காதல் செய்த மாயமோ!(காவ்யா) நிதனி பிரபுவின் பார்வையில் …

இதைக் கதை என்பதை விட.. நான் அனுபவிக்க ஏங்கிய.. நான் தவறவிட்ட அந்த கல்லூரிக் காலத்தினை கனவுலகில் வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை அழகாய் என் மனதை பறித்துவிட்டது கதை.

இதற்கு ஒரு விமர்சனம் எழுதும் எண்ணமே எனக்கில்லை. என்ன சொல்லி எழுதுவது என்கிற கேள்வி.. மனம் ஒருவித இனிமையில் தளும்புகையில், அதை வார்த்தைகளால் வடிக்க முடியாமல் திணறுவோமே.. அப்படித்தான் இந்தக் கதையை படித்து முடித்து சிலநாட்கள் எனக்கு இருந்தது.

காவ்யாவோடு நானும் கல்லூரிக்கு சென்றேன். அப்போதெல்லாம் சந்தோஷ் அவளை மட்டும் கூப்பிட்டுவைத்து ராக்கிங் என்கிற பெயரில் அவளை காயப்படுத்திய போதெல்லாம், இவனுக்கு பளார் என்று ஒன்று கன்னத்தில் போடவா என்றுதான் வேகம் வந்தது. நல்லகாலம் அவன் என்னோடு எந்த விளையாட்டையும் வைத்துக்கொள்ளவில்லை.

பிறந்தநாளுக்கு பார்ட்டி கேட்ட இடத்தில் அவளுக்காக காசு கொடுத்தபோது மெல்ல என் மனதில் ஒரு ஹாய் போட்டுவிட்டு போனான். அதிலே கொஞ்சம் கோபம் அடங்கியது.

ஆனாலும் அவ்வப்போது என் கோபத்தை கடைசிவரை கிளறிக்கொண்டே இருந்தான் அந்தக் கண்ணன்!

ஒரு இரவில் அவள் அழுதுகொண்டு வரும்போது, ஏன் எதற்கு என்று அவன் தவிப்பதும், அவளிடம் மிரட்டி விஷயத்தை வாங்கும் இடத்திலும் இதழ்களில் ரசனையான புன்னகையை தோற்றுவிக்க தவறவில்லை அவன்.

அவள் அவன் வீட்டை விட்டு கிளம்புகையில், அவன் அனுப்பும் மெசேஜ் கூட அவள் மீதான அவனின் ஈர்ப்பை மிக அழகாய் சொன்னது.. கடைசியில் அவனுடைய பிறந்தநாள்.. ஹாஹா.. ரோசி அக்கா.. இதுக்குமேல நான் ஒண்டும் சொல்லேல… செம சூப்பர்!! அவ்வளவுதான்.

சந்தோஷ்.. அவனுக்குள் புதைந்திருக்கும் சில விஷயங்கள்.. இப்படி எத்தனை சந்தோஷ்கள்..

அம்மா அப்பா மாமா மாமி அண்ணா தங்கை என்று எப்போதும் போல எல்லா உறவுகளையும் சேர்த்து, அதிலே பாசம், சின்னச் சின்ன நீயா நானாக்கள் உடன் அழகாக, அதோடு புரிதலோடு பயணிக்கும் மிக மிக மென்மையான காதல் கதை..

துளசி.. மதுரா இந்த வரிசையில் இந்தக் கதை முதலில் போய் அமர்ந்துகொண்ட உணர்வுதான் எனக்கு.

இதைப்போல நிறைய நிறைய அழகான கதைகளையும், நிறைய நிறைய சந்தோஷ்களையும் தரவேண்டும். இது நேயர் விருப்பம்.

Advertisements