ள வகையில் இவர்கள் முட்டிக்கொள்வது தொடர்கின்றது.

இந்நிலையில், இவள் யாழ் வரவேண்டிய நிலை வந்ததும், “எங்களோடு தங்கியிருந்து படிக்கட்டுமே!” என, சந்திரன் தம்பதி தம் விருப்பைக் கூறியதும், சிவா தம்பதி தலையசைத்ததும் மகளின் பாதுகாப்பு ஒருபக்கம் என்றால், இளையவர்கள் சண்டையை மறந்து நட்போடு பழகுவார்கள் என்கின்ற அவாவிலும் தான்!

ஆனால் நடந்ததோ,  இவர்களின் களேபரத்தால் வீடு இரண்டு பட்டதுதான் மிச்சம்!

Advertisements

10 thoughts on “EPT-1 by Rosei Kajan

  1. Super start Rosi. Agal character romba pidichirithu. Enakku 6th and 11th page load aagalai. Errornu message varadu. Please help pannunga. Enakku indha problem SIT and another story padikkum bodhum irundhadhu, sila page load aagalai. Can you please rectify?

    Liked by 1 person

  2. நல்ல ஆரம்பம்.. அகல்யாவின் சேட்டைகள் சூப்பர்!!

    Liked by 1 person

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s