நெஞ்சினில் நேச ராகமாய்! தேவி பிரபாவின் பார்வையில்

முதலில் காலங்கடந்த கருத்திடலுக்கான எனது மன்னிப்பை வேண்டி கொள்கிறேன். நெஞ்சினில் நேச ராகமாய் கதையை மறுபடி வாசிக்கத் தந்தமைக்கு ரோசிக்காவிற்கு நன்றிகள் பல!

ஒவ்வொரு பதிவாக வாசித்து கருத்திட்ட காலம் இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாக நிற்கிறதுக்கா.

குடும்ப உறவுகளை முதன்மைப்படுத்தி கதைகளை புனையும் ரோசிக்கா இந்த படைப்பில் கணவன்- மனைவி உறவினை மையப்படுத்தி கதையை அமைத்திருக்கிறார்.

பலமும்,பலவீனமும் கொண்ட மனிதனின் பலத்தை மட்டுமே பிரதானப்படுத்தாமல் பலவீன குணங்கொண்ட இருவரை பிரதானப் பாத்திரங்களாக்கி கதையை அமைத்தமைக்கு பாராட்டுகள் அக்கா.

ஹேப்பி எண்டிங் ஸ்டோரியில் பலவீனமான,எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட இருவரை பிரதானமாக்கி கதையை புனைவது அபூர்வமே.பிரதான கதாபாத்திரங்களின் வாழ்வியலை ஒப்புமைப் படுத்தி மனதில் நிறுத்தும்படி கதையை அமைத்திருக்கிறார் ரோசி அக்கா.

இரு ஜோடிகளை மையப்படுத்தி கதையை கொண்டு செல்லும் ரோசிக்கா,மகிழ்- உதய் ஜோடிக்கு பிரதான இடத்தை தந்து ஆனந்த்- மங்கை ஜோடியை பின்னுக்கு தள்ளியிருப்பதாக வாசிப்பவர் கருத்திலமையும் வண்ணம் அமைத்திருப்பார்.ஆனால் பிரதான இடம் ஆனந்த்- மங்கைக்கே.ஆனந்த்- மங்கை ; மகிழ்- உதய் ஜோடிகளின் ஒப்புமைகளை கொண்டு கதையை செலுத்துவது சுவாரசியமாய் இராது என்பதனால் மகிழ்- உதய் ஜோடியை முன் நகர்த்தி கதையை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது.

மகிழின் மனக்குமுறல் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

உதயின் பாத்திரப்படைப்பு பாராட்டும் விதமாய் அமைந்திருந்தது.

இந்தக்கால மக்களிடம் வெகு எளிதாக காணக்கிடைக்கும் அவசரக்கோலத்தை ஆனந்த்- மங்கை ஜோடியில் நிறுத்தி, கதையை அமைத்ததை வெகுவாக ரசிக்கலாம்.அந்த காலத்திலும் சரி,எந்தக் காலத்திலும் சரி இவ்வகையான மனிதர்கள் உண்டு என்பதை வாசிப்பவர்கள் மனதில் நங்கூரமிட வைத்திருப்பார் ரோசிக்கா.

பர்வதம்,சரசு இரு பாட்டிகளையும் ஒரே மாதிரியான அழுத்தந்திருத்தமான மனிதர்களாக்கிவிட்டார்கள் ரோசிக்கா.ஆனந்த்- மங்கையின் பலவீனங்களை இவர்களை கொண்டு நேரிடை செய்து விட்டதான ஒரு எண்ணத்தை மனதில் பதியவைத்திருக்கிறார் ரோசிக்கா.சரசு யதார்த்த வாழ்வில் வெகுவாக காணக்கிடைக்கும் ஒரு பாத்திரம்.

பளையிலிருந்து கனடாவை நோக்கி நகரும் கதையில் சில இடங்கள் கதையின் விறுவிறுப்பை குறைக்கச் செய்கின்றன. கதையின் நீளத்தை வாசிப்பவருக்கு உணர்த்தும்படி அமைவது ஒரு குறையே.

ரோசிக்காவின் கதையில் காணப்படும் சஸ்பென்ஸ் இந்தக்கதையி்ல் மிஸ்ஸிங்.வாசிப்பவர்களை அந்த சஸ்பென்ஸை நோக்கி நகர்த்தும் வண்ணம் கதையை படைப்பவர் இந்த முறை அதைத்தவறவிட்டிருக்கிறார்.கனடாவிற்கு செல்லும் முன்பு மகிழ் சந்திக்கப்போவைகளைப் பற்றிய குறிப்பு ஆர்வத்தை தூண்டவில்லை எனலாம்.

யதார்த்தத்தை அதிகமாக கதையில் காண்பிக்கும் ரோசிக்கா இம்முறையும் அதை செவ்வன்னே செய்திருக்கிறார்.கதையில் வரும் சிற்சில இடங்களும், வர்ணணைகளும்,கதையின் நிறைவும் மட்டுமே இந்தக் கதையை ஒரு ஹேப்பி எண்டிங் ஸ்டோரிக்குள் கொண்டு செலுத்த உதவுபவன. கனமான கதைக்கருவை -கதையமைப்பை கொண்டு மகிழ்வானதாக்கி தந்தமைக்கு பாராட்டுகள் அக்கா.

ரோசிக்காவின் இந்தக்கதையை படித்து முடிக்கையில் வழமை போல் ஒரு யோசனை ஓடியது.ஹேப்பி எண்டிங் வகை அல்லாத இலக்கியத் தரம் வாய்ந்த ஒரு கதையை படைக்கலாமே என்ற எண்ணம் வெகுவாக மனதுள் நிற்கின்றது.விட்டில் பூச்சி சிறுகதையும் இந்த எண்ணத்தை ஆழமாக வேரூன்ற வைத்தது.

நன்றிக்கா.

Advertisements