சில்லிடும் இனிமை தூறலாய்! -அனு அஷோக்

 

மரணத்தை வென்றவர்கள் என்று இந்த உலகத்தில் யாருமே கிடையாது… ஆனால் மரித்தாலும் மற்றவரின் எண்ணத்தில் என்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் புண்ணிய ஆத்மாக்களின் நினைவை எவராலும் அழிக்க முடியாது. மரித்துப் போனவர்கள் பாவப் பட்டவர்களா? இல்லை அவர்கள் நினைவை மட்டுமே சுமந்து வாழ்கையை கடத்துபவர்கள் பாவப்பட்டவர்களா? என்றால் விடை சொல்வது கடினம் தான். 

நந்தன் – அண்ணன் மகனின் பள்ளி விழாவிற்கு செல்பவன் முதல் பார்வையிலே துளசியின் மேல் அபரிதமான நேசம் கொள்கிறான். துளுசியின் குடும்பம் அவன் குடும்பத்திற்கு உறவுக்காரர்கள் என்று தெரிந்ததும் அவள் மேல் கொண்ட நேசம் நங்கூரம் பாய்ந்தது போல அவன் இதயத்தில் ஆழமாகவும், அழுத்தமாகவும் இறங்குகிறது. புதிதாக தோன்றிய சலனத்தில் நந்தனுக்கு உலகமே வண்ணமயமாக காட்சி அளிக்க துளசியின் நினைவில் சுகமாக நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறான். அவன் மனதை தெரிந்து கொண்ட குடும்பத்தார் துளசியை அவனுக்கு வரனாக பார்த்து அவன் மனதை குளிர வைக்கிறார்கள்.

துளசி- பொறுமை, சாந்தம் போன்ற நற்குணங்கள் கொண்ட மென்மையான பெண். நந்தனை போல முதல் பார்வையிலே அவன் மேல் நேசம் கொள்ளவில்லை என்றாலும்… தனது ஆசை தங்கையின் சம்மதத்தை பெற்ற பிறகே அவனுடன் நடக்க இருக்கும் திருமணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள்.

பானு, சஞ்சீவ் – தன்னுடைய வாய்த்துடுக்கால் அனைவரையும் அலற வைக்கும் பானுவிற்கும் அவளுடைய அம்மாவின் தோழியும் அவளுடைய ஆசிரியருமான பாக்கியம் மிஸ்ஸின் மகன் சஞ்சீவிற்கும் முதல் சந்திப்பில் மோதல் ஆரம்பித்து மெல்ல காதலாக மலர்கிறது. பானு கதாபாத்திரம் அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

நந்தன் துளசி நேசமும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்க துளசி கிடைக்காமல் போய்விடுவாளோ என்று நந்தனின் மனதில் அவ்வப்போது எழும் சிறு பயத்தால். விரைவாகவே பதிவு திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. முதலில் தன் அக்காவிற்கு நந்தன் பொருத்தமில்லை என்று நினைக்கும் பானு தனது அக்கா அத்தான் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பிரியத்தை பார்த்து மனம் தெளிகிறாள்.

நல்லதோர் நாளில் நந்தன் துளசி திருமணமும் நிறைவாக நடந்து முடிகிறது. தனது அக்கா குடுபத்துடன் இவர்கள் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளும் சஞ்சீவ் பள்ளி இறுதி ஆண்டு முடித்திருந்த பானுவிடம் இலைமறை காயாக தன் மனதை தெரிவித்து விட்டு லண்டன் செல்கிறான். இதுவரை கதை சாதரணமாக நகர்ந்கின்றது…

இனிமையாக சென்று கொண்டிருந்த நந்தன் துளசி திருமண வாழ்கையின் அடுத்த கட்டமாக… குழந்தை செல்வத்தின் வரவை ஆசையுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் இரண்டு உள்ளங்களின் வாழ்கையில் மெல்லிய ஊத காற்று அடிக்க ஆரம்பித்து சூறாவளியாக மாறி சுழன்று சுழற்றிப் போட்டு விடுகிறது. முன்னெச்சரிக்கை இன்றி தாக்கிய உடல் நல குறைபாடால் மருத்துவ மனையில் சேர்ப்பிக்கப்பட்டு குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறாள் துளசி. துளசி இழப்பின் துயரம் ரோசிக்காவின் எழுத்தில் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்க வில்லை என்றால் தான் ஆச்சரியம்.

இறக்கும் தருவாயில் பானுவிடம் குழந்தையை கொடுத்து நந்தனையும் குழந்தையையும் அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலுடன் உயிர்நீத்த தன் அக்காவிற்காக இனி வாழ்கையில் அக்காவின் குழந்தை மட்டுமே தனுக்கு எல்லாமும் என்ற முடிவை எடுத்த பானு, நந்தனின் சம்மதத்துடன் குழந்தை எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

பானுவிடம் குழந்தையை கொடுத்து அனுப்பிய நந்தன்.. பானுவிற்கு சஞ்சீவ்வுடன் திருமணம் செய்து வைத்து.. அவர்களுக்கு திருமண பரிசாக தன் குழந்தையை கொடுத்து விடுகிறான்.

அதன் பிறகு அவன் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சில விஷயங்கள் மனதை வண்டாக குடைந்தாலும் இறுதி அத்தியாயம் மனதிற்கு வெகு திருப்தியாக அமைந்தது. துளசி இறப்பிற்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்துமே உணர்ச்சி குவியலாக நகர்ந்கின்றது. 

 

வெகுவாக கவர்ந்தது நந்தன் கதாபாத்திரம்… மனைவியின் மேல் கொண்ட அப்பழுக்கில்லாத நேசத்திலும் அழுத்தமான அன்பிலும் நம் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் எழுத்தாளர் சீலனாக. ( நந்தசீலன் )

மிக மிக அருமையான கதை… கதை சொன்ன விதம் பிரமாதம்… உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை பிரயோகங்களில் நல்ல முதிர்ச்சி. கதையாசிரியரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது அவருடைய ஆறாவது படைப்பான இக்கதை… இப்படிப்பட்ட அருமையான படைப்புகளை கொடுத்து எழுத்துலகில் அங்கீகாரம் பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ரோசிக்கா உங்களுடைய மூன்றாவது கதைக்கு விமர்சனம் போட்டேன்… அதன் பிறகு இரண்டு கதைகளுக்கு விமர்சனம் கொடுக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இந்த கதை படித்து முடித்ததும் விமர்சனம் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனதை பாதித்த கதை. 

 

Advertisements