நெஞ்சினில் நேச ராகமாய்! தேவி பிரபாவின் பார்வையில்

முதலில் காலங்கடந்த கருத்திடலுக்கான எனது மன்னிப்பை வேண்டி கொள்கிறேன். நெஞ்சினில் நேச ராகமாய் கதையை மறுபடி வாசிக்கத் தந்தமைக்கு ரோசிக்காவிற்கு நன்றிகள் பல!

ஒவ்வொரு பதிவாக வாசித்து கருத்திட்ட காலம் இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாக நிற்கிறதுக்கா.

குடும்ப உறவுகளை முதன்மைப்படுத்தி கதைகளை புனையும் ரோசிக்கா இந்த படைப்பில் கணவன்- மனைவி உறவினை மையப்படுத்தி கதையை அமைத்திருக்கிறார்.

பலமும்,பலவீனமும் கொண்ட மனிதனின் பலத்தை மட்டுமே பிரதானப்படுத்தாமல் பலவீன குணங்கொண்ட இருவரை பிரதானப் பாத்திரங்களாக்கி கதையை அமைத்தமைக்கு பாராட்டுகள் அக்கா.

ஹேப்பி எண்டிங் ஸ்டோரியில் பலவீனமான,எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட இருவரை பிரதானமாக்கி கதையை புனைவது அபூர்வமே.பிரதான கதாபாத்திரங்களின் வாழ்வியலை ஒப்புமைப் படுத்தி மனதில் நிறுத்தும்படி கதையை அமைத்திருக்கிறார் ரோசி அக்கா.

இரு ஜோடிகளை மையப்படுத்தி கதையை கொண்டு செல்லும் ரோசிக்கா,மகிழ்- உதய் ஜோடிக்கு பிரதான இடத்தை தந்து ஆனந்த்- மங்கை ஜோடியை பின்னுக்கு தள்ளியிருப்பதாக வாசிப்பவர் கருத்திலமையும் வண்ணம் அமைத்திருப்பார்.ஆனால் பிரதான இடம் ஆனந்த்- மங்கைக்கே.ஆனந்த்- மங்கை ; மகிழ்- உதய் ஜோடிகளின் ஒப்புமைகளை கொண்டு கதையை செலுத்துவது சுவாரசியமாய் இராது என்பதனால் மகிழ்- உதய் ஜோடியை முன் நகர்த்தி கதையை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது.

மகிழின் மனக்குமுறல் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

உதயின் பாத்திரப்படைப்பு பாராட்டும் விதமாய் அமைந்திருந்தது.

இந்தக்கால மக்களிடம் வெகு எளிதாக காணக்கிடைக்கும் அவசரக்கோலத்தை ஆனந்த்- மங்கை ஜோடியில் நிறுத்தி, கதையை அமைத்ததை வெகுவாக ரசிக்கலாம்.அந்த காலத்திலும் சரி,எந்தக் காலத்திலும் சரி இவ்வகையான மனிதர்கள் உண்டு என்பதை வாசிப்பவர்கள் மனதில் நங்கூரமிட வைத்திருப்பார் ரோசிக்கா.

பர்வதம்,சரசு இரு பாட்டிகளையும் ஒரே மாதிரியான அழுத்தந்திருத்தமான மனிதர்களாக்கிவிட்டார்கள் ரோசிக்கா.ஆனந்த்- மங்கையின் பலவீனங்களை இவர்களை கொண்டு நேரிடை செய்து விட்டதான ஒரு எண்ணத்தை மனதில் பதியவைத்திருக்கிறார் ரோசிக்கா.சரசு யதார்த்த வாழ்வில் வெகுவாக காணக்கிடைக்கும் ஒரு பாத்திரம்.

பளையிலிருந்து கனடாவை நோக்கி நகரும் கதையில் சில இடங்கள் கதையின் விறுவிறுப்பை குறைக்கச் செய்கின்றன. கதையின் நீளத்தை வாசிப்பவருக்கு உணர்த்தும்படி அமைவது ஒரு குறையே.

ரோசிக்காவின் கதையில் காணப்படும் சஸ்பென்ஸ் இந்தக்கதையி்ல் மிஸ்ஸிங்.வாசிப்பவர்களை அந்த சஸ்பென்ஸை நோக்கி நகர்த்தும் வண்ணம் கதையை படைப்பவர் இந்த முறை அதைத்தவறவிட்டிருக்கிறார்.கனடாவிற்கு செல்லும் முன்பு மகிழ் சந்திக்கப்போவைகளைப் பற்றிய குறிப்பு ஆர்வத்தை தூண்டவில்லை எனலாம்.

யதார்த்தத்தை அதிகமாக கதையில் காண்பிக்கும் ரோசிக்கா இம்முறையும் அதை செவ்வன்னே செய்திருக்கிறார்.கதையில் வரும் சிற்சில இடங்களும், வர்ணணைகளும்,கதையின் நிறைவும் மட்டுமே இந்தக் கதையை ஒரு ஹேப்பி எண்டிங் ஸ்டோரிக்குள் கொண்டு செலுத்த உதவுபவன. கனமான கதைக்கருவை -கதையமைப்பை கொண்டு மகிழ்வானதாக்கி தந்தமைக்கு பாராட்டுகள் அக்கா.

ரோசிக்காவின் இந்தக்கதையை படித்து முடிக்கையில் வழமை போல் ஒரு யோசனை ஓடியது.ஹேப்பி எண்டிங் வகை அல்லாத இலக்கியத் தரம் வாய்ந்த ஒரு கதையை படைக்கலாமே என்ற எண்ணம் வெகுவாக மனதுள் நிற்கின்றது.விட்டில் பூச்சி சிறுகதையும் இந்த எண்ணத்தை ஆழமாக வேரூன்ற வைத்தது.

நன்றிக்கா.

Advertisements

காதல் செய்த மாயமோ!(காவ்யா) ஆர்த்தி ரவியின் பார்வையில்…

💐💕 காவ்யா ❤ ரோசி 💕💐

என்ன சொல்ல இக்கதையைப் பற்றி? எப்பவும் போல் கதைக்கருவை வாசகர்களின் வாசிப்பு வரை ஊகத்திற்கு விட்டுவிட்டு, என் மனதில் பதிந்தவற்றை எழுதுகிறேன்.

முதலில் ரோசிக்கு நன்றி! உங்கள் ப்ளாகில் வாசிப்பதும் மிகவும் இலகுவாக இருந்தது. ஒவ்வொரு அத்தியாயமும் sub menu bar-யில் போட்டது நன்று. 🙏🏻😀

மென்மையானக் காதல் நிகழ்வுகள், ஆழ்ந்த நேசம், பாசப் பிணைப்பு, நட்பு, கொஞ்சம் கோபம், பரிதாபம், கலாட்டாக்கள் எனக் கலந்து இக்கதையை படைத்திருக்கிறார் ரோசி.

கதையின் தொடக்கத்திலேயே எங்களின் கல்லூரி காலத்தை நினைவிலாட வைத்து அக்கால இளமையும் இனிமையுமாக கதையுடன் பயணிக்கச் செய்து விட்டீர்கள். 👌🏼🎵🎶🎵💕💕

கதை மாந்தர்களில் எனை மிகவும் கவர்ந்தவர்கள் நாயகி காவ்யாவும் சாந்தாவும் தான். காவ்யா பொறுமையும் பொருப்பும் நிறைந்தவளாக எளிமையுடன் உலா வருவது கவர்ந்தது. சாந்தாவின் பாசமும் பரிவும் சாதுரியமும் பிடித்தது. 😘😘👍🏼

சந்தோஸ் மனதினுள் தாக்கத்தை ஏற்படுத்தினான். அவன் செயல்களுக்குப் பின் காரணங்கள் இருப்பினும், இன்னும் அவன் மேல் எனக்குக் கொஞ்சம் கோபம் எஞ்சி இருக்கு. 😈😈மற்றும்படி நல்லவன், பாசக்காரன், நட்பானவன் மற்றும் கொஞ்சம் குறும்பானவனும் கூட. 😉😊

அபி, சீலன், நிலா கலகலப்பிற்கு துணை புரிந்தனர். மூர்த்தி கதாப்பாத்திரமும் பிடித்தது.
ரதினி, அவள் பெற்றோர் — எத்தகைய மனிதர்கள்? 😡😡😡

வினோத் செய்வதும் சரி அல்ல. ஆனால், கடைசியில் அவன் சாதாரணம் போல் நடந்தது வியக்க வைத்தது.
நாயகன் நாயகி இருவரும் காதலை உணரும் அத்தியாயம் மிகமிக சிறப்பாக அமைந்திருந்தது. 😍😍❤❤

கடைசி இரு அத்தியாயங்கள் விழிகளில் கசிவை ஏற்படுத்தின.

இக்கதை முழுவதும் என்னை மிகவும் ஈர்த்து ரசனையில் தள்ளியது என்னவெனில்…

வாக்கியமைப்பு! யாழ்ப்பாணத் தமிழால் வந்தது என சொல்ல மாட்டேன்.. அதையும் தாண்டியது இந்த என் ரசனை. வார்த்தை முத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தொடுத்த அழகிய வாக்கியமைப்புகள். ஒவ்வொரு வரியையும் வாசிக்கையில் ரசனையில் தொலைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். 😍😘🙏🏻💐

நன்றி ரோசி!
அன்புடன்,
ஆர்த்தி ரவி

காதல் செய்த மாயமோ!(காவ்யா) VaSu வின் பார்வையில் …

 இப்படியுமா கடைசி பாகத்துல கூட டிவிஸ்டு வெப்பாங்க…சாமி!!

அக்கா, சந்து குடும்பத்தின் பின்னாடி இந்த flashback யாருமே எதிர்பார்க்காத ஒன்று! அதையும் நீங்க சொன்ன timing இருக்கே.. நனி நன்று கா கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தாலோ சந்துவின் மேல் sympathy தோன்றத்துவங்கி இருந்திருக்கும், அவனுடைய ‘முசுடு மாப்ள image’கு அது தடங்களாகூட அமஞ்சிருக்கலாம்.

ஆனா நீங்க அதை செய்யல…பயங்கரமா likeறேன் அதை!!

(இருந்தாலும் mr.SAndos, இதுக்காகவெல்லாம் உன்னை மன்னிச்சிட மாட்டோம் ஜி நாங்க.. ஏதோ Mr.Kavyaவாக ஆனதனால் நீ தப்பித்தாய் மகனே!)

கதையை நீங்க போட கமண்ட்ஸ் நாங்க போடனு கதை முழுக்க உங்ககூட பயனிச்சு இருந்தாலும் final touch குடுக்கனும்ல!??

அதான், நான் feel செஞ்ச PROS & CONS இதோ (மொக்கையாய் இருந்தால் மன்னித்து looseல் விடவும்):

பிடித்தது:

*மொத்த கதையுமே தான் .

specially the way u had designed the characters (அபி மாதிரி ஒரு நண்பி கிடச்சா எப்போவுமே “முழுகாத shipஏ friendshipதான்” feel தான். Shantha aunty…love O love u ponga!!!) not oly the positives, also the negative characters were characterised splendidly.

*ரோசி அக்காவின் punctual updation of the updates and the sweet replies of urs for our comments.

*உங்க தமிழ் and நிறைய நிறைய இடத்துல உங்களின் வர்ணனைகள்..chancey illa ka (வலியோ மகிழ்வோ,பக்காவாய் உணர்த்தின அவைகள்.)

கொஞ்ச கடுப்பிங்க்ஸ் ஆனது:

*சண்ட போட்ட ரெண்டும் சேர்ந்தது சூப்பர், ஆனா ஒரு புது மனுஷிகிட்ட அதுவும் எதிரியாய் தான் நினைப்பவளிடம் எப்படி சந்தோஷ் அத்தனை உரிமை எடுத்துக்ட்டான் (அதுவும் நம்ம gentleman சந்து!!)

*அபி மை darlingங்கறதுனால இது: காவ்யா அபியின் நட்பின் ஆழத்தை உணர அத்தனை நிகழ்வுகள் இருந்த மாதிரி அபிக்கு காவ்யா சார்பில் பெருசா இல்லையே.
அபியை அடக்க ஒருத்தன் இல்லாம போய்டானே!!!!

*சந்து கார்ல காவ்யாவிடம் காட்டிய கோபம், கொட்டிய வார்த்தைகள் and நம்ம நல்லவ காவ்யா அதை மன்னித்தது-இது இரண்டுமே கோவம் வர வெச்சிருக்கும் ஆனால் அவங்க sideல இருந்து நீங்க தந்த justifications அழகா அதை போக்கிடுச்சு

And, one more doubt: அக்காவை கல்யாணம் செஞ்சவரை நீங்க அத்தான்/மாமா அப்படீலாம் கூப்பிட மாட்டீங்களா??? (கடைசி வரைக்கும் அபிக்கு சீலன் அண்ணாவேதானா??)

அக்கா… மதுராவோட impactஆ அது, ‘காவ்யா’ செல்லத்தை எப்படி நீங்க மதுரானு சொல்லலாம்….செல்லாது போங்க

வாழ்த்துக்கள் கா… உங்கள் அடுத்த கதைக்கு நாங்கள் ஆவலாக waitறோம்..சீக்கிரம் வாங்கோ!!!

காதல் செய்த மாயமோ!(காவ்யா) செல்வி பாண்டியனின் பார்வையில் …

எப்போதுமே ரோசியின் கதைகள் நின்று நிதானமா நம்மை அப்படியே இழுத்துக் கொண்டு போகும் …

நம் வேலை கதையில் இறங்கி படிக்க வேண்டியதுதான்!!!

ஒரு பர பரப்பு இருக்காது, நம்மை அனுபவித்து படிக்க வைக்கும் நடை…நிதா சொன்னது போல எனக்கும் அந்த கேம்பஸ் வாழ்க்கை மீது ஒரு அலாதி காதல்!! அது எனக்கு கிடைக்காததால், அந்த கதைகள் வந்தால் ரசிச்சு படிப்பேன்!!

உஷா கதைக்கே சொல்லனும் என்று இருந்தேன்!

கதை பற்றி என்ன சொல்ல!

காவ்யா….அமைதியா வந்தவள் இந்த சந்தோஷ் பையனால எவ்வளவு துன்பங்களை அனுபவிச்சுட்டா…காரணமே இல்லாம எரிஞ்சு விழுந்தவர் கடைசில விழுந்தார் பாருங்க!!!

ஹா..ஹா…அங்கெ நிக்கிறா எங்க காவ்யா!!!!

ஒண்ணுதான் எனக்கு உங்க மேல கோவம் ரோஸி…அதெப்பிடி நீங்க அவளை அவன் வீட்டுக்கு சாப்பிட அனுப்பலாம்??!!

கடைசி வரை துரை இறங்க மாட்டாராமோ??!

அப்பிடி என்ன அவருக்கு??

அவரு நினைச்சா என்ன வேணா பேசுவாராம்…இவை அமைதியா போவா…ஆனால் இவவை மறக்க முடியலைன்னு சொன்னதும் அவ அப்படியே மயங்கிட்டாளாம்!!

இந்த சாந்தா எப்படி யாருக்குமே சொல்லாம அவங்க வீட்டுக்கே போயி..இவ்ளோ வேலை பார்த்து காவ்யாவை சாப்பிட வேற அழைப்பு விடுத்துட்டு வேறு பெண் வீடு வாறதா சொல்லி அழ வெச்சு…இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்!!!.

ஆனால் அவன் தன கதை சொன்னதும் போறான் போ ன்னு மன்னிச்சுட்டேன்..

அதும் நிலா குட்டிக்காக!!!

அபி….செம பொண்ணுப்பா!!!

அவ சாபம் பலிக்காம போச்சே!! வந்தனா மாதிரி ஒருத்தி வந்துருக்கணும்…அப்போ தெரியும் சந்தோஷுக்கு!!!

எனக்கு பிடிச்ச இடம்…அவ தன வீடு தெரிய கூடாதுன்னு தெரு முழுக்க ரெண்டு தரம் உலாத்திட்டு வருவா இல்ல!!!!இவர் கெத்தா ஒளிஞ்சு நின்னு கடைசில திடும்ன்னு வெளியே வருவாரே!!!! பிண்ணிட்டிங்க ரோஸி!!!!

காதல் செய்த மாயமோ!(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் …

எப்போவும் சொல்றது தான், You’re the Best when it comes to portray Emotions.. உங்க Heroineகளில் மதுரா போல் யாரும் திட்டு வாங்கிருக்க முடியாதென்பது போல், இங்கே சந்தோஷ்!! ரோசிக்கா ஹீரோவா இவன்னு முதல் எபி பார்த்ததுமே இருந்தது.. ஆனாலும் இவன்தான் தலைவர்ர்ர் ன்னு உறுதியாவும் தோணினது..

‘கண்டதும் காதல்’ தெரியும்.. அதென்ன ஹை ‘கண்டதும் ராக்கிங்’.. எந்த ஹீரோவும் இப்படி அழ விட்டதில்லை போங்க.. சரி அழ வச்சான் ஓகே.. கடைசியில் அதை compensate செய்ய ஒரு Kerchief கூட வாங்கித் தரலை பாருங்க.. எப்படியோ எங்களை ஹீரோ டா ன்னு சொல்ல வச்சீங்களே!! Started on a Negative tone & beautifully wrapped up on a positive note. Writer கா நீங்க

சில Parts படிக்கும்போதே உங்களுக்கு Appreciationsலாம் parcel பண்ணனும் போல இருந்தது.. Yup It takes Spirit & Sportiveness – love for writing to write beyond your comfort zone.. நீங்க சொன்ன மாதிரி இவன் உங்க Make ஹீரோ இல்லை. But You did it and did it well, actually.

தன்னோட காதலை உணர்ந்த பின், அவன் வந்த பகுதிகள் அனைத்தும் பக்கா கிளாஸ்.. முதலிலே நோகப் பேசி பின் வருந்துவான் தான்.. எப்போ காவ்யாக்கும் விருப்பமென கண்டு கொண்டானோ, அப்போவே அவனோட characterக்கு கணம் தான்.. பிடிச்சுருக்கு வேணும் தான் ஆனாலும் வேண்டாம், அவளே வரணும் அதும் இவன் கூப்டாமலே.. அந்த நேரத்தில் அவன் நாக்கில் நாரத முனியின் dance வேற.. அந்த நிலையில் அவனை புரிந்து கொள்ள முடிந்தாலும் எங்க கவனமெல்லாம் காவ்யா மேல தான் இருந்தது.. இவன் தொல்லை தாங்கலன்னு மாதர் சங்கத்திடம் புகார் பண்ணுமளவுக்கு கோபமிருந்தது.

கடைசியில் பார்த்தால், இவன் தாண்டவதுக்கெல்லாம் சலங்கை பூஜை பண்ணியது நம்ம மாமா.. ஏதோ little Performance பண்ணிருக்கார் போகட்டும்னு விட்டால், Group Dancers வச்சு கச்சேரியே பண்ணிவிட்ருக்கார் பக்கவாத்தியம் இல்லாத குறைக்கு மாமி இவங்கட்ட சிக்காமல் இருந்ததுக்கே சந்து, காவ்யாக்கு பத்து பட்டு Sarees வாங்கித் தரணுமாக்கும்..

காவ்யா மேல் சந்துவிற்கு இருக்கும் உரிமையுணர்வு, முதல் பகுதிகளிலே தெரியும்.. அவனுக்கு மட்டும் திருநீர் பூசி விட்டு துரத்தும் போதே தோடா பீல் தான்.. அப்புறமும் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், Wish பண்ணுவாம்.. மகனே நியாயமா அவ கொலை பண்ணணும்.. கெத்தா சுத்தினப்போவும் சரி, பின் அவளிடம் Surrender ஆனப்போவும் சரி சார் Extreme தான்!

இப்படிப்பட்ட கார மிளகாய்க்கு ஈடு கொடுக்க மாங்காயால் மட்டுமே முடியும்.. அந்த மாங்கா நம்ம காவ்யா!! மனித உருவில் நடமாடும் தெய்வம்.. அரிது அரிது காவ்யாவாய் பிறப்பதரிது!

சந்துபோல் கூட பத்து பேரைப் பார்த்துடலாம்.. ஆனா காவ்யா போல் தேடுவது ஹ்ம்ம் ம்ம்ம்.. எப்போதும் அவன் பக்கத்தை மட்டுமே யோசிச்சு, தன்னைத்தானே சமாதானப்படுத்தி எப்பா சாமீ.. உனக்கு கட்டம் சரியில்லைன்னு தப்பா சொல்லிட்டேன் மா.. அவனை கட்டி மேய்க்கற பத்து பொருத்தமும் பக்காவா பொருந்திருக்கு Masterpiece கா இந்த Gal!!

அபி… அபி தோழி டா!! சந்துருவை அத்துவிட்டப்போவே நீ ஒரு படி மேல போய்ட்ட.. Then சந்துக்கு போன் பண்ணி கிழிச்சன்னு கேள்விப்பட்டதுமே, காவ்யாக்கு சிலை வைக்க பார்த்த இடத்தை உனக்கு transfer பண்ற ideakku வந்துட்டேன்.. கூடவே ஓவி பிள்ளை, அவ same Side கோல் போட்டு அத்தானுக்கு காவடி எடுப்பா.. சோ நாம தனியா படம் போட்டுக்கலாம் அபி..

ஆனா க்கா, சும்மா சொன்னது நிஜமாகவே இருக்கும்ன்னு நினைக்கலை.. Poor சந்து! சாந்தா Aunty அடிச்சு தூள் கிளப்பிட்டாங்க.. காவ்யாவை அப்போவும் பாருங்களேன், அவளுக்கு அதெல்லாம் பெரிய விஷயமா தெரியலை.. Infact அவன் அவளை too much ah திட்டினப்போக்கூட, அவனுடைய நிலையைக் குத்திக் காட்டி பேசலை! அதுதானே Character Touch.. Actually Speaking, காவ்யா தான் எங்களுக்கு(Readers) சந்துவை நியாயப்படுத்தி புரிய வச்சதே!

‘கடவுள் இருக்கான் குமாரு’ Moment எங்களுக்கு எப்போன்னா, ரதினி வீட்டுக்காரர் தல-க்கு மார்க் நூறுக்கு மேல போட்டுட்டே போனப்போ தான் அபியைக் கூட்டிட்டு போய் அவங்க வீட்டு முன்ன ஜிங்கு ஜிங்குன்னு Performance பண்ணிருக்கணும்

கடைசி எபி செம.. அந்த இடமும் சூப்பர்.. சார் பேசினதும் சூப்பர்! அவ்வ் கா நிறைய சொல்லணும் ன்னு இருந்தேன்.. இதுக்கே அதிகமா டைப்பிட்டேன் 😦 உங்க கதைகள் எப்படி இருக்குமென சொல்ல வேண்டியதில்லை.. One thing have to Mention, Yeah Your Story Plots are good always But Your Narration & Attention to ‘Little Details & Actions’ add Soul to your Stories Keep Going! And Come out With more of such heart touching Stories!

Regards,
Karti.

காதல் செய்த மாயமோ! (காவ்யா) ஸ்ரீமதியின் பார்வையில் ..

 ரோசியின் கதைகளில் மற்றுமொரு அழகான கதை.

கதையின் ஆரம்பம் கல்லூரி வாழ்க்கை , அங்கு நடக்கும் ராகிங் என்று ஆரம்பிக்கிறது , அந்த இடங்களில் ரோசி கதையா என்றே ஆச்சர்யப்பட வைக்கிறார் ..

போகப் போக குடும்பம் , உறவுகள் , அதன் முக்கியத்துவங்கள் என்று நகர்கிறது கதை ..

காதல் கதை தான் என்றாலும் குடும்ப உறவுகளுக்கும் பாசத்திற்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது கதையில் .

சந்தோஷ் தாய் தந்தை மேல் மதிப்பும் தங்கை மேல் பாசமும் உள்ளவன் , அப்படி இருப்பவன் ஒரு பெண்ணை வார்த்தைகளால் வதைக்கிறான் என்றால் என்னவாக இருக்கும்…அவனின் இந்த நிலைக்கான காரணத்தை அழகாக சொல்லி இருக்கிறார் ….

காவ்யா …இந்தக் காலத்தில் இப்படியும் இருக்கிறார்களா என்று நான் வியந்த கதாபாத்திரம் ….குடும்ப கஷ்டம் உணர்ந்து மாமா மாமி வீட்டில் சில காலம் தங்கி இருந்தாலும் …அந்த சூழ்நிலையை அனுசரித்துக் கொண்டு ….பின் விடுதியில் சேர்வதை விட வெளியில் தங்கினால் தன்னுடைய மேற்படிப்புக்கு பெற்றோரை கஷ்டப்படுத்த வேண்டாமே ….பகுதி நேரம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுத்தால் அதில் வரும் வருமானத்தில் தன்னுடைய செலவுகளை சமாளிக்கலாமே என்று…ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய கஷ்டங்களை பெரிதாக நினைக்காமல் எந்த சூழலிலும் அனுசரித்துப் போகும் குணம் ….

அபி காவ்யாவின் தோழி பட பட வென்று பொரிந்தாலும் தோழி மேல் அக்கறையுடன் இருக்கும் பெண்

….பிள்ளைகளை வெளியூரில் படிக்க வைப்பவர்கள் அவர்கள் படும் மனக் கஷ்டங்கள் , அவர்களின் சங்கடங்கள் …என்று மூர்த்தி – வைதேஹி தம்பதிகளின் மூலம் அற்புதமாக சொல்லி இருக்கிறார் …

உறவுகள் இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு காவ்யாவின் மாமா மாமி …

சந்தோஷின் நண்பனாக வரும் சீலன் ….நல்ல நண்பனாக மட்டும் இல்லாமல் கதையில் பல திருப்பங்கள் நிகழ இவன் காரணமாகவும் இருக்கிறான்…

சந்தோஷின் பெற்றோர் அற்புதமான கதாபாத்திரங்கள் …..

இளமைத் துள்ளல், குடும்பம் , உறவுகள் என்று அழகான இலங்கைத் தமிழில் அருமையான கதைக்கு நன்றி ரோசி

காதல் செய்த மாயமோ!(காவ்யா) நிதனி பிரபுவின் பார்வையில் …

இதைக் கதை என்பதை விட.. நான் அனுபவிக்க ஏங்கிய.. நான் தவறவிட்ட அந்த கல்லூரிக் காலத்தினை கனவுலகில் வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை அழகாய் என் மனதை பறித்துவிட்டது கதை.

இதற்கு ஒரு விமர்சனம் எழுதும் எண்ணமே எனக்கில்லை. என்ன சொல்லி எழுதுவது என்கிற கேள்வி.. மனம் ஒருவித இனிமையில் தளும்புகையில், அதை வார்த்தைகளால் வடிக்க முடியாமல் திணறுவோமே.. அப்படித்தான் இந்தக் கதையை படித்து முடித்து சிலநாட்கள் எனக்கு இருந்தது.

காவ்யாவோடு நானும் கல்லூரிக்கு சென்றேன். அப்போதெல்லாம் சந்தோஷ் அவளை மட்டும் கூப்பிட்டுவைத்து ராக்கிங் என்கிற பெயரில் அவளை காயப்படுத்திய போதெல்லாம், இவனுக்கு பளார் என்று ஒன்று கன்னத்தில் போடவா என்றுதான் வேகம் வந்தது. நல்லகாலம் அவன் என்னோடு எந்த விளையாட்டையும் வைத்துக்கொள்ளவில்லை.

பிறந்தநாளுக்கு பார்ட்டி கேட்ட இடத்தில் அவளுக்காக காசு கொடுத்தபோது மெல்ல என் மனதில் ஒரு ஹாய் போட்டுவிட்டு போனான். அதிலே கொஞ்சம் கோபம் அடங்கியது.

ஆனாலும் அவ்வப்போது என் கோபத்தை கடைசிவரை கிளறிக்கொண்டே இருந்தான் அந்தக் கண்ணன்!

ஒரு இரவில் அவள் அழுதுகொண்டு வரும்போது, ஏன் எதற்கு என்று அவன் தவிப்பதும், அவளிடம் மிரட்டி விஷயத்தை வாங்கும் இடத்திலும் இதழ்களில் ரசனையான புன்னகையை தோற்றுவிக்க தவறவில்லை அவன்.

அவள் அவன் வீட்டை விட்டு கிளம்புகையில், அவன் அனுப்பும் மெசேஜ் கூட அவள் மீதான அவனின் ஈர்ப்பை மிக அழகாய் சொன்னது.. கடைசியில் அவனுடைய பிறந்தநாள்.. ஹாஹா.. ரோசி அக்கா.. இதுக்குமேல நான் ஒண்டும் சொல்லேல… செம சூப்பர்!! அவ்வளவுதான்.

சந்தோஷ்.. அவனுக்குள் புதைந்திருக்கும் சில விஷயங்கள்.. இப்படி எத்தனை சந்தோஷ்கள்..

அம்மா அப்பா மாமா மாமி அண்ணா தங்கை என்று எப்போதும் போல எல்லா உறவுகளையும் சேர்த்து, அதிலே பாசம், சின்னச் சின்ன நீயா நானாக்கள் உடன் அழகாக, அதோடு புரிதலோடு பயணிக்கும் மிக மிக மென்மையான காதல் கதை..

துளசி.. மதுரா இந்த வரிசையில் இந்தக் கதை முதலில் போய் அமர்ந்துகொண்ட உணர்வுதான் எனக்கு.

இதைப்போல நிறைய நிறைய அழகான கதைகளையும், நிறைய நிறைய சந்தோஷ்களையும் தரவேண்டும். இது நேயர் விருப்பம்.

காதல் செய்த மாயமோ!(காவ்யா) சத்யாவின் பார்வையில் …

நான் முதல் முதலாக ஒவ்வொரு அத்தியாயமாக திங்களுக்கும் புதனுக்கும் காத்திருந்து வாசித்து முடித்த தொடர் கதை.

எனக்கு பொறுமை கொஞ்சம் கூடவே இருக்கிறது. 😆 அதனால் காத்திருந்து வாசிக்கும் வேலைக்கு போவதில்லை. ரோசிஅக்காவுக்கோ என்னை விட அவசரம். 😄 விரைவாகவே முடித்து் விட்டார். அதற்கு நன்றிகள் அக்கா… 😍

எதேச்சையாக ஒருநாள் முகப்புத்தகத்தில் பார்த்து விட்டு வாசிக்கத் தொடங்கினேன். காவ்யா எனும் பெயரே என்னை வாசிக்கத் தூண்டியது. (அந்த பெயரில் எப்போதும் ஒரு மயக்கம்) அப்படி என்ன புது கதை… ஒருக்கால் வாசித்து தான் பாரேன்… முதல் அத்தியாயம் நன்றாக இல்லாவிட்டால் தொடர்ந்து வாசிக்கத் தேவையில்லை தானே என்று நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இலங்கையில் வட பகுதியை கதைக் களமாக கொண்டு எழுதியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்து பகிடி வதையில் ஆரம்பிக்கும் கதை அப்படியே என்னை கதையோடு கட்டிப் போட்டு அடுத்த அத்தியாயம் எப்போது எப்போது என்று தவறாது காத்திருக்க வைத்தது.

கதையின் நாயகி காவ்யா
சுருங்க சொன்னால் பொறுமையின் சிகரம், அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ரகம்.

அவள் நண்பி அபி
காவ்யாவிற்கு எதிர்மாறான அறுந்த வால், வாயாடி

நாயகன் கண்ணா எனும் சந்தோஷ்
பகிடி வதை எனும் பெயரில் யாரிலோ உள்ள கோபத்தை காவ்யாவில் காட்டி தினமும் அவளை வார்த்தைகளாலேயே வதைத்து எடுக்கிறான்.

அவனாலே நிதமும் கண்ணீரிலே கரையும்காவ்யா எப்படி அவன் மீது காதல் வசப்படுகிறாள், அவளைக் கண்டாலே எரிந்து விழும் சந்தோஷ் எப்படி தன் கோபங்கள், பயங்கள் தீர்ந்து காதலில் விழுந்தான்…

அவன் கோபத்திற்கும் பயத்திற்கும் என்ன காரணம் என்பதை தென்றலாய் வருடிச் செல்லும் மெல்லிய கதையோட்டத்தோடு மனதை உருக்கும் ஒரு முடிவோடு கதையை நகர்த்தி சுபம் போட்டிருப்பார் ரோசி அக்கா..

காவ்யாவோடு சந்தோஷ் சண்டை போடும் தருணங்களில் அவனைத் திட்டித் தீர்த்து இவள் ஏன் திரும்ப பதில் சொல்லாமல் அழுது வடிக்கிறாள் என்று அவளையும் திட்டிய பல வாசகிகளில் நானும் ஒருத்தி…

ஆரம்பங்களில் சந்தோஷ்க்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினாலும் போகப்போக அவனிலே ஒரு இனம் புரியாத பாசத்தை உண்டாக்கி விட்டார்.

மகனைப் புரிந்து கொண்ட தாயார் சாந்தா.. அவரைப் புரிந்து கொண்ட கணவர்… செல்லத் தங்கையாக நிலா..

இல்லாத பணத்தை குணத்தினாலே நிரப்பும் குறும்பு தம்பி, தங்கை கொண்ட காவ்யாவின் குடும்பம்…. அவளைப் போலவே அமைதியும் பண்புமான பெற்றோர்கள்…

செல்வச் செருக்கில் சுயநலவாதிகளாக விளங்கும் காவ்யாவின் மாமா குடும்பம்…

சந்தோஷின் நன்மைக்காக பாடுபடும் உயிர் நண்பனாக சீலன்… திருமணம் ஒன்று நடக்கும் அபி குடும்பம்…

என்று அனைத்து கதாபாத்திரங்களும் மிக மிக யதார்த்தமாக சாதாரண வாழ்வியலோடு ஒன்றி எந்த வித மிகைப்படுத்தல்களும் இல்லாமல் எங்கள் பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வோடு வாசிக்கத் தூண்டும் எளிய எழுத்து நடையில் மிக அழகாக காவ்யாவை வடித்துள்ளார்… 😍

நாங்கள் எதிர்பாராத ஒரு ரகசியத்தை தன்னகத்தே அடக்கியிருக்கும் சந்தோஷ்…

மகன் மனம் புரிந்து அவன் காதலைச் சேர்த்து வைக்க தன்னாலான முயற்சிகள் எடுக்கும் சாந்தா… இதயத்தை தொட்டுச் செல்கிறார்கள்.

அதுவும் முடிவிலே நாவற்குழி பாலம் தாண்டி வரும் அந்த ஓட்டு வீட்டில் வசிப்பவர்களும், அந்த இயற்கை வனப்பு நிறைந்த தோட்டத்தில் சந்தோஷ் மனந்திறந்து தனது எண்ணங்களை வெளியிடும் போதும் அவனது தவிப்பும் அவன் எதற்காக அவள் காதலை ஏற்க பயந்தான் என்று சொல்வதும் அவனுடைய கோபங்களை மறக்கடித்து, அவனை ஒரு பண்பாணவன், பாசம் மிக்கவனாக மனதில் நிறுத்துகிறது.

ஆரம்பித்ததும் தெரியாமல் முடிவடைந்ததும் தெரியாமல் இரண்டரை மாதங்களில் இருபத்தொன்பது அத்தியாயங்களில் அனாவசிய அலட்டல்கள் இன்றி படைக்கப் பட்டிருக்கும் காவ்யா

மொத்தத்தில் உங்களை ஏமாற்றாத, உங்களை இனிதே மகிழ்விக்கும் மனதை இதமாய் வருடிச் செல்லும் ஒரு காதல் கதை…

காதல் செய்த மாயமோ! (காவ்யா)- உஷாந்தி கௌதமனின் பார்வையில்

காவ்யா ஓ காவ்யா!

ரோசி அக்கா..கொஞ்ச நாளாவே வாறன் வாறன் எண்டு சொல்லிக்கொண்டிருந்து கடைசியில் இன்றைக்கு தான் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தேன். நல்லாயிருந்தது என்று சொல்லி கடந்து போக முடியாதுக்கா. அவ்ளோ நல்லாயிருந்தது. ஹி ஹி 😀

காவ்யாவின் பெயரைக்கேட்டாலே அவளின் இயல்பு மனதில் வந்துவிட்டது. அமைதியா…எங்களுக்கு மேலே படித்த நிறைய அக்காமாரை அப்படியே நினைவுபடுத்தினாள். அவளை பிடித்துப்போனது ஆச்சர்யமில்லை.

ஆனால் இவன் தான்.. வழக்கமா ரோசி அக்காவின் கதைகளில் வரும் நாயகர்களை அடித்து துவைத்து மனதில் நின்று விட்டான் இந்த கண்ணா. சந்தோஷை விடவும் இந்தப்பெயர் தான் அவனுக்கு ரொம்பவும் பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறேன். 😀

ரோசி அக்கா என்றாலே அந்த இயல்புத்தன்மை இந்தக்கதையிலும் அப்படியே பரவிக்கிடக்கிறது. பக்கத்து வீட்டில் வாழ்பவர்கள் கதை சொல்வது போன்ற மிகையில்லா கதைசொல்லல் தான் எங்களுக்கு உங்களை பிடித்துப்போக வைக்கிறதென்று நினைக்கிறேன்.

இந்த கதை முழுக்க வந்த ராக்கிங் என்னை வேறு உலகத்துக்கு அழைத்து சென்றது. எங்களுடைய ராக்கிங் கொஞ்சம் வேறு. தனிமனித தாக்குதல் நடந்துவிடக்கூடாது என்பதிலும் எந்தவொரு ஜூனியருக்கும் அதிகமாகவோ குறைவாகவோ கிடைக்காமல் ராக்கிங்கிலும் சமத்துவம் இருக்கவேணும் என்பதிலும் ரொம்பவும் கவனம் செலுத்துவோம். ஹா ஹா இதுக்கு மேலே கதைத்தால் உள்ளே போகக்கூடிய சாத்தியக்கூறுகள் பிரகாசமாக தென்படுகின்றன. ஹி ஹி :p

ஆரம்பத்தில் கண்ணாவின் நடவடிக்கைகள் சுத்தமாக பிடிக்கவில்லை ..இப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான். ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் அவன் என்னை தன் சார்பாக vote போட வைத்து விட்டான்.

அவர்கள் சண்டை பிடித்த நேரமெல்லாம் இந்தப்பிள்ளைக்கு விசர்..இப்ப ஏன் அழுகுது..அவன் பாவம்..இந்த பிள்ளைக்கு ஒண்டுமே விளங்குதில்லை எண்டு மைன்ட் voice ஓடிக்கொண்டே இருந்தது. ஹி ஹி கடைசியில் அவனுடைய நிலையில்லா இயல்புக்கு உறுதியான காரணம் சொல்லி அப்படியே மொத்தமாக சமாதானம் செய்து விட்டீர்கள்!! 🙂

சாந்தா ஆண்ட்டி, காவ்யாவின் மாமா மாமி என்று எல்லோருமே நாங்கள் ஆங்காங்கே சந்திப்பவர்கள் தானே.. இங்கே காவ்யாவின் தோழி அபிக்கு ஒரு ஸ்பெஷல் மென்ஷன்!!! என்னுடைய நிறைய நண்பிகளின் காதல் வாழ்க்கையில் ஒரு ஓட்டை வாய் அபியாக நானும் இருந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். :p

தடால் தடால் என்று போகாமல் மெல்லிய அமைதியான அலை போன்ற உங்கள் எழுத்து வர வர மெருகேறிக்கொண்டே போகிறது ரோசி அக்கா.

இந்த கதையில் வழக்கமான மற்றைக்கதைகளை விடவும் தமிழ் நடையை ரொம்பவும் ரசித்தேன்.

அந்த தோப்பு. அவர்கள் சேர்ந்தும் சேராத நிலையில் இருவர் மனநிலையையும் வர்ணித்த விதம் எல்லாமே ரொம்பவே அழகாக இருந்தது.

நிறைய வாசிக்கும் போது சொல்ல நினைத்தேன்..ஆனால் வீட்டுக்கு போகும் முன் சொல்லிட்டு போகோணும் என்று இத்தோட முடிக்கிறேன்.

ஞாபகம் வரும் போதெல்லாம் உள்பெட்டிக்கு வந்து விடுகிறேன் 😀

மொத்தத்தில் ரொம்பவே அழகான கதையை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி நன்றி அக்கா..

தொடர்ந்து இன்னுமின்னும் எழுதிக்கொண்டே இருக்க வேணும்.