காதல் செய்த மாயமோ!(காவ்யா) சத்யாவின் பார்வையில் …

நான் முதல் முதலாக ஒவ்வொரு அத்தியாயமாக திங்களுக்கும் புதனுக்கும் காத்திருந்து வாசித்து முடித்த தொடர் கதை.

எனக்கு பொறுமை கொஞ்சம் கூடவே இருக்கிறது. 😆 அதனால் காத்திருந்து வாசிக்கும் வேலைக்கு போவதில்லை. ரோசிஅக்காவுக்கோ என்னை விட அவசரம். 😄 விரைவாகவே முடித்து் விட்டார். அதற்கு நன்றிகள் அக்கா… 😍

எதேச்சையாக ஒருநாள் முகப்புத்தகத்தில் பார்த்து விட்டு வாசிக்கத் தொடங்கினேன். காவ்யா எனும் பெயரே என்னை வாசிக்கத் தூண்டியது. (அந்த பெயரில் எப்போதும் ஒரு மயக்கம்) அப்படி என்ன புது கதை… ஒருக்கால் வாசித்து தான் பாரேன்… முதல் அத்தியாயம் நன்றாக இல்லாவிட்டால் தொடர்ந்து வாசிக்கத் தேவையில்லை தானே என்று நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இலங்கையில் வட பகுதியை கதைக் களமாக கொண்டு எழுதியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்து பகிடி வதையில் ஆரம்பிக்கும் கதை அப்படியே என்னை கதையோடு கட்டிப் போட்டு அடுத்த அத்தியாயம் எப்போது எப்போது என்று தவறாது காத்திருக்க வைத்தது.

கதையின் நாயகி காவ்யா
சுருங்க சொன்னால் பொறுமையின் சிகரம், அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ரகம்.

அவள் நண்பி அபி
காவ்யாவிற்கு எதிர்மாறான அறுந்த வால், வாயாடி

நாயகன் கண்ணா எனும் சந்தோஷ்
பகிடி வதை எனும் பெயரில் யாரிலோ உள்ள கோபத்தை காவ்யாவில் காட்டி தினமும் அவளை வார்த்தைகளாலேயே வதைத்து எடுக்கிறான்.

அவனாலே நிதமும் கண்ணீரிலே கரையும்காவ்யா எப்படி அவன் மீது காதல் வசப்படுகிறாள், அவளைக் கண்டாலே எரிந்து விழும் சந்தோஷ் எப்படி தன் கோபங்கள், பயங்கள் தீர்ந்து காதலில் விழுந்தான்…

அவன் கோபத்திற்கும் பயத்திற்கும் என்ன காரணம் என்பதை தென்றலாய் வருடிச் செல்லும் மெல்லிய கதையோட்டத்தோடு மனதை உருக்கும் ஒரு முடிவோடு கதையை நகர்த்தி சுபம் போட்டிருப்பார் ரோசி அக்கா..

காவ்யாவோடு சந்தோஷ் சண்டை போடும் தருணங்களில் அவனைத் திட்டித் தீர்த்து இவள் ஏன் திரும்ப பதில் சொல்லாமல் அழுது வடிக்கிறாள் என்று அவளையும் திட்டிய பல வாசகிகளில் நானும் ஒருத்தி…

ஆரம்பங்களில் சந்தோஷ்க்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினாலும் போகப்போக அவனிலே ஒரு இனம் புரியாத பாசத்தை உண்டாக்கி விட்டார்.

மகனைப் புரிந்து கொண்ட தாயார் சாந்தா.. அவரைப் புரிந்து கொண்ட கணவர்… செல்லத் தங்கையாக நிலா..

இல்லாத பணத்தை குணத்தினாலே நிரப்பும் குறும்பு தம்பி, தங்கை கொண்ட காவ்யாவின் குடும்பம்…. அவளைப் போலவே அமைதியும் பண்புமான பெற்றோர்கள்…

செல்வச் செருக்கில் சுயநலவாதிகளாக விளங்கும் காவ்யாவின் மாமா குடும்பம்…

சந்தோஷின் நன்மைக்காக பாடுபடும் உயிர் நண்பனாக சீலன்… திருமணம் ஒன்று நடக்கும் அபி குடும்பம்…

என்று அனைத்து கதாபாத்திரங்களும் மிக மிக யதார்த்தமாக சாதாரண வாழ்வியலோடு ஒன்றி எந்த வித மிகைப்படுத்தல்களும் இல்லாமல் எங்கள் பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வோடு வாசிக்கத் தூண்டும் எளிய எழுத்து நடையில் மிக அழகாக காவ்யாவை வடித்துள்ளார்… 😍

நாங்கள் எதிர்பாராத ஒரு ரகசியத்தை தன்னகத்தே அடக்கியிருக்கும் சந்தோஷ்…

மகன் மனம் புரிந்து அவன் காதலைச் சேர்த்து வைக்க தன்னாலான முயற்சிகள் எடுக்கும் சாந்தா… இதயத்தை தொட்டுச் செல்கிறார்கள்.

அதுவும் முடிவிலே நாவற்குழி பாலம் தாண்டி வரும் அந்த ஓட்டு வீட்டில் வசிப்பவர்களும், அந்த இயற்கை வனப்பு நிறைந்த தோட்டத்தில் சந்தோஷ் மனந்திறந்து தனது எண்ணங்களை வெளியிடும் போதும் அவனது தவிப்பும் அவன் எதற்காக அவள் காதலை ஏற்க பயந்தான் என்று சொல்வதும் அவனுடைய கோபங்களை மறக்கடித்து, அவனை ஒரு பண்பாணவன், பாசம் மிக்கவனாக மனதில் நிறுத்துகிறது.

ஆரம்பித்ததும் தெரியாமல் முடிவடைந்ததும் தெரியாமல் இரண்டரை மாதங்களில் இருபத்தொன்பது அத்தியாயங்களில் அனாவசிய அலட்டல்கள் இன்றி படைக்கப் பட்டிருக்கும் காவ்யா

மொத்தத்தில் உங்களை ஏமாற்றாத, உங்களை இனிதே மகிழ்விக்கும் மனதை இதமாய் வருடிச் செல்லும் ஒரு காதல் கதை…

Advertisements