உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! -ஹமீதா

கொழும்புவில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி…இலங்கை அரசு அலுவலகத்தில் பணி புரியும் பூஜா..சரியான துடுக்கு. இவளின் மேலதிகாரி சமிந்த. அவனுக்கு தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில்…..தோழிகளுடன் சேர்ந்து அவனை முகத்துக்கு எதிரே கலாய்க்கும் அவளின் குறும்பு அசத்தல் என்றால் ஒன்றும் புரியாதவன் போல….மாதக்கணக்கில் அதை உள்ளூர ரசிக்கும் சமிந்த….கொள்ளை அழகு போங்க….

அவனுக்கு அவள் மீதான ஈர்ப்பு…அக்கறை…அதற்கு அவளின் கோபமான பிரதிபலிப்பு…தோழிகளின் சீண்டல் என்று காட்சி அமைப்புகள் இயல்பு….அவர்களின் காதலும் வெகு இயல்பு. காதலை வாய் வார்த்தையால் அல்லாமல் செயலால் மட்டும் உணர்த்தி ….குடும்பத்தில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு…..அவனை பிரிந்து….பணி மாறுதல் வாங்கிக் கொண்டு செல்லும் அவளின் திடம்…நம்மை வசீகரிக்கிறது.

பூஜாவின் குடும்பம் தாய் தந்தை…தாத்தா பாட்டி…தங்கை என்று…அழகான குருவிக் கூடு. கண்டிப்பு நிறைந்திருந்தாலும்..அவர்களிடையே விரவி நிற்கும் அன்பு….அவளை தடம் மாறச் செய்யாமல் திடமான முடிவினை எடுக்க வைக்கிறது.

காதலை விஞ்சி நிற்கும் அவளின் குடும்ப பாசம்….ஏற்கனவே ஒரு காதலின் விளைவால் மாறா ரணத்துடன் வாழ்ந்து வரும் அவளின் குடும்பத்துக்கு….மகிழ்ச்சி அளித்ததா????

வேற்று இனத்தவனை காதல் மனம் புரிந்த ரேணு…..அதன் காரணமாக தாய் வீட்டு பந்தத்தை இழந்து….கணவன் பிள்ளைகள் என்று வளமான வாழ்வு வாழ்ந்தாலும்…அது அவருக்கு நிறைவானதாக இல்லாத காரணத்தால் வேதனையில் உழல்கிறார். இவரின் மகன் ரஞ்சித்…ஹீரோயின் பூஜா வசிக்கும் அவளின் பெரியம்மாவின் வீட்டருகில் அவனுடைய தந்தை வழி தாத்தா பாட்டியுடன் வசிக்கிறான். தங்கை தர்மியுடனான ரஞ்சித்தின் புரிதல் அழகு.

ரஞ்சித்துக்கு பூஜா மீது காதல். இவனுக்கும் சமிந்தவுக்கும் என்ன சம்பந்தம்????

ரேணு அவருடைய தாய் வீட்டுடன் இணைந்தாரா????

என்ன தான் குடும்பத்தின் மீதான பற்று என்றாலும்…கொண்ட காதலுக்கு பூஜா நியாயம் செய்தாளா???? அவன் அவள் மீது கொண்ட காதலை அங்கீகரித்தாளா…

இதில் கடைசி கேள்விக்கு மட்டும் நானே பதில் சொல்லி விடுகிறேன்….

ஏகப்பட்ட மனப் போராட்டங்களுக்கு பிறகு….அவனை தவிர வேறொருவனுக்கு தன்னுடைய வாழ்வில் இடமளிக்க இயலாது என்பதை ஐயம் திரிபர உணர்ந்த பிறகு….சூழ நிற்கும் அவளின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை மறந்து….அவனின் காதலை அவள் கௌரவிக்கிறாள்.

தீப்தி திருமணத்துக்கு போன இடத்தில்….அவளின் அண்ணன் அறிமுகம்…sight seeing….அரசு அலுவலத்தின் பணிகள்….இன்னும் எங்கே பஸ் ஏறி…எத்தனை ஸ்டாப்பிங் கழித்து இறங்குவார்கள் போன்ற விவரிப்புகளை தவிர்த்திருந்தால் பக்கங்கள் தன்னால் குறைந்திருக்கும் ரோசி….

இது வழக்கமான காதல் கதையாக இருக்கலாம்..ஆனால் சொன்ன விதம்….அருமை. உறவுகளின் அருமை….பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்க வேண்டிய முன்னுரிமை..மற்றும் மரியாதை…..

அப்படியான பிள்ளைகளின் மன மகிழ்ச்சிக்கு…நிறைவான வாழ்வுக்கு பெற்றோரும் தங்கள் பிடிவாதத்தை விட்டு கீழிறங்கி வந்து தங்களின் கடமையை முழுமனதுடன் செய்வார்கள் என்பது ரொம்ப அழகா சொல்லப் பட்டிருக்கு.

ரோஸியிடம் எனக்கு பிடித்த…அழகு தமிழ்..கதை நெடுகிலும் கொஞ்சி விளையாடுகிறது. காகிதத்தில் விழுந்த இருவரின் கண்ணீர் துளிகளும் ஒன்றோடு ஒன்று கலந்து சந்தோஷத்தில் குதியாட்டம் போட்ட இடத்தை வெகுவாக ரசித்தேன்.

பெற்றோரை எதிர்த்து மணம் புரியும் பெண்களின் வாழ்வில்..என்ன தான் மகிழ்ச்சி கூத்தாடினாலும்..நிறைவு என்பது கேள்விக்குறி தான். குற்ற உணர்ச்சி குடிகொண்ட மனதில் நிறைவான மகிழ்ச்சி என்பது சாத்தியமில்லை. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதை…நம் பெற்றோர் பார்த்து மகிழ்வது தான் நாம் அவர்களுக்கு தரக் கூடிய மிகப் பெரிய பரிசாக இருக்கும்.

ஒரு பெண்ணின் செயல் எவ்வாறு ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறை வரை பாதிக்கிறது என்பதையும்….பிள்ளைகளின் மகிழ்ச்சியான கௌரவமான வாழ்வு…பெற்றோரின் வாழ்வின் வெற்றியாக உணரப் படும் என்பதையும் ரேணு கதாபாத்திரம் சாட்டையால் அடித்தது போல உணர்த்துகிறது.

அழகான குடும்ப உறவுகளால் பின்னப்பட்ட காதல் கதை வழங்கிய ரோசிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

Advertisements