‘செந்தூரம்’ இதழ் 2 வெளிவந்துவிட்டது.

ஹாய் ஹாய் அன்பு வாசகர்களே!

மிக்க மிக்க மகிழ்வான செய்தியோடு உங்களை நாடி வந்துள்ளோம்.

அது என்னவென்றால்…நம் செந்தூரம் மின்னிதழின் ஆனி மாத இதழ் வெளியாகியுள்ளது.

ஒரு நாவலை எழுதுவது என்றால் ஆகக் குறைந்தது இரண்டு மாதங்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரை ஆகும். அதற்கு மேலேயும் போகும். அப்படி, குருவி, கூடு கட்டுவதுபோல கிடைக்கும் சொற்ப நேரங்களையும் பயன்படுத்தி எழுதி முடித்து வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வருகையில், அவர்களின் கருத்து பரிமாற்றங்களைப் பார்க்கையில் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். அந்தக் கணங்களில் இன்னுமின்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உருவாகும்.

அதை விடப் பன்மடங்கு மகிழ்வையும் உத்வேகத்தையும் தருகின்றது இந்த செந்தூரம் மின்னிதழ். முதல் இதழுக்கு நீங்கள் தந்த வரவேற்பு, தயக்கமின்றி உங்கள் மனதில் தோன்றிய திருத்தங்களை பகிர்ந்து கொண்டமை, ஆக்கங்களை அனுப்பவது என்று என்ன பாடு பட்டாவது முதல் தரமான குடும்ப இதழாக இதைக் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது மக்களே.மிக்க மிக்க நன்றி!

இந்த இதழ் பற்றிய உங்கள் ஒவ்வொருவரினதும் கருத்துகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம். திருத்தம் என்று மனதில் படுவதைத் தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும். தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

செந்தூரம் குழு.

கீழேயுள்ள லிங்கில் eBook ஆக வாங்கியோ கிண்டில் லெண்டிங் லைபிரரியிலோ இதழை வாசிக்கலாம்.

செந்தூரம் ஆனி இதழ்

amazon.in

amazon.com

NNES-12

நீண்ட நாட்களுக்குப் பிறகான அத்தியாயம். இதுவரை என்னை விசாரித்தவர்கள், தினமும் பார்த்துப் பார்த்து ஏமாந்து திட்டியவர்கள் எல்லோருக்கும் நன்றி. சோம்பி மட்டும் நான் இருக்கவில்லை. இதைத்தாண்டி வேறு என்ன சொல்ல? உங்களைப் போலவே நானும் ஒரு குடும்ப ‘இஸ்திரி’ அல்லவோ. மன்னித்து பொருத்தருள்வீராக.

 

 

 

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…! – 03

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

மூன்றாம் அத்தியாயம் இதோ! கதையின் போக்கு எத்தனை பேருக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ தெரியவில்லை.  வெறும் கற்பனையே அனைத்தும். குறைகள் இருப்பின் பொறுத்தருளுங்கள் மக்கா! 

ஹீரோவை நிறைய பேருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவன் எப்படி ஹீரோவாக இருக்கலாம் என்று திட்டுவது கேட்கிறது. சரி… சரி… திட்டிக்கொண்டே படிச்சிட்டு முடிந்தால் எப்படி இருக்கு என்று சொல்லிட்டு போங்க மக்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

கிரு நிஷாவின் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! by துஜிமௌலி

எமது தமிழில் அழகாகக் கதையை ஆரம்பித்து, நாயகன் நாயகியின் காதலை எடுத்து சொல்வதே கதையின் கருப்பொருள்.

தனது தாய் நாட்டில் இருந்து வேலை விடயமாக லண்டன் வரும் நாயகி, விமானநிலையத்திலேயே வைத்து தனது உடமைகளை தொலைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்ப, அக்குழப்பத்தைத் தீர்க்க அறிமுகமாகிறான் நாயகன்.

நாயகி தமிழ், அதுவும் தன் நாட்டுக்காரி என்று தெரிந்து உதவி செய்து, அவளைத் தன் வீட்டிலேயே தங்கும்படி அழைத்து செல்கிறான்.

உறவுகள் என்று யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் வேற வழி இல்லை என்று நாயகன் ரித்விக்குடன் அவன் வீடு செல்லும் ஆனந்தி, அங்கு உள்ள சூழலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவள், அங்கு ரித்விக் வீட்டில் வேலை செயும் மார்க் எனும் வெள்ளைக்காரனுடன் சகோதரத்துவ பாசத்தை உணர்ந்து, அவனுடன் ஒரு சகோதரி மாதிரியே பாசம் காட்டுகிறாள்.

ஒரு கட்டத்தில் ரித்விக்கின் மேல் காதல் கொண்டு, பின் , அவனின் பிழையான அதாவது அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதை அறிந்து வேதனையுற்ற நேரம், தனது மொத்தக் குடும்பமும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது கேள்விப்பட்டு மொத்தமாக துவழ்கிறாள் ஆனந்தி.

அவன் வீட்டில் இருப்பதையே அவமானமாக கருதியவள், தனது மாமன் மகளைத் தொடர்புகொண்டு ரித்விக் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவள் வெளியேறிய நேரம் ஆனந்தி மீதான காதலை உணரும் ரித்விக், பின், எவ்வாறு நாயகியுடன் சேர்கிறான் என்பதைக் கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.

அழகான கதை, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! – கிருநிசா (முழுகதை )

அன்பு வாசகர்களே !

கிருநிசா தனது கதைக்கான முழு லிங்க் தந்துள்ளார். 

முதல் கதை , வாசிப்பவர்கள் அமைதியாகப் போகாமல் உங்கள் கருத்துகளை அவரோடு பகிர்ந்து கொண்டால், மேலும்  அவரது எழுத்தை நேர்த்தியாக்க அது உதவும்.

 

வாசித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறன் மக்களே. லிங்க் டிலிட் செய்துவிட்டேன்
 

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…! – 02

வணக்கம் அன்பு நெஞ்சங்களே…!

“கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே!” பழமொழி.

யூடியை போடு, கமெண்டை எதிர்பாராதே” சத்யாமொழி.

நீங்கள் எல்லோரும் சத்தமின்றி படிப்பது போல, நானும் சத்தமின்றி யூடி போட்டு விடுகிறேன்.

இரண்டாவது அத்தியாயம் இதோ உங்கள் பார்வைக்கு…!

வழக்கம் போல அமைதியாக வாசித்து விட்டு போங்கப்பா…😉

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…!

வணக்கம் அன்பு நெஞ்சங்களே…!

 

செந்தூரத்தின் வழியாக,  புதிய ஒரு தொடர் கதையோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

 

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…!

இலங்கையில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வரும் நாயகி…!

அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றிற்கு தீர்வாயும் மேலும் தொல்லையாயும் கிடைக்கும் ஒரு காதல்…!

எல்லாவற்றையும் எப்படி வென்றெடுத்து தன் பாலைவனமாய் இருந்த வாழ்க்கையை பசுஞ்சோலை ஆக்கினாள் என்பது தான் கதை.

யாரைக் காண்பதற்கு யார் கண்கள் கொண்டனர் எனத் தெளிவுறத் தெரிய கதையை வாசியுங்கள்.

 

ஒவ்வொரு திங்கள் கிழமையும் பதிவிடுவேன்.

 

வழக்கம்போல உங்கள் ஆதரவைத் தாருங்கள் மக்கா!

 

நன்றி.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

 

நிச்சயம் செல்வாய் நரகம்…

புத்தம் புதிதாக ஆரம்பித்திருக்கும் செந்தூரம் மின்னிதழ் 1 இல் வெளிவந்த ரோசிகா வின் நிச்சயம் செல்வாய் நரகம்…..

ஒரு பிள்ளையை பெற்றுவிட்டால் அப்பிள்ளை தானாக சுயமாக முடிவெடுக்கும் காலம் வரை அப்பிள்ளையின் அனைத்து பொறுப்புக்களுக்கும்ம் பெற்றவர்களே காரணம் .

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே

இந்த பாடலுக்கான நூறு சதவிக்கித அர்த்தம் என்ன என்பதை நாம் இந்த கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்க வேண்டும் தான். ஆனால், அது அவர்களின் வாழ்க்கை முறையை நல்லதாக கொண்டு செல்ல வேண்டுமே தவிர அவர்களை தவறான பாதைக்கு எடுத்து சொல்ல கூடாது .

இந்த கதையில் வரும்  ரஞ்சி அளவுக்கு மீறி மகள் பிரியாக்கு செல்லம் குடுத்ததாலும் அடுத்தவர் மகளைப்பற்றி கூறுவதை காதுகொடுத்து கேட்காமல் மகள் மேல் வைத்த கண்மூடித்தனமான  நம்பிக்கை  ப்ரியாவின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டதை அழகா எடுத்து சொல்லி இருக்கிறிங்கள் ரோசி கா .

ப்ரியாவின் வாழ்க்கை இப்பிடி திசை மாறி போனதற்கு நிச்சயம் ரஞ்சி தான் காரணம் . இந்த கதையை படிச்சு முடிச்சதும் ஒரு பயம் மனசுக்க .. எங்கட கவனம் இன்னும் பிள்ளையள் மேல படோணும் எண்டு எடுத்து காட்டிட்டிங்கள்…சூப்பர் கா ..

“செந்தூரம்” வைகாசி இதழ்

ஹாய் ஹாய் மக்களே,

 

நாங்கள் பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் ஒன்றை உங்கள் கண்முன்னே காட்ச்சிப்படுத்தும் நேரமிது! மிகவுமே நிறைவாய் உணர்கிறோம்! இதழ் மிக மிக சிறப்பாய் அமைய பங்களிப்புச் செய்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!! இன்று மட்டுமல்ல என்றுமே உங்களின் ஆக்கங்களும் ஊக்கங்களும் எங்களுக்கு வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். வாழ்த்தி ஊக்குவித்த அன்பு உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றி! புதிதாய் இணைய விரும்பும் ஆர்வலர்கள் அத்தனைபேரையும் இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்!! 

இதோ எங்கள் இதழ், பார்வையிட்டு படித்து மகிழ்வீர்! எப்படி இருந்தது என்றும் சொல்வீர்களாக இருந்தால் மிகவுமே மகிழ்வோம்! நிச்சயம் சொல்லவேண்டும்; குறையானாலும் சரிதான் நிறையானாலும் சரிதான். இன்னும் எப்படி இருந்தால் இன்னுமே நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லவேண்டும்! அப்போதுதானே இன்னுமின்னும் புதுப்பொலிவுடன் மின்னுவாள் எங்கள் செந்தூரப்பெண்!

 

NNES-11

வணக்கம் மக்களே,

 

இந்த அத்தியாயத்தோட ஒரு கட்டத்துக்கு இந்த கதையை நகர்த்தி இருக்கேன் என்று நினைக்கிறேன். அதனால் நான் கொஞ்சம் லீவு எடுத்துக்கொள்ளட்டுமா? இன்றிலிருந்து பிள்ளைகளுக்கும் லீவு. அதைவிட ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா அப்பாவை கிட்டத்தட்ட வீட்டுச் சிறைதான் வைத்திருக்கிறேன். ஹாஹா.. அவர்களும் பாவம் தானே.  அவர்களோடும் நான் நேரம் செலவழிக்க வேணும் இல்லையா? சோ.. நீங்க எல்லோரும் பெரிய மனது பண்ணி உத்தரவு தந்தால் நான் லீவு எடுத்துக்கொள்வேன். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கப்பா..

 

கதையை படிங்க.. உங்க எல்லோருக்கும் விளங்குது தானே என் தமிழ்? சில வார்த்தைகள் சிரமமாய் இருக்கலாம்.. அதை சொன்னீங்க என்றால் அடைப்புக்குள் போட்டு விடுவேன். அல்ல, கதையே விளங்கேல்ல என்று ஊரை விட்டே ஒட்டிட்டீங்களா? கொஞ்சம் டெல்லிவிட்டு போகவும்.

 

“MOM” திரைவிமர்சனம்

 

htuv9r3dzchly7JZQb7R1Q7pElH.jpg

 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்திருக்கிறேன். பார்க்கச் சொன்னதற்காக ரோசி அக்காவுக்குத்தான் நன்றி. அதுவும் இரவிரவாக முழித்திருந்து, அழுதழுது பார்த்தேன். ஸ்ரீதேவி நடித்த கடைசிப்படமாம் ‘மாம்’. நடித்தார் என்பது அபாண்டமான வார்த்தை. அன்னையாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த இடத்திலும் மிகைப்படுத்தாமல் மிக அருமையாக இந்த சித்திரத்தை படைத்தவர்கள் மிகவுமே பாராட்டுக்கு உரியவர்கள். அப்பாவின் இரண்டாம் தாரத்தை அம்மாவாக ஏற்க முடியாமல் தடுமாறும் இளம் சிட்டின் மனதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. அதே நேரம்.. ஒரு வளரிளம் பருவத்து பெண்ணாய் அவள் டிஸ்கோவுக்கு போவதற்காக காட்டும் கோபத்தையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. இன்றைய பலவீட்டு அம்மா அப்பாவாய்.. அவர்களின் திணறலையும் உணர முடிகிறது. அவளின் ஆசைக்காக சம்மதித்ததால் உண்டான வினை.. உண்மையிலேயே டிஸ்கோ என்கிற இந்த உலகம் எங்கிருந்து முளைத்தது என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு வந்தால் பெற்றவர்களாய் எப்படிக் கையாள்வது? அந்த மகளுக்கு நடந்ததை பார்க்கையில் காலை முறித்தாவது நம் வீட்டுப் பிள்ளையை வீட்டுக்குள் அடைத்துவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. இந்தமாதிரியான விடயங்களுக்கு எல்லாம் பெண் பிள்ளைகளை அனுமதிக்கவே கூடாது. உண்மையை சொல்லப்போனால், அங்கே போகட்டுமா என்று கேட்கிற அளவில் கூட நம் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது! இதுதான் நிஜம்!

ஆனால், அடுத்த பக்கம், இவ்வளவு வன்மையாக நம்மை சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறதா நம் சமூகம்? எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? வெளியே வன்முறையும் வக்கிரமும் தாண்டவமாடுகிறது என்று போர்க்கொடி தூக்குகிறோமே.. அப்போ வீட்டுக்குள் நம் பெண் பிள்ளைக்கு நாம் செய்வது என்ன? என்கிற கேள்வி எழுகிறதே!

பாதுகாப்புக்கு இதையெல்லாம் செய்யத்தான் வேண்டும் என்றால் சரிசமமான சுதந்திரம்; ஆணும் பெண்ணும் சமம்; நாமும் படித்துவிட்டோம், வேலைக்கு போகிறோம்; உனக்கு உள்ள உரிமை அத்தனையும் எனக்கும் இருக்கிறது. என்று எத்தனையோ சொல்லி மார் தட்டுகிறோமே.. அத்தனையும் உண்மைதானா? அல்லது பூசி மெழுகுகிறோமா? எல்லாவற்றிலும் சரிசமமாய் நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண்ணாக.. இந்த படத்தில் வரும் அந்த மகள்.. அத்தனை ஆண்களுக்கு மத்தியில் எப்படித்தான் தன்னை காத்துக்கொள்வாள்? அல்லது காத்துக் கொண்டிருக்க வேண்டும்? விடையே இல்லையே.. கராத்தே, குங்க்பூ, ஜூடோ எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ? அவை தெரிந்தாலும் கூட நான்கைந்து ஆண்களை ஒரு பெண்ணால் வீழ்த்திவிட முடியுமா என்ன?

எனக்கு என்னவோ.. மனதளவில் பாதிக்கப்பட்டவராக மாறிக்கொண்டிருப்பது ஆண் சமூகம் என்றே படுகிறது. போகிற போக்கில் வக்கிரம் பிடித்த மிருகங்களாகவே மாறி விடுவரோ என்று அச்சமாய் இருக்கிறது. இதற்கெல்லாம் பெரும் பங்கு வகிப்பதும் சினிமாவே! ‘பெண்’ என்பதன் பொருளே அவள் உடல் மட்டும் தான் எண்பதுபோலத்தானே பெரும் பான்மையான படங்கள் வருகிறது.

அதோடு, நாம் பேசவேண்டியது இங்கே பெண் சுதந்திரம் அல்ல! ஒரு ஆண் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதை பற்றி. அவன் எப்படி ஒரு பெண்ணை கையாள வேண்டும் என்பதை பற்றி. பெண்ணை பற்றி எந்தளவு தூரத்துக்கு ஆண் விளங்கிக் கொண்டிருக்கிறான் என்பது பற்றி. எல்லாவற்றையும் விட அம்மா என்கிற பெண் தன் மகனை எப்படி வளர்க்கவேண்டும் என்பது பற்றி. எங்கோ.. அம்மாக்கள் விடும் தவறுகள் தான் இன்னோர் பெண்ணின் அழிவுக்கு காரணமாக போகிறது! ஆக, நாம் தான் தவறு செய்துகொண்டிருக்கிறோம்.

இங்கேயும் ஒரு அம்மாவின் போராட்டம்.. இளமைக்கால ஸ்ரீதேவியை கூட நான் இவ்வளவு ரசித்தேனா தெரியாது. இந்த அம்மா.. அத்தனை அழுத்தமாய் என் நெஞ்சில் பதிந்து போனார். அந்த மாணவனை பள்ளியில் கண்டதும் ஆத்திரத்துடன் அதிபரிடம் கேட்பதும், அவர் கையை விரிக்கும் இடத்தில் இயலாமையும் கோபமுமாக பார்த்துவிட்டு அவர் போகும் இடம் ‘வாவ்’ தான்! தன் வகுப்பு மாணவனை ஆத்திரத்துடன் காரினால் இடிக்க பின் தொடர்வதும், லாரியில் மோதப்பார்த்து பயந்துபோய் அவர் காரை நிறுத்திவிட்டு தவிக்கும் அந்த இடம்.. அம்மாதான்! ஆத்திரம் மலையளவு கிளம்பும், இயலாமையும் பயமும் நம்மை படாத பாடு படுத்தும். அலட்டல் இல்லாத நடிப்பு.. அதுதான் சொன்னேனே அம்மாவாக வாழ்ந்தார் என்று.. பிறகு என்ன நடிப்பு என்கிற பதம் வருவது?

அவளை எப்படி நாசம் செய்தார்கள் என்று காட்டாமல் விட்டதாகவே இயக்குனரை பாராட்ட வேண்டும். மீண்டும் மீண்டும் வக்கிரங்களை அரங்கேற்றாமல் அடுத்து என்ன என்று கொண்டுபோனது படத்தின் பலம்! எல்லா அம்மாவாலும் இது சாத்தியமா என்று தெரியாதபோதும் உண்மையிலேயே இது விடையில்லா கேள்வி தானே? பரிகாரமே இல்லாத பாவம் தானே!

பல வசனங்கள் நச் தான். “என் மகள் எனக்கு கிடைத்துவிடுவாள் என்று நம்பியிருந்தேன். ஆனா எல்லாமே முடிஞ்சு போச்சு” என்று அவர் சொல்லு மிடம் அற்புதம்! “ஒரு பெண்ணை ரேப் பண்ணினவனுக்கு ரேப் பண்ணுறதுக்கு உரிமை இருக்கு, ஆனா அத செய்தவனை ஒரு அறை அறையறதுக்கு கூட நமக்கு உரிமை இல்லை” எத்தனை கேவலமான உண்மை!

“ஒரு பெண்ணை ரேப் பண்றவன் ஆம்பிளையே இல்லடா..!” நிஜம் தானே?

“பாவத்தை செய்தது யாரோ. ஆனால், காலம் முழுக்க தணடனையை அனுபவிக்க போறது அவள்” உண்மைதானே. அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தாலும் கூட.. அவள் வாழ்வில் விமோட்சனம் கிட்டுமா? மறந்து வா.. மாறி வா.. புயலாய் புறப்பட்டு வா… என்று எத்தனையோ மேடை பேச்சுக்களை பேசலாம். அவளும் மாறி வரலாம். முழுமையாக மாறுவாளா? மாறத்தான் முடியுமா? இறக்கும் நொடி வரை துரத்தும் வேதனை இல்லையா இது? இதைச் செய்து எதைக் காணப்போகிறான் இப்படியான ஆண்? இல்லை.. அவன் ஆணே அல்ல! கொடூரன்! கேடுகெட்டவன்! இன்னும் எத்தனையோ பதங்களை பொறுத்தலாம் அந்தப் பாதகனுக்கு!

இப்படி எல்லாமே நெஞ்சை பிழிந்தது!

கடைசியாக அருவி பார்த்து அழுதேன் என்று நினைக்கிறேன். இப்போது மாம். யாராவது பார்க்கத் தவறி இருந்தால் பார்த்துவிடுங்கள்.

 

நிலவே.. நீ எந்தன் சொந்தமடி…!-10

ஹாய் ஹாய் ஹாய்,

 

இதோ அடுத்த அத்தியாயம். முந்திய எபி கொஞ்சம் லேட் ஆனதினால் இன்றைக்கே இது வந்திருக்கு:

 

செந்தூரம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது!

 

ஹாய் ஹாய் ஹாய்,

எல்லோரும் நலம் தானே? நாமும் நலமே! அதனோடு மிகுந்த சந்தோஷமும் கூட!

பொழுதுபோக்கிற்காக மட்டுமே ஆரம்பித்த எம் எழுத்து இன்று ஒரு இலக்கினை நோக்கி நடைபோடத் துவங்கியிருப்பது நமது செந்தூரம் மின்னிதழ் வாயிலாகவே! பெரிதாக எதையும் திட்டமிடவும் இல்லை. யோசிக்கவும் இல்லை. ஒருநாள் மின்னிதழ் போடுவோமா என்று கதைத்துக்கொண்டோம். அது கூட ஒரே ஒரு தடவைதான். ‘அப்ப… சித்திரை வருஷப்பிறப்புக்கு முதல் இதழ் வெளியிடுவோமா?’ என்று நிதா கேட்க, சந்தோசமாகவே சரி சொன்னேன். அதற்கான வேலைகளில் அப்போதே ஈடுபடத் துவங்கினாலும், நாமும் இல்லத்தரசியர் தானே. நினைத்தது போலவே செயலாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால் என்ன? எப்போது செய்தோம் என்பதை விட செய்து முடித்தோம் என்பதில் தானே வெற்றியே இருக்கிறது!

இதோ இன்று செய்து முடித்துவிட்டோம்!

ஆமாம்! எங்களின்…இங்கு எங்களின் என்று சொல்வதை விட நமது என்பதே பொருந்தும். நமது முதல் செல்லக்குழந்தை ‘செந்தூரம் மின்னிதழ்’ இனை இன்று வெளியிட்டுவிட்டோம்! இன்று நம் குழந்தை உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறாள். எல்லோரும் கைகளில் ஏந்தி அவளை வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!

எப்போதும் சின்னச் சின்ன கேலிகளும் சீண்டலுமாக எம்மை ஆதரிக்கும் எம் குடும்பத்தவர்களுக்கு எங்களின் அன்பான நன்றிகள்! இதனை முற்றுப்பெற எங்களுக்கு துணையிருந்த ஆண்டவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! இந்த முயற்சி வெற்றியை தரும் என்று எங்களுக்கு நம்பிக்கை தந்த அத்தனை வாசக நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றிகள்! அது மட்டுமல்லாது, ஆர்வத்தோடு ஆக்கங்களை அனுப்பி வைத்த, எழுத்தாளர்கள், தமிழ் நிவேதா, தமிழ் மதுரா, ஜெகநாதன் வெங்கட் அவர்கள், ஹேமா, அகத்தியா, துஜிமௌலி, யாழ் சத்யா, பவித்ரா நாராயணன், நிலா, நர்மதா சுப்ரமணியம், கோபிகை, மற்றும் ராகவி …உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!
தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் மட்டுமல்ல விரும்பியவர்கள் அனுப்பி வைக்கலாம். அடுத்தடுத்த இதழ்களில் நிச்சயம் வெளியாகும். அதேநேரம் உங்களின் ஆக்கங்களுக்கு ஏற்ற வகையில் பணப்பரிசும் வழங்கப்படும்.

மாதம் தோறும் வெளிவரக்காத்திருக்கும் நம் இதழ் இன்னுமின்னும் பல புதுமைகளை சுமந்து வரப்போகிறது. ஆதரவு தந்து பயன்பெறுவீராக!

மின்னிதழை வாசிக்க விரும்புவோர் அமசோன் கின்டிலில் தரவிறக்கம் செய்தோ, கிண்டில் லெண்டிங் லைபிரரியிலோ வாசிக்கலாம்.

இம்முயற்சியில் ஆர்வத்தோடு தொடர உங்கள் ஆதரவும் வாழ்த்தும் என்றென்றும் வேண்டும் மக்களே!

அன்புடன் ரோசி கஜன், நிதனி பிரபு

 

கீழேயுள்ள லிங்கில் கிளிக் பண்ணவும் 

செந்தூரம் மின்னிதழ் 1

nilave.. nee enthan sonthamadi…!-9

ஹாய் ஹாய்,

 

கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். கொஞ்சம் அதிகமாகவே வேலை மக்கா. அதுதான்.. இதோ அடுத்த அத்தியாயம்:

 

 

 

நிலவே… நீ எந்தன் சொந்தமடி…!-6

“நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!” கதையின் ஆறாவது அத்தியாயம் இதோ. எங்கள் செந்தூரத்தில் என் முதல்  பதிவு.எப்படி இருக்கு எண்டு சொல்லிப்போட்டு போவீர்களாக.

 

 

 

நிலவு ஒரு பெண்ணாகி!

தமிழ் மதுராவின் நிலவு ஒரு பெண்ணாகி  – யாழ் சத்யாவின் பார்வையில்

என்ன சொல்ல? எதைச் சொல்ல? கதை படித்து நான்கு நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் ஏதோ ஒரு மோன நிலையிலேயே இருக்கிறேன். ஏதோ ஒரு சக்தி என்னையும் கட்டிப் போட்டு விட்டது போல.

சித்ராங்கதாவை எழுதியவரிடமிருந்து இது போல ஒரு படைப்பா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

சத்தியமாக சித்ராங்கதா போல ஒரு காதல் கதை என்ற எதிர்பார்ப்போடு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கதையோ வேறு பாதையில் இட்டுச் சென்றது. சந்தேகத்தில் மறுபடியும் இதை தமிழ் மதுராக்காவின் கதைதானா என்று ஊர்ஜிதப் படுத்தி விட்டே தொடர்ந்து வாசித்தேன். காரணம் கதை சென்ற பாதை அமானுஷ்யம்.

ஆத்ரேயன்! ஆணழகன் இவன்  தொழில் திறமையை எண்ணி வியக்கவா? இல்லை இவன் காதலின் ஆழத்தை எண்ணி வியக்கவா?

சந்த்ரீமா! ஆத்ரேயனின் காதலுக்கு கொஞ்சமும் குறைவில்லாது அவனுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய முன் வரும் இவள் காதலை என்ன சொல்லி வர்ணிக்க?

அம்பலம்! தன் குடும்பம், தன் கௌரவம் என்று சுயநலமே உருவான ஒரு சாதாரண மனிதர். அவர் மீது கோபம் வந்தாலும் அவரது பக்கம் இருந்து யோசித்துப் பார்க்கும் போது திட்ட முடியவில்லை. வயதானவர். பாவம் பிழைத்துப் போகட்டும்.

தத்தாத்ரேயன் – திலோத்தமா

இவர்களைப் போல ஒரு தாத்தா பாட்டி கிடைக்காதா என்று தங்கள் பாசத்தின் மூலம் ஏங்க வைத்தவர்கள்.

ராம்குமார்! நட்புக்கு இலக்கணம் நீர் தானா?

ஆதிரன்! உங்கள் வீரத்தினதும் தலைமைத்துவப் பண்பினதும் ரசிகை நான். கொண்ட லட்சியத்தை காப்பதற்காக உயிரையும் விடத் துணியும் கர்மவீரன்.

சந்திரிகா! போகும் பாதை கற்களும் முட்களும் மட்டுமே என்று அறிந்தும் தன் உயிரைப் பொருட்படுத்தாது விரும்பியவனைக் கரம் பிடிக்கும் பத்தினி.

ஜெயப்பா! காமப் பிசாசு.

கதையில் வரும் மீதிக் கதாபாத்திரங்களும் ரொம்ப அருமையாக கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

காதலர்கள் சேருவார்களா? இல்லை அவர்கள் உயிர் பிரியுமா? என ஒரு எதிர்பார்ப்போடேயே இறுதி வரை கதை நகர்கிறது.

மத நம்பிக்கைகள், மூடப் பழக்கவழக்கங்கள் எல்லாம் பற்றிய கதையின் போக்கு, இவை பற்றிய எனது எண்ணங்களை மாற்றியமைத்தது என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுப் புது விடயங்கள். இவையெல்லாம் உண்மையாய் இருக்குமோ என்று கூகிளாண்டவரை தட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்து கொண்டேயிருந்தது என்பது தான் உண்மை.

உண்மையில் இதை ஒரு கற்பனைக் கதையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாசிக்கும் ஒவ்வொரு நொடியும் கதையில் ஒரு அங்கமாய் நிஜமாய் வாழ்ந்த உணர்வு. ஒரு 3டி படம் பார்த்த திருப்தி.

இந்தக் கதையை எழுதுவதற்கு, இவ்வளவு விடயங்களையும் கதையின் போக்கில் சுவாரசியம் குன்றாமல் தொகுத்து வழங்குவதற்கு நிறையவே மெனக்கெட்டிருப்பீர்கள் என்று புரிகிறது மதுராக்கா.

அந்த அர்ப்பணிப்பும் உங்கள் கடும் உழைப்பும் வீணாகவில்லை என்பது அமேசனைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!

வெறும் காதல் கதைகள் மட்டுமில்லாது இது போன்ற கதைகளையும் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

நிலவு எந்தப் பெண்ணுருக் கொண்டது? படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்கா!

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 04

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நாலாவது அத்தியாயம் இதோ.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மக்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா .

Advertisements

அன்னாஸ்வீட்டியின் நனைகிறது நதியின் கரை

அன்னாஸ்வீட்டியின் நனைகிறது நதியின் கரை – யாழ் சத்யாவின் பார்வையில்

———————————————-

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஸ்வீட்டி அக்காவின் கதைகளில் ஸ்வீட்டான காதலோடு சேர்த்து அனைத்து விடயங்களையும் அடக்கி இருப்பார். சீரக மிட்டாய் போல ஒரு கவலையான சுவை. படித்ததும் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு. இவர் சிறப்பே இவர் கதையின் வேகம். ஒவ்வொரு விடயத்தையும் சலிக்க வைக்காத விதத்தில் ஒவ்வொரு பக்கத்தையும் ஆவலாக அடுத்து என்ன என்ன என்று படித்து முடிக்கும் வரை தட்டிக் கொண்டே போக வைக்கும் வேகம். தெளிவான காட்சி அமைப்புகள் அப்படியே கதையோடு எம்மைக் கட்டிப் போட வைக்கும் திறம்.

 

அரண் – சுகவிதா

அரண் கிரிக்கெட் ப்ளேயர். சுகவிதா – டென்னிஸ் ப்ளேயர்.

 

ப்ரபாத் – சங்கல்யா

அரணின் நண்பன் & சுகவிதாவின் உடன்பிறவா சகோதரன் ப்ரபாத் ஜோனத் – கிரிக்கெட் ப்ளேயர் – சங்கல்யா – ஜேர்னலிஸ்ட்

 

இங்கேயும் காதல் தான் எல்லோரையும் ஆட்டி வைக்கிறது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக.

 

ஒரே பாடசாலையில் படிக்கும்போது அரணுக்கும் சுகவிக்கும் இடையில் சிறுபிள்ளை தனமாக ஆரம்பிக்கும் மோதல்கள் சுகவியின் தந்தை அனவரதனால் நீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது.  அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து வளரும் சுகவிதா அரணின் மேல் ஏற்படும் வெறுப்பின் காரணமாகவே டென்னிஸ்ஸில் சாதிக்க துடிக்கிறாள்.

 

அதேநேரம் அரணின் தந்தை திரிகேயனின் நல்ல விதமான அறிவுரைகள் அரணிற்கு சுகவி மீதான புரிதலை உண்டு பண்ணுகிறது.

 

ஒரே ஊர்க்காரனான ஒருத்தன் நல்ல நிலையில் இருக்கும் போது அதை நல்ல விதமாக பார்த்து சந்தோசப் படாமல் அதைப் பார்த்து பொறாமை படுவது தனக்குள்ளேயே தாழ்வுணர்ச்சி கொள்வது அதன் மீதான வெளிப்பாடுகள் பிள்ளை வளர்ப்பின் மீது கூட ஆட்சி செலுத்தி அவர்களையும் ஒரு தவறான வாழ்க்கை நெறிக்கு தள்ளுகிறது. பரம்பரை பரம்பரையான பகைமைகளுக்கு இப்படியான மனித உணர்வுகள் காரணமாகி வாழ்க்கையை.நாசமாக்குவது வேதனைக்குரிய விடயமே. அனவரதன் சிறந்த உதாரணம்.

 

அதேநேரம் அவர் மனைவி புஷ்பம் கணவரை நன்கு அறிந்து மகளுக்கும் கணவருக்கும் அதை உணர வைக்க முயன்றும் அவர்கள் இவர் பேச்சுக்கு செவிமடுக்காத காரணத்தினால் தன் முயற்சியில் தோற்றுப் போகிறார். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இவர். தந்தைக்கு பிடிக்காதவனை மகள் மணக்கப் போகிறாள். ஆனால் அந்த மாப்பிள்ளையை தனக்குப் பிடிக்கும் எனும் போதும் தனது கணவர் தனிமையாக உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக மகள் கல்யாணத்திற்கு போகாமல் விடுகிறார். அவரின் அந்த அதீத புரிந்துணர்வே ஒரு தாம்பாத்தியத்தை வெற்றியடைய வைக்கிறது.

 

திரிகேயன். பணம் அதிகம் இருந்தாலும் தலைக்கனம் கொள்ளாது வாழ்க்கையை.அதன் போக்கில் எதிர் கொள்கிறார். பிறக்கும் போதே தாயை இழந்த மகனை.தாய்க்கு தாயாகவும் இருந்து தோளுக்கு மிஞ்சியவனை உற்ற தோழனாகவும் உரிய விதத்தில் தேவையான அறிவுரைகளோடு அவர் வளர்க்கும் விதம் அடடா இவரல்லவோ அப்பா என வியக்க வைக்கும் ஒரு நபர்.

 

அன்பரசி – பிரபாத்தின் தாய். ஒற்றை ஆளாக பிள்ளை வளர்க்கும் சராசரி பாசக்கார அம்மா. கதைக்கு தேவையான விடயங்களை உரிய நேரத்தில் செய்ய வைக்கும் பாத்திரம். அதைச் செவ்வனே செய்வதில் சிறப்பு.

 

சங்கல்யா – அழகான பெயர். தந்தையின் துரோகத்தால் ஆண் வர்க்கத்தை வெறுப்பவள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காதலில் விழுந்து அதற்காக போராடுவதில் மனதில் நிறைகிறாள்.

 

பிரபாத் – காதலின் நாயகன். தனது பாஷன், உத்யோகத்திற்கேற்ப காதலியை என் செல்ல சிக்ஸர் என்று கொஞ்சியே எங்கள் மனசையெல்லாம் வசீகரித்து சென்று விடுகிறான். இவன் மாதிரி ஒரு உற்ற நண்பன், உண்மைச் சகோதரன், பாசமிகு மகன் எங்களுக்கு எல்லாம் கிடைக்க மாட்டானா என்று ஏங்க வைத்து விடுமளவு சிறந்த ஆண் மகன். இவனுக்கு நிறைய ரசிகைகள் இருந்திருப்பது உறுதி.

 

அரண் – காதலுக்காக போராடும் ஒரு காவலன். அவளுக்காக தனது பதவி,புகழ், பெயர் எதையும் இழக்க தயாராகும் அளவு அன்பு. பல தடைகள் தாண்டி அதில் வெற்றியும் காண்கிறான். அந்த தடைகளும் அதை அவன் சிறப்பாக இயல்பாக கையாண்டு வெற்றி பெறுவதும் தான் கதையின் ஓட்டம்.

 

சுகவிதா – தந்தையின் உருவேற்றலில் வளர்க்கப்படுபவள் ஒரு விபத்தில் அம்னீசியாவில் பீடிக்கப்பட்டு நிகழ்வுக்கும் கடந்த காலத்துக்கும் இடையே போராடி புத்திசாதுர்யமாக யோசித்து முடிவெடுத்து நடப்பை தீர ஆராய்ந்து வாழ்க்கையை வெற்றி கொள்கிறாள்.

 

சுகவிதா – ஜீவாக்கிடையேயான காதல் அற்புதம். ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் மீது நாம் கவரப்பட்டு அவரது சொந்த உருவம் மறைந்து நாம் அந்த எழுத்துக்களாகவே அவர்களை பார்க்க ஆரம்பித்து அவர்கள் மீது அன்பு வைக்கிறோம். பித்துக் கொள்கிறோம். எங்கள் துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேட விளைகிறோம். அவர்களின் எழுத்துக்களில் கிடைக்கும் ஆறுதல் எம் வாழ்க்கை பிரச்சினைக்கும் ஒரு ஆறுதல் தரும் என்ற எண்ணத்தோடு அவர்களிடம் எங்கள் பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். எனக்குமே இந்த அனுபவம் இருப்பதால் சுகவியின் மனநிலையை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

 

ஜீவா ஆணாக இருந்த பட்சத்தில் அவனும் அவளைக் காதலித்த பட்சத்தில் சுகவி அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் இயல்பாக.

 

சுகவி – ஜீவா காதல் நிறைவேறியாதா? அரண் என்ன ஆனான்? என்பதெல்லாம் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்க மக்கா.

 

நனைகிறது நதியின் கரை காட்டாற்றாய் மேடு, பள்ளம் எல்லாம் கடந்து வந்து எங்கள் மனக் கரைகளையும் தன் வெண்ணுரை அலைகளால் நனைத்துச் செல்வது உறுதி.

 

மேலும் பல சிறந்த வித்தியாசமான படைப்புகள் வழங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. தொடரட்டும் உங்கள் பணி.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

அன்னா ஸ்வீட்டி அவர்களின் அதில் நாயகன் பேர் எழுது

அதில் நாயகன் பேர் எழுது – யாழ் சத்யாவின் பார்வையில்

 

முகப்புத்தகத்தில் அடிக்கடி தட்டுப்பட்டது இந்த பெயர்… “எப்படியான கதைகள் வாசகர்களின் அதிக வரவேற்பை பெறும்?” என்று நீலாமணி அக்கா கேட்டதற்கு “தலைப்பு வித்தியாசமாக இருந்தாலும்” என்று சிந்து ஜெகன் கூறியிருந்தார். என்னைப் பொறுத்தவரை இந்த கதையில் அது முற்றிலும் உண்மை. இந்த கதையின் பெயர் தான் என்னை வாசிக்க தூண்டியது.

 

இரு வேறு கால கட்டத்தில் நடக்கும் கதைக்களம். இன்றைய காலத்தில் விவன் – ப்ரியா ஜோடி. பாண்டிய மன்னன் மானகவசன் – ருயம்மா தேவி ஜோடி.

 

அரச காலம் ஒருவரின் கனவில் தோன்றுவதாக அமைந்து கனவிற்கும் நிஜத்திற்கும் என்ன தொடர்பு என்று எங்களைச் சுத்த விடுகிறது.

 

சில நேரங்களில் கனவில் தோன்றுவது நிஜத்தில் முதலிலும், சிலநேரங்களில் கனவில் முதலிலும் தோன்றி எதனால் இந்த கனவுகள் என்று எங்களை ஒரு புரிதலுக்கு வர விடவில்லை.

 

பராக்கிரம பாண்டியன் பற்றிய நிறைய தகவல்கள். நாயகி கற்பனையாக இருந்தாலும் கூட ருயம்மாவோடு பின்னிப் பிணைந்து சென்ற கதையில் பாண்டியனது ஆட்சி முறையை அவர் சில வேண்டாத முறைமைகளை மாற்றியமைக்க முயன்றது, சாதி ஒழிப்பிற்காக அந்த நேரமே போராடியது என்று பல சரித்திர தகவல்களை அள்ளித் தெளித்து இருக்கிறார்

 

ஜல்லிக்கட்டுக்காக போராடிய எங்களுக்கு ஏறு தழுவலின் சரித்திரத்தை மிக அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.  ஒரு மண்ணிற்கு ஆவினத்தின் அவசியம் வியக்க வைத்தது.

 

இன்றைய கால கட்ட நிகழ்வுகளில் அழகாக ஆங்கில வார்த்தை பிரயோகம் கலந்த எழுத்து நடை. ப்ரியா இன்னும் மனசிற்குள். சிறு வயதிலிருந்து மனதால் கஸ்டப்படும் அவள் live in present என்று கடந்தகால கசப்புகளை மறக்கடித்து தன்னை நிகழ்காலத்தோடு பொருத்தி வாழப் போராடும் போது வாசிக்கும் எங்கள் கண்களில் ப்ரியாவின் வேதனையை வர வைக்கிறார்.

 

விவனை கொல்ல நடக்கும் முயற்சி, பில்லி, சூனியமா? அமானுஸ்யமா? பூர்வ ஜென்ம தொடர்பா? மனிதர்களின் சதியா? என்று பலதும் எண்ண வைத்து இறுதியில் எதிர்பாராத விடையோடு அனைத்து புதிர்களையும் இலகுவாக அவிழ்த்துள்ளார்.

 

நானெல்லாம் அதிகம் கனவு காணும் ஜென்மம் இல்லை. அதிகாலையில் வாசித்து விட்டு தூங்கினால் பாண்டியனும் ருயம்மாவும் தான் ஒருவரை ஒருவர் காட்டிக் கொள்ளாமல் காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் ப்ரியாவை தாங்கோ தாங்கென்று தாங்கும் விவன் வந்து போகிறான்.

 

சில இடங்களில் நெஞ்சைப் பிசையும் எழுத்து. அற்புதம் அன்னாஸ்வீட்டி அக்கா. இந்த ஒரே கதையின் மூலம் என்னை உங்கள் அனைத்து கதைகளையும் தேடி வாசிக்க வைத்து விட்டீர்கள்.

 

உங்கள் தளம் மிக நன்றாக உள்ளது அக்கா. தேடுதலின்றி வாசிக்க இலகுவாக உள்ளது. நீங்கள் மேன்மேலும் இப்படி வித்தியாசமான பல கதைகள் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் அக்கா.

 

“அதில் நாயகன் பேர் எழுது” எங்கள் மனங்களிலும் ஒரு காவியத்தை எழுதிச் செல்வது உறுதி.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!