நெஞ்சினில் நேச ராகமாய்!- தேனு ராஜ்

காதல் — இரு பெண்களுக்கும், ஒரு குடும்பத்திற்கும் ஏற்படுத்தும் விளைவே கதை. அழகான காதல் யாரையும் பார்க்காது, சற்று சுயநலத்தோடு தான் இருக்கும். ஆனால் அது படுத்தும் பாடுகளை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும், அது தரும் வலி சுகமா சோகமா என்று…! குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து செல்கிறது கதை…! 

இலங்கை பளையில் உள்ள பெரும் வசதி படைத்த வீட்டின் செல்லப்பெண் மங்கை, அழகு, படிப்பு, அந்தஸ்து எல்லாம் நிறைந்து, அம்மா சரசு, அண்ணன் ராசன், அண்ணி கோகிலாவுடன் பாசமான கூட்டில் வாழ்பவள்.

அவர்களின் தோப்பில் டிரைவராக வேலை செய்யும் ஆனந்த், படிப்பறிவில்லாதவன், வசதியும் இல்லை… நோயாளி தந்தை, பேராசை பிடித்த தாய், மூன்று தங்கைகள் என வாழ்பவன்.

மங்கை ஆனந்திடம் காதலில் விழ…. அவளின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணமும் நிச்சயிக்க போகும் நேரத்தில், வீட்டைவிட்டு வந்து ஆனந்தை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைக்க… பேராசை கொண்ட அவனின் தாயின் துர்போதனையால், அவனும் மங்கையை சில விஷயங்களில் ஏமாற்ற… மாமியாரின் பேச்சை கேட்டு, அண்ணனிடம் சொத்தில் பங்கும் கேட்கிறாள். அங்கு கிடைப்பது அவமானமே…! ஒருநாள் மாமியார் மற்றும் கணவனின் பேச்சை கேட்டபிறகே, சொத்திற்காக மட்டும் அவளை கல்யாணம் செய்துக் கொண்டான் என்ற கசப்பான உண்மை தெரிந்து, நிரந்தரமாக அவனை பிரிந்து, மீண்டும் அண்ணனின் தயவில் வாழ்கிறாள்.

மங்கையின் மகள் தான் மகிழினி….. சுருக்கமாக மகிழ்… துடுக்கானவள்… எதையும் வெளிப்படையாக பேசும் குணம்… தாயின் மேல் அளவில்லாத பாசம்… 

கனடாவில் வசிக்கும் ராசனின் நண்பர் சரவணனின் மகன் உதயதீபனுக்கு மகிழை கல்யாணம் பேச…. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் இலங்கை வந்தபோது இவளுடன் மோதல்… அந்நினைவில் இவள் மறுக்க… அவனோ இவள்தான் தனக்கு பார்த்திருக்கும் பெண் என்று தெரிந்ததும் ஓகே சொல்ல.. ஆனால் உதயின் பாட்டி பர்வதமோ அந்த கல்யாணத்தை எதிர்க்கிறார். அதேபோல் மகிழின் பாட்டி சரசுவும் மறுப்பு சொல்ல …

இரண்டு பாட்டிகளின் எதிர்ப்புக்கும் என்ன காரணம்….?

ஒருவழியாக அனைவரையும் சமாளித்து சம்மதிக்க வைத்து கல்யாணமும் நடந்து, உதய் & மகிழ் இருவரின் மோதல் முடிந்து, ஊடல் ஆரம்பித்து கூடலில் முடிகிறது. அவளும் கனடா சென்று அவனின் குடும்பத்தோடு ஐக்கியமாகிறாள். அனைவரும் சந்தோஷமாக ஒன்றி வாழ… உதயின் நண்பன் குணா, அவனின் பெரியப்பா குமார் என சிலர் அவளுக்கு அறிமுகமாக, அனைவரும் இவளிடம் பாசத்தை பொழிகின்றனர். 

உதய் அம்மா, அப்பா, இரு அண்ணா, அண்ணி அனைவருமே மகிழிடம் பாசமாக இருந்தாலும், அவ்வப்போது பாட்டி பர்வதம் மகிழை வார்த்தைகளால் வதைக்க…. மனம் நோகும் அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் காதல் கணவன்.

கணவன் உதய் சில விஷயங்களை தன்னிடம் மறைத்ததால், அவனிடம் முறைத்துக்கொள்ளும் மகிழ், அதற்கு நேர்மாறாக பாட்டி பர்வதத்திடம் நெருங்க…, அவரும் இவளை ஏற்றுக்கொண்டு கொண்டாட…

இந்நிலையில் உதய் குடும்பமும், குணா குடும்பமும் ஒன்றாக நயாகரா சென்றுவந்த போட்டோவை மங்கைக்கு அனுப்ப… அதை பார்க்கும் அவர் மயங்கி விழுகிறார்.

அவரின் மயக்கத்துக்கு என்ன காரணம்…?

உதய் மகிழிடம் மறைத்த விஷயம் என்ன…?

உதய் – மகிழ் பிணக்கு மறைந்து மீண்டும் கூடுவார்களா…?

மங்கையின் கணவன், மகிழின் அப்பா என்ன ஆனார்…?

என்றோ பிரிந்த மங்கையும், ஆனந்தும் மீண்டும் சேர்வார்களா…?

என்பதையெல்லாம் அறிந்துக்கொள்ள கதையை படிங்க….

அழகான நேர்த்தியான எழுத்துநடை…. தெளிவான கதையோட்டம்…!

அதைவிட முக்கியம், உறவுகளை சுற்றியே கதை நகர்கிறது.

கதையில் வரும் அனைவருமே மற்றவர்களின் சுக துக்கங்களையும் பகிர்ந்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆறுதலாக வருவது சூப்பர்.

விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதையும் சொல்லியிருக்கும் கதை…!

ரொம்ப நல்லா இருக்கு. இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம். 

Advertisements